10,000மாணவர்களுக்கு சங்ககால தமிழி எழுத்துக்களை கற்றுக் கொடுத்த ஆங்கில ஆசிரியர்!



ஒரு தனிமனிதன் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு மேலும் ஒரு சான்று. ‘எனக்குத் தமிழ் தெரியாது…’ என சொல்வதை கௌரவமாக நினைத்து வரும் காலத்தில் கரூரின் தனியார் பள்ளி முதல்வர் முனைவர் ராமசுப்பிரமணியன் பழங்கால கல்வெட்டுகளில் உள்ள தமிழ் மொழியை சுமார் 10 ஆயிரத்துக்கும் மேலான மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்.

‘‘இந்தத் தமிழி அல்லது பிராமி எழுத்துகளைக் கத்துக்க வெறும் மூணு மணிநேரம் போதும்...’’ ஆச்சர்யம் கொடுக்கிறார் ராமசுப்பிரமணியன். ‘‘கடந்த 25 வருடங்களா இந்த ஆசிரியர் துறையிலதான் இருக்கேன். ஆங்கில இலக்கியத்திலே முனைவர் பட்டம் வாங்கினேன். அடிப்படைல நான் ஒரு ஆங்கில ஆசிரியர். பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலே முதல்வர். கரூர் வேலாயுதம்பாளையம் பகுதியிலே புகழி மலை இருக்கு. அங்க சமணர்கள் படுகைகள், சங்ககால கல்வெட்டுகள் இதையெல்லாம் சுத்தப்படுத்த சாரணர் இயக்கம் மூலமா பள்ளிக் குழந்தைகளைக் கூட்டிட்டு போவோம்.

அங்க இந்த தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் அதிகம். ஒவ்வொரு முறை போகும் போதும் அந்தக் கல்வெட்டுகளைப் படிக்க முடியாம இருக்கறது ஒருவித வருத்தத்தைக் கொடுத்துச்சு. அந்த எழுத்துகள் மேலே ஒரு ஆர்வம். இதற்கிடையிலே தொல்லியல் துறை சார்பா எப்போவாவது இந்த தமிழி அல்லது பிராமி எழுத்துகள், வட்டெழுத்துகள் பயிற்சி கேம்ப் போடுவாங்க.
அதிலே எல்லாரும் கத்துக்க முடியாது. அந்தக் கேம்பிலே தமிழி கத்துக்கிட்ட என் நண்பர் மற்றும் தன்னார்வலர் புவனேஸ்வரி கிட்ட எங்க பள்ளியில இதை 20 குழந்தைகளுக்கு வகுப்பா எடுக்க முடியுமான்னு கேட்டேன். ஏத்துக்கிட்டு அவங்களும் கத்துக்கொடுத்தாங்க...’’ என்னும் ராமசுப்பிரமணியன், குழந்தைகள் கற்றுக்கொள்கையில் தானும் அதை ஆர்வத்துடன் கற்றுக்கொண்டதாகக் கூறுகிறார்.

‘‘மாணவர்கள் எழுதின நோட்டுகளை வாங்கி நானும் இந்த எழுத்துகளை எழுதிப் பார்த்து கத்துக்க ஆரம்பிச்சேன். தொடர்ந்து என் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் உட்பட 250 பேர் சேர்ந்து கத்துக்க ஆரம்பிச்சோம். அடுத்து இதை ஏன் ஸ்கூல் முழுக்க கத்துக்கொடுக்கக் கூடாதுனு நினைச்சோம். எங்க பள்ளில ஆறாயிரம் மாணவர்கள். அதிலே பிரைமரி வகுப்பு சின்னக் குழந்தைகளை விட்டுட்டா மீதம் 5000 குழந்தைகள்னு அத்
தனை பேருக்கும் கத்துக்கொடுத்தோம்.

அடுத்தடுத்து அப்படியே கேம்ப் மாதிரி அருகே இருக்கற பள்ளிகளுக்கும் போயி ஆர்வமா வருகிற குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தோம். கடந்த வருடம் ஊரடங்கு ஆரம்பிக்கிற மார்ச் மாதத்துக்கு முன்னாடி மட்டும் சுமார் 10 ஆயிரம் குழந்தைகளுக்கு தமிழி சொல்லிக் கொடுத்திட்டோம்...’’ என்னும் ராமசுப்பிரமணியன், தொடர்ந்து குழந்தைகளைக் கொண்டு தமிழ் செய்யுள்களை எல்லாம் தமிழி எழுத்து வடிவில் எழுதி ஆவணப்படுத்தும் முயற்சியும் செய்து வருகிறார்.

