ஆன்லைனில் ரம்மி விளையாடி ஈசியா தற்கொலை செய்துகொள்ளுங்க...



‘‘ஆன்லைனில் ரம்மி விளையாடி ஈசியா பணம் சம்பாதிங்க...’’ - இதுதான் ஆன்லைன் ரம்மியின் விளம்பர வாசகம். பணம் சம்பாதிக்கத் தூண்டிவிட்டு பல உயிர்களைப் பறித்து வருகிறது இந்த விளையாட்டு.சமீபத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கான ரூபாயை இழந்ததால் பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்தார் விஜயகுமார்.
தற்கொலைக்கு முன்பாக அவர் தன் மனைவிக்கு அனுப்பிய ஆடியோக்களைக் கேட்பவர் கண்களில் கண்ணீர் பெருகும்.பாண்டிச்சேரியில் செல்போன் ரீசார்ஜ் செய்யும் கடையை நடத்தி வந்துள்ளார். தொழிலில் நன்றாக சம்பாதித்து வந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன் அவருக்கு ஆன்லைன் ரம்மி அறிமுகமாகியுள்ளது.

ஆரம்பத்தில் சிறிய அளவிலான தொகைகளில் விளையாடிய விஜயகுமார் அதில் ஜெயிக்கவும் செய்தார். ஆனால், நாளடைவில் அந்த விளையாட்டுக்கு அடிமையாகிவிட்டார். குறிப்பாக இந்த லாக்டவுனில் மட்டும் 38 லட்ச ரூபாயை இழந்துள்ளார். இவ்வளவு பணத்தை இழந்த பிறகுதான் விஜயகுமாருக்குத் தனது நிலைமை புரிந்துள்ளது. ஆனால், ரம்மி விளையாடியே தீர வேண்டும் என்ற வெறி தீரவே இல்லை. அதிலிருந்து மீளமுடியாமல் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த லாக்டவுனில் மட்டும் பல கோடி வருமானம் பார்த்துள்ளது ஆன்லைன் ரம்மி நிறுவனம். கிராமத்தில் மர நிழலில் சீட்டு விளையாடினாலே அள்ளிக்கொண்டு போய்விடும் காவல்துறை. இப்படியிருக்க ஆன்லைன் ரம்மி மட்டும் எப்படி சுதந்திரமாக சுற்றுகிறது..?

‘‘பொதுவாக கிராமப்புறங்கள், சிறு நகரங்களில் பொதுவெளியில் பணம் வைத்து சீட்டு விளையாடுபவர்களுக்கு ‘பப்ளிக் கேம்ப்ளிங் ஆக்ட் 1967’ சட்டத்தின் நான்கு பிரிவுகளின் கீழ் அபராதம் அல்லது சிறைத் தண்டனை விதிப்பார்கள். ஆனால், ஆன்லைன் ரம்மி என்பது உலகளவில் பொதுவானதாக இருக்கிறது...’’ என்று ஆரம்பித்தார் வழக்கறிஞர் இரா.முருகவேள்.

‘‘உலகத்தில் எங்கோ இருந்துகொண்டு ஆன்லைனில் இயக்கும்போது அதைக் கட்டுப்படுத்துவது சிரமம். ஆனால், அரசு முன்னெடுத்தால் லாட்டரியைப் போல ஆன்லைன் ரம்மியையும் தடை செய்ய முடியும். இருந்தாலும் ஆன்லைன் ரம்மியை முற்றிலுமாக ஒழிப்பது சிரமம். ஆனால், யூ டியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் நீங்கள் இயங்கும்போது அது சார்ந்த விளம்பரம், குறுந்தகவல் வருவது நின்றுவிடும்.

குடிப்பழக்கம் போன்றதுதான் சூதாட்டமும். மீளமுடியாதவர்கள் முறையாக மனநல மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஆன்லைன் ரம்மி போன்ற கேம்ப்ளிங் விளையாட்டுகளைக் கட்டுப்படுத்தக் கோரிய வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. செப்டம்பர் மாதம் நடந்த விசாரணையில், ரம்மி போன்ற விளையாட்டுகள் இளைஞர்களையும், குழந்தைகளையும் சீரழி–்ப்பதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

ஆன்லைன் ரம்மியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அரசு தீவிரமாக முன்னெடுத்தால் நீதிமன்றங்கள் நிச்சயம் இந்த விளையாட்டை தடை செய்துவிடும்.‘ரம்மி விளையாட வாங்க’ என பிரபலங்கள் பலரும் பகிரங்கமாக தொலைக்காட்சியில் விளம்பரம் செய்கிறார்கள். தடை செய்யப்பட்ட சூதாட்டம் ஆன்லைனில் கனஜோராக நடப்பதும், அதற்கு பிரபலங்கள் விளம்பரங்கள் கொடுப்பதும் சூதாட்ட தடைச் சட்டத்தை கேலி செய்வதாக உள்ளது...’’ என்று வழக்கறிஞர் இரா.முருகவேள் வருத்தத்துடன் முடிக்க, ஆன்லைன் ரம்மி எப்படி இயங்குகிறது என டிஜிட்டல், ஆன்லைன் துறையில் ஆய்வு செய்து வரும் மென்பொறியாளர் வினோத்குமார் ஆறுமுகம் தொடர்ந்தார்.

