அன்பின் அடையாளம்...



“நீங்க சொன்னதுதான் பலிக்கும் போலிருக்கு...” சொல்லிக்கொண்டே என் அறையை நோக்கி வந்தாள் மல்லிகா. முகத்தில் லேசாக மகிழ்ச்சி தெரிந்தது.‘‘அதுலயும் ஏதோ வருத்தம் இருக்கு போலல்ல சொல்ற... அநியாயமா இவன் சொன்னது பலிச்சிருச்சேங்கிறாப்ல...’’ மனோகர் அவளை ஓரப் பார்வையால் விழித்து சீண்டினான்.

‘‘ஆமா... பின்னே என்ன... எவ்வளவுதான் இவங்களக் கொண்டாடுறது... தலைல தூக்கி வச்சிட்டு ஆடல்ல வேண்டியிருக்கு..? அதான் யோசிச்சேன்... என்ன தப்பு?’’‘‘தப்பு ஒண்ணுமில்லே. காலம் அப்படியிருக்கு. அதப் புரிஞ்சிக்கணும் நாம! உடலுழைப்புங்கிறது, அதாவது லேபருக்கு இப்பதான் உரிய மவுசு வந்திருக்குதோன்னு தோணுது...’’‘‘எதை வச்சு அப்படிச் சொல்றீங்க..? எல்லாக் காலத்துலயும் உழைக்கிறவங்க உழைச்சிக்கிட்டேதான் இருக்காங்க. இப்ப மட்டும் அப்படி என்ன வந்தது? நீங்க சொல்றீங்களேன்னுதான் செய்தேன்... எனக்கு வேலையாகணுமே..?’’‘‘அவுங்க வாங்குற கூலிகளை வச்சிதான் சொல்றேன்.

வேலைக்குன்னு யாரைக் கூப்பிட்டாலும் அநியாயமால்ல கேட்குறாங்க..? ‘இந்தச் சின்ன வேலைக்கு என்னங்க இப்டிக் கேட்குறீங்க’ன்னா, ‘நீங்க கூப்பிட்டுவிட்டவுடனே ஓடிவர்றோமில்ல சார்... எம்புட்டுத் தொலைவுல இருக்கோம்... சும்மாக் குடுங்க சார்... சடைக்காதீங்க’ன்னு சொல்லி வாங்கிட்டுப் போயிடறாங்க...’’‘‘அன்னைக்கு குழாய் ரிப்பேருக்கு வந்தவனச் சொல்றீங்களா?’’

‘‘ஆமா. நான்தான் ஆரம்பத்துலயே சொன்னேனே... இன்னும் ரெண்டு ரிப்பேர் வேலை சேரட்டும்னு. யாரும் கேட்கலை. உன் பையன் என்னடான்னா வீட்டுல இருக்கிற பத்து பைப்ல ஒரு பைப் ரிப்பேர்ன்னாக் கூட அது ஏதோ கேவலம்ங்கிற மாதிரி உடனே மாத்தியாகணும்னு துள்ளறான்... துடிக்கிறான். ஒத்த வேலை... அதுவும் சின்ன வேலை... தொட்டா இருநூறாவது பிடுங்கிடுவான்... தெரியும்தான். வந்தவன் அன்னைக்கு என்ன பெரிசா செய்திட்டான்? பாத்ரும்ல இருந்த குழாய் திருகுமூடியக் கழட்டி இங்க ஸிங்க் குழாய்ல கொண்டு வந்து மாட்டி விட்டான். அதுக்கு இருநூறா? அநியாயம்தானே..?

புதுசே வாங்கிட்டு வரச்சொல்லி மாத்தியிருக்கலாம்... பாத்ரூம் வாஷ்பேசின் குழாய் இப்போ வாயைப் பிளந்திட்டு நிக்குது. யூஸ் பண்ண முடியாது. அதை .இங்கே மாத்திப் போட்டாப் போதும்னு தெரிஞ்சிருக்கே... அதுக்குத்தான் காசு!’’‘‘புதுசு வாங்கக் கிளம்பினா அதுலயும் ஐம்பது நூறு அடிப்பானே! ஒரு வேலைன்னு வந்தா முன்னூறு, ஐந்நூறுன்னு பார்க்காமப் போகக் கூடாதுன்னு கங்கணம் கட்டிட்ட மாதிரில்ல வர்றாங்க? ஒரு சுவிட்ச் மாட்டினா நூறுல்ல கேட்கறான்?’’‘‘அப்போ இந்த மாதிரி சின்னச் சின்ன வேலைகளெல்லாம் நாமளே தெரிஞ்சி வச்சிக்கணும். எலெக்ட்ரிசிடி, குழாய் ரிப்பேர், ஃபேன் மாட்டுறதுன்னு. அப்போ காசு மிச்சமாகும். தண்டம் கொடுக்க வேணாம்...’’

