தடுமாறும் சிறுதொழில்கள்… கைகட்டி வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு... கைகொடுக்குமா மத்திய அரசு..?



கொரோனா உருவாக்கிய பின்விளைவுகளில் கொடூரமானது தொழில்துறையில் உருவாக்கிய பாதிப்புகள்தான். சுமார் பதினொரு மாத லாக்டவுன் இந்தியத் தொழில்களை, குறிப்பாக சிறு, குறு தொழில் நிறுவனங்களை அடியோடு நிர்மூலமாக்கியிருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை உருவாக்கிய பின்னடைவுகளிலிருந்தே இன்னும் மீண்டிராத நிலையில் தீப்புண்ணில் தேள் கொட்டியது  போல வந்து சேர்ந்தது கொரோனா.

ஆட்பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை, கடன் விற்பனைத் தொகையைத் திரும்பப் பெறுவதில் தாமதம், இதனோடு மூலப்பொருட்கள் விலை உயர்வும் இப்போது சேர்ந்துவிட்டது என்கிறார்கள். ஜாண் ஏறினால் முழம் சறுக்குவதாக எம்எஸ்எம்இ எனப்படும் சிறு, குறு தொழில்நிறுவனங்கள் இருக்கின்றன.

சென்னை, கோவை, திருப்பூர், ஓசூர் போன்ற தொழில் நகரங்களில் நிறைந்திருக்கும் சிறு, குறு தொழில் முனைவோர் கதைகளைக் கேட்கவே பரிதாபமாக இருக்கிறது. சாம்பிளுக்கு ஒன்று பார்ப்போம்.

கோவையைச் சேர்ந்தவர் செந்தில்குமார். பனிரெண்டு பணியாளர்களுடன் பம்பு செட் உற்பத்தி செய்யும் சிறு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் இவர். காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும் இவர் நிறுவனத்தில் நாள் ஒன்றுக்கு மூன்றாயிரம் மோட்டார் பம்புகள் கடந்த அக்டோபர் வரைகூட உற்பத்தியாகிக் கொண்டிருந்தன. இப்போது வெறும் ஆயிரம் பம்புகள் உற்பத்தி செய்யவே பெரும்பாடாக இருக்கிறது என்கிறார்.

‘லாக்டவுன் கடந்த 2019 - 20ம் நிதியாண்டின் இறுதியில் அமுலுக்கு வந்ததால் எங்களால் போதுமான அளவு மூலப் பொருட்களை கைவசம் வைத்திருக்க இயலவில்லை. லாக் டவுன் முடிந்து உற்பத்தியில் ஈடுபட்ட போது எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப தயாரிக்கத் தொடங்கினோம். ஆனால், இப்போது மூலப் பொருட்கள் விலை சுமார் 18% வரை சடசடவென உயர்ந்திருக்கிறது.

ஏற்கெனவே கையில் இருந்த மூலப் பொருட்களை எல்லாம் லாக்டவுனுக்குப் பிறகான புதிய தேவைகளுக்கு தயாரித்து முடித்திருப்பதால் மீண்டும் மூலப் பொருட்களை புதிதாகவே வாங்கவேண்டியிருக்கிறது. ஆனால் இந்த விலை உயர்வு மூலப் பொருட்கள் வாங்குவதில் பின்னடைவை உருவாக்கி உற்பத்தியைக் குறைத்திருக்கிறது...’ என்கிறார்.பல சிறுதொழில் நிறுவனங்கள் தங்களது முழுமையான உற்பத்தித் திறனில் பெருமளவைக் குறைத்துக் கொண்டு பெயருக்கு ஓட்டிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிதியாண்டில் இந்த சிறுதொழில் நிறுவனங்கள் லாபம் பார்த்தாலுமே அது மிகச் சிறிய விகிதத்திலேயே இருக்கும். மூலப் பொருட்கள் விலை உயர்வும் தட்டுப்பாடும்தான் ஒரு பெரிய சிக்கல் என்கிறார்கள். அரசு ஒப்பந்தம் தொடர்பான வேலைகள் கடந்த சில மாதங்களாக ஜரூராக நடந்தாலும் இதில் பழைய ஒப்பந்தப் புள்ளிகளின் படியே விலை நிர்ணயக்கப்படுவதால், பல ஒப்பந்ததாரர்கள் கிட்டத்தட்ட முப்பது சதவீதம் நட்டத்துக்கே அரசுத் துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தங்கள் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குகிறோம் என்றும் சொல்கிறார்கள்.

திருமழிசை தொழிற்பேட்டை யில் உள்ள ஒரு சிறுதொழில் நிறுவன உரிமையாளர் கூறும்போது, ‘மூலப் பொருட்கள் விலை உயர்வு 20 - 70% வரை உள்ளது. பெரும் பகுதி செல்வத்தை இதுவே தின்றுவிடுவதால், லாபம் பார்ப்பது என்பதே சந்தேகமாக உள்ளது. இப்படியான சூழலில் அடிக்கடி மின்சார வெட்டும் நிகழ்கிறது. இதனால் திட்டமிட்டபடி உற்பத்தி செய்ய முடியவில்லை...’ என்கிறார்.

