நான்...ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன்



முதலில் நான் ஒரு பத்திரிகையாளன், மற்றும் இசை விமர்சகன். இப்படிச் சொல்லிக் கொள்வதில் கொஞ்சம் பெருமை அதிகம். சுமார் 2500க்கும் மேலான இசை விமர்சனங்கள், கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்; எழுதிக் கொண்டிருக்கிறேன்.
தாமரை மணாளன் பழைய ‘வாசுகி’ பத்திரிகையின் பொறுப்பாசிரியர் மற்றும் பெரிய எழுத்தாளர். அவர்தாம் என் பெயருக்கு முன்பு ‘ஏன் வெறுமனே இனிஷியல் வைத்துள்ளீர்கள்? உங்கள் ஊர் பேரில் ஒரு சிறப்புண்டு. கேட்டவுடனே இசைக்கு நெருக்கமான ஊர் போல் இருக்கும். அப்படிப்பட்ட ஊர் பெயரை உங்கள் பெயருடன் இணைத்துக்கொள்ளலாமே’ என்றார்.

அவர் சொன்னதுபோல் வெங்கட்ராமன் அன்று முதல் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் ஆனேன். ஏதோ கடவுளின் சித்தம் ஜோசியத்தில் திடீர் ஏற்றம். இந்தப் பக்கம் பிரபலம் ஆகிவிட்டேன். இப்போதும் மார்கழி மகா உற்சவம் என்றால் எனது இசை விமர்சனம் நிச்சயம் இருக்கும். என் பெயர் கே.வெங்கட்ராமன். எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி அம்பாசமுத்திரம் அருகே ஹரிகேசநல்லூர் என்ற கிராமம்.

பிறப்பு, வளர்ப்பு எல்லாம் சென்னைதான். தி.நகரில்தான் பிறந்தேன். பள்ளி, கல்லூரி எல்லாம் இங்கே அருகேயேதான். எங்க குடும்பத்தில் எல்லோரும் பெரிய இசைக் கலைஞர்கள். பெரிய பெரிய சாதனைகள் எல்லாம் செய்தவர்கள். இசைக்கலைஞர்கள் தங்களுடைய சொந்த ஊரை அவர்கள் பெயருக்கு முன்பு சேர்த்துக்கறது உண்டு. அப்படித்தான் ஹரிகேசநல்லூர் எங்கள் குடும்பத்துடன் சேர்ந்துகொண்டது.

டாக்டர் சங்கீத கலாநிதி காயகசிகாமணி ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் பெரிய இசை ஜாம்பவான். அவர் எங்க அப்பாவுக்கு பெரியப்பா, எனக்குத் தாத்தா. இந்தியாவிலேயே முதன்முதலில் டாக்டர் பட்டம் வாங்கிய இசை மேதை அவர். மைசூர் சமஸ்தானத்தில் கிருஷ்ணராஜ உடையார் காலத்தில் ஆஸ்தான இசைக் கலைஞராக இருந்தவர். மைசூர் மகாராஜா அவருக்கு காயக சிகாமணி என்னும் பட்டம் வழங்கினார். அவர் வழித்தோன்றல்கள்தான் நாங்கள் எல்லாம்.

கர்நாடக சங்கீதம் எப்போதும் எங்கள் குடும்பத்தோடு இணைந்தே இருக்கும். எங்க தாத்தா புதுப்புது ராகங்களை எல்லாம் கூட கண்டுபிடிப்பார். இசை மும்மூர்த்திகளுக்கு அடுத்து எங்க தாத்தா பெயர்தான் சொல்லப்படும். நிறைய கீர்த்தனைகள் எல்லாம் பாடியவர்; தமிழில் நிறைய இசை மேதைகளுக்கு குருவாக இருந்தவர். மேடைகளில் ஹரிகதா காலட்சேபம் செய்வார். பெரிய கூட்டம் சூழ நிகழ்ச்சிகள் இருக்கும். அதிலும் தமிழில் கதாகாலட்சேபம் செய்ததால் பட்டி தொட்டி எங்கும் அவருக்கு ரசிகர்கள் ஏராளம்.

