தல! sixers story-19 - விஸ்வரூபம்!



அப்போதெல்லாம் தோனி என்கிற ஒரு வீரர், அணியில் இருந்ததைப் பற்றி எந்த ஊடகமும் எழுதியதில்லை. அதற்கேற்ப  தோனி ஆடிய முதல் நாலு போட்டிகளிலும் கவனத்தை ஈர்ப்பது போல எதுவும் சாதித்ததுமில்லை.ஏப்ரல் 5, 2005. விசாகப்பட்டினம்.இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் முக்கியமான ஒருநாள் போட்டி.ஆம். இரு அணிகளும் மோதிய நூறாவது ஒரு நாள் போட்டி அது.எனவே, அந்தப் போட்டியை வெல்லுவதை இரு அணிகளுமே தங்கள் நாட்டுக்குரிய கவுரவமாகக் கருதின.வானம் கொஞ்சம் மேகமூட்டமாகவே இருந்தது. கேலரியில் கூட்டம் அள்ளியது.

அப்போது அங்கே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களில் ஒரு நூறு பேருக்காவது தோனி என்கிற பெயர் தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே.
பின்தங்கிய மாநிலம் ஒன்றில் இருந்து தட்டுத் தடுமாறி அணியில் இடம்பெற்றிருக்கும் இளைஞன் ஒருவன் இங்கே விளையாடப் போகிறான்... எதிர்காலத்தில் அவன்தான் இந்திய அணியை வழிநடத்தப் போகிறான்... உலகக் கோப்பைகளை வெல்லப் போகிறான் என்றெல்லாம் எவரும் கற்பனையில் கூட நினைத்துப் பார்த்திருக்க முடியாது.

பூவா தலையா போடப்பட்டது. இந்திய அணியின் கேப்டன் கங்குலிதான் வென்றார். முதலில் இந்தியாவே விளையாடும் என்றார்.
சேவாக்கும், சச்சினும் மட்டையை சுழற்றியபடியே மைதானத்துக்குள் நுழைந்தனர்.சேவாக் எடுத்ததுமே அதிரடியைக் காட்ட, மறுமுனையில் சச்சின் கொஞ்சம் தடுமாறிக் கொண்டுதான் இருந்தார்.தனக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தால் இன்று ஒரு முப்பது ரன்களாவது எடுக்க வேண்டும் என்று பெவிலியனில் மனசுக்குத் தோன்றிய தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டிருந்தார் தோனி.எப்படியும் ஆறாவது பிளேயராகத்தான் அனுப்புவார்கள் என்று தோனிக்குத் தெரியும்.

கங்குலி, டிராவிட், யுவராஜ்சிங், முகம்மது கைஃப் என்று அதிரடியான பேட்டிங் வரிசை ஓப்பனர்களுக்கு பின்பு இருந்தது.
அவர்களுக்குப் பிறகுதான் தனக்கு வாய்ப்பு வழங்கப்படும். அனேகமாக 40வது ஓவருக்குப் பிறகுதான் களமிறங்க அனுப்புவார்கள். குறைந்த பந்துகளில் அதிக ரன்களை விளாசி தேர்வாளர்களை கவனிக்க வைக்க வேண்டும்.

குறிப்பாக தன்னை நம்பி வாய்ப்பு வழங்கியிருக்கும் கேப்டன் கங்குலியின் மானத்தைக் காப்பாற்ற வேண்டும்.இப்படியெல்லாம் தோனி யோசித்துக் கொண்டிருந்தபோது இரண்டே ரன்கள் எடுத்திருந்த டெண்டுல்கர் ரன் அவுட் ஆனார்.காலுறை அணிந்து, கிளவுஸெல்லாம் மாட்டிக்கொண்டு தயாராக இருந்தார் கங்குலி.

ஆனால் - “மகி, உடனே கிளம்பு...” என்றார்.தோனிக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.ஆச்சரியப்பட அதிக நேரமில்லை.
பெவிலியனை நோக்கி டெண்டுல்கர் வந்து கொண்டிருக்கிறார்.உடனே காலுறையை அவசர அவசரமாக மாட்டிக்கொண்டு, பேட்டை எடுத்துகொண்டு தயக்கமாக மைதானத்துக்குள் நுழைந்தார்.எதிர்ப்பட்ட டெண்டுல்கர், “கலக்கு பையா. இன்னிக்கு உன்னோட நாள்...” என்று முதுகைத் தட்டிக் கொடுத்து அனுப்பினார்.கிரிக்கெட் கடவுளின் ஆசியே கிடைத்து விட்டது.

