நீர்நிறைக் கரைசலை வீட்டிலேயே தயாரிக்கலாம்!



ஹோம் அக்ரி 39

மன்னர் மன்னன்


நீர்நிறைக் கரைசல் (hydroponic nutrient solution) தயாரிக்க நமக்கு மொத்தம் 10 இரசாயனங்கள் தேவைப்படும். எளிய முறையில் இந்தக் கரைசலை  வீட்டிலும் தயாரிக்கலாம். எல்லா பொருட்களையும் ஒரே கரைசலாகத் தயாரிக்க முடியாது. சில இரசாயனப் பொருட்கள் ஒன்றாகக் கலக்கப்படும் போது  வினைபுரிந்து தாவரங்கள் எடுத்துக்கொள்ள முடியாதபடி போய்விடும். அதனால் இரு வேறு கரைசலாகத் தயாரித்து பின்னர் கலந்து கொள்ளலாம்.

கரைசல் 1:
    200 கிராம் கால்சியம் நைட்ரேட்
    16 கிராம் EDTA இரும்பு
    இந்த இரண்டையும் 1 லிட்டர் நீரில் கரைத்துக் கொள்ளவும்

கரைசல் 2:
    117 கிராம் பொட்டாசியம் நைட்ரேட்
    103 கிராம் மக்னீசியம் சல்பேட்
    1.22 கிராம் மாங்கனீஸ் சல்பேட்
    0.34 கிராம் போராக்ஸ்
    1 கிராம் மற்ற நுண்ணூட்டங்கள்

இந்த பொருட்களை 1 லிட்டர் நீரில் கரைத்துக்கொள்ள வேண்டும்.இந்த இரண்டு கரைசல்களையும் தனித்தனியாகக் கரைத்து இரண்டையும் சமமாகக் கலந்தால் நமக்கு 200 லிட்டர் ஹைட்ரோபோனிக் ஊட்டக் கரைசல் கிடைக்கும். தேவைக்கேற்ப இந்த செறிவுள்ள கரைசலை நீருடன் கலந்து பயன்படுத்திக்  கொள்ளலாம். கலப்பதற்கு RO நீரை உபயோகிப்பது நல்லது. அல்லது டிஸ்டில்டு வாட்டரும் பயன்படுத்தலாம்.இந்தக் கரைசலில் இருக்கும் நீரின் கார  அமிலத்தன்மை (pH), தாவரங்களின் ஊட்டத்தை எடுத்துக் கொள்ளும் திறனைப் பாதிக்கும். எனவே இதன் அளவு 5.5லிருந்து 6.5க்குள் இருக்குமாறு  பார்த்துக்கொள்ள வேண்டும். அதுபோலவே கரைசலிலுள்ள மொத்த உப்பின் அளவு (TDS) 250க்குள் இருக்குமாறும் கவனம் கொள்ள வேண்டும்.

பயிர் தொடர்ந்து ஊட்டங்களையும், நீரையும் உறிஞ்சிக் கொள்ளுவதால் இந்தக் கார அமிலத்தன்மையும், உப்பின் அளவும்  மாறும். இந்த அளவுகளை நாம்  தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். குறிப்பிட்ட அளவைத் தாண்டும்போது கரைசலை மாற்றவேண்டும். இந்த ஊட்டக் கரைசலில் நாம் சேர்க்கும்  இரசாயனங்களின் அளவு செடிகளின் பருவத்துக்கு ஏற்பவும், பயிர்களுக்கு ஏற்றவாறும் சில சமயங்களில் மாறுபடும். என்றாலும் மேற்குறிப்பிட்ட அளவுகள்  பொதுவானவை. இதில் காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை வளர்க்கலாம். இதே கரைசலை பனிபோல வேர்களில் தெளித்துவிடும் முறையை ஏரோபோனிக்ஸ்  (aeroponics) என்பார்கள். இந்த முறையில் குழாய் போன்ற அமைப்பில் பயிர்களின் வேர்ப்பகுதி குழாயின் உள்ளும், மேற்பகுதி வெளியிலும் இருக்கும்படி  அமைக்கப்படுகிறது.

