மேற்கு வங்க அரசியலை உலுக்கும் ஒற்றைக் குடும்பம்!



சமீபத்தில் பாஜகவுக்கு எதிராக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசிய அனல் தெறிக்கும் பேச்சு இது: ‘‘பிஜேபி என்றால் ‘பாரதிய ஜோகோனா (தவறான) பார்ட்டி’.

நான் பலமுறை லோக்சபா எம்பியாக இருந்திருக்கிறேன். ஆனால், ஒருபோதும் இப்படி ஓர் இரக்கமற்ற, கொடூரமான பிரதமரைச் சந்தித்ததில்லை. பாஜக என்பதே ராட்சஷர்கள், அரக்கர்கள், ராவணர்கள், துரியோதனர்கள், துச்சாதனர்கள், துஷ்டசக்திகள், தீவிரவாதிகள் அடங்கிய கூடாரம்தான்...’’
மம்தாவின் இந்தக் கடும் பேச்சுக்கு என்ன காரணம் என்று தேடிப்போனால் ஒரு குடும்பத்தைக் கைகாட்டுகிறார்கள் அரசியல் நோக்கர்கள். மேற்கு வங்காளத்தின் அரசியல் சூழ்நிலையையே தீர்மானிக்கும் மிகப் பெரிய சக்திமிக்க குடும்பம் அது. ஒருவகையில் இந்தக் குடும்பத்தை வளர்த்துவிட்டதே மம்தாவும் அவரது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும்தான்.

இப்போது இந்தக் குடும்பத்தை மொத்தமாக பிஜேபி வாங்கிவிட்டது. இதனால் மேற்கு வங்காளத்தின் அரசியல் களேபரமாக மாறி நிற்கிறது. ஒருவர் கையை எடுத்து அவரின் கண்ணையே குத்துவது போல் மம்தாவால் வளர்ந்த ஒரு குடும்பத்தைக் கொண்டே இன்று மம்தாவின் அதிகாரத்தை நிலைகுலையச் செய்ய முயற்சிக்கிறது பாஜக. இதுதான் மம்தாவின் பொருமலுக்குக் காரணம்.

சரி, யார் அந்தக் குடும்பம்? அப்படி என்ன செல்வாக்கு அவர்களுக்கு என்று கேட்பவர்கள் சென்ற தசமங்களில் நடந்த நந்திகிராம் விவகாரத்தை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். அப்போது சிபிஎம் கட்சியிடம் அதிகாரம் இருந்தது. ஆளுங்கட்சிக்கு எதிராக அதில் தீவிரமாகக் களமாடிய ஒரு முகம் உங்கள் நினைவுக்கு வருகிறதா?

ஆமாம். சிசிர் அதிகாரி. அவரேதான். அவரின் குடும்பம்தான் இன்று மேற்கு வங்காளத்தில் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக வளர்ந்து நிற்கிறது.அதிகாரிகள் குடும்பம் என்றால் மேற்கு வங்க அரசியலே நடுங்குகிறது. தில்லி வரை அவர்கள் செல்வாக்கு கொடிகட்டிப் பறக்கிறது.

சிசிர் அதிகாரி, அவரது மூத்த மகன் சுவேந்து அதிகாரி, இளைய மகன் திப்யேந்து அதிகாரி, கடைக்குட்டி செளமேந்து அதிகாரி என அனைவருமே அரசியல்வாதிகள்தான்.

மேற்கு வங்காளத்தின் புர்பா மெதினிப்பூர் மாவட்டத்தையும் அதைக் கடந்த பகுதிகளையும் ஆட்டிப் படைக்கும் சக்தி இந்தக் குடும்பம்தான். இந்த ஒட்டுமொத்த மாவட்டத்தையும் தன்னுடைய படை பலத்தால் யாரும் நுழைய முடியாத இரும்புக் கோட்டையாக வைத்திருக்கிறது இக்குடும்பம்.

