எல்லா துறைக்கும் லைசென்ஸிங்னு ஒண்ணு இருக்கு...ஆனா, யூ டியூப் சேனல் ஆரம்பிக்க மட்டும் எந்த உரிமமும் கிடையாது...



எல்லை மீறும் யூ டியூப் சேனல்களை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்..?

சமீபத்தில், சென்னை எலியட்ஸ் கடற்கரையில் ப்ராங் க்ஷோ என்ற பெயரில் பீச்சுக்கு வரும் பெண்களிடம் ஆபாசமாக கேள்விகளைக் கேட்டு அவர்கள் அனுமதியில்லாமல் தங்கள் யூ டியூப் சேனலில் பதிவேற்றம் செய்ததாக மூன்று இளைஞர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது. மட்டுமில்லாமல் அவர்கள் நடத்தி வந்த ‘சென்னை டாக்’ என்கிற யூ டியூப் சேனலையும் முடக்கியுள்ளது.

அந்தச் சேனலின் ஆபாச கேள்விக்கு பதிலளித்த பெண்ணே புகார் தந்ததால் இந்த விஷயம் வெளியுலகிற்கு தெரிய வந்தது. புகார் அளித்த அந்தப் பெண், மற்றொரு யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், அந்த ‘சென்னை டாக்’ சேனலின் ஹிட்டிற்காக தனக்கு பணம் கொடுத்து இப்படி பதிலளிக்கக் கூறியதாகவும், அது தவறானது என அறிந்ததால் அந்த வீடியோவை அகற்றும்படி கூறியதாகவும், அந்தச் சேனல் மறுத்ததால் புகார் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இன்றைய இணைய உலகத்தில் யூ டியூப் சேனல்கள் ஆரம்பிப்பது சுலபம். இதற்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. ஏற்கனவே, டிக் டாக் செயலியை இந்தியா முழுவதும் மத்திய அரசு தடை செய்தது. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று ஆபாச வீடியோக்கள் அதிகம் அந்த செயலி வழியே பதிவேற்றம் செய்யப்பட்டதுதான்.

கடந்த 2019ம் ஆண்டே மதுரையிலுள்ள சென்னை உயர்நீதிமன்ற கிளை டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அப்போது ப்ராங்க் ஷோ எனப்படும் குறும்புத்தனமான வீடியோக்கள் எடுக்கவும், வெளியிடவும் தடைவிதித்தது நினைவிருக்கலாம். இந்நிலையில், இப்போதைய யூ டியூப் சேனல் ப்ராங்க் ஷோ பிரச்னை பற்றி சமூக ஆர்வலரான கீதா நாராயணனிடம் பேசினோம்.

‘‘பொதுவா, எல்லா துறைக்கும் லைசென்ஸிங்னு ஒண்ணு இருக்கு. ஆனா, யூ டியூப் சேனல் ஆரம்பிக்க மட்டும் எந்த உரிமமும் கிடையாது. எல்லோரும் டாக்டராகிட முடியாது. அதுக்கான படிப்பை படிக்கணும். நீங்க ஜர்னலிஸ்ட்டா இருந்தா அது சம்பந்தமா படிச்சிருக்கணும். அல்லது அந்தத் துறையில் வேலை செய்த அனுபவம் மிக்கவரா இருக்கணும்.

அதாவது, உரிமம் கட்டாயம் தேவைனு சொல்றேன். அப்பதான் அந்தத் துறைக்கான ethicsனு சொல்ற நெறிமுறைகள் சார்ந்த விஷயங்கள் தெரியும். ஆனா, ஓர் ஒழுங்கோ அல்லது ஒரு கட்டுப்பாடோ இல்லாமல்தான் பல யூ டியூப் சேனல்கள் இயங்குது. செக்ஸ் சம்பந்தமான கன்டென்ட் போட்டா நிறைய லைக் விழும், ஹிட்டடிக்கும், நல்ல பணம் பார்க்கலாம்னு நினைக்கிறாங்க.

அதுல என்ன அறம் இருக்கு? அது சரி கிடையாது. அதுமட்டு மில்ல. சில யூ டியூப் சேனல்கள் கேள்வி கேட்கிற முறையே சரியில்ல. கட்டப்பஞ்சாயத்து தொனி இருக்கு. அரசியல் தலைவர்கள்கிட்ட மாற்றுக் கருத்து இருக்கலாம். அதுக்காக அவங்கள நிகழ்ச்சியில் உட்கார வச்சு வேதனைப்படுத்துற மாதிரி கேள்விகள் கேட்பது நியாயமில்ல.

முதல்ல மொழினு ஒண்ணு இருக்கு. அவங்க தவறே செய்திருந்தாலும் அவங்ககிட்ட பயன்படுத்துற மொழி மென்மையா இருக்க வேண்டாமா? ஆனா, இவங்க அதிகாரத் தொனியில் ஏனோதானோனு கேட்கறாங்க. இங்க பரபரப்பு, கிசுகிசு, யார் யாருக்கு யாருடன் உறவு இருக்குது என்பது மாதிரி அதிர்ச்சித் தகவல்களை வச்சுதான் ஹிட் விழும்னு நம்புறாங்க.

