ஒரு வீட்டில் திருடினால் திருடன்... பல வீடுகளில் திருடினால் வியாபாரி..!



ஜூலியன் அசாஞ்சே Vs வாட்ஸ்அப்

உலக அளவில் 200 கோடி, இந்திய அளவில் 34 கோடி பயனாளர்களைக் கொண்டுள்ள வாட்ஸ்அப் சமீபத்தில் அறிவித்த தனியுரிமைக் கொள்கை (Terms and Privacy Policy) பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது பயனாளிகளின் தகவல்கள் இனிமேல் ஃபேஸ்புக்குக்கு ஷேர் செய்யப்படுவதோடு, பிற சேவைகளும் புதிதாக கொண்டு வரப்படுகின்றன என்றது. இது தொடர்பான குழப்பங்களும், அச்சங்களும் மக்கள் மத்தியில் எழ, புதிய நிபந்தனை மாற்றம் வாட்ஸ்அப் வர்த்தக சேவை தொடர்பானது; பயனாளிகள் சேவையில் எந்த மாற்றமும் இருக்காது என்று வாட்ஸ்அப் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

“தனி நபர் தகவல்களை மிஷின்கள்தான் படிக்கும். மனிதர்கள் யாரும் படிக்க மாட்டார்கள். அதேபோல் ஹேக்கர்ஸோ, அரசோ யாரும் உங்கள் அந்தரங்க தகவல்களை ஒட்டுக் கேட்க முடியாது...” என்று கூறும் சைபர் நிபுணர் வினோத்குமார் ஆறுமுகம், புதிதாக வாட்ஸ்அப்பில் கொண்டு வரக்கூடிய அப்டேட், அதன் விளைவுகள் பற்றி விளக்கினார்.

“வாட்ஸ்அப் நம் தகவல்களில் இருக்கக் கூடிய மெட்டா டீடெயில்ஸை எடுத்துக் கொள்கிறது. மெட்டா டீடெயில் என்பது ஒரு தகவலை நீங்கள் யாருக்கு அனுப்புகிறீர்கள், எந்த லொக்கேஷனிலிருந்து எந்த லொக்கேஷனிற்கு போகிறது… என்பதில் ஆரம்பித்து செல்போனில் இருக்கக் கூடிய ஓஎஸ், என்ன மாடல் போன், என்ன போன் நம்பர் பயன்படுத்துகிறோம், கான்டெக்ட் டீடெயில்ஸ், பேட்டரி எவ்வளவு இருக்கு… போன்ற
தகவல்கள்.

அதேபோல் ஒரு மீடியா ஃபைல் அனுப்பினால், அந்த ஃபைல் ஒருவேளை டெக்னிக்கல் இஷ்யூவினால் டெலிவரி ஆகவில்லை என்றால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அழிக்கப்படுகிறது. அவ்வாறு அனுப்பப்படுகிற மீடியா ஃபைல்களையும் மிஷின் படித்து புரிந்துகொள்கிறது...” என்ற வினோத்குமார் ஆறுமுகம் இதனால் ஏற்படும் பாதிப்புகளையும் விளக்கினார்.

“பொதுவாகவே ஒரு appஐ பயன்படுத்தும்போது கான்டெக்ட்ஸ் அலோனுதானே கொடுக்கிறோம். ஏற்கனவே ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற appகளில் நமது பிரைவசி கொடுத்திருக்கிறோம். அதனால் வாட்ஸ்அப்பில் கொடுப்பதன் மூலம் பெரிய பாதிப்பு வரப் போவதில்லை. இன்னும் சொல்லப்போனால் கூகுளில் நமது எல்லா பிரைவசிகளையும் பயன்படுத்த உரிமை கொடுத்திருக்கிறோம்.

