எவர்கிரீன் காமெடிகள் உருவானது எப்படி?



ரகசியத்தை உடைக்கிறார்கள் காமெடியில் கலக்கிய இயக்குநர்கள்

தமிழ் சினிமாவில் காமெடி ஜானர்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு உண்டு. தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களின் வட்டாரத்தில் நகைச்சுவைப் படமென்றாலே, ‘அது மினிமம் கேரண்டி’ என்பார்கள். கோலிவுட்டில் த்ரில்லர், ஹாரர் என டிரெண்ட் மாறினாலும் கூட காமெடி படங்களுக்கு தனி வரவேற்பு உண்டு.

‘‘உங்க படங்கள்ல நகைச்சுவை எப்படி பிடிச்சீங்க? எவர்கிரீன் காமெடிகளை எப்படி உருவாக்கினீங்க..?’’ என ஹிட் காமெடி படங்களின் இயக்குநர்கள் சிலரிடம் கேட்டோம். அவர்கள் அத்தனை பேரும் தங்களின் சக்சஸ் ஃபார்முலாக்களை ஒளிவுமறைவின்றி பகிர்ந்தார்கள்.
‘‘கதை பண்றதுல ரெண்டு களம் இருக்கு. ஒண்ணு, சீரியஸா பண்ணி சீரியஸா ஜெயிக்கறது. சீரியஸைத் தொட்டா, கரெக்டான விஷயத்தை பிடிக்கணும். அதுக்கு கரெக்டான லாஜிக்கை பிடிக்கணும். ஆனா, காமெடி அப்படியில்ல. லாஜிக் பார்க்க மாட்டாங்க. இப்ப காமெடி படங்களே குறைஞ்சிடுச்சு. அப்படியே வந்தாலும் காமெடி டிரையாகிடுச்சு...’’ என்றபடி பேச ஆரம்பிக்கிறார் இயக்குநர் சுராஜ்.

இவருக்கும் வடிவேலுவுக்குமான கெமிஸ்ட்ரிக்கு உதாரணமாக ‘தலைநகரம்’, ‘மருதமலை’, ‘கத்தி சண்டை’ படங்களே சான்று. அதைப் போல  விவேக்கிற்கு தனுஷ் நடித்த ‘படிக்காதவன்’, ‘அப்பாடக்கர்’ என ஹிட் காமெடி கொடுத்தவர் சுராஜ்.‘‘அப்பெல்லாம் ஒரு நடிகர் வசனம் பேசினாதான் காமெடி. ஆனா, வடிவேலு திரையில வந்து நின்னாலே காமெடி. ‘தலைநகரம்’, ‘மருதமலை’ல எல்லாம் அவரைப் பார்த்தவுடனேயே சிரிக்க ஆரம்பிச்சிடுவாங்க.

கவுண்டமணியண்ணன் ஆகட்டும், வடிவேலண்ணன், விவேக், சந்தானமாகட்டும் யார்னாலுமே சிரிச்சிடுவாங்க. காமெடியில யாருமே லாஜிக் பார்க்க மாட்டாங்க. ஒரு நாட் தோணினதும், ‘இந்தக் கதைல காமெடி பண்ணினால் ஒர்க் அவுட் ஆகும்’னு தெரிஞ்ச பிறகுதான் அந்தக் கதையிலேயே கை வைப்பேன்.

நம்ம ஊர்கள்ல டீக் கடையில் இருந்து பெட்டிக்கடைகள் வரை பல நூறு வடிவேலுகள் இருக்காங்க. அவங்க பண்ற அலப்பறைகளை பண்ணினதாலதான், வடிவேலு அண்ணன் உச்சத்துக்கு போனார்.உதாரணத்துக்கு ‘தலைநகரம்’. அது ரொம்பவே சீரியஸான கதை. ஆனா, காமெடி ட்ரீட்மென்ட் இருக்கும். அதுல வடிவேலண்ணன் ரவுடியா வருவார். ரவுடினா ‘பில்லா’, ‘பாட்சா’ மாதிரி ரவுடி கிடையாது. இந்த ரவுடி வேற ரகம். ஏன்னா, ஒரிஜினல் ரவுடினா வருவான்... மேட்டரை முடிப்பான்... திரும்பிப் பாக்காமப் போய்க்கிட்டே இருப்பான். ஆனா, டூப்ளிகேட் ரவுடி செயல்ல இறங்கமாட்டான். ‘நான் பண்ணிடுவேன்’, ‘நான் குத்திடுவேன்’னு பீலா விடுவான்.

