முதல் ஃப்ரேம் முதல் கடைசி ஃப்ரேம் வரை மாஸ்! :விஸ்வாசம் சீக்ரெட்ஸ்
‘‘பொங்கல் எனக்கு ரொம்ப பிடிச்ச பண்டிகை. சின்ன வயசுல ஒவ்வொரு பொங்கல் அப்பவும் என் தாத்தாவும் தயாரிப்பாளருமான ஏ.கே.வேலன் வீட்டுக்குப் போயிடுவோம். எல்லா பேரக் குழந்தைகளும் அசெம்பிள் ஆகற நேரம் அது! ஒண்ணா விளையாடி, சிரிச்சுப் பேசி பண்டிகையைக் கொண்டாடுவோம். இப்படியொரு சூழல்ல வளர்ந்ததாலதான் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற படங்களா இப்ப என்னால பண்ண முடியுது. தாத்தா தயாரிச்சு, இயக்கிய ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ படம் கூட பொங்கலுக்கு ரிலீஸ் ஆனதுதான். நான் இயக்கின ‘சிறுத்தை’யும் ‘வீரமு’ம் கூட பொங்கல் வெளியீடு தான்!அந்த வகைலதான் இப்ப ‘விஸ்வாசம்’ வருது! அஜித் சாரும், தயாரிப்பாளர் தியாகு சாரும் படத்தைப் பார்த்துட்டாங்க. ‘நாம பண்ணின நாலு படங்கள்ல இதுதான் சிவா பெஸ்ட்!’னு அஜித் சார் மனசார பாராட்டினார்...’’ திருப்தியாக பேசுகிறார் இயக்குநர் சிவா.
அடுத்தடுத்து அஜித்தோடு கூட்டணி அமைச்சு கலக்கறீங்க..?
இதுக்குக் காரணம் அவர்தான். அஜித் சார் ஒருத்தரை நம்பினார்னா... முழு ஒத்துழைப்பு கொடுப்பார். ஒரு ஃபிலிம் மேக்கரா என் மேல அவர் மரியாதை வைச்சிருக்கார். ரொம்ப நேர்மையானவர். தன்னைப் போலவே நேர்மையா இருக்கறவங்களை அவருக்கு ரொம்பப் பிடிக்கும். ஸ்டிரைட் ஃபார்வர்ட். யார் மனசும் புண்படக் கூடாதுனு கவனமா இருப்பார். நல்ல மனசுக்காரர் அவர். அவருக்கு என்னை ஏன் இவ்வளவு பிடிச்சிருக்குனு சொல்லத் தெரியலை. ஆனா, மனசு நிரம்பி வழியுது. ஒர்க்குல சின்சியரா இருப்பேன். ராத்திரி பகல் பாராம உழைப்பேன். பொய் பேச மாட்டேன். ஒருவேளை இதெல்லாம் அவரைக் கவர்ந்திருக்கலாம்.
‘விஸ்வாசம்’ ஹைலைட் என்ன..?
அஜித் சார்தான். குறிப்பா அவரோட டான்ஸ்! மூணு பாடல்கள்ல செமயா ஆடியிருக்கார். செகண்ட் ஹாஃப்ல வர்ற ‘அடிச்சு தூக்கு...’ பாடல்ல அஜித் சார் நாற்பது செகண்ட் ஒரு மூவ் கொடுத்திருக்கார். இதை ஒரே லெங்க்த் ஆக இல்லாம பிட்டு பிட்டா ஷூட் செய்யலாம்னு நினைச்சேன். ஏன்னா, ‘வேதாளம்’ படத்துல ‘ஆலுமா டோலுமா...’ ஆடறப்பதான் அவருக்கு முழங்கால்ல பெயின் ஆனது. கல்யாண் மாஸ்டரும் இதை நினைவுபடுத்தினார்.ஆனா, அஜித் சார் சம்மதிக்கலை. சிங்கிள் டேக்குல பண்றேன்னு சொல்லிட்டார்! ‘ரிஸ்க் வேணாம் சார்’னு சொன்னேன். ‘முயற்சி பண்ணி பார்க்கறேனே சிவா’ன்னார்!
