அவ்வளவு மழை பெய்தும் ஏன் சென்னை கோயில் குளங்கள் முழுவதும் நிரம்பவில்லை?



பொதுவாக, சென்னையில் அக்டோபர் முதல் தேதியில் இருந்து டிசம்பர் 31ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை சராசரியாக 78 செ.மீட்டரே பெய்யும். ஆனால், இந்த முறை 104 செ.மீட்டர் வரை பொழிந்துள்ளது. 33 சதவீதம் அதிகம் என்கிறது வானிலை ஆய்வு மையம். தவிர, இந்த ஜனவரியிலும் சென்னையில் மழைப்பொழிவு இருந்தது.

ஆனால், இவ்வளவு மழைப் பொழிவு இருந்தும் சென்னை கோயில் குளங்கள் முழுஅளவில் நிரம்பவில்லை. குறிப்பாக, சென்னையின் பெரிய குளங்களில் ஒன்றான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளம் சிறிதளவே நிரம்பியிருக்கிறது. அதனருகில் உள்ள சித்திரக்குளமும் முழுதாக நிரம்பவில்லை.

சென்னை மாநகராட்சி சென்னையிலுள்ள முக்கியமான கோயில் குளங்களை சீரமைக்கும் பணியைக் கையிலெடுத்துள்ளது. இதில், மயிலாப்பூர் கோயில் குளமும் ஒன்று. இங்கு மழைநீரில் உள்ள கழிவுகளைத் தடுத்து குளத்திற்குள் விடும் பணியைச் செய்துள்ளது. ஆனாலும் தண்ணீர் நிரம்பவில்லை.
தவிர, வடபழனி முருகன் கோயில் தெப்பக்குளத்திலும், மயிலாப்பூர் சித்திரக்குளத்திலும் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் வடிகால் அமைத்துள்ளது. இதனால், இந்தக் குளங்களில் ஓரளவே தண்ணீர் நிரம்பி யிருக்கிறது. இதற்கு என்ன காரணம்?

‘செல்வத் திருமயிலை’ என்ற நூல் எழுதியவரும், தமிழகக் கோயில்கள் பற்றி ஆய்வு செய்து வருபவருமான பூசை.ச.ஆட்சிலிங்கம் வேதனையுடன் பேச ஆரம்பித்தார். ‘‘அன்னைக்கு மயிலாப்பூர்ல 22 அடியில் நிலத்தடி நீர் இருந்தது. இப்ப முந்நூறு அடிக்கு மேலதான் தண்ணீர் கிடைக்குது.

அதேமாதிரி குளத்தைச் சுத்தியே முந்நூறு முதல் நானூறு போர்வெல்கள் வரை இருக்குது. அப்ப குளத்துல தண்ணீர் எவ்வளவு சேர்ந்தாலும் சுத்தியிருக்கிற ஹோட்டல்கள், கடைகள், வீடுகளுக்கான போர்வெல்களால் பாதிநீர் உறிஞ்சப்பட்டுவிடும். அதனால, நிலத்தடி நீர் இல்லாமல போயிடுச்சு. குளத்துல தண்ணீர் இல்ல...

முன்னாடி மந்தைவெளி காட்டுப்பகுதியா இருந்துச்சு. அங்க பெய்ற நீரெல்லாம் அடையாறுக்கும், மயிலாப்பூருக்கும் வந்துச்சு. இப்ப மந்தைவெளி வீடுகளா மாறிடுச்சு. அதனால, ேராட்டுல பெய்ற தண்ணீர்கூட உள்ள வர்றதில்ல.

அப்புறம், குளங்களை இணைக்கிற சிஸ்டம் எல்லாம் இங்க இருந்தது. அதை சாலை போடுறோம், வீடு கட்டுறோம்னு காலி பண்ணிட்டாங்க.
இங்க ஒவ்வொரு துறையா வந்து சாலையை நோண்டிட்டே இருக்காங்க. அப்படி செய்யும்போது எதுவும் செய்ய முடியாது. முன்னாடி இங்க எல்லா வீடுகளிலும் கிணறு இருந்துச்சு. இப்ப கிணத்துல தண்ணீரே கிடையாது. பல வீடுகள்ல மூடிட்டாங்க. திருவல்லிக்கேணியில் 200 அடி போர்வெல் போட்டால் நேரடியா கடல்நீரே வருது. அதனால, குளங்கள் நிறையலனு சொல்றதுல நியாயமில்ல...’’ என்கிறார் பூசை.ச.ஆட்சிலிங்கம்.