‘தலைநகர’த்துல ரவுடி கேரக்டர் வைக்கும் போது அவர்கிட்ட ‘இந்த ரவுடி எதுக்கு வேணாலும் இறங்கி வருவாண்ணே’னு சொன்னேன். அதாவது கடைக்காரன்கிட்ட மிரட்டி பணம் கேட்பான். கடைக்காரன் பணம் தரமாட்டேன்னு சொன்னா... உடனே டென்ஷன் ஆகமாட்டான். ‘பணம் இல்லேனா என்னா? இருக்கறது எதாவது குடுறா’னு இறங்கி வருவான்.  

நம்ம ஊர்ல சோடாகடையில லஞ்சம் வாங்குற டைப் ரவுடி கேரக்டர் மாதிரி அவரோட கேரக்டர் இருக்கும். ‘தலைநகரம்’ல சுந்தர்.சி சோடா கடை வச்சிருப்பார். வடிவேலு ஒரு ஆளவிட்டு, ‘நான் கூப்ட்டேன்னு அவரைக் கூட்டிட்டு வா’ம்பார். ஆனா, சுந்தர்.சி வரமாட்டார். உடனே ரவுடிக்கு கோபம் வந்திருக்கணும். ஆனா, வடிவேலுவோ, ‘அவன் வரலைன்னா என்னா..! நாம போவோம்’னு அவன் வழிக்கு இறங்கிப் போவார்.

‘நானும் ரவுடிதான்’னு வாண்டடா போலீஸ் ஸ்டேஷன்ல போய் கமிட் ஆவாங்க. அந்த ‘நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான்’ காமெடி உருவானதே சுவாரஸ்யமான இன்ஸி டெண்ட். அந்த சீனை ஷூட் பண்ணும்போது, எந்த டயலாக்கும் முடிவாகல. ‘ஏய் நான் ஜெயிலுக்கு போறேன்... நானும் ரவுடி தான்...’னு சொல்ற சீனப்போ, அவர் உண்மையில் சொன்னது, ‘பங்காளி கட் பண்ணாத, பங்காளி கட் பண்ணாத, நான் டப்பிங்ல போட்டுக்கறேன், டப்பிங்ல போட்டுக்கறேன்’னுதான்!

‘மருதமலை’யில் வடிவேலு அண்ணன் ‘ஏட்டு ஏகாம்பரமா' இருப்பார். போலீஸ்காரர்னா ‘வால்டர் வெற்றிவேல்’, ‘ஆனஸ்ட்ராஜ்’ மாதிரி போலீஸ் கிடையாது. இவர் சிரிப்பு போலீஸ். வடிவேலண்ணே மார்க்கெட்ல மாமூல் கேட்கப் போவார். அங்கே, ஒரு பிச்சைக்காரனும் போய் பிச்சை கேட்பான். அந்த சீனை வடிவேலண்ணன்கிட்ட சிம்பிளாகத்தான் சொன்னேன். அவரோ அதுக்கேத்த மாதிரி பாடிலேங்வேஜைப் போட்டு பிச்சு உதறினார். அதுக்கு வாய்ஸ் மாடுலேஷனும் அவ்வளவு முக்கியமானதா இருந்தது.

ஏட்டு ஏகாம்பரம் மாமூல் கேட்ட தொகை வெறும் ரெண்டு ரூபாதான். அதை அவர் சொல்ற டோனாலதான் அந்த காமெடி அவ்வளவு ரீச் ஆச்சு...’’ என உதாரணங்களுடன் விளக்கிய சுராஜ், பாயிண்ட்டிற்குள் வந்தார்.‘‘காமெடி ஷூட் பண்றப்ப முதல் டேக் போகும்போதுதான் நமக்கு சிரிப்பு வரும். அதுக்கப்புறம் எத்தனை டேக் போனாலும் நமக்கு சிரிப்பு வராது. ஒரு டீமா காமெடி டேக் போகும்போது டயலாக்ல இருந்து சில விஷயங்களை ஒருத்தர் ரெண்டு பேர் சொதப்பிடலாம். அதுக்காக டேக் மேல டேக் போகும். ஆனா, ஷூட் பண்ற நமக்கு சிரிப்பு வராது.

இன்னொரு விஷயம், ஆடியன்ஸை தொந்தரவு பண்ணாம காமெடி பண்ணணும். அது ரொம்ப முக்கியம். ஆடியன்ஸை டிஸ்டர்ப் பண்ணிட்டா, அப்புறம் எவ்ளோ நல்ல காமெடியா இருந்தாலும் சிரிக்க மாட்டாங்க. கதைக்கு எவ்ளோ மெனக்கெடுறோமோ, அதை காமெடிக்கும் மெனக்கெட்டாதான் காமெடி நல்லா ஒர்க் அவுட் ஆகும்...’’ அழுத்தம் திருத்தமாக சொல்லும் சுராஜ், அடுத்து வடிவேலுவுடன் கைகோர்க்கிறார்.

