பரோட்டா சூரியும் ரஷ்ய அதிபர் புடினும்!



ரஷ்ய அதிபரின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் சட்டம் ஒன்றில் இன்று அதிபர் புடின் அதிகாரபூர்வமாக கையெழுத்திட்டிருக்கிறார்.

புடினின் நடப்பு ஆட்சிக்காலம் 2024ல் முடியவிருக்கும் தருணத்தில் அதை மேலும் இரண்டு ஆட்சிக்காலத்துக்கு தொடரலாம் என்று இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, இதுவரை அவர் ஆட்சி செய்த காலக் கணக்கு reset செய்யப்பட்டு அவர் மேலும் பன்னிரண்டு வருடங்களுக்கு ஆட்சியை பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கலாம்.  

இதற்குமுன் வரை ரஷ்ய அதிபரின் அதிகபட்ச ஆட்சிக்காலம் 12 வருடங்களாக இருந்தது. அதாவது 6 வருடங்கள் நீடிக்கும் இரண்டு ஆட்சிக் காலங்கள்.
இந்த திருத்தத்தின் மூலம் மேலும் 12 வருடங்கள் புடின் அதிபராக ஆட்சியில் நீடிக்கலாம். புடினுக்கு இப்போது வயது 68. இந்த திருத்தத்தின் படி அவர் ஆட்சிக்காலம் முடியும் போது அவருக்கு 84 வயதாகியிருக்கும். அப்படியே நேரடியாக ரிடையர்மென்டுக்கு போய்விடலாம்!

பெலாரஸ், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் என்று பல முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளிலும் இதே நிலைமைதான். ஸ்திரத்தன்மை என்னும் பெயரில் ஆட்சியை நீட்டித்துக்கொண்டே போவது. மக்களும் விதியே என்று ஏற்றுக்கொள்வர். துருக்கியிலும் கூட இதே கதைதான். ஆனால், இந்த ஆட்சி நீட்டிப்பு டெக்னிக்கை  கிட்டத்தட்ட ஒரு கலையாகவே ஆக்கியவர் புடின்.

கொஞ்சம் பின்நோக்கிப் போய் பார்ப்போம். புடின் அரசியலுக்கு வரும் முன் 16 வருடங்கள் ரஷ்ய உளவு அமைப்பான KGBயில் பணிபுரிந்திருக்கிறார். அந்த சமயத்தில் இருந்தே கிட்டிய தொடர்புகள் மூலம் அரசியல் வட்டாரங்களில் பலத்த செல்வாக்கை ஈட்டினார். 1999ல் போரிஸ் யெல்ட்சின் பதவி விலக அவருக்கு அடுத்து ரஷ்ய அதிபராக புடின் பதவியேற்றார்.

அப்போதைய அரசியல் சாசனத்தின்படி அதிபரின் ஆட்சிக்காலம் 4 வருடங்கள்தான். எனவே, புடின் மீண்டும் 2004ல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்தோடு அவரின் அதிகபட்ச இரண்டு ஆட்சிக்காலம் என்பது 2008ல் முடிவுக்கு வந்தது. இந்தப் புள்ளியில்தான் தந்திரமாக காய் நகர்த்துகிறார் புடின்.

2008ல் தனது விசுவாசியும் ஆதரவாளருமான மெட்வடேவ் என்பவரை அதிபர் ஆக்கினார். அவர் உடனே புடினை பிரதமர் பதவியில் அமர்த்தினார். பெயரளவில் மெட்வடேவ் அதிபர். ஆனால், அதிகாரம் முழுதும் பிரதமர் புடின் கையில். இந்த ஆட்சியில் மெட்வடேவ் இன்னொன்றும் செய்தார். அதாவது அரசியல் சாசனத்தில் அதிபர் பதவிக் காலகட்டத்தை 4 வருடம் என்பதில் இருந்து 6 வருடங்களாக மாற்றினார்.

மீண்டும் 2012ல் ‘வெண்ணிலா கபடிக் குழு’ பரோட்டா சூரி போல அதிபர் பதவி ஏற்றார் புடின். இந்த ஆட்சிக்காலம் 2018ல் முடிவுக்கு வந்தது.

மீண்டும் இரண்டாம் ஆட்சிக்காலமாக 2018ல் தேர்ந்தெடுக்கப்பட்டார் புடின். இது 2024 வரை நீளும் நடப்பு ஆட்சி. இந்த முறை எதற்கு இன்னொரு ஆள் வைத்து அரசியல் சாசனத்தை மாற்ற மெனக்கெட வேண்டும் என்று தனது நடப்பு பதவிக் காலத்திலேயே இன்னொரு முறை ‘கோட்டை அழித்து பரோட்டா சாப்பிடுவதாகச் சொல்லும் சூரி’ விளையாட்டை விளையாடியிருக்கிறார் புடின்.

இந்த ‘தேர்ந்தெடுக்கப்படுகிறார்’ என்பது ஒரு பேச்சுக்குத்தான். ரஷ்ய தேர்தல் வெளிப்படையானது அல்ல. தொடர் முறைகேடுகள் வாக்கெடுப்பில் நம்பிக்கையே இல்லாமல் ஆக்கிவிட்டன. புடினுக்கு எதிராக ஒருவர் எழுந்து வந்தால் அவர் உடனே ‘முடக்கப்படுவார்’. இப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான நவால்னோவை சில வருடங்களுக்கு முன் விஷம் வைத்துக் கொல்ல முயற்சி நடந்தது. ஒருவாறு அதிலிருந்து தப்பிப் பிழைத்த நவால்னோ, இப்போது மீண்டும் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்!எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் மொத்தம் 36 வருடம் உச்சகட்ட அதிகாரத்துடன் ரஷ்யாவை ஆட்சி செய்தவர் என்ற பெயரை புடின் பெறுவார்!   

கார்த்திக் வேலு