வீட்ல ஒரு டைரக்டர் போதும்! : கலகலக்கிறார் லட்சுமி ஸ்டோர்ஸ் குஷ்பு



சின்னத்திரையில் குஷ்புவின் அடுத்த பாய்ச்சல் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’. தமிழக ரசிகர்களால் கோயில் கட்டி ஆராதிக்கப்பட்ட இவர், 1980களின் நட்சத்திரப்  பட்டாளத்தில் கடைக்குட்டி! நடிப்பதுடன் தயாரிப்பாளர், பொறுப்பான குடும்பத் தலைவி, இன்முகம் காட்டும் அரசியல்வாதி... என பன்முகங்களுடன் பளிச்சிடுபவர். ‘‘பல வருஷங்களா சினிமால இருந்து ஒதுங்கி இருக்கேன். திருமணத்துக்குப் பிறகு நான் நடிச்ச படங்களின் எண்ணிக்கை குறைவு. நிறைய ஆஃபர்ஸ்  வந்தபோதும் மறுத்துட்டேன். எனக்கான கேரக்டர்ஸ் வந்தா மட்டுமே கன்சிடர் செய்யறேன். சினிமாவோ, சீரியலோ... முக்கியத்துவமுள்ள கதாபாத்திரமா  அமையணும். கம்பீரமான லுக்குல இருக்கணும். இப்படி எனக்குனு சில லிமிட்டேஷன்ஸ் வைச்சிருக்கேன்.

எதிர்பார்த்த மாதிரியே ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ல நல்ல கேரக்டர் அமைஞ்சது. நடிக்கறதோட அந்த சீரியலுக்கு கிரியேட்டிவ் ஹெட் ஆகவும் இருக்கேன்...’’ தனது  டிரேட் மார்க் புன்னகையைச் சிதறவிடும் குஷ்புவுக்கு சினிமாவில் இது 32ம் ஆண்டு!  ‘‘திரும்பிப் பார்த்தா பிரமிப்பா இருக்கு! 89ம் வருஷத்துல இருந்து எனக்குத்  திருமணமான 99ம் வருஷம் வரை கேரியர்ல டாப்ல இருந்தேன். நிச்சயம் இதை சாதனைனு சொல்ல மாட்டேன். ஏன்னா அந்தக் காலம் அப்படி இருந்தது.இப்ப ஒரு நடிகை தொடர்ந்து மூணு படங்கள்ல நடிச்சாலே ‘போரடிக்குதுப்பா... வேற ஆள் தேடுங்க’னு மக்கள் சொல்லிடறாங்க. ஹீரோக்களும் கதாநாயகி ரிப்பீட் ஆகறதை விரும்பறதில்லை. இயக்குநர்களும் ‘ஃப்ரெஷ்ஷா பார்ப்போம்’னு நினைக்கறாங்க. இது சரியா தப்பானு ஆராய விரும்பலை. இந்தக் காலம்  இப்படியிருக்கு. அவ்வளவுதான்.

ஆனா, நான் நடிக்க வந்தப்ப இப்படியில்ல. ஒரு ஹீரோவோட நடிச்சு, அந்த படம் ஹிட்டானா ராசியான ஜோடினு வரிசையா படங்கள்ல கமிட் பண்ணுவாங்க.  அப்ப ஒரு ஹீரோவும் வருஷத்துக்கு 10 படங்கள் வரை நடிச்சார். இந்த சூழல் எனக்கும் ப்ளஸ்ஸா அமைஞ்சது.இப்ப ஒரு ஹீரோ வருஷத்துக்கு ஒரு படம்  தர்றதே பெரிய விஷயமா இருக்கு. அப்படியிருக்கிறப்ப ஹீரோயின்ஸுக்கு வாய்ப்பு குறையத்தானே செய்யும்? இன்னொன்றையும் சொல்லணும். இப்ப தங்கள்  கேரக்டர் தவிர அழகு, உடைகள், நகைகள், மேக்கப், ஃபேஷன், டான்ஸ்னு எல்லாத்துலயும் ஒரு ஹீரோயின் கவனம் செலுத்த வேண்டியிருக்கு. இந்த பிரெஷ்ஷர்  எங்களை விட இளம் நடிகைகளுக்கு அதிகமா இருக்கு.போட்டிகள் இருக்குனு சொல்ல மாட்டேன். அது எல்லா காலங்கள்லயும் இருக்கறதுதான்! இப்ப சோஷியல்  ப்ளாட்ஃபார்ம் இருக்கறதால மும்பை ஹீரோயின்ஸ், ஹாலிவுட் ஹீரோயின்ஸ் எல்லாம் எப்படி மேக்கப் பண்றாங்க... டிரெஸ் பண்றாங்க...னு ரசிகர்களே கவனிச்சு  ஒப்பிட ஆரம்பிச்சுட்டாங்க.