இதை இன்னும் அறிவியலா விளக்குகிறார் சுதீந்திரா. இவர், ‘ஆயிரம் ஏரிகள் கொண்ட அபூர்வ சென்னை’ என்கிற திட்டத்தின் ஆர்க்கிடெக்ட்களில் ஒருவர். ‘Madras Terrace’ என்கிற ஆர்க்கிடெக்ட் அமைப்பு இந்தத் திட்டத்தை முன்னெடுத்து செய்து வருகிறது. ‘‘இதை முதல்ல அறிவியலா புரிஞ்சுக்கணும். நம் பூமிக்கடியில் இயற்கையாகவே நீர்ப்படுகைகள் இருக்கு. முதல்கட்ட நீர்ப்படுகை 15 முதல் 60 அடி வரை ஓடும். இந்த நீர்ப்படுகையின் நீர் சுவையாகவும் இனிப்பாகவும் இருக்கும். இதுதான் கிணற்று நீர்.

இந்த நீர்ப்படுகையிலிருந்து தண்ணீர் வர்றதாலயே கிணற்று நீர் சுவையா இருக்கும். ஆனா, இந்த நீர்ப்படுகையை நாம் மீண்டும் மீண்டும் நிரப்பிட்டே இருக்கணும். அப்பதான் தண்ணீர் வளமா இருக்கும். சென்னையில் இந்த நீர்ப்படுகையை ரொம்பவே காலி செய்திட்டோம். அதனால் கிணறுகள் எல்லாம் காணாமல் போயிடுச்சு.

அப்புறம், இன்னொரு நீர்ப்படுகை 200 அடிக்குக் கீழ் இருக்குது. இது பாறையின் இடுக்குகளில் இருக்கும். அந்தப் பாறையின் உப்பு எல்லாம் சேர்ந்து இருக்குறதால நீரும் உவர்ப்பா இருக்கும். நாம் இப்ப இந்த ரெண்டாவது கட்டத்துக்குப் போயிட்டோம். அதாவது இருநூறு, முந்நூறு அடிக்கு போர்வெல் போட்டு தண்ணீர் எடுக்குற நிலைக்கு போய் ரொம்ப நாளாகிடுச்சு.

நகரமயமாக்கலால் தண்ணீர் தேவை அதிகமாகி நிறைய தோண்டிவிட்ேடாம். பூமியில் தோண்டத் தோண்ட நீர் கிடைக்கும்னு நினைக்கிறோம். அப்படியில்ல. மழைநீர் சேகரிப்பு, செலவழித்த நீரை மீண்டும் பூமியில் விடுதல் மூலமாகத்தான் மறுபடியும் அந்த நீர்ப்படுகை நிரம்பும். அதிலிருந்தே நீரும் கிடைக்கும். ஆனா, நாம் அப்படிச் செய்றதில்ல.

இப்ப கோயில் குளங்கள் என்பது வீட்டிலுள்ள ஒரு கிணறு போல்தான். அதாவது, பெரிய கிணறு. நீர்ப்படுகையில் நீர் இருந்தால்தான் கிணற்றுல தண்ணீர் இருக்கும். அதேமாதிரி நீர்ப்படுகையில் தண்ணீர் இருந்தால்தான் குளத்திலும் தண்ணீர் இருக்கும். இந்த ஆண்டு மயிலாப்பூர்ல மழை அதிகம். ஆனா, குளம்  நிரம்பல. இதுக்குக் காரணம், நீர்ப்படுகையில் தண்ணீர் இல்லாததால பெய்த எல்லா மழைநீரும் பூமியால் உறிஞ்சப்பட்டு நீர்ப்படுகையில் சேர்ந்துடுச்சு. அதனால, கோயில் குளத்துல நீர் இல்ல. அப்ப கோயில் குளங்கள்ல நீர் கண்ணுக்கு தெரியணும்னா, நாம் எல்லோரும் நீரை ரீசார்ஜ் செய்யணும். அதாவது மழைநீர் சேகரிப்பு மூலம் நீரை பூமியினுள் மீள்நிரப்பணும்.

ஏன்னா, நாம் பயன்படுத்திய நீரின் அளவானது நீர்ப்படுகைக்குச் செல்லும் நீரின் அளவைவிட அதிகம். ரெண்டும் சமமா இல்ல. பயன்படுத்துற நீரின் அளவு அதிகமா இருக்கிறதால கோயில் குளத்துல தண்ணீர் இல்ல. அதுக்காகத்தான் ரீசார்ஜ் செய்யணும்னு சொல்றோம்.

மழைநீர் சேகரிப்பு மட்டுமில்ல. நாம் பயன்படுத்துற எல்லா நீரையும் மீள்நிரப்பு பண்ணலாம். முன்னாடி நம் முன்னோர்கள் வீடுகள்ல வாழைத்தோட்டம் வச்சிருப்பாங்க. சமையலறை, குளியலறையில் இருந்து வெளியேறும் நீர் அங்க போகும். அப்படியே பூமியில் இறங்கும். நீர்வளம் பெருகும். ஆனா, நாம் மீள்நிரப்பு பண்ணாமல் மறுபடியும் மறுபடியும் நீரை உறிஞ்சறதால தண்ணீர் பற்றாக்குறை வருது.

