செக்யூரிட்டி to வெப் டெவலப்பர்!



சில நாட்களுக்கு முன்பு ஒரு சமூக வலைத்தளத்தில் அப்துல் அலிம் என்ற இளைஞர் எழுதிய அனுபவப் பதிவு ஒன்று வைரலானது. ஆயிரக்கணக்கானோர் அந்தப் பதிவைப் பகிர்ந்து அப்துல் அலிமைப் புகழ்ந்தனர்.
ஒரு ஐடி நிறுவனத்தில் 6 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு செக்யூரிட்டியாக வேலைக்குச் சேர்ந்து, அதே நிறுவனத்தில் app டெவலப்பராக முன்னேறியிருக்கிறார் அப்துல். இன்றைக்கு அவரது சம்பளம் லட்சங்களில். வேலை தேடி அலையும் இளம் பட்டதாரிகளுக்கு உத்வேகம் அளிக்கிறது அப்துலின் வாழ்க்கை.

‘‘அசாம் மாநிலம் கவுகாத்தியிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு குக்கிராமம்தான் எனது பூர்விகம். அரசு பள்ளியில்தான் படித்தேன். படிப்பில் முதல் ஐந்து ரேங்குக்குள் வருவேன். எட்டாம் வகுப்பு படிக்கும்போது எங்கள் பள்ளிக்கு கம்ப்யூட்டர் வந்தது. ஸ்டார் ஆபீஸ், ஹெச்.டி.எம்.எல். போன்ற அடிப்படை விஷயங்களைப் பள்ளியிலே கற்றுக்கொண்டேன். குடும்பச்சூழலால் பத்தாம் வகுப்பு வரைதான் படிக்க முடிந்தது...’’ என்று ஆரம்பித்த அப்துல், சென்னைக்கு வந்த கதையைப் பகிர்ந்தார்.

‘‘எங்கள் ஊரில் ஒரு மாதம் வேலை செய்தால் இரண்டாயிரத்தில் இருந்து மூன்றாயிரம் வரைதான் சம்பளம் கிடைக்கும். அதனால்தான் அசாமிலிருந்து பலர் சென்னைக்கு வந்து செக்யூரிட்டியாக வேலை செய்கிறார்கள். அவர்களைப் போல எனக்கும் செக்யூரிட்டி வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் இங்கு கிளம்பி வந்தேன். மூன்று நாள் பயணம். ஒரு மாதம் மஹிந்திரா வேர்ல்டு சிட்டியில் தங்கி யிருந்தேன். வேலை எதுவும் கிடைக்கவில்லை.

அதன்பிறகு சில நாட்கள் ஆழ்வார்பேட்டையில் தங்கியிருந்தேன். சில வாரம் கழித்து கிண்டியில் உள்ள நண்பர்களின் வீட்டுக்கு வந்தேன்.

அப்போதுதான் போரூரில் உள்ள ‘ஜோஹோ’ அலுவலகத்தில் செக்யூரிட்டியாக வேலை கிடைத்தது. அலுவலகத்துக்கு வரும் பணியாளர்களை ஸ்கேன் செய்து அனுப்பும் பணி. ஷிஃப்ட் தொடங்கும்போதும் முடியும்போதும் வேலையிருக்கும். 12 மணி நேர வேலை. இடைப்பட்ட நேரத்தில் ஃபிரன்ட் டெஸ்க்கில் உள்ள கம்ப்யூட்டரில் ஏதாவது படித்துக்கொண்டிருப்பேன்...’’ என்ற அப்துல், வெப் டெவலப்பாளரான கதையையும் சொன்னார்.

‘‘ஐடி கம்பெனி என்பதால் இரவும் பகலும் இயங்கிக்கொண்டே இருக்கும். அங்கு பணிபுரிபவர்கள் டீ குடிக்க வெளியே வருவார்கள். அவர்களுடன் நேரம் கிடைக்கும்போது பேசிக்கொண்டிருப்பேன்.

ஷிபு அலெக்ஸ் என்னும் சீனியர் புரோகிராம் டிசைனர் ஒருவர் என்னிடம் அடிக்கடி பேசுவார். நான் பேசியதை வைத்து, பையனுக்குக் கொஞ்சம் கம்ப்யூட்டர் பற்றி தெரியும் என்பதை மனதில் வைத்துக்கொண்டார். என்னைப் பார்க்கும்போதெல்லாம் கிராஃபிக்ஸ் டிசைன், டேட்டா கோடிங், புரோகிராமிங் சார்ந்து எதைப் படிக்க வேண்டும் என்பதை சொல்லிக்கொடுப்பார். அவர் சொல்லியதை முழு ஈடுபாட்டுடன் படித்தேன். எட்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு appபை வடிவமைத்து அவரிடம் காண்பித்தேன். அவருக்குப் பிடித்திருந்தது.

பத்தாம் வகுப்பு மட்டுமே படித்திருக்கிறேன். அதுவும் தேர்ச்சியில்லை. பெருசா நம்ம லைஃப்ல என்ன நடக்கப்போகுது என்று அலட்சியமாகத்தான் இருந்தேன். ஆனால், அந்த app மூலமாக ‘ஜோஹோ’வில் நேர்முகத் தேர்வுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் தேர்வானேன். எட்டு வருடங்களாக போரூரில் உள்ள ‘ஜோஹோ’வில் வேலை செய்து வருகிறேன்.

காலம் கடந்துவிட்டது என நினைக்க வேண்டாம். எப்போது வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். 2020, 2021 என இந்த இரண்டு வருடங்கள் நம்மை வாட்டி வதைத்திருக்கலாம். மறுபடியும் லாக்டவுன் வந்து நம் வாழ்வை நிலைகுலைய வைக்கலாம். அனைத்தையும் கடந்து வருவோம்...’’ என நம்பிக்கை வார்த்தைகளை அள்ளி வீசுகின்ற அப்துல், இப்போது தெள்ளத்தெளிவான ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் செய்கிறார். தவிர, தமிழில் அழகாகப் பேசுகிறார்.

‘‘இங்கு வருவதற்கு முன்னர் அசாமீஸ், பெங்காலி மற்றும் இந்தி மட்டுமே தெரியும். சென்னைக்கு வந்த பிறகுதான் தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலத்தையும் கற்றுக்கொண்டேன். திருக்குறளை விரும்பிப் படிக்கின்றேன்...’’ உற்சாகத்துடன் சொல்கிறார் அப்துல்.
 
திலீபன் புகழ்