ஈஸ்வரன்



பாரதிராஜாவின் மிகப் பெரிய குடும்பத்தை காக்கப் போராடி அதில் வெற்றி யும் பெற்றுத்தந்தால் அவனே ‘ஈஸ்வரன்’.பெரும் குடும்பத்தை சந்தோஷமாக நடத்திச் செல்கிறார் பாரதிராஜா. ஜோதிடர் வந்து அந்த வீட்டின் எதிர்கால நடப்பு களை கணித்து குறி சொல்லப்போக அதில் இருக்கும் ஆபத்து உணரப்படுகிறது.
ஏற்கனவே ஜோதிடர் சொன்ன விஷயம் பலிக்க குடும்பமே திகைத்து நிற்கிறது. இதற்கிடையில் குடும்பத்தைப் பழிவாங்க பகையாளி கிளம்ப, குடும்பத்துக்குள்ளேயே ஒருவர் சதித்திட்டம் தீட்ட, ‘ஈஸ்வரன்’ சிம்பு குடும்பத்தை எப்படி காப்பாற்றிக் கரை சேர்க்கிறார் என்பதே மீதிக் கதை.

ஒரு குடும்பக் கதை, பற்று, பாசம், சென்டிமென்ட் + காமெடி சீன்கள் = வெற்றி ஃபார்முலா என்ற மினிமம் கியாரண்டி டெம்ப்ளேட்டை நம்பிக் களமிறங்கியிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். பார்த்துப் பழகிய கதை என்றாலும் கதையை அடுத்தடுத்து சிரமமில்லாமல் கொண்டு போயிருக்கிறார் இயக்குநர்.

பழைய சிம்புவுக்கு தம்பி போல் இருக்கிறார் ‘ஹீரோ’ சிம்பு. துளியும் கஷ்டம் இல்லாத ரோலை சுலபமாக ஊதித் தள்ளுகிறார். கமர்ஷியல் ஹீரோக்களுக்கே உரிய பில்டப்புகளோடு அறிமுகமாகி, நண்பன் பாலசரவணனோடு சேர்ந்து காமெடி ஏரியாவில் கலக்குவது படத்தில் ஒன்ற முடிகிற சீனிப்பட்டாசு சரவெடி. பாலசரவணன், சிம்பு வுக்கு நல்ல காமெடி துணை.

நிதி அகர்வால், நந்திதா என இரு கதாநாயகிகள். நிதி அகர்வாலுக்கு அழகு இருக்குமளவுக்கு இன்னும் நடிப்பு கைகூடி வரவில்லை. அந்த உயரத்துக்கும் மிடுக்குக்கும் நடிப்பையும் கற்றுக்கொண்டால் தமிழுக்கு கூடுதல் கதாநாயகி கன்ஃபார்ம்!குடும்பத்தின் மொத்த தலைவனாக டைரக்டர் பாரதிராஜா வலம் வருகிறார். அவரே படத்தின் மையம். பெருந்தன்மையில், பாசப் பதைபதைப்பில், பக்குவ நடிப்பில் அவரது அனுபவம் பேசுகிறது. கோபம், அழுகை, ஆவேசம் என அத்தனை உணர்ச்சிகளிலும் தேவையான அழுத்தமான உணர்வைத் தருகிறார்.

அருள்தாஸ், முனீஸ்காந்த், காளி வெங்கட் என மூவரும் குணச்சித்திரங்களில் மின்னுகிறார்கள். இப்போது இருக்கிற கொரோனா கஷ்டம் வரைக்கும் கொண்டு வந்து படத்துக்கு இன்னும் சுலபத்தன்மையை கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.படத்துக்கு தேவையான கலர்ஃபுல் ஒளிப்பதிவை சரியான விகிதத்தில் அளித்திருக்கிறார் கேமராமேன் திரு.

தென்னந்தோப்பின் பின்னணியில் பாரதிராஜாவும் சிம்பு வும் பேசும் ஒற்றைக்காட்சி அழகின் உச்சம். படத்துக்கான கொண்டாட்ட மனநிலையில் தமன் பாடல் போட முயன்றிருக்கிறார்.பாரதிராஜா, சிம்பு என சீனியர் நடிகர்களைக் கொண்டுவந்து சேர்த்த உழைப்பில் பாதியையாவது கதைக்கு யோசித்திருக்கலாம். அடிக்கடி வரும் ஃப்ளாஷ்பேக்குகள் கொஞ்சம் சலிப்பு. லொகேஷன் படு இதம்.பாச நேசத்தில் காட்டிய ஈர்ப்பை திரைக்கதையின் பக்கங்களில் காட்டியிருந்தால் ‘ஈஸ்வரனை’ இன்னும் பலமாய் ரசித்திருக்கலாம்.  

குங்குமம் விமர்சனக் குழு