அப்புறம், மீள்நிரப்பும் வேலையை ஒருத்தர் மட்டும் செய்யக்கூடாது. எல்லோரும் சேர்ந்து செய்யணும். ஏன்னா, அப்பதான் ஒருத்தர் கிணற்றுல மட்டுமல்லாமல் எல்லோர் கிணற்றுலயும் நீர் சேரும். அந்தப் பகுதி முழுவதும் நீர்வளம் நல்லாயிருக்கும்.

இப்ப ஒருத்தர் மட்டும் அவர் வீட்டுல பண்ணியிருந்தார்னா மற்றவங்க நீர் எடுக்கும்போது அவருடைய வீட்டு நீரும் சேர்ந்தே போகும். சீக்கிரமே தண்ணீர் பற்றாக்குறை வந்திடும். இதுதான் நீர்ப்படுகை கான்செப்ட். அடுத்து இதை வீடுகள்ல மட்டும் இல்லாமல் பூங்கா உள்ளிட்ட பொது இடங்கள்லயும் பண்ணணும்...’’ என்கிற சுதீந்திரா, ‘ஆயிரம் ஏரிகள் கொண்ட அபூர்வ சென்னை’ திட்டத்தின் முதல்கட்ட செயல்பாடுகளை விளக்கினார்.  
‘‘இப்ப நாங்க சென்னையின் கோயில் குளங்கள், ஏரிகள் பத்தி ஆய்வு பண்ணியிருக்கோம். அதை ெரடி பண்ணி ஒரு திட்டம் வகுத்து அரசுகிட்ட கொடுத்திருக்கோம். இதுல முதல்கட்டமா மயிலாப்பூர் நீர்நிலைகளை மட்டும் எடுத்து செய்திருக்கோம். அதுல, ‘அனைவரும் மழைநீர் சேகரிப்பு மூலம் நீரை சேகரிக்கணும். தவிர, சமையலறை, குளியலறை நீர் எல்லாவற்றையும் கிளீன் பண்ணி அதையும் பூமியிலேயே மீள்நிரப்பு பண்ணணும். அதேபோல சாலைகள்ல தேங்கற நீரும் பூமிக்குப் போகணும். அதன்வழியா நீர்ப்படுகையின் நீரை பராமரிக்கணும்’னு சொல்லியிருக்கோம்.

அந்தக் காலத்துல நிறைய வாய்க்கால்கள் இருந்தன. அதன்மூலம் ஒரு குளத்துக்கும் இன்னொரு குளத்துக்கும் தொடர்பு ஏற்படுத்தி இருந்தாங்க. ஆனா, நகரமயமாக்கல் நடக்கும்போது இந்தத் தொடர்புகள் எல்லாம் அறுந்துபோச்சு.அரசுக்கு நாங்க கொடுத்திருக்கிற திட்டத்துல மயிலாப்பூர்ல உள்ள சில கோயில் குளங்களுக்கு தொடர்பு ஏற்படுத்தி இணைக்கலாம்னு சொல்லியிருக்கோம். இந்தக் குளங்களுக்கு எல்லாம் முன்னாடி இணைப்பு இருந்திருக்கு.

பொதுவா, சென்னையில் எல்லா குளங்கள், ஏரிகளுக்குமே இணைப்பு இருந்திருக்கு. பல்லவர், சோழர் காலத்திலேயே இந்தத் தொழில்நுட்பத்ைத உருவாக்கியிருக்காங்க. மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நிரம்புற மாதிரி செய்திருக்காங்க. ஏன்னா, கிழக்கில் கடல்ல வடியிற மாதிரி அந்த அமைப்பு இருந்திருக்கு.

அந்தக் காலத்துல சென்னைப் பகுதிகள்ல ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் இருந்துச்சு. இதுல 250 கோயில் குளங்கள். இப்ப 50 கோயில் குளங்கள்தான் இருக்கு. இதையாவது நாம் மீட்கணும். இப்ப அரசு சேத்துப்பட்டு ஏரியையும், வில்லிவாக்கம் ஏரியையும் புனரமைச்சிருக்கு. எங்களுக்கு தெரிஞ்சு 20க்கும் மேற்பட்ட குளங்கள், ஏரிகளை மீட்டெடுத்திருக்கு.

இதுல தூர்வாரி, நீர்வரத்தை சரிசெய்திருக்காங்க. இது ஒரு நல்ல முன்னேற்றம். இதை அரசு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமூகமும் சேர்ந்து செய்யணும். அப்பதான் வருங்காலங்கள்ல சென்னையின் நீர் பற்றாக்குறை நீங்கும்...’’ என்கிறார் சுதீந்திரா.   

பேராச்சி கண்ணன்

ஆ.வின்சென்ட் பால்