நான் வாய்ப்பாட்டு, வயலின் கற்றுக்கொண்டேன். கர்நாடக இசையை முறைப்படி எல்லாம் கற்றுக்கொண்டதில்லை. சின்னச்சின்ன கட்டுரைகள் எல்லாம் எழுதிட்டு இருந்தேன். பின்னர்தான் ‘தினமணி’யிலே தொடர்ந்து இசை விமர்சனம் எழுத ஆரம்பிச்சேன். ஐராவதம் மகாதேவன்தான் அப்போதைய பொறுப்பாசிரியர்.

பத்திரிகையிலே எழுதுவதுதான் என் முதன்மை வேலை. ஒவ்வொரு இசைக்கருவி, அதன் வரலாறு, எப்படி பிரபலம் ஆனது, அந்தக் கருவிகளில் யார் யார் ஜாம்பவான்கள், இப்போது அந்தக் கருவிகள் எந்த அளவிற்கு முன்னேற்றம் அடைந்திருக்கின்றன அப்படியான கட்டுரைகளும் எழுதி எனக்குப் பெயர் கிடைத்தது.

அன்றைய தினங்களின் டாப் இசைக்கலைஞர்கள், பாடகர்கள் பேட்டிகள் எல்லாம் எடுத்ததுண்டு. பின்னர்தான் ‘சரிகமபதநி’ என்னும் பெயரில் சொந்தமாகவே ஒரு பத்திரிகை தொடங்கினேன். முழுமையான கர்நாடக சங்கீதம், பரதம், இசைக் கச்சேரிகள் குறித்த மாதப் புத்தகம். இசைக் கலைஞர்கள் மத்தியில் பெரும் பிரபலம்.  

செம்மங்குடி னிவாச ஐயர் தான் முதல் பிரதி வாங்கி அந்தப் பத்திரிகையை வெளியிட்டார். நல்ல பெயர், நல்ல வரவேற்பு. ஆனால், விளம்பர ரீதியாக பெரிதாகப் போகவில்லை. ஒவ்வொரு மாதமும் கைக்காசை செலவு செய்து புத்தகம் வெளியிடும்படி இருந்தது. முடிந்தவரை போராடி வெளியிட முயற்சி செய்தேன். ஆனாலும் முடியவில்லை.

பின்னர் நண்பர் விஸ்வநாதன் ‘நான் எடுத்து நடத்துகிறேன்’ எனக் கேட்டார். அவராலும் பெரிய அளவில் நடத்த முடியவில்லை. அதனால் நிறுத்த வேண்டிய  கட்டாயத்திற்கு ஆளானேன். அப்போதைய பாடகர்கள், இசை வித்துவான்களுக்கு எல்லாம் நான் செல்லப்பிள்ளை போல் இருந்த காலம். ஏன்... யேசுதாஸ் எப்போது சென்னை வந்தாலும் என் வீட்டில் காபி குடிக்க என்றே தனியாக நேரம் ஒதுக்கி வந்து போவார்.

இசை விமர்சனங்களும் யாரையும் மனதளவில் புண்படுத்தாமல், சம்பந்தப்பட்டவர்களே படித்தால் சிரித்துவிடும் படிதான் தவறை நாசுக்காக சின்ன காமெடி கலந்து சொல்வேன். அதை ஏற்றுக்கொள்ளவும் செய்வார்கள். இசையும் இசை சார்ந்த மக்களுக்கும் என்னைப் பற்றி நன்றாகவே தெரியும்.
இசை எப்படியோ ஜோதிடமும் அப்படியே குடும்பத்துடன் இணைந்தே வந்த ஒன்று.

