Family Tree-850 வருடங்களாக இயங்கி வரும் டீக்கடை!



ஜப்பான் என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது அதன் நவீன தொழில்நுட்பமும், இரண்டாம் உலகப்போரின் போது ஹிரோஷிமா, நாகசாகி மீது வீசப்பட்ட அணுகுண்டுகளும்தான். ஆனால், ஜப்பானுக்குப் பயணம் செய்தவர்களிடம் கேட்டால், தேநீர் என்று சொல்வார்கள். அந்தளவுக்கு ஜப்பானியர்களின் வாழ்க்கையில் இருந்து பிரிக்க முடியாதது, தேநீர்.

மட்டுமல்ல, பாரம்பரியம், மரபு, கலாசாரம், தொழில், குடும்ப அமைப்பைப் பாதுகாப்பதிலும் ஜப்பானுக்கு நிகராக யாருமில்லை. அதனால்தான் பழமையான தொழில்களும் நீண்டகாலமாக தொழில் நடத்தி வரும் குடும்ப நிறுவனங்களும் அங்கே அதிகம். இதற்கு மிகச்சிறந்த உதாரணம், ‘சுவென் தேநீர்க் கடை’. 850 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் குடும்ப நிறுவனம் இது.

உஜி நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பாலத்தின் கிழக்குப் புறத்தில் அமைதியாக வீற்றிருக்கிறது இந்தக் கடை. எட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் புத்த விஹாரைகளின் மூலம் சீனாவிலிருந்து ஜப்பானுக்குள் நுழைந்தது கிரீன் டீ. தண்ணீருக்கு அடுத்து பருகும் பானமாக அங்கே விஸ்வரூபம் எடுத்தது கிரீன் டீ.

அடுத்த சில ஆண்டுகள் கிரீன் டீக்கான தேயிலையை சீனாவிலிருந்து இறக்குமதி செய்தது. தேயிலைக்கான தேவை அதிகரிக்க, ஜப்பானில் முதன் முதலாக உஜி நகரில் தேயிலை விவசாயம் தொடங்கியது. அன்றிலிருந்து ஜப்பானியர்களின் வாழ்விலும் கலாசாரத்திலும் முக்கிய அங்கமாகிவிட்டது தேநீர். அங்கே நடக்கும் தேநீர் திருவிழா, கொண்டாட்டங்கள் எல்லாம் தனிக்கதை.இன்று உலகின் மிகத் தரமான, சுவையான கிரீன் டீ உற்பத்தி மற்றும் விநியோகம் நடக்கும் இடமே உஜிதான். இவற்றுக்கெல்லாம் மூல காரணம், ‘சுவென் தேநீர்க் கடை’.

ஆம்; கிரீன் டீ உட்பட விதவிதமான தேநீர் வகைகளை ஜப்பானிய மக்களுக்கு அறிமுகம் செய்ததே இந்தக் கடைதான்.தவிர, உலகின் 30வது பழைய நிறுவனமான ‘சுவெனி’ல் தேநீர் பருகுவதற்காக ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து வருபவர்கள் கூட உண்டு. அதீத சுவைகொண்ட டாப் 5 தேநீர் வகைகளில் ‘சுவெனி’ன் தயாரிப்பும் ஒன்று. ஜப்பானை ஆண்ட மன்னர்கள் முதல் உஜி நகரை கடக்கும் வழிப்போக்கர்கள் வரை இதன் வாடிக்கையாளர்களின் பட்டியல் நீள்கிறது.

உயரம் குறைவான உட்கூரை, முக்கோண வடிவிலான உத்தரம், பாரம்பரியமான சமையற்கட்டு, 500 வருடங்கள் பழமையான தேநீர்க் கோப்பைகள் கடையை அலங்கரிக்கின்றன. ஜப்பானிய இலக்கியம், கலை, கொண்டாட்டங்கள், திருவிழாக்கள், நாடகங்களில் சுவெனின் தேநீர் இடம்
பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

nஃபுருகாவா உனாய்பன்னிரெண்டாம் நூற்றாண்டில் ஜப்பானின் புகழ்பெற்ற போர்வீரராக இருந்தவர் மினமோட்டோ யோரிமஷா. இவரது படையின் முக்கியமான சாமுராய், ஃபுருகாவா உனாய். யோரிமஷாவின் மீது ஒரு சிஷ்யரைப் போல தீவிர பற்றுடையவராக இருந்தார் ஃபுருகாவா.
போர், சண்டை, ரத்தம் எல்லாம் ஒருவித சலிப்பையும் குற்றஉணர்வையும் அவருக்குத் தர, சாமுராய் மகுடத்தை நிராகரித்து புது வாழ்க்கையைத் தொடங்கினார். உஜி நதிக்கரையோரத்தில் ஒரு துறவியைப் போல வாழ ஆரம்பித்தார்.

