C/O காஞ்சர பாலம்



உலக அரங்கில் இந்திய சினிமாவைத் தலைநிமிர வைத்த ஒரு தெலுங்குப்படம், ‘கேர் ஆஃப் காஞ்சரபாலம்’. 70 லட்சம் பட்ஜெட்டில் உருவாகி 7 கோடி வசூல், தொழிற்முறை நடிகரல்லாத 80 புதுமுகங்கள், வித்தியாசமான திரைக்கதை என இப்படத்தின் சிறப்புகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
வெவ்வெறு பருவத்தில் நிகழும் நான்கு காதல்கள்... அந்தக் காதல்களுக்கு எதிராக இருக்கும் சாதி, மத, சமூகத் தடைகள்... இவற்றுடன் ஆந்திராவிலுள்ள  காஞ்சரபாலத்தில் வசிக்கும் எளிய மக்களின் கதைதான் இப்படம்.  

ராஜுவுக்கு திருமணமாகவில்லை என்பதுதான் காஞ்சரபாலத்தில் ஹாட் டாக். காரணம், அவருக்கு வயது 49. ஒருவேளை ஓரினச்சேர்க்கையாளராக இருப்பாரோ... அவரை இப்படியே விட்டுவிட்டால் நம் குழந்தைகளுக்கு ஆபத்து என்று ஒருபக்கம் அவரைப் பற்றிய புரளிகள் கிளம்ப, இன்னொரு பக்கம் அவருக்கு ஆண்மையில்லை என்று ராஜுவை கேலி செய்கின்றனர். ஊரைவிட்டு அவரைத் துரத்தக் கூட ஏற்பாடு நடக்கிறது.

இதைப்பற்றி கவலைப்படாமல் அரசு அலுவலகத்தில் தனது வேலையில் மும்முரமாக இருக்கிறார் ராஜு. கடைநிலை ஊழியர் என்பதால் உயர்பதவியில் இருப்பவர்கள் அவரிடம் தரக்குறைவாக நடந்துகொள்கிறார்கள். இந்நிலையில் அவரது அலுவலகத்துக்கு ஒடிசாவிலிருந்து 42 வயதான ராதா மாற்றலாகி வருகிறார். அவர் ஒரு விதவை. தோளுக்கு மேல் வளர்ந்த ஒரு மகள் இருக்கிறார். உயர் அதிகாரியான ராதா, ராஜுவை சரிசமமாக நடத்துவது அங்கே  இருக்கும் அதிகாரிகளுக்கு எரிச்சலூட்டுகிறது.

தனிமையில் வாழும் இருவரும் அடிக்கடி சந்தித்து நட்புறவை வளர்த்துக் கொள்கின்றனர். நட்பு காதலாக மலர்கிறது. வழக்கத்திற்கு மாறான இந்தக் காதலுடன் சேர்ந்து பள்ளிப்பருவத்தில் அரும்பும் முதல் காதல், வெவ்வெறு மதத்தைச் சேர்ந்த இளம் பருவத்தினருக்கிடையேயான  காதல், மதுக்கடையில் வேலை செய்யும் நடுத்தர வயதுடைய ஆணுக்கும் பாலியல் தொழிலாளிக்கும் இடையிலான காதல் என மொத்தம் நான்கு காதல்கள் இடையிடையே வந்துபோகின்றன.

இந்த நான்கு காதலும் இணையும் புள்ளி தான் கிளைமாக்ஸ்.இப்படத்தின் இயக்குநர் வெங்கடேஷ் மஹா, நண்பரைச் சந்திக்க காஞ்சரபாலம் சென்றிருக்கிறார். அப்பொழுது அங்கே வசிக்கும் மக்களுடன் பேசிப் பழக வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர்களுடனான உரையாடல் ஒரு உந்துதலைத் தர ‘கேர் ஆஃப் காஞ்சரபாலம்’ திரைக்கதையை எழுதி, அங்கே வசிப்பவர்களையே நடிகர்களாகவும் தேர்வுசெய்து விட்டார்.

தயாரிப்பாளரைப் பிடிக்க சில காட்சிகளை எடுத்தார். அப்போது இவர் ஒரு படம் எடுக்கப்போகிறார் என்ற நம்பிக்கையே காஞ்சரபாலம் மக்களுக்கு வரவில்லையாம். அந்தக் காட்சிகளுடன் அமெரிக்காவில் வசிக்கும் மருத்துவர் பிரவீணாவை அணுக, அவர் 3 ஆயிரம் ரூபாயை அட்வான்ஸ் கொடுத்து சரி சொல்லிவிட்டார்.

பிரவீணாதான் படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கிறார். இத்தனைக்கும் மஹாவுக்கு இது முதல் படம்.  விரைவில் தமிழில் ரீமேக்காகும்
இந்தப் படம் நெட்பிளிக்ஸில் காணக்கிடைக்கிறது.