பனித்துகள் போல வேர்கள் எப்போதும் ஈரமாக இருக்கும்படி ஊட்டக்கரைசல் தெளிக்கப்படுகிறது. இதனால் எதன் மேலும் படாமல் வேர்கள் எப்போதும்  தொங்கியபடியே இருக்கும். ஏரோபோனிக்ஸுக்கு மிக அதிகமான அளவில் தானாக கண்காணிக்கும் கருவிகளும், தானியங்கி பம்புகளும், அதி நவீன மின்னணு  கட்டுப்பாட்டு சாதனங்களும் தேவைப்படும். ஆனாலும், இந்த முறை மற்ற மண்ணில்லா முறைகளைக் காட்டிலும் செலவு குறைந்தது.முன்பே பார்த்தபடி  ஹைட்ரோபோனிக் முறையில் வளரும் விளைபொருட்கள் ‘organic’ இல்லை. இதில் நச்சுக்கள் இல்லாமல் இருந்தாலும், இதை இயற்கை விளைபொருள் என்று  சொல்ல முடியாது. ஆனால், ‘அக்வாபோனிக்’ முறை இயற்கையான முறை. இது ‘organic’ என்ற  வரையறைக்குள் வரும். ‘அக்வாபோனிக்’ முறையில்  நீர்நிறைக் கரைசலுக்கு பதிலாக மீன் கழிவுகள் ஊட்டமாக பயன்படுத்தப்படுகின்றன.

மீன் வளர்ப்பும், பயிர் வளர்ப்பும் ஒன்றாக இணைக்கப்பட்ட முறையே ‘அக்வாபோனிக்’. இதில் மீன்கள் பெரும் நீர் நிலைகளிலில்லாமல், தொட்டிகளில்  வளர்க்கப்படுகின்றன. பொதுவாக 1000 லிட்டர் தொட்டிகளில். இந்த நீரானது நிலையாக தொட்டியில் இல்லாமல் சுழற்சியில் வைக்கப்படுகிறது. மீன்  கழிவுகளிலுள்ள ஊட்டங்கள் தாவரங்களால் உறிஞ்சப்பட்டவுடன், வடிகட்டப்பட்டு மீண்டும் மீன்தொட்டிக்கே அனுப்பப்படுகிறது. பயிர்களின் வளர்ச்சி மற்றும் பல  காரணிகளைப் பொறுத்து சுழற்சி செய்யப்படும் நீரின் நேரமும் அளவும் மாற்றப்படுகிறது. ‘அக்வாபோனிக்’ முறை வணிக ரீதியில் பெரிய அளவில்  செய்யப்படாவிட்டாலும், தொழில் நுட்ப ரீதியில் செய்யக்கூடியதாகவே இருக்கிறது. பொதுவாக சிறிய மீன் வகைகளே இந்த முறைக்கு ஏற்றவை. ஓரளவுக்கு  கடினமான சூழலைத் தாங்கி வளரக் கூடிய வகைகளான கட்லா, ரோகு, கெழுத்தி போன்ற வகைகள் பெரும்பாலும் தேர்வு செய்யப்படுகின்றன. சிறிய அளவில்  வீட்டிலோ, தோட்டத்திலோ ‘அக்வாபோனிக்’ முறையை கீரைகள், சிறு காய்கறிகளுக்கு பயன்படுத்தலாம்.

இந்த அனைத்து வகையான மண்ணில்லா பயிர் வளர்ப்பு முறைகளிலும் ஒரு சில பொதுவான காரணிகளே வெற்றியைத் தீர்மானிக்கின்றன.முதலாவதாக ஊட்டக்கரைசலின் தரம் மற்றும் அதை பயன்படுத்தும் விதம். முன்பே பார்த்தபடி நீரின் தரம், ஊட்டச்சத்துகளின் அளவு, செறிவு, கார  அமிலத்தன்மை போன்ற காரணிகள் மிக முக்கியமானவை. ஊட்டங்களின் அளவைக்காட்டிலும், செடி அவைகளை எடுத்துக்கொள்ளக் கூடிய நிலையில்  இருக்கின்றனவா என்பதைக் கவனிக்க வேண்டும். சில ஊட்டங்கள் கரைசலில் நல்ல மற்றும் தேவையான அளவில் இருந்தாலும் தாவரங்கள் அவற்றை எடுத்துக்  கொள்ளும் நிலையில் இருப்பதில்லை. கரைசலின் கார அமிலத்தன்மை அல்லது அதனுடன் சேர்க்கப்பட்டிருக்கும் மற்ற இரசாயனங்களின் இடையூறு இதற்கு  காரணமாக இருக்கலாம்.அதனால் இரசாயனங்களின் தரம் உட்பட பல்வேறு காரணிகளை ஆராய்ந்தே கரைசலைத் தயாரிக்க வேண்டும். பயிரின் வளர்ச்சி  நிலைகளுக்கேற்ப இதன் அளவும் மாற்றப்பட வேண்டும்.