என் இத்தனை வருஷ அனுபவத்துல தினமும் ஒரு விஷயத்தை கத்துக்கிட்டு வர்றேன். ஒவ்வொரு வெற்றியும், ஒவ்வொரு தோல்வியும் இங்க நமக்கு  ஒவ்வொன்றை சொல்லிக் கொடுக்குது...’’ நிதானமாகவும் அழுத்தமாகவும் நம்மிடம் சொல்லிவிட்டு சில நிமிடங்கள் எக்ஸ்க்யூஸ் கேட்டார். தலையசைத்ததும்,  புரொடக்‌ஷன் வேலைகளின் அப்டேட்ஸை கேட்டு அறிந்துவிட்டு ‘‘ஸாரி...’’ என சங்கடத்துடன் நம்மிடம் சொல்லிவிட்டு ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ பற்றி பகிர்ந்து  கொள்ள ஆரம்பித்தார்.‘‘கிராண்டியா இருக்கணும்... கலர்ஃபுல்லா தெரியணும்... சினிமா மாதிரி மேக்கிங் பளிச்சிடணும்... ரெட் கேமரால ஷூட் பண்ணணும்... ஃபோர்  கே டெக்னாலஜி குவாலிட்டி இருக்கணும்னு எல்லாம் ‘நந்தினி’ ஆரம்பிக்கிறப்ப ஒரு பேட்டர்ன் வகுத்தோம். எதிர்பார்த்ததுக்கு மேலா ஆடியன்ஸை ‘நந்தினி’  கவர்ந்தது.ஸோ, அதைவிட இன்னும் பெருசா ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ பண்ணணும்னு இப்ப மெனக்கெடறோம். இந்த சீரியலுக்கு மூலக் கதை என் கணவரும்  இயக்குநருமான சுந்தர்.சி.தான். பேஸிக் ஸ்டோரியை டெவலப் பண்ணிட்டு மத்த பொறுப்புகளை என்கிட்ட விட்டுட்டார்.

நிறைய ஹிட் சீரியல்ஸ் கொடுத்த அனுபவம் எங்க ‘அவ்னி மீடியா’வுக்கு இருக்கறதால சந்தோஷமா ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ திரைக்கதையை பண்ணிட்டு  இருக்கேன். தமிழ், தெலுங்குனு இரு மொழிகள்லயும் இந்த சீரியல் வருது.அன்பும் அக்கறையுமான குடும்ப உறவுகள் சங்கமிக்கிற கடைதான் ‘லட்சுமி  ஸ்டோர்ஸ்’. ஜவஹர் இயக்கறார். யூ.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு பண்றார். ஃபேமிலி ஆடியன்ஸிலிருந்து இளம்தலைமுறை வரை எல்லோருக்குமே நிச்சயம்  பிடிக்கும். மாமனார் உருவாக்கின கடையோட முழுப் பொறுப்பையும் நான் கைல எடுக்கறேன். கணவன் - மனைவி, மாமனார் - மூத்த மருமகள், காதல் ஜோடி  இப்படி உறவுகளுக்குள் நடக்கும் பாசப் பிணைப்புகளை ரியலிஸ்டிக்கா செய்திருக்கோம்.சீரியல்ல என் கணவரா சுரேஷ் நடிக்கிறார். ‘குங்குமம்’ சீரியலுக்குப் பிறகு  மறுபடியும் நாங்க இதுல ஜோடி சேர்ந்திருக்கோம். இளம் காதல்ஜோடியா நட்சத்திராவும் ஹுசைனும் நடிக்கறாங்க. ஆக்சுவலா சீரியல் ஷூட் ஆரம்பிச்சு மூணு  வாரங்கள் வரை இளம் ஹீரோ இல்லாமதான் படப்பிடிப்பு நடந்தது. காலேஜ் பெண்களும் ரசிக்கிற மாதிரி ஹேண்ட்ஸம் ஹீரோ தேவைனு தேடினோம்.

