மாஸ்டர்



குற்றச் சிறுவர்களை அடைத்து வைத்திருக்கும் இல்லத்தை கைப்பற்றி அடாவடி செய்யும் ரௌடியை தட்டிக் கேட்பவரே ‘மாஸ்டர்’.கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார் விஜய். மாணவர்களிடத்தில் பிரியமும் செல்வாக்கும் பெற்றிருந்தாலும் பாடம் நடத்தும் நேரம் போக மீதி எல்லாம் போதையில் கரைகிறது.

மாணவர் தேர்தலை நடத்த வேண்டாம் என கல்லூரி நிர்வாகம் முடிவெடுக்க, விஜய்யே பொறுப்பேற்று தேர்தலை நடத்த பிரச்னைகள் ஏற்படுகிறது. பிறகான சம்பவங்களின் தொடர்ச்சியாக அவர் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் ஆசிரியராகப் பொறுப்பேற்க, அங்கே நடப்பவை கண்டு விஜய் ஆவேசம் கொண்டு அதற்கு காரணமானவர்களைப் பழிவாங்க புறப்படுவதே கிளைமாக்ஸ்.

புரொபஸர் விஜய் நேர்த்தியிலும் நடை உடை பாவனைகளிலும் கச்சிதம். பேராசிரியராகவும் சிறார் பள்ளியில் தன்னை முன்னிறுத்தும் விஜய்யுமாக இரண்டு வேறுபட்ட வடிவங்களை கொண்டு வந்ததில் கதையில் கவனம் சேர்கிறது. தனித்தனியாக அட்டகாசமாக உயிர் கொடுப்பதில் அள்ளுகிறது விஜய்யின் மேனரிசங்கள். நிஜமாகவே விஜய்யின் கேரியரில் ஒரு நல்ல படம். குடித்துவிட்டு எழுந்து ரெடியாகி கல்லூரிக்கு வருவதில் இருந்து இறுதியில் சிறுவர்களுக்காக பொங்கி எழுவது வரை அவர் டிஸ்டிங்ஷனில் தேர்வாகிறார்.  

ஹீரோ லுக்கில் வில்லத்தனமும் காட்டுகிறார் விஜய் சேதுபதி. அசால்ட்டாகவும் அதிரடி யாகவும் நடிப்பை திரையில் காட்டுவது சேதுபதிக்கு கைவந்த கலை. அதையே அடக்க ஒடுக்கமாக அளவெடுத்துக் காட்டுகிறார். அவரது கதாபாத்திரமே தனி ஒரு சினிமாவின் கதையாக தனித்து துடிக்கிறது.

எந்த சந்தேகம் வந்தாலும் பரபர திரைக்கதையில் அதை நினைவில் வைக்காமல் மறக்கடிக்கிறது லோகேஷ் கனகராஜின் இயக்கம். மாளவிகா நெடுநெடு உயரத்தில் வேண்டிய நேரத்தில் வந்து மறைகிறார்.

பரபரப்பும் விறுவிறுப்புமான இரண்டு ஹீரோக்களுக்கு மத்தியில் அவரது இருப்பு கவரவில்லை. நாசர், சாந்தனு, ஆண்ட்ரியா, ரம்யா, ரமேஷ் திலக் என வந்து மறைந்துவிடுகிறார்கள். அர்ஜுன் தாஸ் மற்றும் பூவையார் இருப்பு மட்டும் பதிவாகிறது.

‘மாஸ்டரு’க்கான டெம்ப்போவை அப்படியே தக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன். சண்டைக்காட்சிகளில் அவரது கொடி மிக உயரே பறக்கிறது. ‘வாத்தி கம்மிங்...’, ‘வாத்தி ரெய்டு...’, ‘குட்டி ஸ்டோரி...’ பாடல்களில் ரகளை செய்கிறது அனிருத்தின் இசை.

பின்பாதியில் விஜய் சேதுபதி யின் ராஜ்ஜியத்தை கூடுதலாக நகர்த்தியதில் லாஜிக் ஓட்டைகள் நிறையத் தெரிந்தாலும் அதை கவனத்துக்கு வந்துவிடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். இவ்வளவு பெரிய ஹீரோவின் படத்தில் இத்தனை பேருக்கு இடம் கொடுத்து படம் எடுத்திருப்பதே அழகு.

பிலோமின்ராஜ் எடிட்டிங் மிக நுணுக்கமாக உழைத்திருக்கிறது. லோகேஷ், ரத்தினகுமார், பொன்.பார்த்திபன் திரைக்கதை கூட்டணி இரண்டு ஹீரோக்களுக்கும் வழிவகை செய்திருக்கிறது. இரண்டு ஹீரோக்கள் கதையில் ஆக்‌ஷன் ட்ரீட் தந்ததில் ஜெட் ரைடில் பறந்திருக்கிறார் இந்த ‘மாஸ்டர்’.