அணையா அடுப்பு - 35



அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

மதங்களில் லட்சியம் வைக்க வேண்டாம்!

அதுநாள் வரை தாங்கள் நம்பிக் கொண்டிருந்தவற்றை வள்ளலார், தர்க்கத்தோடு சில்லு சில்லாக உடைத்துக் கொண்டிருந்ததை உணர்ந்தார்கள் மக்கள்.
வள்ளலார் மேலும் மேலும் அணுகுண்டுகளை வீசிக்கொண்டே போனார்.“இதுபோல வியாகரணம், தொல்காப்பியம், பாணிநீயம் முதலியவைகளில் சொல்லியிருக்கின்ற இலக்கணங்கள் முழுவதும் குற்றமே. அவைகளில் குற்றமே சொல்லியிருக்கின்றார்கள்.

எவ்வாறெனில் -தொண்ணூறு தொள்ளாயிரம் என்கிற கணிதத்தின் உண்மை நான் சொன்ன பிறகு தெரிந்துகொண்டீர்களல்லவா? இப்படியே ஒன்று, இரண்டு முதல் நூறு முதலான இலக்கங்களும் உகர இறுதியில் வருவானேன்?

ஒருவாறு சித்தர்கள் காரணப் பெயராக இட்டிருக்கிறார்கள்.தொல்  நூறு தொண்ணூறென்றும், தொல் என்பது ஒன்று குறையத் தொக்கது. தொன்மை தொல்லெனப் பிரிந்தது. வழக்கத்தில் தொள்ளாயிரம் தொண்ணூறு என்று மருவியது. இதற்கு பத்திடத்திற்கு ஓரிடம் குறைந்த முன் ஆயிரமென்றும், ஒன்று குறைந்த பத்தென்றும் ஒருவாறு கொள்க. இப்படி நான் சொன்னதுபோல் சொன்னால் சிறு குழந்தைகள்கூட அறிந்துக் கொள்ளும்.

இதுபோல் சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும் வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதே அன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை.அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்குக் காலமில்லை.

ஆதலால் -அவற்றில் லட்சியம் வைக்க வேண்டாம்.ஏனெனிலும் அவைகளிலும்-அவ்வச் சமய மதங்களிலும் -அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக் கூடுமே யல்லது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கை உண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது. ஏனெனில் நமக்குக் காலமில்லை.

மேலும் -இவைகளுக்கு எல்லாம் சாட்சி நானே இருக்கின்றேன். நான் முதலில் சைவ சமயத்தில் லட்சியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும், வேலாயுத முதலியாருக்கும், இன்னும் சிலருக்கும் தெரியும்.அந்த லட்சியம் இப்போது எப்படிப் போய்விட்டது பார்த்தீர்களா?

அப்படி லட்சியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற  திருவருட்பாவில் அடங்கியிருக்கிற  ஸ்தோத்திரங்களே போதும். அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்குக் கொண்டு வந்தால் அவைகளே சாட்சி சொல்லி
விடும்.

ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போது இருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.இப்போது ஆண்டவன் என்னை ஏறாத நிலை மேலே ஏற்றி இருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது.


ஆதலால் -நீங்களும் விட்டு விட்டீர்களேயானால் என்னைப் போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை.

நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லட்சியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லட்சியம் தூக்கிவிடவில்லை.என்னை இந்த இடத்துக்கு தூக்கி விட்டது யாதெனில்?அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தாரென்று வாசகப் பெரு விண்ணப்பத்தினும் ‘எத்தேவரையும் நின் சாயையாய்ப் பார்த்ததே யன்றித் தலைவ! வேறெண்ணியதுண்டோ’ எனத் ‘தேடியதுண்டு நினதுருவுண்மை’ என்னும் தொடக்கமுடிய பதிகத்திலும் விண்ணப்பித்திருக்கிறேன்.

மேலும் அவர் தெரிவித்த உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில் ‘கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக’ என்றதுதான்.