‘‘இந்தியாவில் கோவா, மிசோராம் போன்ற மாநிலங்களில் சூதாட்டத்தை அரசே அனுமதித்துள்ளது. வெளிநாட்டுச் சுற்று லாப்பயணிகள் அதிகம் வருவதால் இந்த அனுமதி. எனவே, ஆன்லைன் சூதாட்டக்காரர்கள் தங்கள் அலுவலகத்தை இந்த மாநிலங்களில் பதிவுசெய்து கொண்டு அங்கிருந்தோ அல்லது வேறு நாடுகளில் இருந்தோ ஆன்லைனில் இந்தியா முழுவதும் இயங்குகிறார்கள்.

இப்படி 200க்கும் மேலான ஆன்லைன் சூதாட்ட இணையதளங்கள் இயங்குகின்றன. இதில் 30 இணையதளங்கள் முன்னணியில் உள்ளன.
ஆன்லைனில் சீட்டு விளையாடும்போது, நம்முடன் வேறொரு மனிதர் விளையாடுவதாக நாம் நினைப்பது முதல் தவறு. நம்முடன் 100 சதவீதம் புரோகிராம் செய்யப்பட்ட ஓர் இயந்திரமே விளையாடும். குறைவான தொகையை நீங்கள் கட்டி விளையாடும்போது அந்த புரோகிராம் உங்களிடம் தோற்றுப்போகும். ஆனால், அதிக பணம் கட்டும்போது பணத்தை இழந்து விடுவோம். காரணம், அடுத்து என்ன சீட்டு வரும், நமது கையில் இருக்கும் சீட்டின் விவரம் உட்பட அனைத்தும் அந்த கம்ப்யூட்டர் கோடிங்கிற்கு தெரியும். பின்னர் எப்படி அதை நாம் ஜெயிக்க முடியும்?

இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டு குடும்பங்களை நிர்க்கதி யாக்குகிறது. இதை அரசு முழுமையாக தடை செய்யவேண்டும். அப்படி தடை செய்தால் சூதாட்டக்காரர்கள் நேரடியாக நம்மை அணுக முடியாது. உளவியலாக நம்மை அதற்குள் ஈர்க்கும் விளம்பரங்கள் நமது செல்போனில் வராது...’’ என்று வினோத்குமார் சொல்ல, ஆன்லைன் ரம்மியில் மூழ்கிய டாக்ஸி டிரைவர் செல்வதுரை அதிர்ச்சியான பல விஷயங்களைப் பகிர்ந்தார்
‘‘ரம்மி விளையாடி பணத்தை இழந்ததுதான் மிச்சம். ஆரம்பத்தில் 100, 500 கட்டி விளையாடினேன். அதில் ஜெயிக்க மாதச் சம்பளத்தை அப்படியே கட்டினேன். ஒரு மாதம் விட்ட பணத்தை அடுத்த மாதம் எடுத்துவிடலாம் என்று பல மாதங்கள் விளையாடியுள்ளேன்.

எனக்கே தெரியாமல் இதற்கு அடிமையாகிவிட்டேன். இதனால்  தூக்கம் போனது. கடன் வாங்கும் என்ணம் அதிகரித்தது. நிம்மதியாக வேலை செய்ய முடியவில்லை. ஆன்லைன் ரம்மியில் 6000 ரூபாய் கட்டி விளையாடும் கேம் இருந்தது. இதற்கு கமிஷன் வேறு தனியாக எடுத்துக்கொள்வார்கள்.  

இந்த விளையாட்டில் இழக்கும் பணத்தைத் தாண்டி இணையதள கமிஷன் வேறு தனியாகத் தரவேண்டும். மேலும் ஹாட் கேஷ் லிமிட் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தினார்கள். அதற்கான கமிஷன் தொகை தனி. 100 ரூபாய்க்குக் கூட ஆசைப்பட்டு யாரும் விளையாட வேண்டாம். இது மெல்ல உங்கள் மனதை மாற்றிவிடும். அதிக தொகையை இழந்துவிடுவீர்கள்...’’ உதடு துடிக்க சொல்கிறார் செல்வதுரை.

ரம்மி வாங்கிய பலிகள்...

திருச்சி அனலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். திருச்சி மைய காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தார். ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி 3 லட்ச ரூபாயை இழந்தார். கடன் கொடுத்த நண்பர்கள் நெருக்கடி கொடுக்கவே அந்த அழுத்தம் தாங்க முடியாமல் ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள மாட்டுக் கொட்டகையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

 சென்னை செங்குன்றம் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் தினேஷ். திருமணத்திற்கு முன்பே ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி யுள்ளார், ஓராண்டுக்கு முன்பு திருமணமாகி மனைவி 4 மாத கர்ப்பிணி. இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் 8 லட்சம் ரூபாயை இழந்துள்ளார். கடன் நெருக்கடி முற்றவே குடும்பத்தினர் சில சொத்துக்களை விற்று கடனை அடைத்துள்ளனர். அப்படியும் கடன் தீராததால் மனஉளைச்சலுக்கு ஆளாகி, செப்டம்பர் 14ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

 தருமபுரியைச் சேர்ந்த 28 வயதான வெங்கடேஷ், சேலம் தலைவாசல் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் படை காவலராக பணிபுரிந்து வந்தார். சக காவலரிடம் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மியில் இழந்துள்ளார். கடன் நெருக்கடி தாங்க முடியாமல் செப்டம்பர் 21ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பல கல்லூரி மாணவர்கள் இந்த விளையாட்டில் உயிரை இழந்துள்ளனர்.

திலீபன் புகழ்