மூலிகைப் பெண்!



நம் வீட்டிலேயே வளர்க்கக்கூடிய மூலிகைச் செடிகளைக் கொண்டு தயாரித்த பாரம்பரிய உணவு மிக்ஸ், காஸ்மெட்டிக் பொருட்கள் மூலம் தில்லி வரை அசத்திக் கொண்டிருக்கிறார் ஒரு சென்னைப் பெண். அவர் பெயர் சுபஸ்ரீ விஜய். 
கடந்த வாரம் நடந்த ‘மான் கி பாத்’ நிகழ்வில் பிரதமர் மோடி பேசும்போதுதான் இந்தப் பெண் தமிழகத்தில் பிரபலமானார்.
ஒரு நேயர் பிரதமரிடம், மருத்துவத்துறையில் பங்காற்றும் தொழில்முனைவுப் பெண்மணிகளைப் பற்றிக் கேட்டார். அதற்கு பிரதமர் சுபஸ்ரீயின் பெயரை உச்சரித்தார். அதிலிருந்து ‘கூகுள்’ தேடுதல் தளத்தில் சுபஸ்ரீயின் பெயர் அதிகளவில் தட்டச்சு செய்யப்பட்டது.

சென்னை ஆழ்வார்திருநகரில் உள்ளது அவரது வீடு. வீடா அல்லது காடா என்ற வியப்பை ஏற்படுத்துமளவு மொட்டை மாடியில் அவ்வளவு செடிகள். ‘‘எல்லாமே மூலிகைச் செடிகள்...’’ என்று கண்சிமிட்டுகிறார் இரண்டு பிள்ளைகளுக்குத் தாயான சுபஸ்ரீ.‘‘சொந்த ஊர் மதுரை. அங்கேதான் எம்.எஸ்சி பிசிக்ஸ் படித்தேன். 94ல் கல்யாணம். கணவர் ஐடி துறை என்பதால் 96லிருந்து 2000 வரைக்கும் அமெரிக்காவில் இருக்கவேண்டிய சூழல்.

பிறகு சென்னையில் செட்டிலாகிட்டோம். 2011ல் ‘அத்ரி ஹெல்த் புரொடக்ட்’ எனும் கம்பெனியை பதிவு செய்தேன். இந்நிறுவனத்தின் மூலம் மூலிகையிலான ஹெல்த் புரொடக்ட்டுகள், பாரம்பரியமான மூலிகை உணவுகள் மற்றும் மூலிகைக்கான பிரத்யேகமான நர்சரி என்று விற்பனையும், வாழ்க்கையும் போகிறது...’’ என்கிற சுப எடுத்துக்கொண்ட ஒரு சபதம்தான், அவரை மோடி வரைக்கும் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது.

‘‘கணவர், குழந்தைகள், ஊர்விட்டு ஊர் போனது எல்லாம் குடும்பத்துக்காக செய்த கரிசனைகள். ஆனால், சென்னை வந்ததும் பிள்ளைகள் வளர்ந்து ஓரளவுக்கு குடும்பமும் நிலையானது. இந்நிலையில் நமக்கு என்று ஒரு அடையாளம் வேண்டாமா என்று ஓர் எண்ணம் வந்தது.

அப்போது தோட்டக்கலை, செடி கொடிகளில் எல்லாம் ஆர்வம். அதனால் சென்னையில் உள்ள பாரம்பரிய சித்த வைத்தியரான நெல்லை நாயகம் என்பவரிடம் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தேன். அவர் நோயாளிகளுக்கு மருந்து, சூரணங்களைக் கொடுப்பவர். அந்த மருந்துகள், சூரணங்களைப் பற்றி ஆர்வமாக அவரிடம் கேட்பேன். என் ஆர்வத்தைப் பார்த்த அவரும் மூலிகைகளின் குணங்களைப் பற்றி விவரிப்பார். அத்துடன் சித்த வைத்தியத்தில் மிகவும் பழமையான ‘குணபாடம்’ என்ற ஒரு புத்தகத்தையும் வாங்கித்தந்தார்.

இதே மாதிரி மூலிகை தொடர்பான புத்தகங்கள், மூலிகைச் செடிகளை நேரடியாக போய்ப் பார்ப்பது, அந்தச் செடிகள் குறித்த பயிற்சி வகுப்புகள் என நாட்கள் சென்றன. இந்த தேடுதல்தான் ‘அத்ரி’ உருவாகக் காரணம்...’’ என்ற சுபஸ்ரீ, ஒரு மூலிகை ஆய்வாளராக எப்படி மாறினார் என்பதையும் பகிர்ந்தார். ‘‘கடந்த வருடம் குஜராத்தில் உள்ள ‘இந்தியன் கவுன்சில் ஃபார் அக்ரிகல்ச்சுரல் ரிசர்ச்’ எனும் அமைப்பில் இருந்து மருத்துவ மூலிகை தொடர்பான ஆராய்ச்சிக்கு உதவி செய்வதாக ஓர் அறிவிப்பு வந்தது.

இந்த நேரத்தில் என் ‘அத்ரி’ நிறுவனம் சார்பாக ஒரு பூச்சு விரட்டி பொடியை விற்பனை செய்து வந்தேன். இந்தப் பூச்சி விரட்டி பவுச் வடிவத்தில் இருக்கும். பொதுவாக புத்தக அலமாரி, துணி அலமாரிகள் மற்றும் அறைகளில் எல்லாம் நாப்தலின் உருண்டைகளைப் பயன்படுத்துவோம். இந்த உருண்டைகள் புற்றுநோயை உண்டாக்குபவை.

