விழுது இல்லாத ஆலம்



அவசரமாக பிராஜெக்ட்டை முடிக்கவேண்டிய நிலை. அதனால் சாப்பிடக்கூட போகவில்லை. மூன்று மணிக்குள் முடித்து விடலாம். கவனம் சிதறாத தேவை. மொபைல்… எடுத்துப் பார்த்தான். அம்மாதான். அம்மா அனாவசியமாக போன் செய்பவள் இல்லை. இந்த நேரத்தில் போன் செய்கிறாள் என்றால் உடம்பு சரி இல்லையோ?மொபைலை உயிர்ப்பித்து ‘‘அம்மா, உடம்புக்கு ஒண்ணுமில்லையே?’’ என்று பதறினான் முரளி.

‘‘போன் பண்ணினால் உடம்புக்கு ஏதாவதாக இருக்கணுமா! தரகர் வந்திருந்தார். இன்னிக்கு அஞ்சு மணிக்கு பெண் பார்க்க வரச் சொல்லி இருக்கார். நீ நாலு மணிக்கெல்லாம் வந்துவிடு...’’ ரத்தினச் சுருக்கமான பேச்சுடன் இணைப்பைத் துண்டித்தாள்.இப்பொழுது கல்யாணத்திற்கு என்ன அவசரம்? எண்ணியவாறு வேலைகளை அவசரமாக முடித்தான். அம்மா சொல்லை மீறாதவனாக சரியாக நான்கு மணிக்கே வீடு வந்து சேர்ந்தான். அம்மா பை பையாக பழங்கள், தாம்பூல வகைகள் வைத்திருந்தாள். பெண் பிடித்தால் ஒப்பதல் தாம்பூலம் மாற்றிக் கொள்ள.

குறிப்பிட்ட நேரத்தில் பெண் வீட்டிற்குப் போனார்கள். பெண் வந்தாள். நேரே வந்து முரளியின் எதிரில் ஒரு நாற்காலியைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து விட்டாள். மாமியார் சம்பூர்ணத்தை வணங்கவுமில்லை. மதித்துப் பேசவும் இல்லை. ஏன்... ஒரு புன்சிரிப்பு கூட இல்லை.

தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.தேங்காயை இரண்டாக உடைத்தது போல ‘‘எனக்கு மிஸ்டர் முரளியைப் பிடித்திருக்கிறது...’’ என்றாள். திருப்தியை முகத்தில் காட்டினாள்.

அவர்கள் முரளியின் முகத்தைப் பார்த்தார்கள்.அம்மாவிடம் எதுவும் பேசாத முரளி, ‘‘எனக்கும் பிருந்தாவைப் பிடித்திருக்கிறது...’’ என்றான்.அடுத்த ஒரு மணியில் ஒப்புதல் தாம்பூல வைபவம்.
நிச்சயதார்த்த நாளைக் குறித்தார்கள். பிருந்தா அவனை முரளி என்று பெயர் சொல்லி உரிமையாகப் பேசினாள். சம்பூர்ணம் வாய் திறவாமல் தாம்பூலத் தட்டில் புடவை, சங்கிலி என்று வைத்துக் கொடுக்க ‘‘தாங்க்ஸ்...’’ என்று வாங்கிக் கொண்டாள்.பிருந்தாவின் தாய் தந்தையர், ‘‘எங்களுக்கு ஒரே பெண். நன்றாக சீர்வரிசைகளை செய்வோம்...’’ என்றார்கள்.

பேச்சில் கர்வம் தொனித்தது. வீட்டிற்கு வந்து விட்டார்கள். ‘‘ஏம்மா நீ எதுவும் பேசல்லை?’’
‘‘நான் என்ன பேசணும்? உனக்கு அவளைப் பிடிச்சிருக்கு. அவளுக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. நடுவில நான் எதற்கு?’’
‘‘மனத்தாங்கலோட பேசறே..?’’‘‘மனத்தாங்கல் எதுவுமில்லை. வாழப் போகிறவன் நீ...’’ என்றாள். அதுதான் அம்மா.
உண்மையில் தன்னிடம் மகன் யோசனை கேட்காதது மனத்தாங்கலாகத்தான் இருந்தது.