அடுத்து என்ன? அதிரடிதான்.தோனியின் மனசுக்குள் பாகிஸ்தான் பவுலிங்கை அட்டாக் செய்வதற்கு தெளிவான பேட்டிங் பிளான் இருந்தது.
அதாவது அட்டாக்தான் பிளானே!நான்காவது ஓவரிலேயே சச்சின் அவுட். அப்போது இந்திய அணி 26 ரன்தான் எடுத்திருந்தது.
கங்குலி களமிறங்காமல் யாரோ ஒரு சின்னப் பையனை அனுப்பியிருக்கிறாரே என்று விசாகப்பட்டினம் ரசிகர்களுக்கு ஆதங்கம்.
நான்காவது ஓவரின் கடைசி நான்கு பந்துகளையும் சேவாக்தான் சந்தித்தார்.

அதில் ஒரு சிக்ஸர், ஒரு ஃபோர் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தி இருந்தார்.ஐந்தாவது ஓவரின் முதல் பந்தை தோனிதான் சந்திக்க வேண்டும். வழக்கத்தைவிட சற்று பதட்டமாகவே இருந்தார்.சேவாக், நீளமான தோனியின் தலைமுடியை கலைத்துவிட்டு, “மகி, முடிஞ்சா முதல் பந்தையே ஒரு காட்டு காட்டிடு. அப்பதான் பவுலிங் லூஸாகும். உனக்கு சொல்லியெல்லாம் தரவேணாம். நீயே செஞ்சுடுவே…” என்று ஊக்கப்படுத்தினர்.
முகம்மது சமி வீசிய முதல் பந்தையே பவுண்டரிக்கு துரத்தினார் தோனி.

எதிரில் இருந்த சேவாக்குக்கு புரிந்தது. என்ஜின் சூடு பிடித்து விட்டது.அடுத்த ஓவரின் முதல் பந்தையும் தோனிதான் எதிர்கொண்டார்.
நவேத்-உல்-அசன் வீசிய ஓவரின் முதல் பந்தையும் பவுண்டரிக்கு விரட்டினார்.ஒரு பவுலரை டென்ஷன் செய்ய வேண்டுமானால், ஒரு ஓவரில் அவர் வீசும் முதல் பந்தையே தண்டிக்க வேண்டும் என்பதை தோனி நன்கு புரிந்து கொண்டார்.

அதன் பின்னால், அந்த பவுலர்களே தவறு செய்வார்கள். அதை பேட்ஸ்மேன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.ஒரு முனையில் தோனியும், மறுமுனையில் சேவாக்கும் விளாச பதினோராவது ஓவரிலேயே 100 ரன்களைக் கடந்தது இந்தியா.பதினாலாவது ஓவரில் 74 ரன்களை எடுத்திருந்த சேவாக் அவுட் ஆனார்.கங்குலி உள்ளே வந்தார்.அதன் பின் சில ஓவர்கள் மந்தமாகவே போனது.கங்குலிக்கு அன்று நாள் சரியல்ல. ஃபார்முக்கு வரமுடியாமல் திணறிக் கொண்டிருந்தார்.20வது ஓவரில் 9 ரன்களில் கங்குலி அவுட் ஆகும்போது தோனி 49 ரன்கள் எடுத்திருந்தார்.

பெவிலியனுக்கு திரும்புவதற்கு முன்பாக தோனியிடம், “மகி, கலக்கிட்டே. ஹாஃப் செஞ்சுரி போதும்னு நெனைக்காதே. நீ செஞ்சுரி அடிக்கணும். அதுக்குதான் உன்னை ஒன் டவுன் அனுப்பியிருக்கேன்...” என்று தட்டிக் கொடுத்துவிட்டுப் போனார்.ஒருமுனையில் தோனி. மறுமுனையில் திராவிட்.
திராவிட் வழக்கமான நிதானத்தோடு ஆட, தோனியோ கொஞ்சம் கொஞ்சமாக விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கினார்.
49 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தவர், 88 பந்துகளில் 100 ரன்களை எட்டினார். முதல் செஞ்சுரி.

தோனியின் தோளில் கைவைத்து திராவிட் சொன்னார். “பையா.. இன்னும் ஒரு 50 ரன் உன்னாலே எடுக்க முடியும். விடாதே. பேட்டை சுழட்டு…”
ஹெலிகாப்டர் இறக்கைகள் சுழலத் தொடங்கின.42வது ஓவரில் தோனி அவுட் ஆகும்போது 148 ரன்கள் திரட்டி யிருந்தார். அதில் 15 பவுண்டரி களும், நான்கு சிக்ஸர்களும் அடங்கும்.

அவ்வளவாக அறியப்படாத பிளேயராக ஏறத்தாழ ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாக கிரவுண்டுக்குள் நுழைந்த தோனி, பெவிலியனுக்கு திரும்பும்போது விசாகப்பட்டினத்தில் நேரிடையாக மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு மட்டுமல்ல, டிவியில் லைவ்வாக பார்த்துக் கொண்டிருந்த பல லட்சம் ரசிகர்களுக்கும் பிடித்தமான பேட்ஸ்மேன் ஆகிப்போனார்.

(அடித்து ஆடுவோம்)

 - யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்