பெண்ணுக்கும் பேய்க்கும் நடக்கும் சக்களத்தி சண்டை! :‘சண்டிமுனி’ கலாட்டா
“ராகவா லாரன்ஸ் மாஸ்டரோட ‘காஞ்சனா 2’வில் நான் அசிஸ்டென்ட். அதன்பிறகு தனியா ஸ்கிரிப்ட் பண்ணப் போயிட்டேன். மறுபடியும் ‘காஞ்சனா 3’ல் ஒர்க் பண்ற வாய்ப்பு அமைஞ்சது. அதோட முதல்நாள் படப்பிடிப்புக்கு கிளம்ப ரெடியானேன். அப்பதான் இந்தப் படம் இயக்குறது உறுதியாச்சு. மாஸ்டர்கிட்ட சொன்னேன். சிஷ்யன் டைரக்டர் ஆகுறான்னு அவருக்கு சந்தோஷம். ‘நல்ல விஷயம் மில்கா. உன்னை நம்பி ஒரு தயாரிப்பாளர் படம் கொடுத்திருக்கார். தாயை நேசிக்கறது போல சினிமாவையும் நேசிச்சா, உன்னை அதுவே பெரிய உயரத்துக்குக் கொண்டு போயிடும். ரிலீஸுக்கு முன்னாடி சொல்லு... பார்க்க ரெடியா இருக்கேன்!’னு ஆசீர்வதிச்சு அனுப்பினார். எங்க மாஸ்டரோட ‘முனி’ சென்டிமென்ட் மாதிரி நானும் என் படத்துக்கும் இப்படி ஒரு டைட்டில் வச்சிருக்கேன்...’’ கனிவும் பணிவுமாகப் பேசுகிறார் மில்கா எஸ்.செல்வக்குமார். ‘நட்டி’ நட்ராஜ், மனிஷா யாதவ், யோகி பாபு கூட்டணியில் உருவாகும் ‘சண்டிமுனி’ படத்தின் அறிமுக இயக்குநர் இவர். காமெடி நடிகர்கள் சூரியும் யோகிபாபுவும் ஒருகாலத்தில் இவரது ரூம் ேமட்ஸ்!
அதென்ன மில்கா...?
முன்னாடி சன் டிவியில் ‘சூப்பர் 10’ நிகழ்ச்சியில் ‘மில்கா - பில்கா’னு ரெண்டு பேர் வருவாங்க. அதுல நான் மில்காவாகவும், பில்காவாக சூரியும் நடிச்சோம். சினிமாவில் நடிக்கற ஆசையில்தான் நெல்லையிலிருந்து சென்னைக்கு ஓடிவந்தேன். சில வருட போராட்டத்திற்குப் பிறகு சினிமாவில் தலையைக் காட்டிட்டு போற சீன்கள் கிடைச்சது. சில படங்களில் நடிச்சிருப்பேன். ஆனா, அந்த படத்தை தியேட்டர்ல போய்ப் பார்க்கும்போது, நான் நடிச்ச சீனே இருக்காது! ஃபுட்டேஜ் அதிகமா இருக்குதுனு சொல்லி நான் நடிச்ச சீனையே ‘கட்’ பண்ணியிருப்பாங்க. ‘வின்னர்’ல கைப்புள்ள குரூப் காமெடில நானும் தலைகாட்டியிருக்கேன். அதாவது அட்மாஸ்பியர்ல வந்துட்டு போவேன்! காமெடி ஸ்கிரிப்ட்டுகள் என் பலம். ‘மாமலைக்கள்ளன்’னு ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணினேன். இந்தப் படத்தயாரிப்பாளர் சிவராம் குமார் சார்கிட்ட கதையை சொன்னேன். ‘லாரன்ஸ் மாஸ்டர்கிட்ட இருந்து வந்திருக்கீங்க. அவரை மாதிரி கதையை எதிர்பார்த்தேனே...’ன்னார். அன்னிக்கே ரெடி பண்ணின கதைதான் ‘சண்டி முனி’.
யார் இந்த முனி..?
கதைநாயகிதான்! ‘ஒரு பொண்ணுக்கும் பேய்க்கும் நடக்கற சக்களத்தி சண்டைதான்’ படத்தோட ஒன்லைன். கணவன் - மனைவி எமோஷனல், காமெடி, சென்டிமென்ட்னு எல்லாமே தூவியிருக்கேன். இது பழிவாங்குற பேய் இல்ல. ஆனா, கிளைமேக்ஸ்ல அசத்தலான ட்விஸ்ட் ஒண்ணு இருக்கு!ஹீரோவா ‘நட்டி’ நட்ராஜ் சார் நடிச்சிருக்கார். அவர் ஒரு சிவில் என்ஜினீயர். மனிஷா யாதவ் ஹீரோயின். டபுள் ஆக்ஷன். ராதிகானு ஒரு டீச்சர்... அப்புறம் தாமரைனு ஜமீன் வீட்டு பொண்ணு. இரண்டு ரோல்லயும் கலக்கியிருக்காங்க மனிஷா.முதல்ல வரலட்சுமியத்தான் ஹீரோயினா யோசிச்சோம். அவங்க நிறைய படங்கள் பண்றதால, மனிஷா வந்துட்டாங்க. அந்த டைம்ல ‘ஒரு குப்பைக் கதை’ பார்த்தேன். அவங்க பர்ஃபாமென்ஸ் பிடிச்சிருந்தது. பெங்களூருக்கே போய், மனிஷாகிட்ட கதையை சொன்னேன். முழுக்கதையையும் சிரிச்சுக்கிட்டே கேட்டாங்க.