அதேநேரம் சில யூ டியூப் சேனல்கள் ரொம்ப நல்லா பண்றாங்க. அதை நடத்துறவங்க யார்னு பார்த்தா பல ேசனல்கள்ல பணியாற்றியவங்க; பத்திரிகைத் துறையில் இருந்தவங்க. அவங்க அதிக லைக்குகள் விழும்னு ஒருபோதும் இதுமாதிரியான நிகழ்ச்சிகள் பண்றதில்ல. பேராசிரியர் தொ.பரமசிவன் இறந்தப்ப அவரைப் பத்தி சில யூ டியூப் சேனல்கள் நிகழ்ச்சிகள் செய்தாங்க. அவர் யார்... அவர் என்ன ஆய்வு செய்தார்... அது சமூகத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துச்சுனு அவரை இந்தத் தலைமுறைக்குக் கொண்டு போய் சேர்த்தாங்க.

அது ரொம்ப பெரிசா ஹிட்டாகல. ஆனா, கடமைனு நினைச்சு செய்தாங்க.அதனால, ethics எனப்படும் நெறி எல்லோருக்கும் தேவை. அதுக்குதான் ஒழுங்குமுறை வேணும்னு சொல்றேன். இதை அரசு கொண்டு வரக்கூடாது. அப்படி வந்தால் நாளைக்கு அரசியல் சம்பந்தமான நிகழ்ச்சிகள் செய்ய தடை கூட விதிக்கலாம். அதனால, ஊடகவியலாளர்அமைப்புகள் ஒண்ணு சேர்ந்து ஒரு தரக்கட்டுப்பாட்டை கொண்டு வரணும்.

அடுத்து, இங்க ப்ராங்க்னு நினைச்சு வெறுப்பேத்தற, கோபம் தர்ற நிகழ்ச்சிகளே செய்றாங்க. அப்படி பண்றப்ப திடீர்னு ஒருவருடைய ஹார்ட் நின்னு போச்சுனா என்ன செய்வாங்க? ப்ராங்க், சட்டத்திற்குப் புறம்பானது. அதை செய்றவங்கள கைது செய்யணும். எனக்கு தெரியாமல் என்னை போட்டோ கிராஃப் பண்றது, வீடியோ எடுக்குறது எல்லாமே சட்டவிரோதமானதுதான்...’’ என்கிறார் கீதா நாராயணன் அழுத்தமாக.  

ஆனால், இந்த விஷயத்தை காவல்துறை ஜென்டிலாக ஹேண்டில் செய்திருக்கலாம் என்கிறார் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் மூத்த வழக்கறிஞர் ஒருவர். ‘‘ப்ராங்க் ஷோ என்பது பிறருக்குத் தெரியாம நடிச்சு அவங்களுக்கு ஷாக் ஏற்படுத்துறது. அதன்வழியா என்டர்டெயின் பண்றது. ஆனா, இந்த ஷோ இன்டர்வியூ பண்ற மாதிரி வருது. அதாவது, குறிப்பிட்ட பெண்களை சேனல்காரங்களே செட்அப் பண்ணி வச்சிருக்காங்க. அதைப் பார்த்து மற்ற பெண்கள் ஆர்வமா பேச வர்றாங்க.

எனக்கு இந்த விஷயத்துல அந்தப் பசங்கள கைது செய்து ரிமாண்ட் பண்ணியிருக்க வேண்டாம்னு தோணுது. ஏன்னா, இந்தப் பசங்கள பார்க்கிறப்ப ரொம்ப கஷ்டமான பின்புலம் மாதிரி தெரியுது. இந்த வீடியோ மூலம் பணம் சம்பாதிக்கலாம்னு நினைச்சு பண்ணியிருக்காங்க. இப்ப ஜெயில்ல போடும்போது மற்ற பொதுவான குற்றவாளிகளுடன் இருக்கிறதால பின்னாடி அந்தப் பசங்களின் வாழ்க்கை ரொம்ப பாதிக்கப்படும். அதனால, போலீஸ் அந்தப் பசங்களைக் கூப்பிட்டு வீடியோவை அழிக்க சொல்லிட்டு எச்சரிக்கை பண்ணி விட்டிருக்கலாம்.    
 