யோரி மஷாவின் மீதான நேசத்தால் அவருடைய பெயரின் இறுதிப்பகுதியைத் தன் பெயருடன் இணைத்து சுவென் மஷாகிஷா என்று புதுப்பெயர் வைத்துக்கொண்டார். துறவு வாழ்க்கை மேற்கொள்பவர்கள் இப்படி தங்களின் பெயர்களை மாற்றிக்கொள்வது ஜப்பானில் வழக்கம்.
உஜி நதியின் குறுக்கே 646ம் வருடம் கட்டப்பட்ட ஒரு பாலம் இருந்தது. கியோட்டோ நகரிலிருந்து நரா நகருக்குச் செல்ல இந்தப் பாலம் மட்டும்தான் ஒரே வழி. அதனால் பாலத்தைப் பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க பாதுகாவலராக நியமிக்கப்பட்டார் சுவென்.

பாதுகாப்புப் பணியின்போது பாலத்தின் நீண்ட ஆயுளுக்காகவும் பாலத்தைப் பயன்படுத்தும் மக்களுக்காகவும் பிரார்த்தனை செய்வது சுவெனின் வழக்கம். அத்துடன், பாலத்தைக் கடந்து செல்பவர்கள் இளைப்பாறுவதற்காக தேநீரும் வழங்க ஆரம்பித்தார். மக்களுக்கு அப்போதைய புது வகை பானமான தேநீர் பிடித்துப்போக, சுவெனைத் தேடி படையெடுக்க ஆரம்பித்தனர். மக்களின் விருப்பத்திற்கு இணங்க, உஜி நகரில் 1160ம் வருடம் ‘சுவென் தேநீர்க் கடை’யைத் திறந்தார் சுவென் மஷாகிஷா. ஜப்பானின் முதல் மற்றும் தலைசிறந்த தேநீர்க் கடை இதுதான்.

பாலத்தில் பயணிப்பவர்கள், நிலப்பிரபுக்கள், புத்த துறவிகள்தான் இக்கடையின் ஆரம்பகால வாடிக்கையாளர்கள். பிசினஸை விட தேநீரில் அதிக கவனத்தைச் செலுத்தினார் சுவென். தேநீர் தயாரிப்பதே ஒரு தியானம் போல அவருக்கு மாறியது. அதனால் தேநீர் சுவையும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாகின.

சுவெனுக்குப் பிறகு வந்தவர்கள் தேநீர்க் கடையை ஒரு குடும்ப பிசினஸாக பார்க்காமல் பாரம்பரியமாக, மரபாக பார்த்தனர். அதனால் பெரியளவில்
பிசினஸை விரிவுபடுத்த முயற்சிக்காமல், இருப்பதை சிறப்பாக நடத்தினர். தங்கு தடையின்றி தரமான தேநீர் மக்களுக்குக் கிடைத்தது.
பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற புத்த துறவி மற்றும் கவிஞர் இக்யூவும் ஏழாம் தலைமுறையைச் சேர்ந்த சுவெனும் நெருங்கிய நண்பர்கள். தேநீர் பருக வந்த இக்யூ சுவெனுடன் நட்பாக, கடையைப் பற்றி கவிதைகளாக எழுதித் தள்ளினார்.

இது ஜப்பான் முழுவதும் சுவெனின் தேநீர்க் கடைக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. எந்த விதமான விளம்பரமும் இல்லாத ஒரு காலத்தில் கவிதைகள் மூலம் பிசினஸ் மக்களைச் சென்றடைந்தது ஆச்சர்யம்.வெறுமனே பிசினஸ் நடக்கும் இடமாக மட்டுமல்லாமல் தியான கூடத்தைப் போல அமைதி தரும் ஓர் இடமாக தேநீர்க் கடை இருக்க வேண்டும் என்று விரும்பியது 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த சுவென் தலைமுறை.

இதற்காக பிரத்யேமாக, ஜப்பானிய கட்டடக்கலையைப் போற்றும்விதமாக 1672ம் வருடம் புதிதாக தேநீர்க் கடை கட்டப்பட்டது. அதே இடத்தில் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது அந்தக் கடை.‘பிசினஸ் முக்கியமல்ல; தேநீரும் அதன் தரமும்தான் முக்கியம்...’ - இதுதான் சுவெனின் அடிப்படைக் கொள்கை. சுவெனும் அவருக்குப் பின் வந்த தலைமுறைகளும் தேநீரில் கவனம் செலுத்துவதால் இவ்வளவு வருடங்களாக வெற்றி நடை போடுகிறது சுவென் தேநீர்க் கடை.

