எஸ்பிபியின் எதிரொலி! இவர் நாகூர் பாபு இல்ல... ரங்கபாபு!



நாகூர் பாபு என்ற மனோவை தமிழ்த் திரையிசை ரசிகர்கள் அறிந்திருப்பார்கள். ஆனால், இந்த ரங்கபாபுவை அறிந்திருக்கமாட்டார்கள். தமிழகத்தில் ஒரு காலத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் இசைக்குழுக்கள் இயங்கின. மதுரையில் பாண்டியன் போல கோவை சேரன் போக்குவரத்துக்கழக இசைக்குழு இயங்கியது. அதன் தலைமைப் பாடகராக இருந்தவர்தான் இந்த ரங்கபாபு. அச்சு அசலாக அப்படியே எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரலாக அவர் குரலும் இனிக்கும்.

தமிழ் சினிமாவில் கே.பி.மோகன் என்ற மெல்லிசைக் குழுவைச் சேர்ந்த பாடகர், நடிகரின் குரலும் அப்படியே எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரலைப் போலவே இருந்ததால் அவர் ஜொலிக்க முடியாமல் போனது. அதைப்போலவேதான் ரங்கபாபுவின் பாட்டுப்பயணமும் மிளிராமல் போனது.
1983ம் ஆண்டு ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் மோகன், அம்பிகா நடிப்பில் வெளியான படம் ‘தூங்காத கண்ணின்று ஒன்று’. கவியரசரின் அற்புதமான பாடலை நினைவூட்டக்கூடிய இப்படத்திற்கு இசை திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்.

இப்படத்தில்தான் ரங்கபாபு பாடகராக அறிமுகமானார். ‘தையல் இட்டாள் ஒரு தையல்...’ எனத் துவங்கும் இப்பாடல் காட்சிகளுக்குப் பின்னால் ஒலிக்கும். அவரது குரலில் இருந்த கம்பீரம் கேட்போரை அப்படியே மெய்மறக்கச் செய்யும். டைட்டிலில் அவர் பெயர் வரும். ஆனால், இசைப் பேழையில் அவர் பெயரோ, பாடலோ இடம் பெறவில்லை.

அவருக்கு இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன்தான் மீண்டும் வாய்ப்பு வழங்கினார். 1988ம் ஆண்டு அவர் இயக்கிய ‘காலையும் நீயே மாலையும் நீயே’ படத்தில் தேவேந்திரன் இசையில் அற்புதமான பாடலை ரங்கபாபு பாடினார்.இப்போது எங்கு திரும்பினாலும் ஒலிக்கும் ‘குக்கூ குக்கூ... தாத்தா தாத்தா களவெட்டி’ பாடலுக்கு முன்பே ஒரு குக்கூ குக்கூ பாடல் பட்டையைக் கிளப்பியுள்ளது. அப்பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி குரல்களில்தான் கேட்டிருப்போம். கங்கை அமரனின் இனிய வரிகள் அவை.

குக்கூ குக்கூ எனக்கூவும் குயிலோசை
தித்திக்கும் என் கண்ணன் குரலோசை
நானும் நாளும் கேட்டு என்
தேகம் வாடினேன்
காதல் ராதை நானும் குயிலாக பாடினேன்...

- ஆனால், இந்தப் பாடலை தனது இணையர் செல்வியோடு இணைந்து இப்படத்திற்காக டிராக் பாடியவர் ரங்கபாபு.
ரவீந்திரன் என்ற மகத்தான இசைக்கலைஞனின் இசையில் ‘காலையும் நீயே மாலையும் நீயே’ படத்தின் அனைத்துப் பாடல்களும் பெரிய அளவில் பேசப்பட்டன.

‘வாடி என் சிட்டுக் குருவி’, ‘சம்மதம் சொல்ல வந்தாள்’, ‘காலையும் நீயே’, ‘ராத்திரிக்குக் கொஞ்சம் ஊத்திக்கிறேன்’ என அத்தனை பாடல்களும் அவரின் இசைத்திறமைக்கு தீனி போட்டன. ஆனால், இப்படத்தில் பாடிய ரங்கபாபு வெளியே தெரியவில்லை.