‘‘அவள் கொஞ்சம் சுதந்திரமானவ மா...’’ என்றான்.மனத்திற்குள் சிரித்துக்கொண்டாள். ‘‘அந்த சுதந்திரம் உனக்கும் வந்து விட்டதடா மகனே...’’ நினைத்துக் கொண்டாள்.‘‘அம்மா, இன்னிக்கு பிருந்தாவோட பீச், சினிமா. ஹோட்டலிலேயே சாப்பிட்டு விட்டோம்...’’ என்பான்.
‘‘இதை முதலிலேயே சொல்லி இருந்தா சமைத்திருக்க மாட்டேனே...’’ என்று சொல்ல மாட்டாள். திருமணத்திற்கு முன்பே நடக்கும் நாடகங்கள் என்று உணர்ந்தவள் அவள். ஊமையாக இருந்தால்தான் அந்த வீட்டில் இருக்கலாம் என்பதை முன்னாலேயே புரிந்து கொண்டாள்.

திருமணம் முடிந்தது. என் வீடு என்ற உரிமையுடன் தடதடவென்று நுழைந்தாள் பிருந்தா. ‘‘எனக்கு கத்தரிக்கா மசால் பொரியல்தான் பிடிக்கும். உங்களை யார் கூட்டு பண்ணச் சொன்னது?’’ என்று சிடுசிடுப்பாள்.‘‘ஏம்மா, அவளுக்கு என்ன பிடிக்குமோ அதையே பண்ணேன்...’’ என்பான் முரளி.

மறுநாள் மசால் பொரியல்  பண்ணினால் ‘‘நேத்து பிஞ்சு கத்தரிக்காய். இந்த முத்தின கத்தரிக்காய் பொரியல் யாருக்கு வேணும்?’’ தட்டில் போட்ட பொரியல் குப்பை தொட்டிக்கு போகும்.

அவள் பிறந்த வீட்டிலிருந்து கொண்டு வந்த எந்தப் பொருளையும் தொட அனுமதியில்லை. ‘‘இது மைக்ரோ அவன். ராத்திரி ஏதாவது சூடு பண்ணவோ, எனக்கு வேணுங்கறதை பண்ணிக்க இது...’’ என்பாள்.‘‘இதைப் பத்தி எனக்கு எதுவுமே தெரியாது. தொட மாட்டேன்’’ என்பாள் சம்பூர்ணம்.‘‘என் பெட்ரூம் ஏஸி எங்கப்பா வாங்கித் தந்தது. மத்யானம் ஹாய்யா போய் படுக்காதீங்க...’’‘‘எனக்கு பேனே ஒத்துக்காது. வாசல் தாழ்வாரத்தில் வேப்ப மரம் பக்கமா உட்காருவேன்...’’ மெல்ல சொல்லுவாள் சம்பூர்ணம்.

ஃப்ரிஜ் படுக்கை அறையில். அதனால் பழரச பாட்டில்கள், பழங்கள், கேக் போன்ற பண்டங்கள் அங்கே இருந்தன. அலுவலகம் போகும்போது பூட்டிக் கொண்டு போனாள். மாமியார் சமையல் பிடிக்கவில்லை என்று அடிக்கடி அம்மா வீட்டு வாசம்.மனைவியின் பிரிவை முரளியால் தாங்க முடியவில்லை.‘‘அவங்களை முதியோர் இல்லத்துக்கு அனுப்பிடுங்க...’’ஒரே மகன். அதுவரை அம்மா, அம்மா என்று சுற்றி வந்தவன். அவனைப் பிரிய முடியுமா? இன்று பெண்டாட்டி என்று இருக்கிறான். அடிக்கடி பிறந்தகம் போய் விடுகிறாள். வாழ வேண்டிய இளமை.