*சிறப்பு

தண்ணீரைக் கொதிக்க வைத்து, தேயிலை கலந்தபிறகு அதை மூங்கில் அகப்பையில் எடுத்து, தேநீர்க் கோப்பையில் ஊற்றும் செயல்முறையை 800 ஆண்டுகளுக்கு மேலாகக் கடைப்பிடித்து வருகின்றனர். மாறாத சுவை இதன் தனித்துவம் .சுவென் குடும்பத்துக்குச் சொந்தமான தோட்டங்களில் விளையும் தேயிலைகளைப் பயன்படுத்தியே தேநீர் தயாரிக்கப்படுகிறது. கடை ஆரம்பித்தபோது இருந்த சமையல் அறையிலேயே இன்றும் தேநீர் தயாராகிறது. பழமையான கோப்பைகளில் தேநீர் பரிமாறப்படுவது சிறப்பு.

இதன் தயாரிப்புகள் ஜப்பானின் விவசாயத்துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டு சான்றிதழ் பெற்றுள்ளது. சுவெனின் தேநீர் உடல் நலத்துக்கு ஆரோக்கியமானது; மருத்துவ குணங்கள் மிக்கது.

*தயாரிப்புகள்

மட்ச்சா, சென்ச்சா, கரிகேன், ஜென்மைச்சா, ஹோசிச்சா ஆகிய தேநீர் வகைகள். தேயிலை இனிப்பு வகைகள், தேயிலை ஐஸ்கிரீம், தேயிலைத் தூள்.

*இன்று

கனடாவில் சுவெனின் சர்வதேச அலுவலகம் இயங்கி வருகிறது. உலகெங்கும் சுவெனின் தேநீருக்கு வாடிக்கையாளர்கள் பெருகிவிட்டனர். ஆன்லைனில் சுவெனின் தயாரிப்புகள் கிடைக்கின்றன. 23ம் தலைமுறையைச் சேர்ந்த ரியோடாரோ சுவெனும், அவரது மூத்த மகனான யூசுகே சுவெனும் கடையை நிர்வகித்து வருகின்றனர். ஆரம்பப் பள்ளியில் படிக்கும்போதே குடும்ப பிசினஸில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார் யூசுகே.

கியோட்டோவில் உள்ள தேநீர் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒரு வருடம் பயிற்சி பெற்றிருக்கிறார். இப்போது புது வகையான தேநீர் உருவாக்க ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.

மட்ச்சா

ஜப்பானின் பிரபலமான, பழமையான கிரீன் டீ இது. தேநீர் திருவிழாக்களில் மட்ச்சாதான் அதிகமாக வழங்கப்படுகிறது. நிழலில் வளரும் தேயிலைதான் இதன் மூலப்பொருள். குளிர்ச்சியான நீரிலும் சூடான பாலிலும் இந்த தேநீர் தயாரிக்கப்படுகிறது.
மட்ச்சா தேநீர் தயாரிக்கும்போது மனநிலை மிகவும் முக்கியம். சோகமாகவோ அல்லது எரிச்சலுடனோ இந்த தேநீரைத் தயாரித்தால் சரியாக நுரை வராது. சுவையும் நன்றாக இருக்காது. தயாரிப்பாளரின் மகிழ்ச்சியான உற்சாகமான மனநிலைதான் இதன் சுவைக்கும் திடத்துக்கும் மூல காரணம்.

தேநீரின் வகைகள்

சென்ச்சா

ஜப்பானியர்களால் அதிகமாக நுகரப்படும் தேநீர் இது. அங்கே விளையும் 80 சதவீத தேயிலை இதுதான்.

கரிகேன்

தேயிலை மட்டுமல்லாமல் அதன் மெல்லிய தண்டும் சேர்ந்த தேநீர் வகை இது. பச்சைக் குழம்பு போல இருக்கும் இந்த தேநீர் உயர் வகுப்பினரின் சாய்ஸ்.

ஜென்மைச்சா

கரிகேன், சென்ச்சாவுடன் வறுக்கப்பட்ட பழுப்பு நிற அரிசி கலந்த தேநீர் இது.

ஹோசிச்சா

கோழியை தீயில் காட்டி வறுப்பதைப் போன்ற சமையல் முறையில் செய்யப்படும் தேநீர் வகை இது. பச்சை தேயிலை பழுப்பு நிறத்தில் மாறும் வரை நெருப்பில் காட்ட வேண்டும்.

த.சக்திவேல்