என்னை ஏறாநிலை மிசை ஏற்றிவிட்டது யாதெனில் தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.அந்தத் தயவுக்கு ஒருமை வரவேண்டும். அந்த ஒருமை இருந்தால்தான் தயவு வரும். தயவு வந்தால்தான் பெரிய நிலைமை ஏறலாம்.இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது.

அந்த ஒருமையினாலேதான் வந்தது. நீங்களும் என்னைப் போல ஒருமையுடனிருங்கள். என்னிடத்தில் ஒருவன் வசப்படாத முரட்டுத்தனமாய் எப்படியிருந்தாலும், அவனுக்கு நல்ல வார்த்தை சொல்லுவேன்; மிரட்டிச் சொல்லுவேன்; தெண்டன் விழுந்து சொல்லுவேன்; அல்லது ஆண்டவரை நினைத்துப் பிரார்த்தனை செய்வேன்.

இப்படி எந்த விதத்திலேயாவது நல்வழிக்கு வரச்செய்து விடுவேன். நீங்கள் எல்லவரும் இப்படியே செய்தல் வேண்டும்.இராத்திரி கூட ‘நான் இல்லாமல் இந்த ஜனங்கள் க்ஷண நேரம் கூட இருக்க மாட்டார்களே’ என்று ஆண்டவரிடத்தில் விண்ணப்ப்பித்துக் கொண்டேன். ஏன் அப்படி ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன் என்றால் : எல்லவரும் சகோதரர்களாதலாலும், இயற்கை உண்மை ஏக தேசங்களானதாலும், நான் அங்ஙனம் ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை வைத்துக் கொண்டிருக்கிறேன்.

இப்போது நீங்கள் இதுவரைக்கும் ஒழுக்கத்துக்கு வராமல் எவ்வளவு தாழ்ந்த மனிதர்களாக இருந்தாலும்  சாலைக்குப் போகக் கொஞ்ச தினமிருக்கின்றது. அதற்குள்ளாக நீங்கள், நீங்களும் நல்லொழுக்கத்திற்கு வருவதோடுகூட, மற்றவர்களையும் நமது ஒழுக்கத்திற்கு வரும்படி எவ்விதத் தந்திரமாவது செய்து நம்மவர்களாக்கிக் கொள்ள வேண்டியது.நீங்கள் கொஞ்ச தினத்துக்கு அப்படிச் செய்துக்கொண்டிருங்கள், நானும் ஆண்டவரிடத்தில் இவ்வுலகத்திலுள்ள எல்லா ஜீவர்களும் நன்மையடையப் பிரார்த்தித்தும், ஆண்டவரிடத்தில் கேட்டுக்கொண்டும் வருகின்றேன். ஆதலால், நீங்கள் அப்படிச் செய்துக் கொண்டிருங்கள்.

சமயந் தவிர மதங்களில் உள்ள வேதாந்தி சித்தாந்தியென்று பெயரிட்டுக் கொண்ட பெரியவர்களும் உண்மை அறியாது, சமயவாதிகளைப் போலவே ஒன்று கிடக்க ஒன்றை உளறுகிறார்கள்.ஆதலால் -நீங்கள் அஃது ஒன்றையும் நம்ப வேண்டாம். எவைகளிலும் தெய்வத்தைப் புறமுகமாகப் புலப்படச் சொல்லவில்லை.

‘தெய்வத்தைத் தெரிந்துகொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள். ஐயோ! நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்துக் கொள்ளாததினாலே யல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள்!’ என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன், இருக்கின்றேன், இருப்பேன்.

தெய்வத்தை ஏன் தெரிந்துக் கொள்ளவில்லையென்றால்?”

வள்ளலார், சிறு இடைவெளி விட ஒரு சிறு பானை தண்ணீரை அவரிடத்திலே கொண்டு வந்து வைத்தார் அன்பர் ஒருவர். அதை லட்சியம் செய்யாது தன் உபதேசத்தைத் தொடர்ந்தார் வள்ளலார்.

(அடுப்பு எரியும்)

தமிழ்மொழி

ஓவியம்: ஸ்யாம்