இப்படி அவர் சொன்னார்னா செஞ்சு முடிப்பார்னு அர்த்தம்! அதே மாதிரி மாஸ்டர் அமைச்ச ஸ்டெப்ஸை ஆடி கலக்கிட்டார்!படத்துல அவருக்கு டபுள் ஆக்ஷன் கிடையாது. டபுள் ரோல் பண்றார்! முதல் ஃபிரேம்ல இருந்து கடைசி ஃபிரேம் வரை வெள்ளந்தியான, வீரமிக்க, மாஸான கேரக்டர்ல வர்றார். ரசிச்சு நடிச்சிருக்கார். நகரம், கிராமம்னு எல்லா இடங்கள்லயும் அவர் குணம் ஒரே மாதிரி இருக்கும்.பாசமும் வீரமும் கலந்த ஒருவனை ஜெயிக்கறது கஷ்டம்னு சொல்வாங்க இல்லையா... அப்படியொரு நபரா படத்துல வர்றார்! அஜித் சாரோட துள்ளலை, அலப்பறையை, எனர்ஜியை இதுல நீங்க பார்க்கலாம்!
எப்படி வந்திருக்கு படம்?
சூப்பரா! எல்லாப் படங்களையுமே ரசனையோடுதான் பண்றேன். ‘விஸ்வாசம்’ படமும் அப்படித்தான். ரசிச்சு இயக்கியிருக்கேன். வில்லேஜ், சிட்டினு ரெண்டு காலகட்டங்கள்ல நடக்கற கதை. குழந்தை முதல் பெரியவர்கள் வரை நிச்சயம் படத்தை ரசிப்பாங்க. அந்தளவுக்கு ஃபேமிலி என்டர்டெயினர். தந்தைக்கும் மகளுக்குமான பாசப் பிணைப்பை சொல்லும் ‘கண்ணான கண்ணே...’ பாட்டு ஏற்கனவே ஹிட் ஆகியிருக்கு. பல அப்பாக்கள் தங்கள் மகளோடு இந்தப் பாடலை டப்ஸ்மாஷ் செய்து இணையத்துல உலவ விட்டிருக்காங்க.
எமோஷன்ஸுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை காமெடிக்கும் கொடுத்திருக்கோம். அஜித் சார் காமெடிலயும் வெளுத்து வாங்கியிருக்கார். நயன்தாரா மேம், ஜெகபதிபாபு, தம்பி ராமையா, விவேக், கோவை சரளா, யோகிபாபு, ரோபோ சங்கர்னு பெரிய ஸ்டார் காஸ்ட். சில காட்சிகள்ல மூவாயிரம் பேருக்கு மேல இருப்பாங்க. அதை ஷூட் பண்ணும் போது சிரமப்பட்டதே இல்ல. லைட்மேன்ல இருந்து நடிகர்கள் வரை அத்தனை பேரும் தங்கள் படமா நினைச்சு உழைச்சிருக்காங்க. அஜித் சார் ஒவ்வொருவரையும் ஸ்பாட்ல கவனிச்சு தட்டிக் கொடுத்தார்! கடவுளின் ஆசீர்வாதம் பரிபூரணமா எங்களுக்கு இருக்கறதா நம்பறேன்.
டெக்னிக்கல் டீமும் பலமா அமைஞ்சிருக்கு... இல்லையா..?
