கொரோனாவுக்கு பிறகான ஐடி உலகம்...வாய்ப்புகள்... சவால்கள்... சாத்தியங்கள்!



இந்தியாவின் வளர்ச்சிக்கான பயணத்தில் ஐடி எனப்படும் தகவல் தொழில்நுட்பத் துறையின் பங்களிப்பு கணிசமானது. 1980கள் முதல் வளரத்தொடங்கிய இத்துறை 1990களுக்குப் பிறகு எட்டுக் கால் பாய்ச்சலில் சென்றுகொண்டிருந்தது.

2017ம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத் துறையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) பங்களிப்பு எட்டு சதவீதம். சுமார் நாற்பது லட்சம் பேருக்கு நேரடியாகவும் ஒரு கோடிப் பேருக்குமேல் மறைமுகமாகவும் படியளந்துகொண்டிருக்கும் மாபெரும் தொழில்துறை இது.

இப்படி நாளொரு டெக்னாலஜியும் பொழுதொரு முன்னேற்றமுமாகச் சென்று கொண்டிருந்த இந்தத் துறையின் அசுர வளர்ச்சிக்கு சடன் பிரேக் போட்டிருக்கிறது கொரோனா.கொரோனா கெடுக்காத துறை இல்லை என்பதற்கு இணங்க ஐடி உலகமும் இந்த போஸ்ட் பேண்டமிக் சூழலில் தடுமாறிக் கொண்டிருக்கிறது.
உலக அளவில் ஒட்டுமொத்த ஜிடிபி இந்த ஆண்டு மூன்று சதவீதம் வரை சரிவடையும் என்று உலக நிதியமைப்பு தெரிவிக்கிறது. இது, 1930களின் பொருளாதாரப் பேரழுத்தம் மற்றும் 2008ம் ஆண்டின் பொருளாதாரச் சரிவுக்கு இணையான பாதிப்பு என அஞ்சப்படுகிறது.

இப்படியான பின்-கொரோனா சூழலில் ஆன்சைட் வொர்க், வெளிநாட்டு வணிகத் தொடர்புகள் ஆகியவற்றை நம்பியிருக்கும் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை சந்திக்கும் சவால்கள் என்னென்ன? அவற்றை சமாளிக்க வழியுண்டா? வாங்க அலசுவோம்.

இந்தியாவின் வளர்ச்சிக்கான கதையோடு இந்திய ஐடி துறை பின்னிப் பிணைந்தது. 1990ம் ஆண்டு முந்நூற்று இருபது கோடி ரூபாயாக இருந்த இந்தத் துறையின் வருவாய் 2019ம் ஆண்டு பதிமூன்று லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இதில் சுமார் எழுபத்தைந்து சதவீதம் வெளிநாடுகள் மூலம்தான் இந்தியாவுக்கு வருகிறது. வெறும் கால் பங்கு மட்டுமே உள்நாட்டுச் சந்தை.

டிஜிட்டல் டூல்ஸ் சந்தைக்கு உலகம் முழுதுமே நல்ல மதிப்பிருந்தாலும் நாம் வெளிநாடுகளின் ஐடி துறை சேவைகளைச் சார்ந்துதான் இன்றும் இயங்கி வருகிறோம். அவர்களுடைய ஐடி துறைக்கான கட்டுமானத் தேவைகளுக்கான ஆட்களை வழங்குவதுதான் நமது பிரதான பணி.

இந்தியாவின் ஐடி துறை என்பது பெரும்பாலும் வீடல்லாத ஐடி தேவை சந்தையைத்தான் நம்பி இயங்குகிறது. அதாவது, ஐடி தொழிலில் ஈடுபடும் அயல்நாட்டு நிறுவனங்கள்தான் நமது ஐடி நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள். தனிப்பட்ட நுகர்வோர் அல்ல. வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்கள் தங்கள் தேவைக்கேற்ற ஐடி வசதிகளை இங்கிருக்கும் நமது நிறுவனங்களிடம் கேட்டுப் பெறுவார்கள்.

உதாரணமாக, ஒரு மருத்துவ சேவை நிறுவனம் தனது நோயாளிகளின் தகவல்களையும் ஊழியர்களின் தகவல்களையும் பல்வேறு வகையாகத் தொகுத்து ஆவணமாக வைத்துக்கொள்ள விரும்பும். நோயாளிகளின் மருத்துவ ரெக்கார்டுகள் தயாரிப்பது, அவற்றை முறையாகத் தொகுப்பது முதல் தனது பணியாளர்களின் சம்பளப் பட்டியல், வருகைப் பதிவு தயாரிப்பது வரை அதற்குப் பல்வேறு வகையான தேவைகள் இருக்கும்.

அதனை இங்கிருக்கும் நமது திறமை வாய்ந்த ஐடி பணியாளர்கள் செய்து தருவார்கள். அங்கிருக்கும் அந்நிறுவனத்தின் ஐடி ஊழியருக்கு தங்கள் நிறுவனத்தின் தேவை என்ன என்று சொல்ல மட்டுமே தெரிந்திருக்கும். அதை கணிப்பொறி மொழியில் எப்படி எழுதுவது, அந்த புரோகிராமை எப்படி வடிவமைப்பது என்பதில் எல்லாம் நமது ஊர் ஊழியர்கள்தான் கில்லி.

எனவே, அந்த நிறுவனம் நமது இந்திய நிறுவனங்களோடு வணிகத் தொடர்பு கொண்டிருக்கும். இதனை, ஆங்கிலத்தில் Cognitive Proximity என்பார்கள். அறிவுணர்வு அன்யோன்யம் என்று இதனை தோராயமாக மொழி பெயர்க்கலாம்.