நானும் ஓய்வு நேரத்தில் ஜோதிடம் பார்க்கத் துவங்கி அப்படியே நண்பர்கள், உறவினர்கள், நண்பர்களின் நண்பர்கள் எனப் பரவி ஒரு கட்டத்தில் ஜோதிடர் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமனாக பிரபலம் ஆனேன். என்னைக் கேட்டால் என்னை ஓர் இசை விமர்சகராகவும், பத்திரிகையாளனாகவும் காட்டிக்கொள்ளவே விரும்பினேன். ஆனால், காலத்தின் கட்டாயம் சேனல்களில் தினம் தினம் பேச்சு என என் ஜோதிடம் என்னையும் மீறி பிரபலம் ஆனது.

பத்திரிகைகள் எப்படியோ அப்படித்தான் சேனல்களும். நிறைய சேனல்களில் ஜோதிடம் சார்ந்த நிகழ்ச்சிகள் செய்திருக்கிறேன். இதற்குக் காரணம் முந்தைய 40 வருட பத்திரிகைத் துறை அனுபவங்களும் அதில் உருவான நண்பர்களும்தான்.இப்போது இருக்கும் சீனியர் பொறுப்பாசிரியர்கள், ஆசிரியர்கள், இயக்குநர்கள் பலருடனும் நான் இணைந்து வேலை செய்ததுண்டு. அதனாலேயே என்னை இப்போது ஜோதிடம் சார்ந்த நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் இசை நிகழ்ச்சிகள் எதுவானாலும் என்னிடம் ஆலோசனை கேட்டு அதன்படி நிகழ்ச்சிகளை நடத்தும் நபர்களும் உண்டு.
இசை விமர்சகராக கலைமாமணி விருது பெற்றவன் நானாகத்தான் இருப்பேன், முதலமைச்சர் கையால் கிடைத்தது.

ஜோதிடம்… இதிலும் எனக்கென தனி கட்டுப்பாடுகள், கோட்பாடுகள் உண்டு. ஏன்... நீங்களே நினைத்துப் பார்க்க முடியாத பல பிரபலங்களுக்கு நான் குடும்ப ஜோதிடராக இருக்கிறேன். ஆனால், எங்கேயும் இவர் என்னிடம் ஜோதிடம் பார்க்கிறார், அவர் இங்கே வந்து போவார் எனச் சொல்லிக் கொண்டு அதன் மூலம் என் தொழிலைப் பெருக்கிக் கொள்ள முயன்றதே இல்லை.

என்னை நம்பி வரும் யாவரும் எனக்கு ஒன்றே. வெளியில் சொல்வதால் அவர்கள் ஒன்றும் சொல்லப்போவதில்லை என்றாலும் என் மீதிருக்கும் நம்பிக்கையை அது கெடுத்துவிடும். பெரிய ஸ்டார் எனில் ஒரு விதமாகவும், சாதாரண மனிதருக்கு ஒரு விதமாகவும் என நான் ஜோதிடம் பார்ப்பதில்லை. அதேபோல் எப்பேர்ப்பட்ட நபராக இருந்தாலும் என்னைத் தேடி வந்துதான் ஜோதிடம் பார்த்துக்கொள்ள வேண்டும். நான் யார் வீட்டிற்கும் போக மாட்டேன். இந்த பெயர் மாற்றம், நியூமராலஜி, ஆங்கில எழுத்து பெயர் மாற்றம் இதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது.
 
300 வருடங்களுக்கு முன்பு வந்த ஆங்கில எழுத்துகள், ஆங்கிலத் தேதிகளுக்கும் மூவாயிரம் வருடங்கள் முன்பிருந்தே இருக்கும் நவகிரகங்களுக்கும் எப்படி தொடர்பு இருக்கும்? இதனால் ஒரு ‘ஏ’ சேர்த்தால் போதும், ஒரு ‘எஸ்’ சேர்த்தால் போதும் ஓஹோ என வந்துவிடுவீர்கள் என்னும் கணிப்பை துளியும் என் மனது ஏற்றுக்கொள்ளாது.

