கேரளாவின் முதல் திருநங்கை டாக்டர்!



மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சமமான வாய்ப்புகளும், உரிமைகளும், உரிய மரியாதைகளும், சமூகத்தில் அவர்களுக்கான அங்கீகாரமும் இன்று துளிர்விட ஆரம்பித்துள்ளன. எல்லாத் துறைகளிலும் சாதித்து வரும் அவர்கள் இப்போது மருத்துவத்துறைக்குள்ளும் இடம் பிடித்துள்ளனர். ஏற்கனவே பல செவிலியர்கள், மருத்துவர்கள் உருவாகி இருந்தாலும், கேரளாவின் முதல் திருநங்கை மருத்துவராக டாக்டர் பிரியா பணியாற்ற உள்ளார்.  
 
‘‘உண்மையில் பெண்மையை கொண்டாடும் நான், அதை என்னிடத்தில் கண்டதில் மகிழ்ச்சியடைகிறேன். எனக்குள் இருக்கும் உடல் மற்றும் மன ஏற்றத்தாழ்வுகளை வெற்றிகரமாக சமாளிப்பதற்கு என் குடும்பத்தின் ஆதரவு உதவியது. இதனால் பொதுவாக சமூகத்தில் திருநங்கைகள் சந்திக்கும் மற்ற பிரச்னைகள் குறித்த எந்தக் கவலையும் இல்லாமல் இருந்தது.  

ஜினு சசிதரன் என்ற பையனாக வாழ்வது கடினமாக இருக்கும் என்பதை உணர்ந்தேன். குழந்தைப் பருவத்திலேயே ஒரு பெண்ணை எனக்குள் அடையாளம் கண்டாலும், அதை வெளிப்படுத்த வெட்கப்பட்டேன். இந்த நெருக்கடியை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஆராய்ச்சி செய்கையில், முதலில் ஒரு சிறந்த கல்வியைப் பெற திட்டமிட்டேன்.

எனவே எல்லா எதிர்மறை கருத்துக்களையும் புறக்கணித்து நல்ல மதிப்பெண்களுடன் ‘வைத்தியரத்னம் ஆயுர்வேதா’ கல்லூரியில் BAMS படித்தேன். இதனைத் தொடர்ந்து மங்களூரில் எம்டி முடித்த பின், பட்டாம்பி, கண்ணூர், திருப்புனித்துராவில் பணியாற்றிக் கொண்டே என் உடல் மாற்றத்திற்கும் தயார்படுத்திக் கொண்டிருந்தேன். அதற்கான அறுவை சிகிச்சையும் சில மாதங்களுக்கு முன் வெற்றிகரமாக செய்து கொண்டேன்.     

வாழ்க்கை விலைமதிப்பற்றது என்று நம்புகிறேன். எனவே எனது அடையாளத்தை மறைக்க எந்த முகமூடியும் தேவையில்லை. எதிர்காலம் குறித்து எப்போதும் கவலைப்படுவதில்லை. ஏனென்றால் நிகழ்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறேன். ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டும் என் வாழ்வை அடைத்துக்கொள்ள விரும்பவில்லை...” என்கிறார் டாக்டர் பிரியா.