இந்த காக்னிட்டிவ் ப்ராக்சிமிட்டிதான் நமது இந்திய ஐடி தொழில்களின் பெரும் பலம். தாங்கள் சேவை செய்யும் அந்நிய நிறுவனத்தின் தேவை என்ன என்பதை விரைந்து கிரகித்து அதை நிறைவேற்றித் தரும் நிபுணர்கள் இங்கு அதிகம். அவசியம் எனில், ஆன்சைட் வொர்க் என அங்கேயே நிறுவனத்துக்கு நேரடியாகச் சென்றும் செய்து தருவார்கள்.

மும்பை, பெங்களூர், சென்னை, குருகிராம் என்று இந்தியாவில் இப்படியான ஐடி பணி செய்து கொடுப்பதற்கென தனித் தனி ஐடி க்ளஸ்டர் ஹப்களே உள்ளன. இங்குள்ள பல நூறு நிறுவனங்களில் இந்தப் பணிகள்தான் ஜரூராக நடந்து கொண்டிருக்கின்றன.

இப்படியான ஐடி சேவையில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று பிபிஓ எனப்படும் பிசினஸ் ப்ராசஸ் அவுட்சோர்சிங். இதன் உதாரணம்தான் மேலே நாம் பார்த்த ஒரு மருத்துவ சேவை நிறுவனத்துக்கான ஐடி உட்கட்டுமானத்தைப் பகிர்வது.

இன்னொரு வகை ஐடி வேலை நாலெட்ஜ் ப்ராசஸ் அவுட்சோர்சிங் எனப்படும் கேபிஓ ஐடி துறை என்பதே மூளை உழைப்போடு தொடர்புடையது. அறிவு எப்போது ஒரு வணிகப் பொருள் ஆனதோ அப்போதே அது கால, தேச, வர்த்தமானங்களையும் கடந்து செயல்படத் தொடங்கிவிட்டது.

உலகமயத்தின் வருகை உலகம் முழுதும் இருக்கும் பல்வேறு மூளை உழைப்புகளை தொகுத்து ஒரே குடையின் கீழ் பணியாற்றச் செய்தது. இதனால், உலகம் முழுதும் பல்வேறு இடங்களில் இருக்கும் ஐடி ஊழியர்கள், ஓர் ஆய்வு வேலையில் இணைந்து பணியாற்ற முடிந்தது.

இந்த கேபிஓ என்பது இப்படியான ஒரு கூட்டு அறிவுப் பகிர்வுதான். பிபிஓ-வில் ஒருவரின் தேவை இன்னொருவரால் நிறைவேற்றப்படுகிறது என்றால், கேபிஓ-வில் இருவரும் பரஸ்பரம் இணைந்து தங்கள் அறிவைப் பகிர்வதன் மூலம் ஒரு வேலையைச் செய்ய முடிகிறது. இந்தவகை ஐடி தொழிலும் இந்தியாவில் உள்ளது.

இன்று பின் கொரோனா சூழல் இந்த ஐடி துறையை கடுமையாகப் பாதித்துள்ளது. குறிப்பாக, காக்னிட்டிவ் ப்ராக்சிமிட்டி மூலம் தங்களுடைய சேவையைச் செய்துவரும் நிறுவனங்கள் கடும் நெருக்கடியில் உள்ளன. சோஷியல் டிஸ்டன்ஸிங் போன்றவை உலகம் முழுதும் கடுமையாக பின்பற்றப்படும் சூழலில் ஊழியர்களை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு அனுப்புவது நமது இந்திய நிறுவனங்களுக்கு கடும் சவாலாக இருக்கிறது.

வரும் டிசம்பர் வரை ஹெச்1 பி விசாவை அமெரிக்கா ரத்து செய்திருப்பதை கவனிக்க வேண்டும். இதனால், பல பெரிய ஐடி நிறுவனங்கள் முதல் சின்னஞ் சிறிய ஐடி நிறுவனங்கள் வரை கடுமையான பாதிப்படைந்திருக்கின்றன. ஆன்சைட் வேலைகளுக்கு தம்முடைய நிபுணர்களை அனுப்ப இயலாமல் திணறிவருகின்றன. மறுபுறம், அங்கு இருப்பவர்கள் இங்கு வரமுடி யாமலும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெரிய ஐடி நிறுவனங்கள் வெளிநாட்டிலேயே தங்களது ஊழியர்களை நியமித்து அங்கிருக்கும் ஆன்சைட் வேலைகளை முடிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், இது கடும் செலவீனத்தை ஏற்படுத்துகிறது. குறுகிய கால அளவில் செலவுகள் எகிறினாலும் நீண்ட கால அளவில் தங்களது அந்நிய வாடிக்கையாளர்களோடான தொடர்பைத் தக்கவைத்துக் கொள்ள இயலும் என்று ஐடி நிறுவனங்கள் கருதுகின்றன.

ஏற்கெனவே, கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவால் தடுமாறிக் கொண்டிருக்கும் சிறு, குறு ஐடி நிறுவனங்கள் வெளிநாட்டிலேயே ஆன்சைட் ஆட்களைப் பணியமர்த்த இயலாமலும், இங்கிருக்கும் தமது ஊழியர்களைப் பணியமர்த்த முடியாமலும் தவித்து வருகின்றன.

இந்த கொரோனா காலத்தில் இது ஒரு கடுமையான சிக்கல்தான். கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து, வெளிநாட்டுப் பயணங்கள் இலகுவாகாத வரை இந்த அவஸ்தை இருக்கவே செய்யும் என்கிறார்கள் நிபுணர்கள். கொரோனாவுக்கு தடுப்பூசி அல்லது மருந்து எப்போது என்பதுதான் யாருக்கும் உறுதியான விடைதெரியாத மில்லியன் டாலர் கேள்வி.

இளங்கோ கிருஷ்ணன்