அதேபோல் இப்படி ஒரு பிரச்னை இருக்கிறது, இதற்கு பரிகாரம் இதுதான் எனச் சொல்லி பணம் கறக்கும் வேலையும் என்னிடம் நடக்காது. இந்தக் கோயிலுக்குச் செல்லுங்கள், இந்தக் கடவுளை வழிபடுங்கள்... அவ்வளவே. என் அப்பா ஒய்.குப்புசுவாமி ஐயர், திரிசூலம் மலையின் குவாரி கான்டிராக்டர். புளூ மெட்டல் ஜெல்லி தொழில் செய்தவர். சென்னை முழுக்க கருங்கல் ஜல்லி சப்ளை செய்வது தான் அப்பாவிற்கு தொழில். மூன்று, நான்கு லாரிகள் சொந்தமாக இருந்தன. மிகப்பெரிய தொழிலதிபர். பாறைகளை எல்லாம் கான்டிராக்ட் எடுத்து கடலோரங்களில் போடுகிற அரசு ஒப்பந்தம் செய்திருந்தார்.

திரிசூலம் கோயிலை பல வருடங்கள் கழித்து திறந்தது அப்பாதான். கிருபானந்த வாரியாருக்கு அப்பா மிகவும் நெருக்கம். வாரியார் சுவாமிகளைக் கூட்டி வர, கூட்டிச் செல்ல என் அப்பாதான் கார் அனுப்புவார். ஆன்மீகம் சார்ந்த ஜாம்பவான்கள் பலரும் என் அப்பாவுக்கு நண்பர்கள்.
அம்மா அலமேலு 1979லேயே காலமாகிட்டாங்க. மூன்று சகோதரிகள். ஒருவர் இறந்துவிட்டார். ஒரு சகோதரியின் கணவர்தான் பிரபல பல் டாக்டர் ஜி.ஜானகிராமன். சிவாஜி, எம்ஜிஆர் இவர்களுக்கெல்லாம் ஆஸ்தான மருத்துவர்.

இப்பவும் அவருடைய மருத்துவமனையில் சிவாஜியின் பல் ஒன்றை ஞாபகார்த்தமாக வைத்திருக்கிறார். கே.ஆர்.விஜயாவே ‘என் புன்னகைக்குக் காரணம் ஜானகிராமன்’ என ஒரு பேட்டியில் சொன்னதுண்டு. என் திருமணம்… அப்பா பார்த்து முடித்து வைத்த பெண்தான். அவங்க பெயர் மைதிலி. அமைதியானவர். இசை ஆர்வம் உள்ளவர். எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பார். ஆடம்பரமாக இல்லாமல் சிம்பிளாக முடித்துக்கொண்ட திருமணம்.

இரண்டு மகன்கள். பெரியவர் ஹெச்.வி.கிருஷ்ணபிரசாத் ஆன்மீகப் பேச்சாளர், நிறைய சொற்பொழிவுகள் செய்கிறவர். எங்கள் குடும்பத்தின் பாரம்பரிய கலையை இப்போது என் மகன்தான் செய்து கொண்டிருக்கிறார். தமிழில் ஆர்வம் அதிகம். ஆன்மீகத் தலைப்பு எதுவானாலும் கொடுத்த இடத்தில் பேசக்கூடிய ஆற்றல் உடையவர்.

சின்னவர் ஹெச்.வி.ஹரிகேஷ் இந்த வருடம்தான் பி.காம் முடித்து மேற்கொண்டு படிக்க தயாராகி வருகிறார். இத்தனை சொன்னேன், ஆனால் எதையும் தலைக்கு ஏற்றிக்கொண்டதே இல்லை. அதனாலேயே என்னால் இத்தனை வருடங்களும் நிலைத்து நிற்க முடிகிறது. என் பேச்சும் இப்படித்தான் அமைதியாக பொறுமையாக இருக்கும். காசுக்காக எந்த வேலை செய்தாலும் அதில் நிரந்தரம் இருக்காது. அதைப் பின்பற்றுவதாலேயே நல்ல பெயருடன் இருக்கிறேன்.

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்