ரத்த மகுடம்-134



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘என்ன சொல்கிறீர்கள் ஸ்ரீராமபுண்ய வல்லபரே...’’ சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் அதிர்ந்தார். ‘‘இல்லாத வேளிர்களுக்கு தலைவனாக என்னால் ரகசியமாக முடிசூட்டப்பட்ட கடிகை பாலகன், என் தந்தையும் நமது மாமன்னருமான இரண்டாம் புலிகேசியின் இறப்புக்குக் காரணமானவரும், நம் தலைநகரான வாதாபியை எரித்து தீக்கிரையாக்கிய நிகழ்வில் முக்கிய பங்கு வகித்தவருமான பரஞ்சோதியின் பேரனா..?’’சாளுக்கிய போர் அமைச்சர் ‘ஆம்’ என தலையசைத்தார்.

‘‘அந்த கடிகை பாலகனைத்தான் ஆயனச் சிற்பியின் மகளும், நாட்டியத் தாரகையும், என் சிறிய தந்தையால் விரும்பப்பட்டவளும், வாதாபியில் சிறை வைக்கப்பட்டவளுமான சிவகாமி வளர்த்தாளா..?’’ஸ்ரீராமபுண்ய வல்லபர் நேருக்கு நேராக சாளுக்கிய மன்னரைப் பார்த்தார். பதிலேதும் சொல்லவில்லை.அப்பார்வையை எதிர்கொண்ட விக்கிரமாதித்தர் மெல்ல மெல்ல சமநிலைக்கு வந்தார். தேகமெங்கும் எதிரொலித்த அகத்தின் அதிர்வு கரைந்தது. ‘‘போர் அமைச்சரே...’’‘‘மன்னா...’’

‘‘இந்த உண்மைகள் அனைத்தும் தங்களுக்குத் தெரியும்...?’’
‘‘ஆம்...’’‘‘ஆனால், என்னிடம் இருந்து மறைத்திருக்கிறீர்கள்...’’
‘‘...’’‘‘இதுதான் ஒரு போர் அமைச்சர் தன் மன்னனுக்கு செலுத்தும் மரியாதையா..? உண்மைகளை மறைக்கும் உங்களை நம்பித்தான் சாளுக்கியப் படைகளை ஒப்படைத்திருக்கிறேனா..? மன்னனுக்கு தெரியாமல் தனி ராஜாங்கம் நடத்தும் உங்களை வைத்துக்கொண்டுதான் பல்லவர்களை எதிர்கொள்ளப் போகிறேனா..? உள்ளொன்று வைத்து புறமொன்று நடக்கும் தங்கள் வியூகத்தை நம்பித்தான் சாளுக்கியப் படைகளை வழிநடத்தப் போகிறேனா..?’’‘‘...’’

‘‘தட்சிண பாரதத்தின் தலைசிறந்த மன்னரான என் தந்தையின் சிரசை வெட்டிய... சாளுக்கிய மக்கள் இரவு பகல் பாராமல், தேவையான ஓய்வு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் மாபெரும் நகராக வளர்த்தெடுத்த வாதாபியை அக்னிக்கு உணவாகக் கொடுத்த பல்லவப் படைகளைப் பூண்டோடு அழிக்கவேண்டும் என ஒவ்வொரு சாளுக்கிய வீரனும் சபதம் செய்திருக்கிறான்... அதனால்தான் தன் உற்றார் உறவினர் குடும்பத்தை விட்டு பல திங்களாக தொண்டை மண்டலத்தில் முகாமிட்டிருக்கிறான்... ஒவ்வொரு சாளுக்கிய வீரனின் குருதியும் ஒவ்வொரு பல்லவ வீரனின் ரத்தத்தைக் குடிக்க துடித்துக் கொண்டிருக்கிறது...’’
‘‘...’’
‘‘இதையெல்லாம் அறிந்திருந்தும்... இப்படிப்பட்ட உணர்ச்சிபூர்வமான சைன்யத்தின் அமைச்சராக வலம் வரும் நீங்கள் அனைவருக்கும் துரோகம் செய்யும் வகையில் நடந்து கொண்டிருக்கிறீர்கள்...’’‘‘மன்னா!’’‘‘காட்டிக் கொடுப்பதும் இங்கு நடப்பதை அங்கு சொல்வதும் மட்டுமே துரோகமல்ல... அறிந்த, தெரிந்த உண்மைகளை வெளிப்படுத்தாமல் மவுனம் சாதிப்பதும்கூட துரோகம்தான்... சொல்லப் போனால் இதுதான்... நீங்கள் நடந்து கொள்வதுதான்... துரோகச் செயல்களிலேயே முதன்மையான துரோகம்...’’