‘‘நம் தமிழ் செய்யுள்களான நாலடியார், மணிமேகலைனு அத்தனையையும் ஏன் தமிழி முறையிலே எழுத வைக்கக் கூடாதென முடிவு செய்து 5000 குழந்தைகளையும் ஒண்ணா சேர்த்து ஒவ்வொருவரும் ரெண்டு வரிகள் வீதம் செய்யுள்களை தமிழி முறையிலே எழுதினாங்க.

அத்தனை பேரும் சேர்ந்து 20 நிமிடங்களில் அதை செய்து முடித்தோம். நான் திருவள்ளுவர் மாணவர் இயக்க தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கேன். அதன் மூலம் திருக்குறளை தமிழி முறையிலே எழுதி புத்தகத்தை மதுரை இந்திய தொல்லியல் நினைவுச் சின்னங்கள் ஆணையத்தின் தேசிய தலைவர் தருண் விஜய்யிடம் ஒப்படைத்தோம்.

இதிலே மற்ற செய்யுள்களை எல்லாம் எடிட் செய்திட்டு இருக்கோம். கொரோனா மட்டும் இல்லைன்னா இந்நேரம் எங்களுடைய 10,000 என்கிறது என்னைக்கோ ஒரு லட்சம் மாணவர்களைக் கடந்திருக்கும். எல்லோருக்கும் சங்க கால தமிழி முறையை சொல்லிக் கொடுத்திருப்போம். கொஞ்சம் தாமதமாகுது. இருந்தாலும் பரவாயில்லை...’’ என்னும் ராமசுப்பிரமணியன், இந்த தமிழி பயிற்சியை மட்டும் ஆன்லைனில் எடுப்பதில்லை என்கிறார்.
‘‘மொழியை மட்டும் எப்போதும் நேரில் அந்த உணர்வுகள் சூழத்தான் கத்துக்கணும். இது பழங்கால எழுத்து முறை. நேரில் பயிற்சி கொடுக்கவே எனக்கு ஆசை. ஆர்வமா முழுமனதோடு கத்துக்கிட்டா மூணு மணிநேரம் போதுமானது.

தற்சமயம் இந்தியா முழுவதும் சென்று இந்த தமிழி எழுத்து முறையைச் சொல்லிக் கொடுக்கும் முயற்சியும் செய்திட்டு இருக்கேன். தருண் விஜய், தமிழ் ஆர்வலரும் கூட. அவர் மூலமா இன்னும் இந்தியா முழுக்க தமிழ் கலாசாரம் மற்றும் தமிழி மொழியினுடைய முக்கியத்துவத்தை கொண்டு சேர்க்கும் முயற்சியிலே இருக்கேன்.

கொரோனா முடிஞ்சதும் மாதம்தோறும் கேம்ப் நடத்தி பல ஊர்களுக்குப் போயி மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கலாம்னு திட்டம் இருக்கு. தமிழியைத் தொடர்ந்து கோயில் கல்வெட்டு கள்ல இருக்கற வட்டெழுத்துகளையும் கத்துக்கிட்டு இதே பாணியிலே மாணவர்கள் கிட்ட சேர்க்க ஆசை.

என் மனைவி, குழந்தைகள்னு என்னைச் சேர்ந்த பலரும் கல்வெட்டுகள்ல உள்ள தமிழி மொழியை சுலபமா படிக்கிறாங்க. நம்ம மொழி, நம்ம கலாசாரம்; அதிலே ஆதிகால முறை எழுத்தும் தெரிந்த மாணவர்களை உருவாக்குறதை விட ஓர் ஆசிரியரா வேற என்ன சந்தோஷம் இருக்கு?

இதிலே பெரிய சந்தோஷம் என்னன்னா, கல்வெட்டுகளைப் படிச்சபோதுதான் எங்க ஊர் ‘கரூர்’ இல்லை, ‘கருவூர்’ என்கிறதைக் கூட ஆதாரத்துடன் தெரிஞ்சிக்கிட்டோம்...’’ உற்சாகமாகவும் பெருமையாகவும் சொல்கிறார் இந்த தமிழ் ஆர்வமுள்ள ஆங்கில வாத்தியார்.

ஷாலினி நியூட்டன்