ரங்கபாபு, செல்வி இருவரின் குரல்களிலும் இருந்த துடிப்பும், வேகமும் தமிழ் சினிமாவில் கண்டுகொள்ளப்படவே இல்லை. ‘சின்னப்பறவைகள்’ படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து பாடிய ‘புதுச்சிட்டும் புடிச்சிட்டும் பொம்பளைய சுத்தி வந்தா விடமாட்டோம்’ பாடலைக் கேட்டால் சொக்கிப் போவோம். அப்போதும் ரங்கபாபுவின் குரல் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரலைத்தான் ஞாபகப்படுத்தும். செல்வியின் குரல் பலவித ஜாலம்  செய்யும்.

எஸ்பிபியின் எதிரொலி போல ரங்கபாபுவின் குரல் இருந்ததால், அவர் பாடிய பல பாடல்களைக் கேட்டாலும் ‘யார் இந்த பாடலைப் பாடினார்கள்’ என்று குழம்பி விடுவோம். உதாரணத்திற்கு, தேவா இசையில் உருவான இந்தப் பாடலைச் சொல்லலாம்.சண்முகசுந்தரம் இயக்கத்தில் பரத்குமார், சங்கவி நடிப்பில் 1995ம் ஆண்டு உருவான படம் ‘அன்புமகன்’. தேவா இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் துள்ளல் வகை.

‘நைனா ரா பாவா ரா’ எனத் துவங்கும் ‘ஏ அம்மா முனியம்மா இனி முழிய பாரு மினியம்மா’ பாடலைக் கேட்டால் எஸ்பிபி பாடியது போலவே இருக்கும். ஆனால், பாடியவர் ரங்கபாபு! ரங்கபாபுவுடன் இணைந்து ரேஷ்மி இந்தப் பாடலைப் பாடியுள்ளார்.1994ம் ஆண்டு ஆனந்த்பாபு, மோகினி, விசு, வினோதினி, விவேக் நடிப்பில் வெளியான படம் ‘பட்டுக்கோட்டை பெரியப்பா’. விசு இயக்கிய இப்படத்திற்கு இசை தேவா.

இப்படத்தில் ஒரு வித்தியாசமான டூயட் உள்ளது. பாடலில் பெண் தோன்றுவார். ஆனால், பெண் குரல் கிடையாது. பெண்ணுக்கும் ஆண் பாடகர்தான் குரல் கொடுத்துள்ளார்.கண்ணே கண்ணே வா என்னை கட்டிணையக்ககாதல் முத்தம்தா என் உச்சி சிரிக்க...

- என்று துவங்கும் இந்த பாடலில் ஆனந்தபாபுவிற்கு ரங்கபாபு, விவேக்கிற்கு சபேசன், வினோதினிக்கு டி.எஸ்.ராமச்சந்திரன் குரல் கொடுத்திருப்பார்கள்.

இப்பாடலில் ‘கத்தும் தவக்களையே என் சித்தம் நினைக்கலையே...’ என்ற வார்த்தைகளை ரங்கபாபு பாடும் ஸ்டைல், ‘எஸ்பிபி என்னமா பாடுறாருய்யா’ என ஏமாற வைக்கும். 1994ம் ஆண்டு விசு நடிப்பில் ‘வாங்க பார்ட்னர் வாங்க’ படம் வெளியானது. இராம.நாராயணன் இயக்கத்தில் சங்கர் (கணேஷ்) இசையில் இப்படத்தில் பல பழைய பாடல்களை தனது குரலில் ரங்கபாபு பதிவு செய்திருப்பார்.

