கர்ணன்



தலை நிமிர்ந்து நிற்கிறான் ‘கர்ணன்’ என்று சொல்லத்தான் ஆசை. ஆனால்..?
எந்தவித அடிப்படை வசதியும் இல்லாத ஒரு கிராமம் பொடியன்குளம். அக்கிராமப் பிள்ளைகளின் கல்வியிலிருந்து அத்தியாவசியமான பேருந்து வசதி வரை அத்தனைக்கும் பக்கத்து ஊரான மேலூரையே நம்பி இருக்கிறார்கள். பொடியன்குளத்தில் வசித்து வரும் கர்ணனை (தனுஷ்) நேசிக்கிறாள் ரஜிஷா விஜயன்.

கல்லூரிப் படிப்பு படிக்கச் செல்லும் அவளது தோழி கௌரி, பஸ் ஏறுவதற்காக அவளது அப்பாவுடன் பக்கத்து கிராமத்தில் உள்ள பஸ் ஸ்டாண்டிற்கு செல்கிறார். அந்த ஊர்க்காரர்கள் அவர்களை அவமானப்படுத்தி அனுப்புகிறார்கள். இதைக் கேள்விப்பட்ட கர்ணனும், அவனது தாத்தா ஏமராஜாவான லாலும் கொதித்தெழுந்து, அந்த ஊதாரிகளை நையப்புடைக்கிறார்கள்.

தன் ஊருக்கு உசிரு போகக்கூடிய நிலையிலும் அவசரத்துக்குக் கூட பஸ் நிற்கவில்லையே என்ற ஆதங்கத்தில் தனியார் பஸ் ஒன்றை ஊரே திரண்டு அடித்து நொறுக்குகிறார்கள். இதில் குளிர்காயும் பக்கத்து கிராமத்தினர் இதனை பொடியன்குளக்காரர்களுக்கும் போலீஸுக்குமான பிரச்னையாக்குகிறார்கள்.மேலூரின் இந்த நரித்தந்திரத்தை பொடியன்குளம் எப்படி எதிர்கொண்டது என்பது மீதிக்கதை.

உண்மைச் சம்பவத்தை, உண்மைக்கு நெருக்கமாகச் சொல்ல முயற்சித்திருக்கிறார் எழுதி இயக்கியிருக்கும் மாரி செல்வராஜ். விளக்கமுடியாத காட்சிகளைக் குறியீடு களாகப் புகுத்தியிருக்கிறார். கர்ணனாக தனுஷ், சாதாரண எளிய குடும்பத்துப் பையனாக உடல்மொழியில் மிளிர்ந்திருக்கிறார். தனுஷுக்கு இன்னொரு விருது காத்திருக்கிறது! கதாநாயகி ரஜிஷா விஜயனின் அறிமுகமே அசத்தல். ஆனால், அவரை சரியாகப் பயன்படுத்தவில்லை. லால், யோகிபாபு, லட்சுமி ப்ரியா, சண்முகம், நட்டி நட்ராஜ், கௌரி என பலரும் பலம்.  

அதிலும் வயதான மூதாட்டியிடம் லால் காதல் பேச்சு பேசி... முந்தானையில் முடிந்த பத்து ரூபாயை அபேஸ் செய்துவிட, லாலின் மீது ப்ரியம் காட்டும் மூதாட்டியின் பேச்சும், அவர்களின் உடல்மொழியும் ஈரம் கசியும் காதல் கவிதை.படத்தின் இன்னொரு ஹீரோ, சந்தோஷ் நாராயணனின் இசை. தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவுடன் கைகோர்த்து பின்னணி இசையில் வலு சேர்த்திருக்கிறார்.

இவ்வளவு இருந்தும், குடம் நிறைந்த பாலில் துளி விஷம் கலந்தது போல் ‘1997’ம் ஆண்டு இக்கதை நடப்பதாகச் சொல்லி, தன்னால் அழகாக உருவாக்கப்பட்ட பானையை தன் கையாலேயே போட்டு உடைத்திருக்கிறார் மாரி செல்வராஜ்.90களின் இறுதியில் தமிழகத்தையே அதிரவைத்த கொடியங்குளம் சாதி வன்முறையே இப்படம். இந்த வன்முறை நிகழ்ந்தது 1995ம் ஆண்டு. அதாவது, உச்சநீதிமன்றத்தால் சொத்துக்குவிப்பு வழக்கில் ஏ 1 குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் ஆட்சியில்.

ஆனால், மிக கவனமாக கொடியங்குளம் சாதி வெறியாட்ட வன்முறையை 1997ம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் நடப்பதுபோல் வரலாற்றை திரித்திருக்கிறார் மாரி செல்வராஜ்.‘ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் வரலாற்றை இதுவரை யாரும் சொல்லவில்லை... எழுதப்பட்டதெல்லாம் திரிக்கப்பட்டவையாக இருக்கின்றன...’ என்று முழங்கும் மாரி செல்வராஜ், தன் படைப்பின் வழியாக கொடியங்குளம் சாதி வெறியாட்ட வன்முறை வரலாற்றை திரித்திருக்கிறார்!திறமையான கலைஞனின் சர்க்கரை தடவப்பட்ட விஷமே ‘கர்ணன்’.   

குங்குமம் விமர்சனக்குழு