எல்லா appகளும் நம் பிரைவசியை அவர்கள் லாபத்திற்கு தவறாக பயன்படுத்தும்போதுதான் கவலைப்பட வேண்டி உள்ளது. நம் டேட்டாக்களை அவர்கள் அரசியல் கட்சிகளுக்கோ அல்லது மூன்றாம் நிறுவனங்களுக்கோ விற்கலாம். அதை வைத்து நம் எண்ண ஓட்டம் என்னவாக இருக்கிறது என்பதை அறிந்து நுணுக்கமாக விளம்பரங்கள் கொடுக்க வாய்ப்புகள் உண்டு. இதனோடு அந்த தகவல்களை வைத்து அச்சுறுத்தலும் நிகழ்கிறது.

ஒவ்வொரு தனி நபரின் மனநிலை, அவர்களது சமூக சூழலை வைத்துதான் பாதிப்புகளின் அளவீடும் உள்ளது. கட்டுப்பாடே இல்லாமல் போய்க் கொண்டிருக்கும் இதனால் பெரிய சமூக பாதிப்புகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. எந்தெந்த தகவல்களை இந்த appகள் எடுக்கிறது... இதன் சர்வர் எங்கு இருக்கிறது... இந்த தகவல்களை வைத்து தவறாக ஏதும் நடக்கிறதா... என்பதை அறிந்து கொள்ள மக்கள் முயலவேண்டும். இதற்காக அரசை வற்புறுத்த வேண்டும். சொல்லப் போனால் இந்திய அரசிடம் இவைகளைக் கட்டுப்படுத்துவதற்கான பாலிசிகள் இல்லை...” அழுத்தம்திருத்தமாகச் சொல்கிறார் வினோத்குமார் ஆறுமுகம்.

“ஆம்… இந்திய அரசிடம் இந்த appகள் குறித்து முறையான வரையறை திட்டங்கள் ஏதும் இல்லை...” என்று ஆமோதிக்கிறார் பெயர் சொல்ல விரும்பாத மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர்.‘‘இந்த விஷயத்திற்குள் போவதற்கு முன் ஜூலியன் அசாஞ்சே என்ற நபரைப் பற்றி பார்ப்போம்.

‘தூதரகம்’ என்ற பெயரில் உலக நாடுகள் பலவற்றிலும் அலுவலகங்கள் அமைத்து, அந்தந்த நாடுகளை உளவு பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க அரசை அம்பலப்படுத்தியதோடு, உலக மக்கள்மீது கட்டவிழ்த்துவிடும் கொடூரமான வன்முறை, போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், முறைகேடுகள், ஊழல் குற்றங்கள் போன்ற அரசின் பாதுகாக்கப்பட்ட ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு, மறைக்கப்பட்ட பல உண்மைகளை அவர் மக்கள் பார்வைக்குக் கொண்டு வந்தார்.

அதனால் இன்று அவர் உலக நாடுகளின் முன்னால் குற்றவாளி யாக நிறுத்தப்பட்டிருக்கிறார். அமெரிக்கா அப்படி ஒரு பிம்பத்தை உலக மக்கள்முன் ஏற்படுத்தியிருக்கிறது; அசாஞ்சேவை பயங்கரவாதி அளவுக்கு சித்தரிக்கிறது.ஆனால், அசாஞ்சே அமெரிக்காவுக்கும் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் என்ன செய்தாரோ அதையேதான் இருக்கும் அனைத்து appகளும் செய்கின்றன - அதுவும் அமெரிக்க மற்றும் உலக கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆசியுடன். அதாவது, மக்களிடமிருந்து அவர்களது அனுமதியில்லாமல் அவர்களது தனிப்பட்ட அந்தரங்க தகவல்களை இதுபோன்ற appகள் திருடுகின்றன; பரஸ்பரம் விற்றுக் கொள்கின்றன. ஆனால், இந்தச் செயல் குற்றமில்லை!

எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், ஒரு வீட்டில் திருடினால் திருடன்; பல வீடுகளில் திருடினால் வியாபாரி. அந்த பல வீடுகளில் திருடும் வேலையைத்தான் இன்று இந்த appகள் செய்து கொண்டிருக்கின்றன.சரி, நாம் விஷயத்திற்கு வருவோம். ஆன்லைன் அப்ளிகேஷன்ஸ் அல்லது ஃபேஸ்புக், வாட்ஸ்அப்… போன்றவைகள் எப்படி நமக்கு இலவசமாக சேவை வழங்குகிறது...? அந்நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு எப்படி லட்சங்களில் சம்பளம் வழங்குகிறது..? அதன் வருமானம் என்ன..?