சிசிர் அதிகாரிக்கு இப்போது 79 வயது. இவரது முன்னோர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகள் என்பதால் சிசிர் அதிகாரி குடும்பத்துக்கு இந்திய விடுதலை தொட்டே புர்பா மெதினிப்பூர் மாவட்டத்தில் நல்ல மதிப்பு.

இந்த செல்வாக்கைக் கொண்டு கோண்டாய் நகராட்சிக்கான தலைவர் தேர்தலில் 1975ம் ஆண்டு போட்டியிட்டார் சிசிர். நினைத்தது போலவே வெல்லவும் செய்தார். இதுதான் அதிகாரிகள் குடும்பத்தின் முதல் வெற்றி. அப்போது முதல் அடுத்த இருபத்தைந்து வருடங்களுக்கு சிசிர்தான் அந்த நகராட்சியின் தலைவராக இருந்தார்.

2001ம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முதன் முறையாக காந்திதக்‌ஷின் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றார் சிசிர். 2006ம் ஆண்டு ஈக்ரா தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 2009ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்பியாகி லோக்சபாவில் நுழைந்தார். அப்போது மன்மோகன் சிங் தலைமையில் அமைந்த அரசில் ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் பதவியும் கிடைத்தது.

தன் கன்றை அடிவேரில் வாழை வளர்த்து வருவது போல் அதிகாரிகள் குடும்பத்தில் ஒருவர் தலை எடுத்ததுமே இன்னொருவரின் அரசியல் பிரவேசத்துக்கும் அஸ்திவாரம் அமைக்கப்படும். அப்படித்தான் சிசில், தான் ஊராட்சித் தலைவராக இருக்கும்போதே தன்னுடைய மூத்த மகன் சுவேந்து அதிகாரியை தம்லுக் ஊராட்சித் தலைவராக்கி அழகு பார்த்தார். இதனால் இந்தக் குடும்பத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் நிகழ்ந்தது.
2007ம் ஆண்டு நந்திகிராம் நிலம் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் அதிகாரிகள் குடும்பம் ஒரு முக்கிய சக்தியாக விளங்கியது.

சிபிஐ(எம்) என்ற மாபெரும் அரசியல் இயக்கத்தை அடியோடு சாய்ப்பதற்கான முதல் விதையாக நந்திகிராம் இருந்தது என்றால் அதன் காரணகர்த்தாவாக அதிகாரிகள் குடும்பம் இருந்தது. ஒட்டுமொத்த மாவட்டத்தையும் தன் அசுர செல்வாக்கால் கட்டி வைத்திருந்த அதிகாரிகள் குடும்பம், ஆர்ப்பாட்டக்காரர்களை ஒருங்கிணைத்து செய்த போராட்டங்களால் நந்திகிராமில் நிலத்தை கையகப்படுத்துவதற்கான முயற்சியை அப்போதைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு கைவிட்டது.

இதன் பிறகு அந்தப் பகுதியில் இருந்த கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆணிவேரையே அடியோடு சாய்த்து அங்கு இடதுசாரிகள் வெல்லவே முடியாத நிலையை உருவாக்கியது அதிகாரிகள் குடும்பம். இப்படியாக மம்தாவின் குட்புக்கில் இடம்பெற்றனர் அதிகாரி குடும்பத்தினர். அதன் பரிசாகத்தான் அடுத்த மூத்தவர் சிசிலுக்கு மத்திய அமைச்சர் பதவியும் இளையவருக்கு சட்டசபை உறுப்பினர் பதவியும் கிடைத்தது.

கட்சியிலும் ஆட்சியிலும் பங்கு கிடைத்தபிறகு அதிகாரிகள் குடும்பத்தின் செல்வாக்கு கட்டுப்பாடு இல்லாமல் வளரத் தொடங்கியது. இவர்களது பூர்வீகமான புர்பா மெதினிப்பூர் மாவட்டத்தைக் கடந்து, பங்கூரா, புர்லியா, பாசிம் மெதினிப்பூர் எனும் மூன்று அண்டை மாவட்டங்களிலும் இவர்களது செல்வாக்கு தீவிரமாக வளர்ந்தது. கட்டப்பஞ்சாயத்து முதல் ரியல் எஸ்டேட் வரை எல்லாவற்றிலும் இவர்கள் வைத்ததுதான் சட்டம் என்றானது.