‘‘நாட்டுல இப்படிப் பலபேர் தண்டம் அழுதிட்டு வயிற்றெரிச்சலோட அலையறாங்க... சரி விடு. இதெல்லாம் தவிர்க்க முடியாதது. இப்போ சொல்லு... அந்தம்மாக்கு நான் சொன்ன மாதிரி செய்தியா இல்லையா..? நான் கண்டுபிடிச்சது அதுதான்.... அரவணைக்கணும். அதான் வழி...’’
‘‘செய்திட்டுத்தான ‘நீங்க சொன்னதுதான் பலிக்கும்போல இருக்கு’ன்னு சொல்ல வந்தேன்...’’

‘‘அதெல்லாம் ஒரு சைக்காலஜி. எந்த விஷயத்தையும் கொஞ்சம் மனோதத்துவ ரீதியா நினைச்சுப் பார்க்கப் பழகிக்கணும். அப்போதான் அந்த விஷயத்துல உள்ள தாத்பர்யம் புரியும். நெஞ்சுல ஈரத்தோட யோசிக்கணும். நாமென்ன பெரிய முதலாளியா? சாதாரண மிடில் க்ளாஸ்தானே..?’’
‘‘என்ன தாத்பர்யமோ... ஆனாலும் மாசம் ரெண்டாயிரம்ங்கிறது ரொம்ப ஜாஸ்திங்க. ரெண்டு ரூம், ஒரு ஹால், கிச்சன் பெருக்கிக் கூட்டுறதுக்கும், பாத்திரம் தேய்க்கிறதுக்கும் இவ்வளவா சம்பளம்?’’

‘‘இன்னைக்கு  தேதிக்கு அதுதான் ரேட்டு. இந்த ஏரியாவுல பார்வையைக் கொஞ்சம் வீசிப் பாரு... காலைல எட்டு மணிக்குள்ள ஒவ்வொரு வீடா வேலை செய்றவங்க நுழையுறதை... எந்த வீட்ல வேலைக்காரி வச்சிக்கலேன்னு சொல்றே? எல்லாரும் இந்தக் காசைத்தான் கொடுக்கிறாங்க. ஃபிக்சட் மாதிரி ஆயிப்போச்சாக்கும்...’’‘‘அதெப்படித் தெரியும் உங்களுக்கு? போய்ப் பார்த்தீங்களா... இல்ல விசாரிச்சீங்களா? வாரத்துல ரெண்டு நாள் மெழுகுறாங்க... இல்லைன்னு சொல்லலை. ஒவ்வொரு வீட்ல துணிமணி துவைக்கச் சொல்றாங்க.

நாம அதெல்லாமா சொல்றோம்..? வெறுமே பத்துப் பாத்திரம் தேய்ச்சிட்டுப் போறதுக்கு, வீட்டைக் கூட்டி விடுறதுக்கு இவ்வளவு காசா? ஆயிரம் பத்தாதா? நம்மூர்ல ஐநூறுதானே கொடுத்தோம்? இது மெட்ராஸு... ஆயிரம் கொடுப்போம். தொலையட்டும். அதுக்காக ரெண்டாயிரமா? பகல் கொள்ளையால்ல இருக்கு? பையன் சம்பாத்தியம்னாலும் அதுக்கும் ஒரு நியாயம் வேண்டாமா?’’

‘‘வயித்தெரிச்சப்பட்டே மாய்ஞ்சிடுவ போலிருக்கே? விட்டுத் தள்ளு. எல்லார் வீட்டுலயும் அதுதான் கொடுக்கிறாங்க. ஒரு வேளைக்கே ரெண்டாயிரம்... சில வீடுகள்ல காலைலயும், மாலைலயும் போய் வேலை செய்றாங்க. அங்கே மூவாயிரம் கூட வாங்குறாங்க...’’
‘‘பயங்கர சம்பாத்தியம்... இப்டி பத்து வீடு பார்த்தா போதுமே... மாசத்துக்கு இருபதாயிரத்துக்கும் மேலே சம்பாதிக்கலாமே? நம்பள விட இவங்க பொழப்பு பரவால்ல போலிருக்கு!’’