நாம் கூகுளில் ஒரு வார்த்தையைத் தேடினால் அது படிக்கப்படாமல் ஒரு ‘சங்கேதக் குறியீடாக’ மாறும். எந்த வார்த்தையைத் தேடுகிறோமோ அதன் அடிப்படையில் எது மார்க்கெட்டிங் பாசிபிள் என்பதைக் கண்டுபிடிக்கும்.உதாரணமாக, கோவா என்று தேடினால், அந்த டூருக்கான கம்பெனிகள், அங்குள்ள ஹோட்டல்கள் ஆகியவற்றை சரசரவென காட்டும்.

இது எப்படி நிகழ்கிறது என்றால்... இந்த appகள், கூகுள் போன்றவைகளோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. ‘இவ்வளவு பேருக்கு உங்கள் விளம்பரத்தைக் காட்டுகிறோம்... அதற்கு இவ்வளவு தொகையை நீங்கள் வழங்க வேண்டும்...’ என டீல் பேசியிருப்பார்கள்.
இதுதான் நடக்கிறது. வழக்கமாக மற்ற appகளில் நடந்து கொண்டிருப்பது போல் இப்போது வாட்ஸ்அப்பிலும் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். ஏற்கனவே இந்த சங்கேதக் குறியீடுகள் மூலம் ஃபேஸ்புக்கில் டெஸ்ட் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

தொலைக்காட்சிகளிலும் இந்த மாறுதல்கள் வருகிறது. ஓடிடி பிளார்ட்ஃபார்மில் நம் ஐபி அட்ரஸ் மூலம் லொக்கேஷன் கண்டுபிடிக்க முடியும். அங்கு என்ன வியாபாரம் செய்ய முடியுமோ அதற்கேற்றாற் போல் விளம்பரங்கள் கொடுத்து பயனர்களைக் கவர்கிறார்கள். ‘நான் உனக்கு இலவசமாக சேவை வழங்குகிறேன். அதற்கு உனது தனிப்பட்ட அந்தரங்க தகவல்களை எனக்கு நீ வழங்க வேண்டும். நான் தரும் இலவசங்களை நீ அனுபவிக்கிறாய்... உனது அந்தரங்க தகவல்களை வைத்து நான் லாபம் சம்பாதிக்கிறேன்...’ என்கின்றன appகள். அவ்வளவுதான்!

இதிலுள்ள முக்கிய பிரச்னை, உங்களிடம் கேட்டு எதையும் எந்த appம் செய்வதில்லை. சர்வீஸ் அப்ளை பண்ணும்போது எல்லாவற்றிற்கும் சம்மதித்து agree என டிக் அடிக்கிறோம். கூகுள் போன்றவைகளுக்கு எந்த சட்டமும் கிடையாது. ஒவ்வொரு நாட்டிலும் நிலவும் கட்டுப்பாடுகள் மட்டுமே அவற்றுக்கான நிபந்தனைகள்.

இந்தியாவில் இதுகுறித்து முழுமையான சட்டமோ, கட்டுப்பாடுகளோ இல்லை. எனவேதான், சமீபத்தில் சீன appகளை தடை செய்தபோதுகூட ‘எந்த சட்டத்தின் அடிப்படையில் எடுத்தீங்க..? இந்த ரூல் எனக்கு மட்டும்தானா இல்லை எல்லோருக்குமா...’ என்று கேட்கப்பட்டது.  

ஆக, appகளை நோக்கி கேள்விகேட்டு பயனில்லை. அரசனை நோக்கி கேள்வி கேட்டால்தான் நம் அந்தரங்க தகவல்கள் பாதுகாக்கப்படும்!’’ என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத மத்திய அரசின் மூத்த அதிகாரியான அவர்.

அன்னம் அரசு