இதற்கு மாற்றாகத்தான் நான் பூச்சி விரட்டியை உருவாக்கியிருந்தேன். வசம்பு, வேப்பிலை என்று சுமார் 12 மூலிகைகளைப் பொடியாக்கி இதனைத் தயாரித்தேன். இதற்கு நல்ல வரவேற்பு.

இந்த பவுச்சை மேம்படுத்துவதற்கான ஒரு ஐடியாவைத்தான் குஜராத் நிறுவனத்துக்குக் கொடுத்தேன். அதாவது இதை ஜெல் வடிவத்தில் மாற்றுவதற்கான ஆராய்ச்சிக்குத்தான் உதவி கோரியிருந்தேன். அப்படி மாற்றிவிட்டால் காரில் நறுமணப்பொருளாகவும் இதைப் பயன்படுத்த முடியும்.

என்னை மாதிரியே வெவ்வேறு கோரிக்கைகளுடன் சுமார் 60 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் தேர்வு செய்யப்பட்ட மூன்று பேரில் நானும் ஒருத்தி என்பதுதான் மோடி வரைக்கும் பேசவைத்துவிட்டது என்று நினைக்கிறேன்...’’ என்கிற சுபயின் இந்த முயற்சி ஆராய்ச்சியில் இருக்க, அவரிடம் ‘மூலிகை தொடர்பான அறிவை தமிழர்கள் இழந்துவிட்டனரே...’ என்றோம்.
‘‘அந்தக் காலத்தில் நம் ஒவ்வொரு வீட்டிலும் முதலுதவிப் பெட்டி கட்டாயம் இருக்கும். உணவே மருந்து என்பதுதான் தமிழர்களின் பாரம்பரியம். வெட்டுக்காயமா, தலைசுற்றலா,
வாந்தியா... எல்லாவற்றுக்கும் உணவுதான் மருந்து.

ஆனால், இன்று எல்லாவற்றுக்கும் ஆங்கில மருத்துவத்தையே நாடுகிறோம். காய்ச்சல் வந்தால் சூட்டைத் தணிக்கத்தான் ஆங்கில மருத்துவம் சொல்லிக் கொடுக்கிறது. ஆனால், சித்த மருத்துவம் காய்ச்சலுக்கான காரணங்களைக் கண்டுபிடித்து, அதை நீக்குகிறது. ஒரு நோய் திடீர் என்று யாருக்கும் வராது. நாட்பட்ட பிறகுதான் நோய் வரும். சித்த மருத்துவம் அந்த நாட்பட்ட நோயை மெதுவாகத்தான் குறைக்கும். அதுவும் முதலில் நச்சு நீக்குதல், பிறகுதான் வைத்தியம் என்று போகும்.

இதனால்தான் குடல் புழுக்களை நீக்க மாதத்துக்கு இருமுறை விளக்கெண்ணெயைக் குடிக்கக்கொடுப்பார்கள் நம் பாட்டிகள். நமது மருத்துவம் கை மருத்துவம்...’’ என்கிற சுப, மூலிகைச் செடிகள் பற்றிய ஆச்சரியமான தகவல்களையும் பகிர்ந்தார்.‘‘கொரோனாவுக்கு முன் பள்ளிக்கூடங்களுக்குச் சென்று மூலிகைச் செடிகள் பற்றி வகுப்பு எடுத்தேன். பள்ளிப்பருவத்திலேயே நம் மாணவர்கள் இதன் மகத்துவத்தைப் புரிந்தால் அடுத்த தலைமுறையாவது இந்தப் பாரம்பரியத்தைக் காப்பாற்றும் என்ற ஒரு நப்பாசைதான் இதற்குக் காரணம்.

முதலில் அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக விளையாட்டுத்தனமான சில மூலிகைகளைப் பற்றி வகுப்பு எடுத்தேன். போலோ மிட்டாய்கள் மாதிரியான சுவையைத் தரக்கூடிய மின்ட் துளசி, ஏலம், பட்டை, கிராம்பு என்ற மூன்றும் கலந்த வாசனை தரக்கூடிய சர்வசுகந்தி மூலிகைச் செடி போன்ற ஆர்வம் தரக்கூடிய மூலிகைகளை அறிமுகப்படுத்தி பேசுவேன்.

உண்மையில் மூலிகைச் செடிகளுக்கு என்று தனியான நர்சரிகள் இல்லாத குறையை நான் அறிவேன். அதனால்தான் என் வீட்டு மொட்டைமாடியிலேயே சுமார் 400க்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகளை வளர்க்க ஆரம்பித்தேன். அத்துடன் கொரோனாவுக்கு முன் வாரம்தோறும் வீட்டிலேயே பெரியவர்களுக்குப் பயிற்சி வகுப்பு எடுத்தேன். என் நோக்கம் வீட்டுக்கொரு மூலிகைச் செடி என்பதே. மகள், மனைவி, தாய் என்ற அடையாளத்தைத் தாண்டி இந்த மூலிகைத் தேடலால் ஒரு பெண் தொழில் முனைவோராக இருப்பது  எனக்கான அடையாளம்...’’ என்று கட்டை விரலை உயர்த்திக்காட்டி முடித்தார் சுப.

டி.ரஞ்சித்

ஆர்.சி.எஸ்.