ஸ்ரீராமபுண்ய வல்லபரின் உதடுகள் துடித்தன.‘‘உங்களுக்கு உரிய மதிப்பளித்து மாபெரும் சாளுக்கிய தேசத்தின் மன்னருக்கு சமமான அந்தஸ்தை வழங்கியிருக்கிறேன்... வருங்கால சாளுக்கிய மன்னரான என் புதல்வனையே உங்களிடம் ஒப்படைத்திருக்கிறேன்... அப்படியிருந்தும் உண்மைகள் அனைத்தையும் மறைத்து எங்கள் எல்லோரையும் முட்டாளாக்கியிருக்கிறீர்கள்... இதைச் செய்ய உங்களுக்கு எப்படி மனம் வந்தது..?’’     
 
உடல் நடுங்க தன் உதடுகளைப் பிரித்து ஸ்ரீராமபுண்ய வல்லபர் பதில் சொல்ல முற்பட்டபோது விக்கிரமாதித்தரின் குரல் அதைத் தடுத்தது.‘‘இப்படியெல்லாம் நான் கேட்பேன் என்று எதிர்பார்க்கிறீர்களா ராமபுண்ய வல்லபரே...’’ நெருங்கி வந்து சாளுக்கிய போர் அமைச்சரின் தோள்களை ஆதரவாகப் பற்றினார் விக்கிரமாதித்தர். ஸ்ரீராமபுண்ய வல்லபரின் உடல் துடித்தது.

குறிப்பறிந்து தன் மார்போடு அவரை இறுக அணைத்தார் சாளுக்கிய மன்னர். ‘‘ஒருபோதும் அப்படி கேட்கவும் மாட்டேன்... மனதாலும் நினைக்க மாட்டேன் ராமபுண்ய வல்லபரே... பிறந்த கணமும் தவழ்ந்த காலமும் நினைவில் இல்லை... ஆனால், நினைவு தெரிந்த காலம் முதல் இக்கணம் வரை நடந்தவை எல்லாம் பசுமரத்தாணி போல் நெஞ்சில் பதிந்திருக்கிறது...

அவை அனைத்திலும் நீக்கமற தாங்களே நிறைந்திருக்கிறீர்கள்... என் தாய் தந்தையுடன் நான் இருந்த நேரத்தை விட... சாளுக்கிய பட்டத்தரசியுடன் நான் கழித்த பொழுது களைவிட... தங்களுடன் இருந்த காலங்களே அதிகம்... அவையே என் மனதில் கல்வெட்டாகப் பதிந்திருக்கின்றன... என்ன... நான் அனுமன் இல்லை... அப்படியிருந்திருந்தால் என் மார்பைப் பிளந்து அக்கல்வெட்டுகளை நீங்கள் படிக்குமாறு காண்பித்திருப்பேன்!’’

குலுங்கிய தன் போர் அமைச்சரின் முதுகை ஆதரவாகத் தட்டிக்கொடுத்தார் விக்கிரமாதித்தர். ‘‘உங்கள் ஒவ்வொரு நாடியும் நரம்பும் பல்லவர்களைப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கிறது... பல்லவ மன்னன் பரமேஸ்வர வர்மனையும் அவன் மகன் இராஜசிம்மனையும் பூண்டோடு அழிக்க ஆழ்ந்த உறக்கத்திலும் விழிப்புடன் திட்டமிட்டபடியே இருக்கிறீர்கள்... உறக்கத்திலும் விழிப்புடன் இருப்பது எப்படி என்பதை உங்களிடம்தான் நான் கற்றேன்... கற்கிறேன்...’’போர் அமைச்சரின் முதுகைத் தட்டியபடியே அணைப்பிலிருந்து அவரை விடுவித்த சாளுக்கிய மன்னர், அவர் கண்களை உற்றுப் பார்த்தார்.

‘‘இதையெல்லாம் உங்களைவிட நான் நன்றாக அறிவேன் ஸ்ரீராமபுண்ய வல்லபரே... ஒருவேளை என் உடலின் அணுக்கள் கூட என்னையும் அறியாமல் சில தருணங்களில் பல்லவர்பால் அனுதாபம் காட்டலாம்... ஆனால், உங்கள் உடல் அணுக்கள் பல்லவர்களைப் பூண்டோடு அழிக்கும் சபதத்தில் இருந்து எத்தருணத்திலும் பின்வாங்காது... இந்த உண்மை மற்றவர்களைவிட... ஏன், உங்களை விட... எனக்கு நன்றாகத் தெரியும்... என் அகத்தைக் கூட நான் சந்தேகப்படுவேன்... ஆனால், உங்களை ஒருபோதும் சந்தேகப்படவே மாட்டேன்...’’ தத்தளித்த கண்ணீரை அடக்கும்விதமாக தன் இமைகளை மூடினார் சாளுக்கிய போர் அமைச்சர்.

