சூர்யா, சிவகார்த்திகேயன் ஹீரோயின்!



‘செல்லம்மா... செல்லம்மா... அங்கம் மின்னும் தங்கம்மா...’ என எல்லோரையும் டூயட் பாட வைத்துவிடுவார் போல பிரியங்கா மோகன். டோலிவுட்டில் நானியின் ‘கேங்லீடரி’ல் அறிமுகமான பொண்ணு இப்போது சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ மூலம் ஸோ பேபியாக தமிழுக்கு வருகிறார்.

இப்பட ரிலீஸுக்கு முன்பே, சிவாவுடன் மீண்டும் ‘டான்’, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா 40ல் ஹீரோயின்... என ஜெட் வேகத்தில் பறக்கிறார்.இதற்கிடையே தெலுங்கில் சர்வானந்துடன் நடித்த ‘கரம்’ படத்திலும் குட் நேம் அள்ளியிருக்கிறார் பிரியங்கா!
‘‘பேஸிக்கா நான் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். நிறைய ஸ்டேஜ் ப்ளே பண்ணியிருக்கேன். அங்கிருந்துதான் டோலிவுட் ஆஃபர் வந்துச்சு. நானி சாரோட ‘கேங்லீடர்’ கிடைச்சது. இயக்குநர் விக்ரம்குமார் சார், பி.சி.ஸ்ரீராம் சார் டெஸ்ட் வச்சு, என்னை செலக்ட் பண்ணினாங்க.
விக்ரம் சாரோட ‘இஷ்க்’, ‘மனம்’, ‘13 பி’, ‘24’ படங்களைப் பார்த்திருக்கேன். எல்லாமே அசத்தலா இருக்கும்.

முதல்நாள் ஸ்பாட் போனதும் கொஞ்சம் மிரண்டுட்டேன். ஏன்னா நானி சார் தவிர சீனியர் ஆர்ட்டிஸ்ட்ஸ் லட்சுமி மேம், சரண்யா மேம் காம்பினேஷன் இருந்துச்சு. சீனியர்களோட நடிக்கறதை நினைச்சப்பவே உதறல் எடுத்துச்சு. ஆனா, எல்லாருமே எனக்கு அவ்ளோ சப்போர்ட் பண்ணினாங்க. Kind hearted. அறிமுகமாகும் முதல் படத்திலேயே லட்சுமி மேம், சரண்யா மேம் இவங்களோட நடிச்சதுல ரொம்ப ஹேப்பி... அண்ட்.. லக்கி!’’ குதூகலிக்கிறார் பிரியங்கா.

உங்க லைஃப்ல பெஸ்ட் மொமன்ட் எது?
நிறைய இருக்கு. ‘கேங்லீடர்’ல கமிட் ஆன நாள் முக்கியமானது. ஏன்னா, அந்தப் படத்துக்கு முன்னாடி எப்படி படங்கள் செலக்ட் பண்ணணும்... ஃபீல்டுல எப்படி ட்ராவல் ஆகணும்... இப்படி எந்த ஐடியாவும் இல்லாம இருந்தேன். ஆனா, ‘கே லீ’க்குப் பிறகு எனக்கு ஒரு க்ளீயர் கட் ஐடியா வந்துடுச்சு. அதேபோல, கோலிவுட்ல ‘டாக்டர்’ல கமிட் ஆன நாளும் பெஸ்ட் மொமன்ட்தான்.

காதல்ல நம்பிக்கை இருக்கா?
நிறையவே! அதிலும் உண்மையான காதல்ல நம்பிக்கை இருக்கு. ஆனா, லவ் மேரேஜ் பெஸ்ட்டா அரேஞ்ஜ்டு மேரேஜ் பெஸ்ட்டானு கேட்டா, சொல்லத் தெரியாது. அதுபத்தின எந்த ஐடியாவும் இல்ல.

தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் to ஆக்ட்ரஸ்... வித்தியாசம் என்ன?

தியேட்டர்னா அதில் லைவ் ஆடியன்ஸ் இருப்பாங்க. நடிப்பு பிடிச்சாலும், பிடிக்கலைனாலும் முகத்துக்கு நேரே ரியாக்‌ஷன் தெரிஞ்சிடும். அதனால சின்னதா ஒரு பயம் ஓடிட்டே இருக்கும். மேக்கப்புக்கு மெனக்கெட வேண்டிய அவசியமில்ல. எதார்த்தமா இருந்தா போதும்.
ஆனா, சினிமாவுக்கு வந்த பிறகு மேக்கப் அவசியம்னு புரிஞ்சிடுச்சு. இதுல லைவ் ஆடியன்ஸ் இல்லாததால பயமில்லாம நடிக்க முடியும்.

உங்க ஹீரோக்கள் பத்தி சொல்லுங்க..?

நானி சார் ஸ்வீட். இனிமையா பழகுவார். ஜோவியல் டைப். அக்கறையாகவும் பார்த்துப்பார். சர்வானந்த் வெரி ஃப்ரெண்ட்லி. ‘ஸ்ரீகரம்’ல நடிக்கும்போது ஸ்பாட்ல நாங்க சினிமாவைத் தாண்டியும் நிறைய பேசுவோம். ஸ்டிமுலேசன் தியரி பத்தி கூட பேசிப்போம்.
சர்வாவுக்கு செல்லப்பிராணிகள் பிடிக்கும். தவிர செடி, கொடிகள்னு தாவரங்கள் வளர்க்க விரும்புறவர். ப்ளான்ட் விஷயத்துல அவரும் என்னை மாதிரிதான்.

சிவகார்த்திகேயன் வெரி ஸ்வீட் பர்சன். அவரைப் பத்தி ஒரு சீக்ரெட் சொல்றேன். அவருக்கு ஸ்வீட்ஸ்னா அவ்ளோ பிடிக்கும். டயட்டை மறந்து கூட ஸ்வீட்ஸ் சாப்பிடுவார். அப்புறம், சூர்யா சாரோட இன்னும் நடிக்க ஆரம்பிக்கல. விக்ரம்குமார் சாரோட ‘24’லயே சூர்யா சாரோட ஆக்ட்டிங் பார்த்து ஆச்சர்யமாகியிருக்கேன். கலக்கியிருப்பார். அவர் பட ஷூட்டிங்கிற்காக வெயிட்டிங்.

உங்க செலிபிரிட்டி க்ரெஷ் யார்?அதானே பார்த்தேன்! சுத்தி வளைச்சு இப்படி கேட்பீங்கனு. சரி சொல்றேன். லியானார்டோ டி கேப்ரியோ. ‘டைட்டானிக்’ ஹீரோவேதான்!                     

மை.பாரதிராஜா