இந்தநேரத்துலதான் திடீர்னு ஹுசைனோட போட்டோ ஷூட்டை பார்த்தேன். மும்பையா பெங்களூரானு யோசிச்சப்ப நம்ம மதுரை பையன்னு தெரிஞ்சதும்  ப்ளஸன்ட் சர்ப்ரைஸ் ஆச்சு. இப்படித்தான் ஹுசைன் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’க்குள்ள வந்தார்.மாமனார் மகாலிங்கம் கேரக்டருக்கு தமிழ், தெலுங்கு ரெண்டுலயும்  தெரிஞ்ச முகமா இருக்கணும்னு விரும்பினோம். டோலிவுட்டில் ஹீரோவா இருந்து, இப்ப எம்பி ஆக இருக்கிற முரளிமோகன் சார் எங்க மைண்ட்ல வந்தார்.  ரொம்ப வருஷமா சீரியல், சினிமா பக்கமே வராம இருந்தார். ஸோ, அவர் நடிப்பாரா... மாட்டாரானு சின்ன பயம் இருந்தது. ஆனா, கதையைக் கேட்டதும் உடனே  சம்மதிச்சுட்டார். அவருக்கு எங்க ஸ்பெஷல் தேங்க்ஸ்! சுதா சந்திரன் மேடத்துக்கு நல்ல ரோல். அந்த கேரக்டருக்கு அவங்கதான் வேணும்னு பிடிவாதமா  இருந்தோம். நேரடியா நானே பேசினேன். சந்தோஷமா கமிட் ஆனாங்க.

‘நந்தினி’ மாதிரி இதுல கிராஃபிக்ஸ் கிடையாது. சென்டிமென்ட், எமோஷன்ஸ் அதிகம். சுருக்கமா சொல்லணும்னா ஒரு ஹோம்லியை எதிர்பார்க்கலாம்.  ஒவ்வொரு ஃபிரேமிலும் பெரிய ஸ்டார் காஸ்ட் இருக்காங்க. கண்டிப்பா விஷுவல் ட்ரீட்டாகவும் இருக்கும்...’’ உற்சாகமாகச் சொல்லும் குஷ்பு, ‘லட்சுமி ஸ்டோர்ஸி’ன் ஒருநாள் எபிசோடை இயக்கவும் செய்திருக்கிறார்.‘‘நான் தயாரிச்ச ‘கல்கி’ சீரியலின்போதே, இயக்குநர் வராத நாட்கள்ல டைரக்ட் பண்ணியிருக்கேன். நான்  நடிக்க ஆரம்பிச்ச முதல் சீரியல் ‘மருமகள்’. அதைத் தொடர்ந்து ‘சொந்தம்’, ‘குங்குமம்’, ‘கல்கி’, ‘நம்ம குடும்பம்’, ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’, ‘ருத்ரா’,  ‘பாசமலர்’, ‘நந்தினி’னு நிறைய சீரியல்கள் பண்ணியிருக்கேன்.

இந்த சின்னத்திரை லைஃப் சந்தோஷமா இருக்கு. சினிமாவுக்கும் சீரியலுக்கும் நடிப்பைப் பொறுத்தவரை பெரிய வித்தியாசம் எதுவும் இல்ல. ஆக்ட்டிங்  ஒண்ணுதான். சீரியலை விட டாக் ஷோ பண்றதுதான் சவால். ஏன்னா, அது உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் கிடையாது. ஸ்கிரிப்ட், டயலாக், திரைக்கதை இப்படி  எதுவும் இருக்காது.‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ ஷூட் அப்ப ஒருநாள் டைரக்டர் போஸ்ட் புரொடக்‌ஷன்ல பிசியா இருந்தார். அதனால lண்ண வேண்டியதாகிடுச்சு.  மத்தபடி முழுத் தொடரையும் இயக்கற ஐடியா எல்லாம் இல்ல. அதுக்கு மைண்ட் ரெடியாகணும். கதையை டெவலப் பண்றதுலதான் கவனம் செலுத்தறேன்.  தவிர...’’ நிறுத்திய குஷ்பு சில நொடிகளுக்குப் பின், ‘‘வீட்ல ஒரு டைரக்டர் இருந்தா போதும்!’’ என்று சொல்லிவிட்டு கலகலவெனச் சிரித்தார். அது  (குஷ்)புன்னகை!

-மை.பாரதிராஜா