Bolt & Nutsல் நகைகள்!
சிரிக்காதீர்கள்! உண்மை! தங்கம், வைரம், வைடூரியம், பிளாட்டினம், கற்களால் செய்யப்பட்ட நகைகள் போதாதென பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்ள கவரிங், பட்டு நூல், டெரகோட்டா, மரக்கட்டைகள், கயிறுகள், ஆக்ஸிடைஸ்ட் சில்வர்... என ரக வாரியாக பட்ஜெட்டுக்கு ஏற்ப வாங்குகிறார்கள்; அணிகிறார்கள்.இதெல்லாம் போதாது என்றுதான் இன்னும் ஒருபடி மேலே சென்று குடோன்களிலும், ஃபேக்டரிகளிலும் கிடைக்கும் பைப்கள், நட்டுகள், போல்ட்கள்... ஏன், பால்பாயிண்ட் பேனாவின் டியூப்கள், கிலோ கணக்கில் கூழாங்கற்கள் ஆகியவற்றைக் கொண்டு நகைகளை டிசைன் செய்து கெத்து காட்டியிருக்கிறார் டிசைனரும் புகைப்படக்கலைஞருமான கௌரி கிரிதிகர் பதாரே.
‘‘சொந்த ஊர் மும்பை. படிச்சது பி.எஸ்சி அப்ளைட் ஆர்ட்ஸ். அதுல மேஜர் போட்டோகிராபி எடுத்தேன். இடைல சில டிசைனிங், மேக்கிங்கும் செய்துட்டு இருந்தேன். அப்பதான் வேஸ்ட் பொருட்களைக் கொண்டு நகைகளை உருவாக்கினா என்னனு தோணிச்சு! நூல், பேப்பர் மாதிரியானதுல எனக்கு உடன்பாடு இல்ல.
நாம செய்கிற எந்த பொருளும் முதல்ல வலிமையா இருக்கணும். இதைத்தான் மனசுல வெச்சு யோசிச்சேன். அப்பதான் எனக்கு கற்கள் மேல இருந்த ஈடுபாடு புரிஞ்சது. போட்டோகிராபியில கூட வித்தியாசமான கற்களைத் தான் என் லென்ஸ் டார்கெட் பண்ணும்! அதையே ஏன் நகை டிசைன்ல கொண்டு வரக்கூடாதுனு தோணுச்சு. இதுக்கு அப்புறம் எந்த இடத்துக்குப் போனாலும் அங்க பளிச்சுனு இருக்கற கற்களை சேகரிக்க ஆரம்பிச்சேன்...’’ என்று சொல்லும் கெளரி, நியூசிலாந்து சென்றபோது ஒரு நண்பர் வழியாக 10 கிலோ கற்களை வாங்கியிருக்கிறார்! ‘‘லடாக், புஷ்கர், தர்மசாலா, கொங்கன்... இப்படி எல்லா இடங்கள்ல இருந்தும் கற்களை சேகரிச்சேன். ஆனா, என் தீம் வெறும் கற்களை மட்டும் வைச்சு நகைகள் செய்யறதில்ல. பொதுவா ஒரு நகை செய்ய மத்த உலோகங்களையும் பயன்படுத்தணும்.இதையும் மனசுல வைச்சு தொழிற்சாலை சார்ந்த சில ஒயர்கள், மெட்டல் கம்பிகள், மெல்லிசான பைப்கள், டியூப்கள், நட்டு, போல்ட்... எல்லாத்தையும் வாங்க முடிவு செஞ்சேன். ஆனா, இந்த இண்டஸ்டிரி ஆண்கள் கட்டுப்பாட்டுலதான் இருக்கு. மார்க்கெட்டுல விசாரிச்சப்ப ஏதோ என்னை டைம் பாம் செய்யப்போற தீவிரவாதி மாதிரி பார்த்தாங்க; சந்தேகப்பட்டாங்க.சிலர் கொடுக்க ரெடியா இருந்தாங்க. ஆனா, ஹோல்சேல்ல வாங்கணும்னு கண்டிஷன் போட்டாங்க. கடைசில ஸ்டூடண்ட் புராஜெக்ட்னு சொல்லித்தான் ஒவ்வொரு இடத்துல இருந்தும் பொருட்களை சேகரிச்சேன்...’’ புன்னகைக்கும் கெளரி, கற்களைத் துளையிட அடுத்த சவாலைச் சந்தித்திருக்கிறார்.
‘‘பெரிய கல்லுல துளை போடணும்னா பிரச்னையே இல்ல. ஆனா, சின்னச் சின்ன கற்கள்ல துளை போடணும்! நிறைய யூடியூப் வீடியோக்கள் பார்த்தேன். சில ட்ரில்லிங் வேலை செய்யற மக்கள்கிட்ட பேசினேன். அப்புறம்தான் கற்கள்ல துளையிட்டு நகைகள் செய்தேன். மூணு வருஷ உழைப்பு இன்னைக்கு ஒரு பெரிய ஃபேஷன் ஷோ வரைக்கும் கூட்டிக்கிட்டு வந்திருக்கு! அக்கால எகிப்திய அரச பெண்கள் நகைகளை ஞாபகப்படுத்துவதா நிறைய பேர் சொன்னாங்க. ரூ.800ல ஆரம்பிச்சு ரூ.3000 வரை இந்த நகைகளை விற்கறோம்.இது இல்லாம wandering whites என்கிற பெயர்ல இன்ஸ்டாகிராம்லயும் மெஸேஜ் செஞ்சு வாங்கலாம்!’’ என்கிறார் கெளரி.
ஸ்பெஷல் கிரெடிட்: LFW Reincarnation / Artisan’s Gallery Store மாடல்: துர்கா பங்தே, மீனாள் கம்ப்ளி
-ஷாலினி நியூட்டன் படங்கள் : கௌரி பதாரே
|