இந்த கேஸ்ல அந்தப் பொண்ணை கூப்பிட்டுப் போய் மிரட்டுறதோ, அடைச்சு வைக்கிறதோ, கலாட்டா பண்றதோனு எதுவும் நடக்கல. அந்தப் பொண்ணுகிட்ட பணம் கொடுத்து இப்படித்தான் பேசணும்னு எழுதித் தந்து பண்ண வச்சிருக்காங்க. ஷூட் டெலிகாஸ்ட் ஆனதும் அந்தப் பொண்ணுக்கு வீட்டுல பிரச்னை வந்திருக்கலாம். அதனால, வீடியோவை எடுக்க சொல்லிருக்கலாம். அது முடியாதபோது போலீஸ்கிட்ட புகார் கொடுத்திருக்கு. இதை வச்சுப் பார்க்கும்போது அந்தப் பசங்க தீங்கிழைக்கும் நோக்கத்துடன் இதைச் செய்யலனு தெரிய வருது. அதனாலதான் காவல்துறை மனிதாபிமான முறையில் அணுகியிருக்கலாம்னு சொல்றேன்.

அந்தப் பொண்ணு கொடுத்த புகாரை எஃப்ஐ ஆராகக் கூட அணுகியிருக்கலாம். குற்றவியல் சட்டப்படி எல்லா வழக்குகளிலும் போலீஸார் குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது பண்ணணும்னு அவசியமில்ல. இப்ப சில சிபிஐ வழக்குகள்ல பார்த்தீங்கனா எல்லாரையும் கைது பண்ண மாட்டாங்க. விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகையை தாக்கல் பண்ணிடுவாங்க. ஏன்னா, உச்சநீதிமன்றம் ஏழு வருஷங்களுக்குக் கீழ் தண்டனை பெறும் வழக்குகள்ல எல்லாம் ரிமாண்ட் பண்ண வேண்டாம்னு சொல்லி யிருக்கு.

என்னைப் பொறுத்தவரை, டிக் டாக் போன்ற செயலிகள்ல பொண்ணுங்க வந்து ஆடறாங்க; இதையெல்லாம் வரவேற்கணும்னு நினைக்கிறேன். ஏன்னா, இதுவரை பொத்திப் பொத்தி வைக்கிறது எல்லாம் மிரட்டலுக்குத்தான் பயன்பட்டிருக்கு. இங்க ஒரு பொண்ணுடைய பயத்தை வச்சுதான் எல்லாத்தையும் அரங்கேற்றுறாங்க. அந்த மிரட்டல் பயம் இல்லனா பெண்கள் தைரியமா இருப்பாங்க. இப்படி தைரியம் வர வரத்தான் பெண்களுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கும்.

அடுத்து, ஆங்கில டிவிகள்ல ப்ராங்க் ஷோ பார்க்கிறப்ப பொழுதுபோக்கா இருக்கும். ஆனா, நம்மூர் ப்ராங்க் ஷோ கொஞ்சம் எல்லைமீறித்தான் செய்றாங்க. சமீபத்துல நம்மூர் ப்ராங்க் ஷோ சில பார்த்தேன். ரோட்டுல சிலர் நடக்கறாங்க. அவங்க பின்னாடி பாம்பை விடறாங்க. அவங்க பயந்து ஓடறாங்க. இதுல என்னனா, அப்படி ஓடும்போது வண்டிகள் ஏதாவது வந்து விபத்து நடந்திட்டா என்னாகும்?

அப்புறம், இன்னொரு ஷோவுல போதைப் பொருள் தடுக்கற போலீஸ் மாதிரி நடிச்சு, ‘ஹெராயின் வச்சிருக்கியா’னு கேட்டு பாடா படுத்துறாங்க. இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். ஏன்னா, ஹெராயின் இருக்கானு கேட்கறப்ப பயத்துல ஹார்ட் அட்டாக் வந்திட்டா என்ன செய்வாங்க? ப்ராங்க் ஷோக்கள் இந்தமாதிரி பண்ணக் கூடாது. புத்திசாலித்தனமாவும், மகிழ்ச்சியாவும் இருக்கணும்.

அதேமாதிரி, சம்பந்தப்பட்ட நபர்கள்கிட்ட அனுமதி வாங்கி கேள்விகளைக் கேட்கணும். இந்த மாதிரியான கேள்விகள்தான் கேட்கப்போறோம்னு சொன்ன பிறகு கேட்கணும். அவங்க சொல்லத் தயாரா இருந்தால் சொல்லலாம். அது இல்லாமல் சும்மா போயிட்டு இருக்கிறவங்ககிட்ட எல்லாம் கேட்டு அவங்க பயத்துல ஏதாவது சொல்ல அதை யூ டியூப்ல போடக்கூடாது.

இப்ப எல்லா யூ டியூப் சேனல்காரர்களுக்கும் ஒரு பயம் வந்திருக்கு. அவங்களுக்கு எந்த இடத்துல எல்லை மீறி செயல்படுறோம்னு தெரியல. இதுக்காக எந்த கட்டுப்பாடும் கொண்டு வரமுடியாது. யூ டியூப் சேனல் நடத்துறவங்களே பொறுப்புணர்வுடன் நடந்துக்கணும்...’’ என்கிறார் அந்த மூத்த வழக்கறிஞர்.

பேராச்சி கண்ணன்