அணையா அடுப்பு - 23



அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

மனிதனுக்கு மட்டுமல்ல;
மண்ணாங்கட்டிக்கும்
ஜீவகாருண்யம்!

ஆன்மீகப் பெரியாரான வள்ளலார், பத்திரிகை ஒன்றினையும் நடத்தி பத்திரிகையாளராகவும் திகழ்ந்திருக்கிறார்.அச்சுக்கலை தமிழில் வளர்ந்து வந்த காலக்கட்டம் அது.

வள்ளலார் நடத்திய அந்தப் பத்திரிகையின் பெயர் ‘சன்மார்க்க விவேக விருத்தி’.சன்மார்க்கக் கொள்கைகளைப் பரப்புவதற்காக அவர் நடத்திய இப்பத்திரிகை குறித்த விரிவான தகவல்கள் இன்று கிடைக்கவில்லை.ஆனால், பத்திரிகைக்கு செய்யப்பட்ட விளம்பரம் ஒன்றிலிருந்து சிறிது தகவல்களைப் பெற முடிகிறது.

“அறிவுடைய நண்பர்க்கு அன்பொடு வந்தனஞ் செய்து அறிவிக்கை.நண்பர்களே!உலகில் வழங்கும் பிறப்புகளுள் உயர் பிறப்பாகிய மனிதப் பிறப்பைப் பெற்றுக்கொண்ட நாமனைவரும் அறம் பொருள் இன்பம் வீடு எனும் நால்வகைப் பொருளின் அனுபவங்களைக் காலமுள்ளபோதே அறிந்து அனுபவித்தல் வேண்டும்.

அங்ஙனமறிந்து அனுபவிப்பதற்குச் சன்மார்க்க விவேக விருத்தியே சாதனமாதலின், அதனையடைதற்குத் தக்க நன்முயற்சிக்கோர் முன்னிலையாகச் சன்மார்க்க விவேக விருத்தியென்னும் பத்திரிகையொன்று வழங்குவிக்கு நிமித்தம், இதனடி யில் தனித்தனி நம்மா லியன்றவளவில் மாதந்தோறும் பொருளுதவி செய்வதாகக் கையொப்பமிட்டு மேற்குறித்த வண்ணம் நமக்கும் பிறர்க்கும் பயன்படும்படி வழங்குவிப்போமாக...

இங்ஙனம்சன்மார்க்க சங்கத்தார்”
- என்று விளம்பரம் செய்து, அதற்கு இணைப்பாக வள்ளலாரில் தொடங்கி 49 பேர், நன்கொடையாக தங்கள் பங்குத் தொகையைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

‘மாதந்தோறும் பொருளுதவி’ என்று குறிப்பிட்டிருப்பதால், வள்ளலார் நடத்தியது மாதப் பத்திரிகையாக இருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது.
தமிழில் ஆரம்பத்தில் பத்திரிகைகள் நடத்தியவர்கள் கிறிஸ்தவர்களே. மதப்பிரச்சாரத்துக்காக மட்டுமின்றி கல்வியறிவினைப் பரப்பவும் அவர்கள் பத்திரிகைகளைப் பயன்படுத்தினார்கள்.

அவர்களைத் தொடர்ந்து இந்துக்களும் தங்கள் ஆன்மீகக் கருத்துகளை வெளிப்படுத்த பத்திரிகைகள் நடத்தினர்.இந்த காலக்கட்டத்தில் சமூக சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பு வதற்கு சன்மார்க்க சங்கத்தார் மூலமாக ‘சன்மார்க்க விவேக விருத்தி’ என்கிற மாதப்பத்திரிகையை வள்ளலாரும் நடத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தப் பத்திரிகை எத்தனை காலம் வெளிவந்தது, எவ்வளவு பிரதிகள் விற்பனை ஆயின போன்ற தகவல்கள் நமக்கு தற்சமயம் கிடைக்கவில்லை.

எனினும், நூறாண்டுகள் கழிந்த நிலையில் அதே பெயரில் 1969லிருந்து ஒரு பத்திரிகை நடந்தது.ஜீவகாருண்யம் என்பதே மானிட வாழ்வின் இலக்காக இருக்க வேண்டுமென்கிற எண்ணம் வடலூரில் வசித்த காலத்தில் வள்ளலாருக்கு வலுப்பெற்றது.

ஜீவகாருண்யத்தின் எல்லையை எட்டி, தாம் அங்கு கண்டறிந்த தரிசனத்தை தனது அன்பர்களுக்கும் விளக்கமாக எடுத்துரைத்தார் வள்ளலார்.
வாடிய பயிரைக் கண்டபோது மட்டு மல்ல; இளைத்த விலங்குகளைக் கண்டபோதும் வாடினார் வள்ளலார். மக்கள் முகங்களில் களைப்போ, கண்ணீரோ தென்பட்டால் அவரும் கண்ணீர் விட்டு அழுதார்.

வள்ளலாரின் ஜீவகாருண்யம் பற்றி அவருடைய சீடர்களுக்குள்ளேயே கூட பல்வேறு கருத்துகள் இருந்தன.இம்மாதிரி வெவ்வேறு பரிமாணத்தில் ஜீவகாருண்யம் பார்க்கப்படுவதைத் தவிர்க்க விரும்பிய வள்ளலார், ஒரு கதையைச் சொல்லி ஒருமனதான கருத்தை ஏற்படுத்தினார்.
“தெருவிலே இரண்டு பெரியவர்கள் நடந்து சென்றனர். அது செம்மண் சாலை. மண் கட்டி, கட்டியாக இருந்தது.