‘‘முரளி, நான் முதியோர் இல்லம் போறேன்பா...’’ கொஞ்சம் மகனை பாசம் நெருக்கியது. மனைவியின் அண்மை பாசத்தைக் கழுவியது. சம்பூர்ணம் முதியோர் இல்லம் வந்துவிட்டாள். சில நாட்கள் கஷ்டமாகத்தான் இருந்தது.உறவுகளே இல்லாதவர்கள், பேரன்கள், பேத்திகள், மகன் என்று பிரிந்தவர்கள், பாசத்தை மனத்தில் மூட்டையாகக் கட்டி சுமக்கிறார்கள்... எத்தனை விதமானவர்கள்.படித்துறையில் நின்றவளை திடீர் என்று பிடித்துத் தள்ளி விட்ட மாதிரி இதென்ன துயரம்? மூச்சுத் திணறல் கூடாது.

மனசு மரத்துப் போயிற்று. குழுக் குழுவாக உட்கார்ந்து பேசினார்கள். இதில் சில ஆண் முதியவர்களும் இருந்தார்கள். அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என்ற பாசம் பறந்தது. துன்பம் கொஞ்சம் அடக்கி வாசித்தது. தான், மட்டும் இல்லை. இப்படி எத்தனை முதியோர் இல்லங்கள்..?அவர்களுடன் ஒன்றிய பொழுது முரளி வந்து நின்றான்.

அவளை அழைத்துப் போவதாகச் சொன்னபோது, ‘‘உங்கள் மகன் புரிந்துகொண்டுவிட்டான்...’’ என்றார்கள்.வீட்டிற்கு வந்தவுடன்தான் காரணம் புரிந்தது. பிருந்தாவிற்கு வளைகாப்பு செய்ய வேண்டும். அதற்கு கணவனின் அம்மா இல்லாவிட்டால் எப்படி..? வளைகாப்பு முடிந்தது. பிரசவம் இங்குதான் என்று சொன்னதும் பிருந்தாவின் அம்மா, அப்பா மூட்டை கட்டிக் கொண்டு வந்தார்கள். சம்பூர்ணம் சமையல்காரி ஆனாள்.

ஆண் குழந்தை. பிருந்தாவின் பெற்றோர் குழந்தை பிறந்த பின்பு தம் வீட்டிற்கு போய் விட்டார்கள். அருமை பேரனை தொட்டுக் கொஞ்சக் கூட அனுமதிக்கவில்லை. ‘‘நீங்க சமையலைப் பாருங்க... போங்க...’’ என்பாள்.தன் மகனுக்கு சாப்பாடு பரிமாறும் திருப்தி சம்பூர்ணத்திற்கு.ஆறு மாதங்கள் ஓடின. மாமியாரிடம் வந்தாள். ‘‘வந்தமா, உதவினமா, போனமானு இருக்கணும். நாளைக்கு நான் ட்யூட்டி ஜாயின் பண்ணப் போறேன். குழந்தையை எங்கம்மா பார்த்துப்பாங்க. நீங்க கிளம்பலாம்...’’அவள் மகனிடம் எதுவும் பேசவில்லை.

முதியோர் இல்லம் வந்து விட்டாள். மற்றவர்கள் புரிந்து கொண்டார்கள்.‘உதவி முடிந்ததும் வெட்டி விட்டார்கள். மகனாவது, மகளாவது, அண்ணணாவது தம்பியாவது...’ என்றார்கள்.மனம் சற்று சோர்ந்து போயிற்று. ஒரு நாள் மதியம் ஊர்கதைகளைப் பேசிக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். ஏதோ யோசனை செய்த சம்பூர்ணம் ‘‘நாம ஏன் வெட்டியா ஊர்க்கதைகள் பேசணும்?’’ என்று கேட்டாள்.