‘நான் ரொம்ப லக்கி. நல்ல படம் அமைஞ்சிருக்கு’னு சொல்லி கமிட் ஆனாங்க. இவங்க தவிர நண்பன் யோகிபாபு, ஆர்த்தி, சாம்ஸ், சூப்பர் சுப்பராயன் மாஸ்டர், அறிமுக வில்லன் விஜய் பூபதினு நிறைய பேர் நடிக்கறாங்க. டெக்னீஷியன்களும் எங்க பலம். செந்தில் ராஜகோபால் ஒளிப்பதிவு பண்றார். ‘மகான் கணக்கு’ உட்பட ஐந்து படங்களுக்கு இசையமைச்ச ஏ.கே. ரிஷால் சாய்மியூசிக் பண்ணியிருக்கார். இந்த படத்துக்கு முன்னாடி ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணியிருந்தேன். அதை ரிஷால்கிட்ட சொன்ன அடுத்த நாளே, நாலஞ்சு டெமோ ஸாங்ஸ் பண்ணிட்டு வந்து அசத்தினார். அந்த நட்பில் ‘சண்டி முனி’க்கு அவரையே அழைச்சுட்டு வந்துட்டேன்.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையா இருக்கே... நட்டி எப்படி சம்மதிச்சார்?
உண்மையை சொல்லணும்னா, முதல்ல சசிகுமார் சாரைத்தான் மைண்ட்ல வச்சிருந்தேன். ஆனா, அவர் வேறவேற படங்கள்ல பிசி,நட்டிகிட்ட கதையை சொன்னதும், ‘நல்ல கதை’ பண்றேன் பிரதர்’ன்னார். பாலிவுட்டின் டாப் ஹீரோக்களின் படங்களுக்கு ஒளிப்பதிவு பண்றவர். நான் அறிமுக இயக்குநர். ஸோ, நட்டி சார் தலையீடு இருக்குமோனு சின்னதா பயந்தேன். என்னைவிட கேமராமேன் செந்தில் ராஜகோபால் அதிகம் பயந்தார். நாம ஷாட் வைக்கறதுல குறை சொல்லுவாரோன்னு அவருக்கும் பயம் இருந்தது. ஆனா, நட்டி ஜென்டில்மேன்! ஒருநாள் கூட எங்கிட்ட எதுவும் சொன்னதில்ல. முழுக்கதையும் பழநியில்தான் ஷூட் பண்ணினோம். ஒரு சென்டிமென்ட் சீன்ல அவர் நடிக்கும்போது யூனிட்டே கைதட்டினாங்க. அவரோட கேரக்டர் பெண்களுக்கு ரொம்பப் பிடிக்கும்.
என்ன சொல்றார் யோகிபாபு?
நண்பனைப் பத்தி சொல்றதுக்கு நிறைய இருக்கு. நான் இயக்குநர் ஆகணும்னு ஆசைப்பட்டவர். ‘உன் படத்துல கண்டிப்பா நான் இருப்பேன் மில்கா’னு சொல்லி விரும்பி வந்து நடிச்சுக் கொடுத்திருக்கார். ஆரம்பக் காலங்கள்ல அவர் ஒரு சேனல்ல காமெடி ஷோவில் தலைகாட்டிட்டு இருந்தார். அப்ப ‘பிளாக்’ பாண்டி மூலம் எனக்கு நட்பானார். எங்க முதல் சந்திப்பிலேயே ரொம்ப வருஷத்து நண்பர்கள் மாதிரி பழகினோம். என் ரூம் மேட் ஆனார். சினிமாவில் அவர் உயரத்துக்கு போனாலும் கூட பழசை இன்னும் அவர் மறக்கல.
முதன்முதலா அவர் பைக் வாங்கும்போது ‘அதுக்கு நீதான் அட்வான்ஸ் கொடுக்கணும்’னு சொல்லி என் கையில் பணத்தை கொடுத்து வாங்கினார். கார் வாங்கும்போதும் அப்படித்தான்... என் கையால வாங்கி சந்தோஷப்பட்டார்!இந்தப் படத்துல மனிஷாவின் தாய்மாமனா வர்றார். ‘டாக ஜால...’ என்ற பாடலையும் பாடியிருக்கார்! அவரது பாடல் ஷூட் இன்னும் பேலன்ஸ் இருக்கு. இன்னொரு விஷயம், முதன்முறையா வாய்ஸ் மாடுலேஷன் செய்தும் அசத்தியிருக்கார்! தெலுங்கு டப்பிங் படமான ‘அம்மன்’ல வந்த டெரர் வில்லன் ராமிரெட்டி மாதிரி இந்தப் படத்தில் அவரது வாய்ஸ் மாடுலேஷனுக்கு காமெடி அள்ளும்!
-மை.பாரதிராஜா
|