அதுதான் என் பலமே! எப்பவும் ‘சிவா அண்ட் டீம்’னுதான் சொல்லிக்க விரும்புவேன். ஒளிப்பதிவாளர் வெற்றி சார், 24 வருஷங்களா என் கூட ட்ராவல் பண்றார். ஒரு ஒளிப்பதிவாளரான என்னையே பல நேரங்கள்ல அசர வைச்சிருவார். கடுமையான உழைப்பாளி. எதுக்கும் அசரமாட்டார். எங்க டீம்ல இப்ப இமான் சாரும் வந்துட்டார். பொதுவா ஒவ்வொருநாளும் நைட் தூங்கறப்ப மெலடி கேட்பேன். பார்த்தா பெரும்பாலும் அது இமான் சார் பாடல்கள்தான்... அட, அவரோடு சேர்ந்து ஏன் நாம ஒர்க் பண்ணக் கூடாதுனு தோணிச்சு.அஜித் சார்கிட்ட சொன்னேன். ‘இந்தக் கதைக்கு இமான் சூப்பர் சாய்ஸ்’னு சொன்னார். ஒரு எமோஷனலான கன்டன்ட் படத்துல இருக்கு. ‘சிறுத்தை’யை விட வேற லெவல் காமெடியும் இருக்கு. எல்லாத்துக்கும் தகுந்த ஆத்மார்த்தமான இசையைக்கொடுத்திருக்கார்.
படத்தின் கதையை என்னோடு சேர்ந்து ஆதிநாராயணன் எழுதியிருக்கார். டயலாக் ஒவ்வொண்ணும் வீரியமா இருக்கணும்னு சந்திரன், மணிகண்டன், பாக்யராஜ் - சபரினு அத்தனை பேரும் உழைச்சிருக்கோம்! திலிப் சுப்பராயன் மாஸ்டர் கூட முதல்முறையா ஒர்க் பண்ணியிருக்கேன். கலக்கியிருக்கார். இதுல ரெயின் ஃபைட் ஒண்ணு இருக்கு. செம ஆக்ஷன் ட்ரீட்!கேமராமேனா ஆகறதுக்கு முன்னாடி எடிட்டரா இருந்திருக்கேன். ஓரளவு எடிட்டிங் தெரியும். அதனாலதான் திட்டமிட்ட நாட்கள்ல ஷூட்டை முடிக்கறேன். இப்படிப்பட்ட என்னையே எடிட்டர் ரூபன் ஒவ்வொரு முறையும் ஆச்சர்யப்படுத்தறார். நான் கொடுத்த வெர்ஷனையே வேற லெவலுக்கு மாத்திக் காட்டறார்! ‘விஸ்வாசம்’ல நிச்சயமா ஆர்ட் டைரக்டர் மிலன் ஒர்க் பேசப்படும்.
என்ன சொல்றாங்க நயன்தாரா?
முதல்முறையா என் படத்துல ஹீரோயினா நடிச்சிருக்காங்க. ஏற்கெனவே அவங்க தெலுங்கில் நடிச்ச படத்துக்கு நான் ஒளிப்பதிவாளரா இருந்திருக்கேன். எங்களுக்குள்ள அறிமுகம் உண்டு.ஆனா, அப்ப பார்த்ததுக்கும் இப்ப அவங்களைப் பார்ப்பதற்கும் பெரிய வித்தியாசம் தெரியுது. நடிப்புல பிரமாதமா இம்ப்ரூவ் ஆகியிருக்காங்க. அவுட்ஸ்டாண்டிங் பர்ஃபாமென்ஸ். இதுல நிரஞ்சனாவா பிச்சு உதறியிருக்காங்க. தயாரிப்பாளர் தியாகு சார் பத்தி சொல்லியே ஆகணும். ‘விவேகம்’ நடக்கும்போதே, ‘அடுத்தும் நாம படம் பண்ணலாம்’னு சொன்னார். எங்க தாத்தா காலத்தில் இருந்து அவங்க குடும்பமும் எங்க குடும்பமும் நல்ல நட்பில் இருக்கோம். ஆர்.எம்.வீரப்பன் சாரோடு ஒண்ணா எங்க தாத்தா ஒர்க் பண்ணியிருக்கார். தியாகு சார் பர்ஃபெக்ட் ஜென்டில்மேன். இந்தக் கதையைக் கேட்டதும் ‘மிகத்தரமான கதை’ன்னார். அதே போல படத்தைப் பார்த்துட்டும், ‘நீங்க சொன்னதைவிட பலமடங்கு நல்லா எடுத்திருக்கீங்க...’னு சந்தோஷமா கைகுலுக்கினார்!
-மை.பாரதிராஜா
|