‘‘என்ன செய்யலாம்?’’ என்று கேட்டார்கள் மற்றவர்கள்.‘‘நாம இன்னும் திடமாகத்தான் இருக்கிறோம். நம்மால் சுயதொழில் செய்ய முடியும். உங்களில் யார் அப்பளம் இடுவீர்கள்? யார் சீர் முறுக்கு சுற்றுவீர்கள்..?’’சற்று நேரத்தில் ‘‘என்னால் முடியும்?’’ என்று ஒவ்வொருவராக கை தூக்கினார்கள்.
‘‘இதற்கு முதல் நிறைய ஆகுமோ? நம்மிடம் பணம் ஏது?’’ சந்தேகப்பட்டார்கள்.

‘‘என்னுடைய நகைகளை நான் கையோடு கொண்டு வந்திருக்கிறேன். அதில் சிலவற்றை விற்று முதல் போடுகிறேன்...’’ என்றாள் சம்பூர்ணம்.
மறுநாள் முதல் வேலை ஆரம்பமாயிற்று. ‘அப்பளம் விற்கப்படும்’ என்றும், ‘சீர்பட்சணம் செய்து தரப்படும்’ என்றும் முதியோர் இல்லத்து வாசலில் போர்டு வைத்தார்கள். அதைப் பார்த்துவிட்டு இரண்டு மூன்று பேர்கள் வந்து ‘தங்கள் பெண்களுக்கு கல்யாணம் நிச்சயமாகி விட்டது... முப்பது சிறு முறுக்குகள் வேண்டும்’ என்றார்கள்.

இப்படி ஆர்டர்கள் வந்தன. பக்கத்தில் சில அலுவலகங்கள் இருந்தன. அவர்கள் டிபன், சாப்பாடு என்று கேட்டார்கள். அந்த முதியோர் இல்லம் மெஸ்ஸையும் திறந்தது. ஆண்களும் பெண்களும் மெஷினுக்குப் போவது, கடைக்கும் போவது என்று உழைத்தார்கள். வந்தவர்களுக்கு பரிமாறினார்கள்.

திண்ணையில் விற்பனைக் கடை ஒன்றைத் திறந்தார்கள். அவர்கள் உழைப்பதற்கு இருபத்து நாலு மணி நேரம் போதவில்லை. இரண்டு ஆண்டுகள் ஓடியதே தெரியவில்லை.

பிருந்தா இரண்டாவதாக உண்டாகி இருந்தாள். முதல் குழந்தையை அவள் அம்மாவால் பார்த்துக்கொள்ள முடிய வில்லை. ‘‘உன் மாமியாரைக் கொண்டுவந்து வைத்துக் கொள்...’’ என்று கூறிவிட்டாள்.பிருந்தாவால் சமாளிக்க முடியவில்லை.இரண்டு வருடங்களாக அம்மா எப்படி இருக்கிறாள் என்று பார்க்காத மகன் முரளி வந்து நின்றான்.‘‘அம்மா, என்னுடன் கிளம்பு’’ என்றான் அதிகாரமாக.

‘‘தேய்க்காமல் பரண்ல போட்ட பாத்திரங்கள் இல்லை நாங்க. புதுசா தேய்க்கப்பட்ட பாத்திரங்கள் நாங்க. எங்களாலேயும் முடியும்...’’ என்றவள், தலைக்கு மேலே உள்ள போர்டை சுட்டிக் காட்டினாள்.‘‘எங்களை நம்பி முப்பது பேர்கள் சாப்பிட வருகிறார்கள். நான் எங்கேயும் வரமுடியாது. உனக்கு வேண்டுமானால் சாப்பாடு எடுத்துக் கொண்டு போ...’’ சொல்லிவிட்டு இரக்கமில்லாத மகனை இரக்கமில்லாமல் பார்த்தாள்.

லட்சுமி ராஜரத்னம்