‘‘இந்த லாக்டவுன்ல வீட்ல இருந்ததால, நானும் வடிவேலண்ணனும் சேர்ந்து அத்தனை காமெடிகள் எழுதி வச்சிருக்கோம். ‘பங்காளி இத்தனை நாளுக்குப் பிறகு வர்றோம். சிரிக்க வைக்காம திரும்பிடக்கூடாது பங்காளி’னு சொல்லியிருக்கார். அதனாலேயே ‘நானும் பங்காளிதான்’னு வெப்சீரீஸுக்கு டைட்டில் வச்சிருக்கோம்...’’ என்கிறார் சுராஜ்.

சுராஜின் கருத்தையே எம்.ராஜேஷும் பிரதிபலிக்கிறார். ‘சிவா மனசுல சக்தி (எஸ்எம்எஸ்)’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி (ஓகே ஓகே)’, ‘ஆல்இன்ஆல் அழகுராஜா’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ உட்பட பல படங்களில் சந்தானத்திற்கு ஹிட் காமெடிகளைக் கொடுத்தவர் இவர்.

‘‘என்னோட லைஃப் இன்ஸ்பிரேஷன்ல இருந்துதான் என் படத்தை உருவாக்கறேன். இயல்பாகவே நம்ம ஒவ்வொருத்தருக்குள்ளும் நகைச்சுவை உணர்வு இருக்கு. சுந்தர்.சி சார், சுராஜ் சார், சந்தானம் சார்னு பலர்கிட்டேயும் சாதாரணமா பேசும்போதே, அவங்ககிட்ட இருந்து அவ்ளோ நகைச்சுவை தெறிக்கும்.

என்னைச் சுத்தி நடக்கற விஷயங்கள்ல இருந்து காமெடி எடுக்கறேன். அந்த டைம்ல சில விஷயங்களை நாம பேசமுடியாது. ஆனா, நமக்கு சிலது தோணும். உதாரணமா, ஒரு ஃபேமிலியிலோ அல்லது ஃப்ரெண்ட்ஸ் வட்டத்திலோ சண்டை நடக்கும் போது, அங்கே நம்மால சில விஷயங்களைப் பேசமுடியாது. ஆனா, நமக்கு சிலது தோணும். இந்த மாதிரி சூழல்களை எல்லாமே நோட் பண்ணிக்குவேன். ரியல் லைஃப்ல இன்ஸ்பையர் ஆகி எடுக்கற காமெடிலதான் நிறைய பேர் கனெக்ட் ஆவாங்க.

எந்த ஸ்கிரிப்ட்டையும் மொதல்ல என்னோட வெர்ஷன்ல எழுதி முடிச்சிடுவேன். ஒரு கன்டன்ட் தோணும் போது, அதுக்கு என்ன தேவையோ அதைப் பிடிச்சு டிராவல் பண்ணி, ஸ்கிரிப்டை முடிச்சிடுவோம். எழுதி முடிச்சதுமோ அல்லது ஸ்பாட்லயோ சந்தானம் சாரோட பேசும் போது, இன்னும் இம்ப்ரூவ் ஆகும். ஸ்பாட்டுல தோணுற விஷயங்களும் காமெடி யாகிடும்.

சந்தானம் சார் ஒரு விஷயத்தை சொல்லும்போது, உடனடியா நமக்கு சிரிப்பு வந்துடும். உதாரணமா, ‘ஓகே ஓகே’யில சந்தானம் சார் சொல்லுவார்... ‘கேட்குறவன் கேனயனா இருந்தா, கேரம் போர்டை கண்டுபிடிச்சது கே.எஸ்.ரவிக்குமாரு’னு.

ஸ்பாட்டுல யதேச்சையா அந்த டயலாக் அவருக்கு தோணினது. அதைக் கேட்ட செகண்ட்லேயே சிரிப்பு வந்திடுச்சு. வச்சோம். கே.எஸ்.ரவிக்குமார் சார் ஏன் அங்கே வரணும்னு லாஜிக் எல்லாம் யோசிக்கல. இன்ஸ்டன்ட் சிரிப்பும் ஒர்க் அவுட் ஆகும்.