‘போனால் போகட்டும் போடா/இங்கு தேர்தலில் ஒழுங்காய் ஜெயித்தவன் யாரடா’ என ஒரு பாடலை டிஎம்எஸ் ஸ்டைலில் பாடியிருப்பார். இதே படத்தில் ‘அதோ அந்த ரஜினி போல மாறவேண்டும்-இதோ இந்த கமலைப் போல ஆட வேண்டும்... ஒரே படத்திலே ஒரே சீனில் ஒரே சாட்டில் உலகப்புகழை வாங்குவேன்’ என ‘ஆயிரத்தில் ஒருவன்’ படப்பாடலை உல்டா செய்த பாடலையும் ரங்கபாபுதான் பாடியுள்ளார்.

1995ம் ஆண்டு மன்சூர் அலிகான் கதாநாயகனாக நடித்த படம் ‘சிந்துபாத்’. கஸ்தூரி, சங்கவி, ஆர்.சுந்தர்ராஜன், செந்தில் உள்ளிட்டோர் நடித்த இப்படத்தை பாலு ஆனந்த் இயக்கினார். தேவா இசையில் ரங்கபாபு இப்படத்தில் பாடிய பாடல்

ஆட்டம் ஆடுவோங்க பாட்டு பாடுவோங்க
நாட்டுக்குள்ள நாங்க கெட்டிக்காரங்கதாங்க
வீட்டுக்குள்ள பூட்டிக்கிட்டு
தாளம் நல்லா போட்டுக்கிட்டு
வாழ வழி கேட்டுவைச்சா
இன்னக்கில்ல நாளக்கில்ல
என்னக்குமே தீர்வு இல்லை....
- அறிவுரை கூறுவதுபோல ஒலிக்கும் சிறந்த பாடலிது.

யுவன் சங்கர் ராஜா இசையில் மிகச்சிறந்த டூயட் பாடலை ரங்கபாபு பாடியுள்ளார் என்றால் நம்ப மறுப்பீர்கள். ஆனால், அதுதான் உண்மை. 2008ம் ஆண்டு சீமான் இயக்கத்தில் மாதவன், பாவனா நடிப்பில் வெளியான படம் ‘வாழ்த்துகள்’. இப்படத்தில் புவன்ஸுடன் இணைந்து ரங்கபாபு பாடிய ‘பஞ்சா பறக்குதடி மேல் துப்பட்டா / இளம் பிஞ்சாய் இருக்குதடி கைவைக்கட்டா...’எனத் துவங்கும் பாடலுக்கு முன்பாக ‘ஆகா சிம் ஆகா சிம்’ என அழகான கோரஸ் குரல்கள் நம்மை மெய்மறந்து ஆட்டம் போட வைக்கும்.

சிறிய பட்ஜெட் படங்கள் பலவற்றில் ரங்கபாபு பாடியிருக்கிறார். அரவிந்த் சித்தார்த்தா இசையில் ‘கணபதி வருகிறார் சலங்கை குலுங்கவே’, ‘வளமும் நலமும் புகழும்’ போன்ற அழகான பக்திப் பாடல்களைப் பாடியுள்ளார். ஆடி 5வது வெள்ளி அம்மன் பாடல்கள் தொகுப்பிலும், ஸ்ரீ வடிவுடை நாயகி பக்தி ஆல்பத்திலும், கருணாஸ் இசையமைத்த ஆல்பங்களிலும், டெலி சீரியல்களிலும் ரங்கபாபு பல பாடல்களைப் பாடியுள்ளார்.

மெல்லிசை மேடையில் இருந்து பெரிய திரைநோக்கி வந்து பிரபலமடைய முடியாத இசைச் சக்கரவர்த்தி ரகுராஜ் சக்கரவர்த்தியைப் போலவே,  மெல்லிசை மேடையில் இருந்து திரைக்கு வந்த ரங்கபாபுவின் பாடல் பயணம் 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் பெயர் சொல்லும் அளவிற்கு இல்லை. ஆனாலும், அவரின் குரலில் இருந்த ஒருவித லயிப்பு கேட்பவர்களின் ஆன்மாவைக் கிறங்கடிக்க வைக்கும் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.l

ப.கவிதா குமார்