கொரோனாவுக்குப் பிறகு தம் கட்டி இந்தியப் பொருளாதாரம் எழ முயற்சி செய்தாலும் இந்த மூலப் பொருட்கள் விலை உயர்வும் பற்றாக்குறையும் பொருளாதார வளர்ச்சியைக் கடுமையாகப் பாதிக்கவே செய்யும். குறிப்பாக, இரும்புத் தொழிலில் ஏற்பட்டுள்ள மூலப் பொருட்கள் தட்டுப்பாடும் விலையுயர்வும் பல தொழில்களையும் பாதிப்பதாக உள்ளது என்கிறார்கள்.

அரசு நினைத்தால் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான இரும்பு மூலப்பொருட்களை மானிய விலையில் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கலாம். இது ஓரளவு நிலைமையைச் சீராக்கும்.முக்கியமான இரும்புத் தாதை ஏற்றுமதி செய்வதை அரசு உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும். நம்முடைய தனிப்பட்ட நுகர்வு தன்னிறைவு அடையும்வரை அந்த நிலையே நீடிக்க வேண்டும். உள்நாட்டு இரும்பு உற்பத்தியாளர்கள் சிட்கோவில் உள்ள இரும்புத் தொழிற்சாலைகளுக்கே முன்னுரிமை கொடுத்து இரும்பு மூலப் பொருட்களை சப்ளை செய்ய வேண்டும். இதெல்லாம்தான் உடனடியாக செய்ய வேண்டியவை.  

இரும்பு மட்டுமல்ல, அலுமினி யம், ரப்பர் போன்றவற்றின் மூலப் பொருட்கள் விலையும் கடந்த நான்கு மாதத்தில் 30%க்கு மேல் உயர்ந்துள்ளது. மத்திய அரசு இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. பெரிய நிறுவனங்கள் இந்த விலை உயர்வைத் தாங்குகின்றன. அவை இந்த விலை உயர்வைப் பொருட்படுத்துவதில்லை அல்லது பாதிப்பை பேசுவதில்லை.

கையில் காசு வாயில் தோசை என்பது போல் முழுப் பணத்தையும் கொடுத்தால் மட்டுமே மூலப் பொருட்களை தர முடியும் என்று மூலப்பொருட்கள் விற்பனையாளர்கள் சொல்வதால், சிறு மற்றும் குறு தொழில் முனைவோர் கையைப் பிசைந்துகொண்டு நிற்கிறார்கள். கொரோனா வெறுமனே சிறு தொழில் நிறுவனங்களை மட்டுமே பாதிக்கவில்லை. அவற்றுக்கு நிதியாதாரம் வழங்கும் வங்கிகள் உள்ளிட்ட நிதியமைப்புகளையுமே சீர்குலைத்திருக்கிறது.

வங்கிகளில் நடப்புக் கணக்கு மட்டுமே வைத்திருக்கும் கடன் கணக்குகளான சிசி மற்றும் ஓடி வசதிகள் இல்லாத மிகச் சிறிய மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு எந்தவிதமான அரசு சலுகைகளும் கிடைப்பதில்லை. எதுவும் இல்லாதவர்களுக்கும் பெரும் தொழில் அதிபர்களுக்கும் உதவ முன்வரும் அரசு, சிறுதொழில் நிறுவனங்களுக்கு கையைத்தான் விரிக்கின்றன என்று கொதிக்கிறார்கள்.

லைசென்ஸ்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்குவதில் கேரளா மற்றும் கர்நாடக அரசுகள் சிறு தொழில் நிறுவனங்கள் மீது காட்டும் கரிசனை அளவுகூட தமிழ்நாடு அரசு காட்டுவதில்லை. குறிப்பாக, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி பெறுவதற்கான கட்டணத்தை கேரள அரசு போல் குறைவாக நிர்ணயிக்கலாம் என்கிறார்கள். மேலும், டிரேட் லைசென்ஸ் மற்றும் ஃபேக்டரி லைசென்ஸ் என்ற இரண்டு சான்றிதழ்களைப் பெற வேண்டியதிருக்கிறது. இந்த நடைமுறைக்கு கர்நாடக அரசைப் பின்பற்றலாம்.

எப்படி பெரிய சுறாக்களும் திமிங்கலங்களும் மட்டுமே கடல் இல்லையோ அப்படித்தான் தொழில்துறை என்பதும் வெறுமனே டாட்டா, பிர்லா, அம்பானி, அதானிகளால் மட்டுமே ஆனதும் அல்ல. ‘குயில்கள் மட்டுமே பாட வேண்டும் என்றால் காடு நிசப்தமாகிவிடும்’ என்றான் ஒரு கவிஞன். பொருள் பலம் மிக்க பெருநிறுவனங்கள் மட்டுமே பிழைக்க வேண்டும் என்றால் நம் நாடும் உறைந்துவிடும். ஆள்வோர் இதனைப் பரிசீலித்து சிறு மற்றும் குறுந்தொழில் செய்வோர் நலனைக் காக்க வேண்டும். அதுவே இந்தியா போன்ற ஒரு வளரும் நாட்டுக்கு மிகவும் நல்லது.         
     
இளங்கோ கிருஷ்ணன்