அதைப்போல அவர் ஒரு பர்ஃபாமென்ஸை பண்ணும்போது சிரிப்பு வரலைனா அப்படியே விட்டுடுவோம். சந்தானம் சாரும் கடின உழைப்பாளி. அவரோட டீமும் அப்படியே.இப்ப டிரெண்ட் கொஞ்சம் மாறியிருக்கு. ஓடிடி பிளாட்ஃபார்ம்ல த்ரில்லர், ஹாரர்தான் போயிட்டிருக்கு.

இனி எதிர்காலத்துல அங்கேயும் ஹியூமர் சீரீஸ்கள் அதிகரிக்கறதுக்கான வாய்ப்புகள் இருக்கு...’’ என உறுதியான குரலில் சொல்கிறார் எம்.ராஜேஷ்.சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த இயக்குநர் ராம்பாலாவோ, தனி ஃபார்முலா வைத்திருக்கிறார். சந்தானத்திற்கு ‘தில்லுக்கு துட்டு’, ‘தில்லுக்கு துட்டு 2’ என ஹிட்ஸ் கொடுத்தவர் இவர்.

‘‘காமெடி படங்கள் பண்ண நிறைய பேர் முயற்சி பண்ணியிருக்கலாம். ஆனா, சிலராலதான் ஜெயிக்க முடியும். ஏன்னா, வார்த்தைகளை நறுக் சுறுக்குனு மீட்டர் பார்த்து பயன்படுத்த தெரிஞ்சிருக்கணும். அப்பதான் சிரிப்பு வரும். சில நேரங்கள்ல வார்த்தைகளை முன்னப்பின்ன மாத்திப் போட்டாலே சிரிப்பு வந்துடும். காமெடிங்கறது புதிய கண்டுபிடிப்பு கிடையாது. கதை பண்ணும் போது திடீர்னு வர்ற சமாசாரம்தான். பிராக்டீஸ் பண்ணி வர்றது கிடையாது.

ஒரு பன்ச் டயலாக்கை யோசிச்சு எழுதலாம். ஆனா, யோசிச்சு யோசிச்சு கவுண்டர்கள் எழுதி காமெடியை வரவழைக்க முடியாது. நாம கேஷுவலா பேசிட்டிருக்கும்போது ஓர் இடத்துல பளிச்சுனு சிரிப்பு வந்துடும். அந்த பளிச் எப்பவும் க்ளிக் ஆகிடும். சட்டுனு நம்மள சிரிக்க வச்சிடும்.

ஒவ்வொரு காமெடி நடிகருக்கும் ஒவ்வொரு பாணி இருக்கும். அதுக்கேத்த மாதிரி காமெடி பிடிக்கணும். சார்லி சாப்ளின், லாரல் ஹார்டி, மிஸ்டர் பீன்னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரகமா காமெடி பண்ணுவாங்க.

ஸோ, ஒரு படத்துல காமெடி கொடுக்கும் போது எல்லா வகை காமெடியும் ட்ரை பண்ணிப் பார்க்கணும். கவுண்டர் டயலாக்குகளுக்கு சிலர் சட்டுனு சிரிச்சிடுவாங்க. சிலருக்கு அது புரியாது. ‘என்ன சொன்னாங்க? ஏன் சிரிச்சீங்க’னு விளக்கம் கேட்பாங்க. அப்படி உள்ளவங்களுக்கு ஸ்லாப்ஸ்டிக் காமெடி மாதிரி சில விஷயங்கள் பண்ணணும். அல்லது முட்டாள்தன காமெடிகள் பண்ணணும்.

உதாரணமா, ‘ஐயா என் குழந்த அம்பது காச முழுங்கிட்டானுங்கய்யா...’னு ஒருத்தர் சீரியஸா சொல்லும்போது பக்கத்துல ‘மண்ட’ மனோகர் டென்ஷனாகிடுவார். ‘ஒரு காசு ரெண்டு காச முழுங்கறப்பவே தடுத்து நிறுத்திருக்க வேண்டியது தானே... அம்பது காச முழுங்குற வரை என்ன பண்ணிக்கிட்டிருந்தே’ம்பார்! இது முட்டாள்தனமான காமெடி.

இப்படி காமெடிகளுக்கும் சிலர் சிரிப்பாங்க. இதை எல்லாம் கலந்துதான் என் படங்கள்ல வைப்பேன். என் படத்தை மூணு எபிஸோடுகளா பிரிச்சு காமெடிகளை வைப்பேன். அதாவது, ‘கவுண்டர், ஸ்லாப்ஸ்டிக், ஃபூலீஷ்’னு மூணு வகை காமெடி யையும் ஒரே படத்துல வைப்பேன்.