‘‘இவங்களுக்குத்தான் கிராக்கி இன்னைய தேதிக்கு. அதனாலதான் நான் சொன்னதச் செய்யின்னு சொன்னேன்...’’‘‘நாலு நாளா அந்தம்மா வரல்லே. காரணம் கேட்டப்போ வீடு மாத்துனேன்னாங்க. வீடு மாத்த நாலு நாளா..?’’‘‘தொலைவுல வீடுபார்த்து வாடகைக்குப் போயிட்டாங்க. பக்கத்து பங்களா வீட்டுக்கும் வரலை. அங்க ரெண்டாயிரம்... இங்க ரெண்டாயிரம்னு வெறும் நாலாயிரத்த வச்சிக்கிட்டு எப்டி குடும்பம் நடத்துறது? ‘வாடகையே ரெண்டாயிரம் முழுங்கிடுது. வீடு தள்ளிக் கெடக்கு. தினசரி பஸ்ஸுக்குக் கொடுக்க ஏலாம நடந்தே வர்றேன்...’ இப்டியெல்லாம் புலம்பு றாங்கல்ல...’’

‘‘இந்த ரோடுக் கடைசில ஒரு கட்டட வேலை நடக்குதுல்ல... அங்க வேலை செய்றாங்களாம். அந்தம்மா புருஷனும் அங்கதான் வேலை பார்க்கிறான்...’’
‘‘சரியாப் போச்சா? அப்போ காலைல புறப்பட்டு வந்து பங்களாவுல வேலையை முடிச்சிட்டு நேரா அந்தக் கட்டட வேலைக்குப் போயிடுறாங்க. சாயங்காலம் ஆறரை மணிக்கு மேலே நம்ப வீட்டுக்கு வேலை செய்ய வந்தா... உடம்புல தெம்பு வேண்டாமா? ’’
‘‘அதுக்கு நாம என்னங்க பண்ண முடியும்? எதுக்கு ஏத்துக்கிறாங்க? ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரிப் பிழைப்பு... எல்லாத்துக்கும் சேர்த்து நாம வருத்தப்பட்டு உடம்பை வருத்திக்க முடியுமா?’’

‘‘அங்கதான் நான் சொன்னதைப் புரிஞ்சிக்க மாட்டேங்கிற... அப்பப்போ சாயங்கால வேளைல டிமிக்கி கொடுத்திடுறாங்களே... அது ஏன்?’’
‘‘அலுப்புதான்... வேறென்ன? அந்தம்மாவும் மனுஷிதானே? ஒரேயடியா நின்னுடுவாங்களோன்னு பயமாயிருக்கே?’’
‘‘தெரியுதுல்ல... அப்ப ஒண்ணு செய். தினசரி காலைல பங்களா வேலையை முடிச்சிட்டு, இங்கயும் வந்து செய்து கொடுத்திட்டு அப்புறம் கட்டட வேலைக்குப் போன்னுசொல்லிடு...’’

‘‘அப்டிச் சொன்னா, எனக்கு வேலையே வேண்டாம்னு நின்னாலும் நின்னுடும். அப்புறம் யாரு சமாளிக்கிறது? ஆளில்லாம என்னால முடியாது. எனக்கென்ன சின்ன வயசா?’’‘‘அப்போ இப்படிச் செய்...’’ நான் சொன்னேன் அந்த ஐடியாவை. மல்லிகா துணுக்குற்றாள்.
கடைசியில் என் ஐடியாதான் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. ‘‘பார்த்தியா..? நான் சொன்ன போது என்னவோ சடைச்சியே? இப்போ ஒழுங்கா வண்டி ஓடுதா? எளிய மக்களோட மன ஆதங்கங்களும், விருப்பங்களும், எதிர்பார்ப்பும் என்னவா இருக்கும்னு புரிஞ்சிக்கிற திறன் வேணும். அதுக்கு பெரிய அறிவு வேண்டாம். கொஞ்சம் கருணையும், இரக்கமும் இருந்தாப் போதும்.

இந்த உலகமே அன்பு செய்றதுலதாண்டி நிக்குது. அதுக்குக் கட்டுப்படாதவங்க யாருமே இல்ல...’’ ‘‘ரெண்டாயிரம் சம்பளம் பத்தாதுன்னு தினசரி இது வேறே. ராஜபோகம்தான். என்னோட இத்தனை வருஷ அனுபவத்துல இதுதான் புதுசு...’’‘‘ஒண்ணும் குறைஞ்சு போக மாட்டே. நமக்கு ஒண்ணும் பெரிய நஷ்டமாயிடாது. மனசார உன்னை வாழ்த்துவாங்க. பசிடி பசி. அதோட கொடுமையை  நான் அனுபவிச்சிருக்கேன். அதுல உணர்ந்து தெளிஞ்சதுதான் இதெல்லாம்!’’‘‘என்னவோ நல்லதுதானே செய்றோம். நீங்க சொன்னதுலேர்ந்து அந்த மனநிலைக்கு நானும் வந்திட்டேன். சொன்னதுக்கும் மேலேயே செய்றேன். அசந்து வர்றாங்களா... பார்க்கவே பாவமாயிருக்கு.