இந்த நான்கு மாவட்டங்களையும் சேர்த்தால் மொத்தம் ஒன்பது நாடாளுமன்றத் தொகுதிகளும் 63 சட்டமன்றத் தொகுதிகளும் வரும். இந்தத் தொகுதிகளில் சுவேந்து அதிகாரியின் செல்வாக்கு வானளாவ வளர்ந்துகொண்டே சென்றது. சுவேந்துவை மம்தா மிக அதிகமாக நம்பினார். ஜங்கன்மஹால் எனப்படும் மேலே சொன்ன நான்கு மாவட்டங்கள் தவிர மால்தா, முர்ஸிதாபாத் என பல பகுதிகளிலும் கட்சியை வலுப்படுத்தும் பணி சுவேந்துக்குத் தரப்பட்டது.

தெற்கு வங்காளத்தில் குறிப்பாக, ஹால்தியா துறைமுகப் பகுதிகளிலும் அங்கு உள்ள தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் சுவேந்து யாராலும் அசைக்க முடியாத ராஜாவாக உருவெடுத்தார்.சுவேந்து அதிகாரி மட்டுமல்லாமல் இவரது இளவல்கள் திப்யேந்து மற்றும் செளமேந்து அதிகாரி ஆகியோரும் அரசியல் பொறுப்புகளிலும் பதவிகளிலும் இருக்கிறார்கள். இப்படியான சூழலில்தான் ஒரு கட்டத்தில் மம்தாவோடு அதிகாரி குடும்பத்துக்கு உரசல்கள் தொடங்கின. மம்தாவின் நிழல் என்றும் நிழல் முதல்வர் என்றும் கருதப்படும் அளவுக்கு வளர்ந்த சுவேந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திடீரென பாஜகவுக்கு கட்சி தாவினார்.

சட்டசபைத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் சுவேந்து கட்சி மாறியது மேற்கு வங்க அரசியலில் கடும் அதிர்வலைகளை உருவாக்கியது. இந்நிலையில் கடந்த மாத இறுதியில் மூத்தவர் சிசில் அதிகாரியும் பிஜேபிக்குத் தாவினார். இப்படி அதிகாரி குடும்பத்தை ஒட்டுமொத்தமாக பாஜக வாங்கியதால்தான் மம்தா பொருமிக்கொண்டிருக்கிறார்.

‘‘அதிகாரிகள் குடும்பத்தின் சுயரூபம் இப்போதுதான் தெரிகிறது. அரசியலில் அதிகாரிகள் மீர்ஜாபர் (பிளாசிப் போரில் நவாப் சிராஜ் உத்துல்லாவுக்கு துரோகம் செய்துவிட்டு வெள்ளைக்காரர்களுடன் சேர்ந்துகொண்ட தளபதி) போன்ற துரோகிகள். இவர்களின் துரோக முகம் புரியாத நானொரு பெருங்கழுதை. ஜனநாயகத்தை மதிக்காத அராஜகவாதிகள். தங்களை ஜமீன்தார் போல் கருதிக்கொள்ளும் சர்வாதிகாரிகள்.

இவர்கள் இப்போதே ஐந்தாயிரம் கோடி சொத்து வைத்திருக்கிறார்கள். மேலும் விட்டால் வங்காளத்தையே விழுங்கிவிடுவார்கள். மக்கள் அவர்களை மேலும் வளர விடாதீர்கள்...’’ என்றெல்லாம் மேடை மேடையாகப் புலம்பி வருகிறார் மம்தா.
வளர்த்த கடா மார்பில் பாய்வது என்பது இதுதான்.

இளங்கோ கிருஷ்ணன்