ஒரு ரெஸ்டாரண்ட்... 7 பெண்கள்... ஒரு ரகசியம்!



தெலுங்கு சினிமாவின் மைல்கல், ‘Awe’. ஹாட்ஸ்டாரில் ‘ரகசியம்’ என்ற பெயரில் தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது. இதன் தயாரிப்பாளர், நடிகர் நானி.  சமையல் என்றால் என்னவென்றே தெரியாமல் சமையல்காரன் வேலைக்குச் சேர்கிறான் நலா. இன்டர்வியூவில் யூ டியூப்பைப் பார்த்து சமையல் செய்து ரெஸ்டாரன்ட் ஓனரைக் கவர்கிறான். அவனுக்கு ஒரு தங்க மீன் மற்றும் போன்சாய் மரத்தின் நட்பு கிடைக்கிறது. மரமும் மீனும் பேசுவதைக் கேட்கும் திறன்கொண்ட ஒரே மனிதன் நலாதான்.

அம்மாவுடைய ரெஸ்டாரண்டில் வேலை செய்கிறாள் சிறுமி மோக்‌ஷா. மேஜிக் செய்வதில் கெட்டிக்காரி. நான்தான் மிகச்சிறந்த மேஜிக்மேன் என்று மோக்‌ஷாவைக் கடுப்படிக்கிறான் வாடிக்கையாளரான யோகி. சின்ன வயதிலிருந்தே ஆண்களின் பாலியல் தொல்லைக்கு ஆளானவள் ராதா. அதனால் ஆண்கள் என்றாலே அவளுக்கு அருவருப்பு. மனநல மருத்துவரான கிரிஷ் என்ற பெண்ணை அவள் காதலிக்கிறாள். இருவரும் சேர்ந்து ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கக்கூட திட்டம் போட்டுள்ளனர். இதற்காக பெற்றோரிடம் கிரிஷை அறிமுகம் செய்து அவர்களின் அனுமதி வேண்டி காத்திருக்கிறாள் ராதா.

போதைக்கு அடிமையானவள் மீரா. அதே ரெஸ்டாரண்டில் பணிப்பெண்ணாக வேலை செய்து வருகிறாள். தனது ஆண் நணபருடன் சேர்ந்து அங்கே வரும் ஒருவரிடம் இருக்கும் கோடிக்கணக்கான ரூபாயைக் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியிருக்கிறாள். ரெஸ்டாரண்டின் வாட்ச்மேன் சிவா. விஞ்ஞானியாக வேண்டும் என்பது அவனின் லட்சியம். டைம் மெஷின் கண்டுபிடித்து கடந்த காலத்துக்குள் சென்று பல வருடங்களாக சந்திக்காமல் இருக்கும் பெற்றோரைப் பார்க்க வேண்டும் என்பது அவனது கனவு.

மல்டிபிள் பர்சனாலிட்டி கோளாறால் அவதிப்படுகிறாள் காளி. உடல் உறுப்புகளை தானம் செய்துவிட்டு தற்கொலை செய்யப்போகிறாள்.
ரெஸ்டாரண்டுக்குள் இருக்கும் ராதா, மோக்‌ஷா, நலா, மீரா, சிவா, கிரிஷ், காளி எல்லோரும் ஒரு புள்ளியில் இணைகிறார்கள். அது எந்தப் புள்ளி என்பதுதான் திரைக்கதையின் உச்சம்.

டைட்டில் கார்டிலேயே படத்தின் கதையை சுருக்கமாக அனிமேஷனில் சொன்ன உத்தி ஆசம். காஜல் அகர்வால், ரெஜினா, நித்யா மேனன், தேவதர்ஷினி, ஈஷா என பெண்களின் பட்டாளம் நடிப்பிலும் தூள் கிளப்பியிருக்கிறது. தங்க மீனுக்கு நானியும் போன்சாய் மரத்துக்கு ரவி தேஜாவும் குரல் கொடுத்திருப்பது கச்சிதம்.

பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் பெண் குழந்தைகளின் மனநிலை என்னமாதிரியான சிக்கல்களை எல்லாம் சந்திக்கும் என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறது இந்தப் படம்.  ஹாலிவுட்டில் பெரும் அதிர்வைக் கிளப்பிய ‘Identity’யின் அப்பட்டமான தழுவல் என்கிறார்கள்.

இந்திய சினிமாவில் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் வர்மா. இவரது கிரியேட்டிவ் டீமான ‘Scriptsville’தான் படத்துக்கு ஸ்கிரிப்ட் அமைத்திருக்கிறார்கள். இதை அவர் டைட்டில் கார்டில் குறிப்பிட்டிருப்பது சிறப்பு.