சுடச்சுட காப்பி போட்டு பெரிய டம்ளர்ல ஒரு டம்ளர் இந்தா எடுத்துக்கோன்னு வச்சிடுவேன். நாலு பிஸ்கட்டையும் தட்டுல வச்சி நீட்டிடுவேன். சமயத்துல சப்பாத்தி, தோசைன்னு ஹாட்பேக்ல இருந்தா அதுவும்தான். ஆசுவாசமா அப்டி ஓரமா அமர்ந்து அந்தம்மா சாப்பிடுறதப் பார்க்கணுமே... பாவம். நாள் பூரா என்னா உழைப்பு..? என்ன பெண் ஜென்மமோ? புருஷன் சம்பாத்தியம் போறாதுன்னுதானே இந்தக் கஷ்டம்? கண்ணீர் வந்துடுத்து எனக்கு. அவுங்க முன்னாடி அழக் கூடாதேன்னு இப்டித் திரும்பிண்டுட்டேன்...’’ ‘‘நான் கோடி காண்பிச்சேன்... நீ கப்புன்னு பிடிச்சிக்கிட்டே.

உன் மனசுலயே இரக்கமும் கருணையும் இருந்திருக்கு. அதை நீ இப்பதான் வெளிப்படையா உணர்ந்திருக்கே. இனிமே பாரு... அந்தம்மா நம்ப வீட்டுக்கு ஆப்சென்டே ஆகமாட்டாங்க. நம்ப வீட்டு வேலைக்காரியை நாமதாண்டி கொண்டாடணும். அன்பா, ஆதரவா இருக்கிறதை அவுங்க மனசார உணரணும்... அதான் முக்கியம்...’’ ‘‘அதோட மட்டுமில்லீங்க... சாம்பார், ரசம், கறி, கூட்டுன்னு எது மீதமிருக்கோ, சாதம் உட்பட அதை அப்டியே ஒரு பாத்திரத்துல போட்டுக் கொடுத்திடறேன்...’’ ‘‘நான் சொன்ன இந்த டெக்னிக்கை மட்டும் டிஸ்கன்டினியூ பண்ணிடாதே. அப்புறம் நமக்குதான் ஆபத்து...’’மல்லிகாவிடம் என்னவோ இப்படித்தான் சொன்னேன். வெறும் டெக்னிக்கா அது?

அப்படி நினைத்தால் அது கொச்சையல்லவா? ஒருவரின் ஏழ்மையைக் கேலி செய்ததாகாதா? ஒரு பெண் தன் உழைப்பினால் எப்படிப் பொறுப்பாய் தன் குடும்பத்தைக் காப்பாற்ற முனைகிறாள்? காலையிலிருந்து இரவு வரை என்னவொரு தொடர்ச்சியான உழைப்பு? மாலையில் இங்கு வந்து வேலை செய்யும்போது கொஞ்சமேனும் அதற்கு உடல் தெம்பு வேண்டாமா? அந்த ஜீவன் அல்லாடிக் கொண்டேவா தன் கடமையைச் செய்யும்? அதுவும் சக மனுஷ சாதிதானே?

ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த மல்லிகாவோடு போய் நின்று நானும் நோக்கினேன். அங்கே அந்தம்மா... அருணா... ‘‘மாடில மாமி வீட்டுக்குப் போயி வேலையை முடிச்சிட்டுத்தான் வீட்டுக்குப் போகணும். சூடா மாமி கொடுக்கிற காப்பியிருக்கே... அத ஊத்துனாதான் உசிரு திரும்பும். நா வருவனான்னு மாமி காத்திட்டிருக்கும். ஏமாத்தப்படாது.

ஒத்தையாக் கெடந்து கஷ்டப்படுது. நாம ஒதவாம வேறே யாரு இருக்காக அவுகளுக்கு? நா போயிட்டு வந்திடறேன்... நீ வீட்டுக்குப் போ... சாப்பாடு தருவாக...கொண்டாரேன்... நா வந்தபின்னாடி  சாப்பிடலாம்...’’ என தன் கணவனிடம் சொல்லிவிட்டு அந்தம்மா படியேறி வரும் சத்தம் கேட்டது. மல்லிகாவின் முகத்தில் இருந்த திருப்திக்கு அளவேயில்லை. அன்பின் அடையாளம் என்பது என்ன? வெறும் வாய் வார்த்தையா...? செய்து காண்பிப்பதுதானே?  இந்த உலகம் அன்பு என்கின்ற வலையினால் பின்னப்பட்டிருக்கிறது என்பது எவ்வளவு சத்தியமான உண்மை!       

உஷாதீபன்