‘தில்லுக்கு துட்டு’ல முட்டாள்தன (ஃபூலீஷ்) காமெடியை வில்லேஜ்ல வச்சிருப்பேன். இன்னொரு வகையை ஆஸ்பத்திரியில வச்சிருப்பேன்.

அதுக்கப்பறம், பேயை கலாய்க்கற காமெடி வச்சிருப்பேன். வேற எந்த சீக்ரெட்ஸும் இல்ல!’’ என்கிறார் ராம்பாலா.எம்.ராஜேஷின் வழியில்தான் பொன்ராமும் நடைபோடு கிறார். சிவகார்த்திகேயனுக்கு ‘ரஜினிமுருகன்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘சீமராஜா’ என வரிசையாக ஹிட்கள் கொடுத்தவர், இப்போது சசிகுமாரை வைத்து ‘எம்ஜிஆர் மகன்’ இயக்கி வருகிறார் பொன்ராம்.

‘‘என் காமெடிகள் எல்லாமே லைவ்வான இன்ஸிடென்ட்களா இருக்கும். என்னைச் சுத்தி நடக்கற விஷயங்கள்ல இருந்து காமெடி பிடிக்கறது தான். நண்பர்கள், குடும்பத்தினரிடம் பேசிட்டிருக்கும்போது, சில நேரம் சட்டுனு சிரிச்சிடுவோம். ஆனா, அதை டயலாக்கா எழுதும்போது சிரிப்பு மிஸ் ஆகும். ஏன்னா, அதுக்குள்ள புனையப்பட்ட ஒரு கதை இருக்கும். அதை மைண்ட்ல வச்சுக்கும்போதுதான் சிரிப்பு வரும்.

ஒரு பழக்கடையில ‘வாழைப்பழத்தை இழுக்கறேன்னு கடையையே இழுத்துப் போட்டுடுவான் போலிருக்கே’னு பேச்சு வாக்குல சொல்வாங்க.
அதை சீன் ஆகப் பண்ணினா எப்படி இருக்கும்னு யோசிச்சது தான் ‘ரஜினி முருகன்’ல வந்த வாழைப்பழ காமெடி.

யதார்த்தத்தை மீறின விஷயம் கூட காமெடியாகிடும். ஸ்கிரிப்ட் எழுதும்போது சில காமெடிகளை எழுதுறதும் உண்டு. அதைப்போல சில காமெடிகள் எக்ஸ்ட்ராடினரியாக இருக்கும். அதுக்காக சில கேரக்டர்களை உருவாக்குறதும் உண்டு.

ஒரு படத்தைப் பார்க்கும் போதும், ஒரு டயலாக்கைக்  கேட்கும் போதும் கூட, அதிலிருந்து ஃப்ரெஷ்ஷா ஒரு காமெடி சீன் பிடிக்க முடியும்.
‘ரஜினிமுருகன்’லயே உதாரணம் சொல்றேன். நான் ராஜேஷின் ‘ஒருகல் ஒரு கண்ணாடி’யில் அசோசியேட்டா ஒர்க் பண்ணினேன்.

அதுல ஹீரோயினை பாக்குறதுக்காக அவங்க வீட்டுக்கு எதிரே இருக்கற டீக்கடையில் ஹீரோ உட்கார்ந்திருப்பார். அப்ப அங்கே வரும் சந்தானம் ஹீரோகிட்ட, ‘நாயருக்கு இந்த டீக் கடையை நீ போட்டுக் குடுத்தியா’னு கேட்பார்.

அந்த ஒரு வார்த்தைதான் ‘ரஜினிமுருகன்’ டிராக். எதிர்வீட்டுப் பொண்ணை கரெக்ட் பண்ணத்தான் அவங்க வீட்டுக்கு எதிரே டீக்கடை போடுறார்
சிவகார்த்திகேயன்னு டிராக் வச்சுதான், காமெடியை டெவலப் பண்ணினோம். இந்த கொரோனா டைம்ல எல்லாருமே ஒருவித இறுக்கமான மனநிலையில, முகக்கவசம் போட்டுத் திரியறோம். ஆனா, ஆறழு வருஷத்துக்குபிறகு முகக்கவசம் போட்டோம்னு சொல்லும்போதே, பெரிய
காமெடியாகி கலகலக்க வைக்கும்.

ஏன்னா, அந்தக் காலத்துல ‘காலரா’ சீரியஸான நோய். ஆனா, ‘டேய் கால்ரா... கால்ரா’னு கவுண்டமணி - செந்தில் காமெடி களைகட்டுச்சு. அதுமாதிரி காமெடிகளும் எதிர்காலத்துல வரும் வாய்ப்பிருக்கு...’’ என்கிறார் பொன்ராம்.

மை.பாரதிராஜா