சூப்பர் ஸ்டார் Vs சூப்பர் இயக்குநர்



நெட்பிளிக்ஸில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கும் இந்திப் படம், ‘ஏகே Vs ஏகே’. தமிழ் டப்பிங்களிலும் காணக்கிடைக்கிறது.இயக்குநருக்கும் நடிகருக்கும் இடையிலான யுத்தம்தான் இந்தப் படம்.புதுமுக இயக்குநரான அனுராக் காஷ்யப்பின் படத்தில் நடிக்க மறுக்கிறார் சூப்பர் ஸ்டாரான அனில் கபூர். வருடங்கள் ஓடுகிறது. அனுராக் காஷ்யப் பெரிய இயக்குநராகிவிடுகிறார். இப்போது அவர் படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார் அனில்.

இந்நிலையில் இருவரும் ஒரு டாக் ஷோவில் கலந்துகொள்கின்றனர். ஒருவரை மாற்றி ஒருவர் அவமதித்துக் கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் அனில் கபூரின் முகத்தில் தண்ணீரை ஊற்றி களேபரத்தை உண்டாக்கிவிடுகிறார் அனுராக். இது திரைப்படத்துறையில் ஹாட் டாக்காக மாறுகிறது. அனுராக் படத்தில் நடிக்க ஒப்பந்தமானவர்கள், தயாரிப்பாளர்கள் எல்லோரும் பின்வாங்குகிறார்கள். பாலிவுட்டே அனில் பக்கம். அனுராக் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

அனுராக்கின் உதவியாளர் அனில் கபூருக்காக ஒரு ஸ்கிரிப்டை தயார் செய்து வைத்திருக்கிறார். அனிலிடம் மன்னிப்பு கேட்டு, அவரை இந்த ஸ்கிரிப்ட்டில் நடிக்க வைத்துவிட்டால் எல்லா பிரச்னையும் சரியாகிவிடும் என்று நினைக்கிறார் அனுராக். அனிலின் பிறந்த நாள் அன்று அவரைச் சந்தித்து படத்தின் கதையைச் சொல்கிறார் அனுராக். பைத்தியக்கார இயக்குநர் ஒருவன், வயதான சூப்பர் ஸ்டாரின் மகளைக் கடத்திவிடுகிறான். அந்த சூப்பர் ஸ்டார், மகளை எப்படி மீட்கிறார் என்பதுதான் கதை.

படத்தில் நடிக்க மறுப்பதோடு அனுராக்கை உதாசீனப்படுத்துகிறார் அனில். ‘நிஜமாகவே நான் உங்கள் மகள் சோனத்தைக் கடத்திவிட்டேன்’ என்கிறார் அனுராக். ஆரம்பத்தில் நம்ப மறுக்கிறார் அனில். சோனத்தின் போன் அனுராக்கிடம் இருப்பதை அறிந்து பதற்றமடைகிறார். உண்மையிலேயே அனுராக் தன் மகளைக் கடத்திவிட்டான் என்று குமுறுகிறார்.

இந்தச் சம்பவங்களை எல்லாம் மறைமுகமாக இருந்து படமாக்குகிறார் அனுராக்கின் உதவியாளர். நிஜமாகவே அனில் கபூர் மகளைத் தேடிச் செல்கிறார். அந்த தேடலின் சுவாரஸ்ய அனுபவங்களும் எதிர்பாராத திருப்பங்களுமே அனுராக் எடுக்கப்போகும் திரைக்கதை. அனில் கபூர், அனுராக் காஷ்யப், சோனம் கபூர் உட்பட எல்லோருமே நிஜ வாழ்க்கையில் என்னவாக இருக்கிறார்களோ அப்படியே கதைக்குள் வருகிறார்கள். அனில் கபூர் சகட்டுமேனிக்கு அனுராக் காஷ்யப்பின் உண்மைகளை உடைத்துப்போடுகிறார். அனுராக்கும் தன் பங்குக்கு அனில் கபூரின் இமேஜை உடைத்து தூள் தூளாக்குகிறார்.

இப்படியான இமேஜ் காலியாகும் விஷயத்தை அனுராக்கிடம் பார்ப்பது புதிதல்ல. ஆனால், அனில் கபூரிடம் ஆச்சர்யம். எப்படி அனில் கபூர் நடிக்க ஒப்புக்கொண்டார் என்பதுதான் பார்வையாளர்களின் கேள்வி. இப்படி நடித்ததற்காக அவரை வரவேற்க வேண்டும். தெறிக்கவிடும் உரையாடல்களை எழுதியிருப்பவர் அனுராக் காஷ்யப். ஓரு புது அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் விக்ரமாதித்யா மோத்வானே.