அவெஞ்ஜ்மென்ட்



ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் திரைப்படம், ‘அவெஞ்ஜ்மென்ட்’. அமேசான் ப்ரைமில் காணக்கிடைக்கிறது இந்த ஆங்கிலப்படம்.தன்னுடைய மோசமான நிலைக்குக் காரணமான அண்ணனைப் பழிவாங்கப் புறப்பட்ட தம்பியின் கதைதான் இந்தப் படம். எல்லோரையும் போல சாதாரணமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறான் கெய்ன். அவசரத் தேவைக்காக பணம் வேண்டி அண்ணன் லிங்கனிடம் உதவி கேட்கிறான்.

மீட்டர் வட்டிக்குப் பணம் கொடுத்து அப்பாவி மக்களின் வாழ்க்கையில் விளையாடும் கந்துவட்டிக்காரன்தான் லிங்கன். தனக்காக ஒரு வேலையைச் செய்து தந்தால் உதவுகிறேன் என்று கெய்னிடம் டீல் பேசுகிறான் லிங்கன்.

அது ஒரு குற்றச்செயல் என்று தெரிந்தும்கூட வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்கிறான் கெய்ன். அந்தச் செயலின்போது காவல்துறையிடம் வசமாக கெய்ன் மாட்டிக்கொள்ள, இங்கிலாந்திலேயே அதிகமாக வன்முறை நிகழும் ஒரு சிறையில் அடைக்கப்படுகிறான்.

கொடூர குற்றவாளிகளின் கூடாரம் அது. தம்பி வெளியே வந்தால் தன்னுடைய திருட்டுத்தனங்கள் எல்லாம் அம்பலமாகிவிடும் என்று சிறைக்குள் வைத்தே கெய்னைக் கொலை செய்ய ஆட்களை நியமிக்கிறான் லிங்கன்.

உயிரைக் காப்பாற்றிக்கொள்ள எதிரிகளுடன் போராடுவதே கெய்னின் தினசரி வேலை. சிறைக்குள் நடக்கும் சண்டையைக் காவல்துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை. சண்டையில் கெய்னின் மண்டையோடு உடைந்து பற்கள் காணாமல் போகின்றன. முகத்தில் வெந்நீர் அடிக்கப்பட்டு ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிடுகிறான்.

குரூர வன்முறை, அமைதியான கெய்னையும் வன்முறையாளனாக மாற்றுகிறது. பதிலுக்கு அவனும் சிலரை அடித்து நொறுக்குகிறான். சிறையில் வன்முறையில் ஈடுபட்டதால் கெய்னின் தண்டனைக் காலம் அதிகரிக்கிறது. இந்நிலையில் கெய்னின் அம்மா புற்றுநோயால் இறந்துவிடுகிறார். அம்மாவைக் கடைசியாகப் பார்க்க கெய்னுக்கு அனுமதி கிடைக்கிறது. போலீஸ் பாதுகாப்புடன் அம்மாவைக் காணச் செல்கிறான். அம்மாவைப் பார்க்கப் போன இடத்தில் உடன் வந்திருந்த போலீஸை துவம்சம் செய்துவிட்டு தப்பித்து விடுகிறான் கெய்ன்.

காவல்துறையே பரபரப்பாகிறது. தனி ஒருவனான கெய்ன், ஆள் பலமும் பண பலமும் மிகுந்த அண்ணன் லிங்கனை எப்படி பழிவாங்குகிறான்... தான், செய்த குற்றங்களுக்குப் பாவமன்னிப்பாக, லிங்கனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கெய்ன் எவ்வாறு உதவுகிறான்... என்பதே அதிரடி திரைக்கதை.பொதுவாக பழிவாங்குவதற்காக எதிரிகள் இருக்கும் இடத்தைத் தேடி நாயகர்கள்தான் செல்வார்கள். ஆனால், கெய்னோ, தான் இருக்கும் மது விடுதிக்கு எதிரிகளை வரவழைத்து பழிவாங்குவது சிறப்பு.

சிறையில் அரங்கேறும் வன்முறைகளும் கெய்ன் எதிரிகளைப் பந்தாடும் ஆக்‌ஷன் காட்சிகளும் அதிரவைக்கின்றன. சண்டைக்காட்சிகளில் வெறித்தனம் காட்டியிருக்கிறார் கெய்னாக நடித்த ஸ்காட் அட்கின்ஸ். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் ஜெஸ்ஸி வி ஜான்சன்.