புதிய நீதி..?



ராஜேந்திர மதன் லோதா, லமிநாராயணஸ்வாமி தத்து, தீரத் சிங் தாகூர், ஜக்திஷ் சிங் கேக்கர்... இந்தப் பெயர்களை எங்கேயாவது கேட்ட நினைவு இருக்கிறதா..? வெகு அரிதாகவே யாரேனும் கேள்விப்பட்டிருக்கக்கூடும்.சரி; இன்னொரு வரிசை. தீபக் மிஷ்ரா, ரஞ்சன் கோகோய், எஸ்.ஏ.போப்டே..?
சிலருக்காவது இவர்கள் யாரென்று தெரிந்திருக்கும். அவ்வப்போது செய்திகளைத் தொடரும்  வழக்கமுள்ள பலருக்கு இந்தப் பெயர்களாவது  பரிச்சயமாக இருக்கும். இவர்கள் எல்லோருமே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளாக இருந்து ஓய்வு பெற்றவர்கள். முதலில் குறிப்பிட்ட வரிசை பாஜக அரசு வருவதற்கு முன் தலைமை நீதிபதிகளாக இருந்தவர்கள். அவர்கள் இருந்த இடமே தெரிந்திருக்காது.

இரண்டாவது குறிப்பிட்ட வரிசை பாஜக அரசு அமைந்தபின் நீதிபதிகளாக நியமனம் பெற்றவர்கள். பல்வேறு வழக்கு களிலும் செய்திகளிலும் சர்ச்சைகளிலும் அவர்களின் பெயர்கள் அடிபட்ட படியே இருந்தன. இந்த வரிசையில் குறிப்பிடப்பட்ட நீதிபதி போப்டே, இன்னும் பதவி ஓய்வு பெறவில்லை. அவர் பதவிக் காலம் இன்னும் ஓரிரு வாரங்கள் பாக்கி  இருக்கின்றன. பொதுவாக ஓய்வு பெறவிருக்கும் நீதிபதிகள் அதற்கு சற்றே முன்னால் முக்கியமான வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கிவிட்டு ஓய்வு பெறுவார்கள்.

சில தீர்ப்புகள் ground breaking ஆக இருக்கும். சில சர்ச்சைக்குரியதாக இருக்கும். கடைசி பால் சிக்ஸர் போல. எப்படியானாலும் அவர்கள் அடுத்த பாலை  எதிர்கொள்ள வேண்டியதில்லைதானே!இன்று உச்சநீதிமன்றத்தின் முன் பல முக்கிய வழக்குகள் உள்ளன. இவற்றில் நீதிபதி போப்டே எந்த வழக்கை முடித்து வைப்பார்; என்ன மாதிரி தீர்ப்பு இருக்கும் என்பதெல்லாம் தெரியவில்லை. இல்லை... சர்ச்சைகளைத் தவிர்க்க வழக்குகளை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு ஓய்வு பெறுவாரா என்பதும் தெரியவில்லை. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

முக்கியமாக அடுத்த உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதியாக ஆந்திராவைச் சேர்ந்த நீதிபதி என்.வி.ரமணாவை குடியரசுத் தலைவர் நியமித்திருக்கிறார் - போப்டேவின் பரிந்துரையின் பேரில். என்.வி.ரமணாவின் பெயர் ஓரளவு பரிச்சயமாக இருக்கலாம். சென்ற வருடம் ஆந்திர முதல்வர் ஜகன்மோகன் ரெட்டியின் மீதான வழக்குகளில் ஆந்திர உயர்நீதிமன்றத்தின் மீது குறுக்கீட்டை நிகழ்த்துகிறார் என்று அதிரடியாக இவர் மேல் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் (திரு.ரமணா) ஆந்திர உயர்நீதி மன்றத்தின் வழக்குகளில் roaste ஐ உருவாக்குவதன் மூலம் தன் செல்வாக்கை செலுத்துகிறார் என்று குற்றம்சாட்டி தலைமை நீதிபதி போப்டேவுக்கு ஜகன்மோகன் ரெட்டியே நேரடியாக கடிதம் எழுதினார். இது இந்திய வரலாற்றிலேயே இதுவரை நிகழ்ந்திராத ஒன்று.உச்சநீதி மன்றம் அந்த குற்றச்சாட்டுகளின் மீது தனிப்பட்ட உள் விசாரணை நடத்தி, இந்த குற்றச்சாட்டில் உண்மை எதுவும் இல்லை என்று குற்றச்சாட்டை தள்ளுபடி செய்துவிட்டது.

நடப்பில் இருக்கும் வழக்கத்தின்படி இது குறித்த தரவுகளோ, சாட்சியங்களோ பொதுவில் வெளியிடப்பட மாட்டாது. நீதிபதி ரஞ்சன் கோகோய் பதவிக்காலம் முடிந்ததும், மத்திய அரசின் மேலவை உறுப்பினர் ஆனார். நீதிபதி போப்டேவும் அதுபோல அரசியலுக்கு வருவாரா? தெரியவில்லை.
நீதிபதி ரமணாவின் பதவி ஏற்பு உத்தரவை அவர் யாரிடம் இருந்து பெறுவார் என்பதும் ஆர்வமாக கவனிக்கப்படும். நீதிபதி போப்டே அதை பிரதமரின் முதன்மை செயலரிடம் இருந்து பெற்றார். நீதிபதி ரமணாவும் இதையே தொடர்வாரா? தெரியவில்லை.

புதிய தலைமை நீதிபதி ரமணா, அரசிடம் இருந்து நீதித்துறைக்கான healthy distanceஐ கைக்கொள்வதன் மூலம் நீதித்துறையின் சுயாதீனப் போக்கை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு; the proof is in the pudding though.    
         
கார்த்திக் வேலு