ஒரு பெரியவர் கட்டியான மண்ணை காலில் நசுக்கியவாறே நடந்து சென்றார்.மண் கட்டி உடைந்து, உதிர்வது அவருக்கு பொழுதுபோக்காக இருந்தது.
உடன் வந்து கொண்டிருந்த இன்னொரு பெரியவர் திடீரென்று மூர்ச்சையாகி, மயங்கி விழுந்தார்.பதறிப்போன முதல் பெரியவர் அக்கம் பக்கம் வீடுகளில் இருந்தவர்களை அழைத்து, மயங்கி விழுந்த பெரியவரின் முகத்தில் தண்ணீர் அடித்து எழுப்பினார்.

‘என்னாயிற்று, திடீரென ஏன் மயங்கி விழுந்தீர்கள்? பசி மயக்கமா?’ என்று அந்தப் பெரியவரைக் கேட்டார்கள்.‘இல்லை... இல்லை... என்னுடன் வந்தவர் இறைவன் படைத்த அழகிய மண்கட்டிகளை காலால் சிதறடித்து மகிழ்ந்து நடந்து வந்தார்.

இயற்கை நிலை குலைந்த அக்காட்சியைக் கண்டதுமே எனக்கு மூர்ச்சையாகி விட்டது’ என்றார்.இதுவே ஜீவகாருண்யத்தின் எல்லை. மனிதனுக்கு மட்டுமல்ல. மண்ணாங்கட்டிக்கும் கருணை காட்டப்படுவதே ஜீவகாருண்யம்…” - என்று குட்டிக்கதை சொல்லி விளக்கினார் வள்ளலார்.

வள்ளலாரின் ஜீவகாருண்யக் கருத்துகளை, அடிப்படையில் அசைவ உணவுப் பழக்கம் கொண்டவர்கள் கூட கொள்கை யளவில் எதிர்க்கவில்லை.
‘ஏழைகளின் பசியைப் போக்குவதே ஜீவகாருண்யம்’ என்கிற அவரது வேண்டுகோளை ஏற்று வடலூரில் நடந்து வந்த அன்னதானத் திட்டத்துக்கு உலகெங்கும் இருந்து அன்பர்கள் பெரும் நன்கொடைகளைத் தரத் தொடங்கினார்கள்.

இன்றளவும் அப்பணி வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது.
திருமூலரின் ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ கருத்தையே வள்ளலாரும் வேறு விதமாக சொன்னார். “இறைவன் ஒருவனே; அவன் அருட்பெருஞ்ஜோதி வடிவில் இருக்கிறான்” என்றார் வள்ளலார்.

எல்லா மதங்களுமே ஒரு கடவுள் என்கிற கோட்பாட்டை ஏற்றுக் கொள்கின்றன.ஆனால், அந்த ஒரு கடவுள் எந்தக் கடவுள் என்கிற சர்ச்சைதான் மதமோதலுக்குக் காரணமாகிறது.

வள்ளலாரோ, இறைவன் என்பவன் ஒளி வடிவிலானவன் என்று சர்வ மதத்தாரும் ஏற்றுக் கொள்ளும்படியான கோட்பாட்டை முன்மொழிந்தார்.எனவேதான் வடலூர் சன்மார்க்க சாலை அபிவிருத்திப் பணிகளுக்கு இஸ்லாமியரும், கிறிஸ்தவரும் கூட மனமுவந்து நன்கொடை அளிக்க முன்வந்தார்கள். இன்றும் கூட அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

(அடுப்பு எரியும்)

ஜோதி வடிவில் வள்ளலார்!

சத்தியஞான சபைக்கு ஒரு கொடிமரம் வேண்டுமென்று அன்பர்கள் சிலர் ஆசைப்பட்டார்கள். வள்ளலாரிடம் அனுமதி கேட்டார்கள்.

சென்னையில் தனக்குத் தெரிந்த நல்ல மரக்கடை ஒன்றை குறிப்பிட்டு, அங்கு சென்று கொடிமரத்துக்குத் தேவையான மரத்தை வாங்குங்கள் என்று ஆலோசனை கூறினார் வள்ளலார்.அதற்கேற்ப அந்த அன்பர்கள் குழுவினர் ரயிலில் சென்னை வந்தனர்.

அந்த மரக்கடைக்குச் சென்று பார்த்தபோது, கொடிமரத்துக்குத் தேவையான மரம் எதுவென்ற குழப்பம் அவர்களுக்கு ஏற்பட்டது.அப்போது வைரம் பாய்ந்த கட்டை என்று சொல்லப்படக்கூடிய ஒரு பெரிய மரத்தின் மீது ஜோதி வடிவில் வள்ளலாரின் உருவம் தோன்றியதாகவும், அந்த உருவம் அந்த மரத்தைச் சுட்டிக் காட்டி வாங்கச் சொல்லி சைகை செய்ததாகவும் பின்னர் அந்த அன்பர்கள் குறிப்பிட்டனர்.

எனினும், அதே நேரத்தில் வள்ளலார், தன்னுடைய சீடர்களுக்கு வடலூரில் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.இதுபற்றி அந்த அன்பர்கள் வள்ளலாரிடம் கேட்டபோது, அவர் விளக்கம் எதுவும் தராமல் புன்னகைத்தார்.

தமிழ்மொழி

ஓவியம்: ஸ்யாம்