இரண்டாவதாக, நாம் பயன்படுத்தும் கலன்கள் வெப்பத்தை ஏற்காதவையாகவும், உஷ்ணத்தை வெளித்தள்ளக் கூடியவையாகவும் இருக்கவேண்டும். இதன்  காரணமாகவே நாம் பிளாஸ்டிக் கலன்களைத் தேர்வு செய்ய வேண்டி இருக்கிறது. வெண்ணிற குழாய்களும், கலன்களும் இதற்கு ஏற்றவையாக இருக்கின்றன.  சூரிய ஒளி படும்படி இருக்கும் வெளிப்புற அமைப்புகளுக்கு புற ஊதா க்கதிர்களின் தாக்கத்தை தாங்கக்கூடிய பிளாஸ்டிக் கலன்களையே பயன்படுத்த வேண்டும்.  உலோகங்களால் ஆன பாகங்களை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும்.மூன்றாவதாக, செடிகளைத் தாங்கிக் கொள்வதற்காக நாம் பயன்படுத்தும் ஆதாரப்பொருள். தென்னை நார்க்கழிவு, வெர்மிகுலைட், பெர்லைட், கூழாங்கற்கள், மணல், ஜல்லிக்கற்கள், உமி, நார்ப்பொருட்கள், foam, glasswool, பஞ்சு... போன்ற  பொருட்களின் இயல்புகள் மற்றும் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்தும் பயிர் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

இந்தப் பொருட்கள் நோய்த் தொற்று நீக்கப்பட்டவையாகவும், நுண்ணுயிர்களை வளரவிடாதவையாகவும் இருக்க வேண்டும். இந்த ஆதாரப்பொருட்கள்  ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு விதமான நீர் உறிஞ்சும் தன்மை இருக்கும். எனவே நாம் அமைக்கும் தோட்டத்திற்கேற்பவும், பயிருக்கு ஏற்றவாறும் இந்தப்  பொருட்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய மணல், கற்கள், வெர்மிகுலைட் போன்ற பொருட்கள் செலவைக் குறைப்பதோடு,  கழிவுகள் உருவாவதையும் தடுக்கும்.நான்காவதாக, செடிகளுக்கு கிடைக்கும் ஒளியின் அளவு. செயற்கை ஒளியில் வளர்க்கப்படும் தாவரங்கள் மிகச்சரியான  அளவில் வெளிச்சம் பெறவேண்டும். வளர்ச்சிக்குஏற்றவாறு ஒளியின் அளவும் மாற்றப்பட வேண்டும். ஒளிக்கற்றையின் எல்லா நிறங்களையும் தாவரங்கள்  பயன்படுத்துவதில்லை. ஆக, மின் விளக்குகள் தேவையான அலைநீளம் கொண்ட ஒளியை மட்டும் தருபவையாக இருந்தால் போதுமானது.

தாவரங்கள் 16 மணி நேரங்கள் வரை உற்பத்திக்கான வேலையைச் செய்யக்கூடியவையாக இருக்கின்றன. ஆக, செயற்கை ஒளியில் வளர்க்கும் போது, ஒளி 16  மணி நேரம் தரலாம். இயற்கை சூரிய ஒளியில் வளர்க்கும் போது நாள் முழுவதும் பயிர்களின் மேல் வெளிச்சம் படும்படி தோட்டத்தை அமைக்க வேண்டும். இயற்கை மற்றும் செயற்கை ஒளியைக் கலந்தும் பயிர்களை வளர்க்கலாம். இதனால் உற்பத்தி வேகத்தை அதிகப்படுத்தியும், ஒளிக்கான செலவைக்குறைத்தும்  பலன் பெறலாம். பொதுவாக வெளிப்புறத்தில் சூரிய வெளிச்சத்தில் இருக்கும் அமைப்புகள் பசுமைக் கூடாரத்திலோ, நெகிழிக் கூடாரத்திலோ இருக்கின்றன. இந்த  கட்டுப்படுத்தப்பட்ட அமைப்புகள் தாவரங்களை மழை மற்றும் அதிகப்படியான வெயில் மற்றும் காற்றிலிருந்து பாதுகாக்கின்றன. இந்த அமைப்புகள் இல்லாமலும்  மண்ணில்லா விவசாயம் செய்யலாம் என்றாலும், இழப்புகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இந்த அதிகப்படியான தேவைகள் அவசியம்.

(அடுத்த இதழில் முடியும்)