‘‘உண்மைகளை வெளிப்படுத்துவது முக்கியமல்ல... ஆனால், வெளிப்படுத்தும் கணமும் தருணமும் மிக மிக முக்கியம். உண்மைகளின் உண்மையான மதிப்பு தெரிய வேண்டுமென்றால் அதை தெரியப்படுத்த வேண்டிய நேரத்தில் சொல்வதே சரி... உங்களுக்குள் நீங்கள் மறைத்திருக்கும், சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கும் உண்மையை... உண்மைகளை... இறக்கி வைப்பதற்கான சமயத்துக்காகக் காத்திருக்கிறீர்கள்... கவலைப்படாதீர்கள்.

நண்பன் என்ற உரிமையில் அன்பு காட்டியோ, மன்னன் என்ற முறையில் அதிகாரத்தைச் செலுத்தியோ உங்களை நிர்ப்பந்திக்க மாட்டேன்... நானும் காத்திருக்கிறேன். சொல்ல வேண்டிய நேரத்தில் நீங்கள் சொன்னால் போதும்...’’நிறுத்திய விக்கிரமாதித்தர் பெருமூச்சுவிட்டார். ‘‘வாள் பயிற்சி... போர்ப் பயிற்சி... சகோதர யுத்தம்... அரியணையைக் கைப்பற்றுதல்... எரிந்த வாதாபியைப் புனரமைத்தல்... படை திரட்டல்... பல்லவர்கள் மீது போர் தொடுத்தல்... என நம் இருவரின் பெரும்பகுதி வாழ்க்கையும் கழிந்துவிட்டது... மனம்விட்டுப் பேசியிருக்கிறோம்... சிரித்திருக்கிறோம்...

கோபப்பட்டிருக்கிறோம்... ஆனால், உணர்ச்சிவசப்பட்டு நாம் இருவரும் தத்தளித்ததில்லை... நண்பர்களுக்கு இடையில் இந்த மாதிரியான தழுதழுப்பும் தேவை... அது நம்மிருவருக்கு இடையில் நிகழவில்லையே என்று கவலைப்பட்டேன்... அந்தக் குறையை இன்றைய தினம் போக்கிவிட்டது... உங்களிடம் தெரியப்படுத்தாமல் மதுரைக்கு நான் சென்றதுதான் இதற்கான விதை... இதற்காகவே உங்களுக்குத் தெரியாமல் அடிக்கடி எங்காவது செல்லலாம் என்று தோன்றுகிறது...’’‘‘மன்னா...’’‘‘பதற்றம் வேண்டாம் ஸ்ரீராமபுண்ய வல்லபரே... அப்படி எதுவும் இனி நான் செய்ய மாட்டேன்...’’
‘‘நம்பலாமா..?’’

‘‘சாளுக்கிய மக்கள் மேல் ஆணை... முழுமையாக நம்பலாம் போர் அமைச்சரே... இனி உங்களிடம் தெரிவிக்காமல்... உங்கள் அனுமதியில்லாமல் ஓரடி கூட எடுத்து வைக்க மாட்டேன்... போதுமா..?’’ஸ்ரீராமபுண்ய வல்லபர் சங்கடத்துடன் நெளிந்தார்.  அதைப் பார்த்து விக்கிரமாதித்தர் புன்னகைத்தார். ‘‘இதற்காவது பதில் சொல்லுங்கள்... பல்லவ மன்னனின் வளர்ப்புப் புதல்வியை ஏன் யாருக்கும் தெரியாமல் மலைக் குகையில் அடைக்கச் சொன்னீர்கள்..? அவளைப் போலவே இருக்கும் ஒரு பெண்ணை எதற்காக நம் சாளுக்கிய தேசத்தின் ஒற்றர் படைத் தலைவியாக நியமித்தீர்கள்..? பல்லவ இளவரசியும் அவளைப் போலவே தோற்றமளிக்கும் பெண்ணும் யார்..?

இருவரும் அச்சு அசலாக ஒரே உருவத்தில் காட்சியளிக்கிறார்களே... இருவரும் ஒரு பெற்றோருக்குப் பிறந்த இரட்டையர்களா..? ஆம் என்றால் இருவரது பெற்றோரும் யார்..? முக்கியமாக இவர்கள் இருவரது பெயரும் ‘சிவகாமி’யாக இருக்கிறதே... இவர்களுக்கும் ஆயனச் சிற்பியின் மகளும் நாட்டியத் தாரகையும் வாதாபி எரிந்ததற்குக் காரணகர்த்தாவாக இருந்தவளுமான ‘அந்த’ சிவகாமிக்கும் தொடர்பு இருக்கிறதா..?’’

சாளுக்கிய போர் அமைச்சர் தன் மன்னனை நிமிர்ந்து பார்த்தார். ‘‘இன்னும் ஒரு திங்கள் கூட இல்லை... சில நாட்கள்தான் மன்னா... இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டோம்... பூர்த்தியானதும் எல்லா உண்மைகளையும் நானே உங்களிடம் தெரிவிக்கிறேன்...’’  ‘‘அதுவரை நான் என்ன செய்ய வேண்டும்..?’’‘‘நடிக்க வேண்டும்! எதுவும் தெரியாமல் இப்பொழுது எப்படி இருக்கிறீர்களோ... நடந்து கொள்கிறீர்களோ... அப்படியே இருங்கள்...’’
‘‘உத்தரவு...’’ விக்கிரமாதித்தர் நகைத்தார்.

ஸ்ரீராமபுண்ய வல்லபர் சங்கடத்துடன் நெளிந்தார்.‘‘பரவாயில்லை... ஆணையிடுங்கள்!’’
‘‘மன்னா...’’‘‘தயங்காமல் சொல்லுங்கள்...’’‘‘அழிக்கத்தான் ஆயுதத்தையே உருவாக்குகிறோம்... இல்லையா மன்னா..? என்னால் உருவாக்கப்பட்ட ஆயுதம் இப்பொழுது என் கையால் அழிவதற்காக இங்கே வரப் போகிறது!’’சாளுக்கிய மன்னரின் புருவம் உயர்ந்தது.‘‘வந்ததும் ஒரு வேண்டுகோளை வைக்கும்! அதை பிறகு நிறைவேற்றலாம். அதற்கு முன் என் ஆயுதத்தை காஞ்சி சிறையில் அடையுங்கள்! என் ஆயுதத்தின் விருப்பமும் அதுவேதான்!’’

‘‘அப்படியானால் மதுரை பாதாளச் சிறையில் இருந்து எடுத்தது போலவே காஞ்சி சிறையில் இருந்தும் உங்கள் ஆயுதம் ஒரு பொருளை எடுக்கப் போகிறதா..?’’ராமபுண்ய வல்லபர் கண்சிமிட்டினார்.‘‘ஏன் முதல் முறை சென்றபோது அப்பொருளை எடுக்கவில்லை..?’’
‘‘சோழ மன்னரை விடுவிக்கும் பணி முதன்மையாக இருந்ததால்... தவிர அப்பொழுது இதன் முக்கியத்துவம் பெரியதாகத் தெரியவில்லை...’’
‘‘இப்பொழுது அதன் அருமை தெரிந்துவிட்டதா..?’’

‘‘ஆம் மன்னா... மதுரை பாதாளச் சிறையில் இருந்து எடுக்கப்பட்ட பொருளின் மறுபாதி காஞ்சி சிறையில் இருக்கிறதே!’’ராமபுண்ய வல்லபர் இப்படிச் சொல்லி முடித்ததும் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி அறைக்கதவைத் திறந்துகொண்டு புயலென சிவகாமி நுழைந்து தன் வேண்டுகோளை வைத்தாள்.‘‘உடனடியாக என்னை சிரச்சேதம் செய்யுங்கள் மன்னா!’’காஞ்சிக்கும் மல்லைக்கும் இடையில் இருந்த சத்திரத்தை நோக்கி நடந்து கொண்டிருந்த பொன்னனின் தோளை யாரோ தொட்டார்கள்.

திரும்பினான். அவனது இரட்டைப் பிறப்பில் ஒருவனான உத்தமன் நின்று கொண்டிருந்தான். இருவருமே பறவைச் சித்தர் தோற்றத்தில் இருந்தார்கள்.

‘‘பொன்னா... உடனடியாக உன்னை காஞ்சிக்கு... குறிப்பாக சிறை இருக்கும் பகுதிக்கு செல்லச் சொன்னார்...’’‘‘யார்..? கரிகாலரா..?’’

‘‘இல்லை...’’ ‘‘சிவகாமியும் அப்படியேதும் என்னிடம் சொல்லவில்லையே..?’’ பொன்னன் குழம்பினான்.‘‘இவர்கள் இருவருக்கும் மேலானவர் உத்தரவிட்டிருக்கிறார்...’’ உத்தமன் உறுதியாகச் சொன்னான்.‘‘புலவர் தண்டியா..?’’‘‘இல்லை... சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர்!’’

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்