சூப்பர் ஸ்டார் vs ரசிகன்



ஒரு சின்ன விஷயத்தை எடுத்துக்கொண்டு அதை எப்படி சுவாரஸ்யமான திரைக்கதையாக்கலாம் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் ‘டிரைவிங் லைசென்ஸ்’. அமேசான் ப்ரைமில் காணக்கிடைக்கும் மலையாளப்படம் இது.மக்கள் போற்றும் சூப்பர் ஸ்டார் ஹரீந்திரன். அவர் நடித்தாலே படம் சூப்பர் டூப்பர் ஹிட்.

அவரின் மனைவிக்கு உடல் நிலை சரியில்லை. அமெரிக்காவில்தான் அதற்கான சிகிச்சை இருக்கிறது. தான், நடித்துக்கொண்டிருக்கும் படத்தை சீக்கிரமாக முடித்துவிட்டு மனைவியுடன் அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருக்கிறார் ஹரீந்திரன். எப்போதும் ஷூட்டிங் என்று வெளியிலே இருப்பதால் மனைவிக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை என்ற குற்றவுணர்வு வேறு. அதனால் சிகிச்சையின் போது மனைவியின் அருகிலேயே இருந்து பார்த்துக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறார்.

அவர் நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் கிளைமேக்ஸை மட்டுமே ஷூட் செய்ய வேண்டும். அது முடிந்தால் அவருக்கு வேறு எந்த கமிட்மென்ட்டும் இல்லை. மனைவியுடன் சுதந்திரமாக அமெரிக்காவுக்குப் போகலாம். ஆனால், அந்த கிளைமேக்ஸ் காட்சியின் ஷூட்டிங்கை முக்கியமான ஓர் இடத்தில் வைத்திருக்கிறார் இயக்குநர். அந்த இடத்தில் ஷூட் செய்ய அனுமதி வேண்டுமென்றால் அதில் நடிக்கும் நடிகருக்கு டிரைவிங் லைசென்ஸ் கட்டாயமாக இருக்க வேண்டும்.

சில நாட்களுக்கு முன்பு ஹரீந்திரனின் டிரைவிங் லைசென்ஸ் தொலைந்துவிட்டது. டூப்ளிகேட்டும் இப்போது எடுக்க முடியாது. அதனால் புதிதாக ஒரு லைசென்ஸ் எடுக்க அரசியல்வாதியான நண்பனை நாடுகிறார் ஹரீந்திரன். அந்த நண்பன் லைசென்ஸுக்காக மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் குருவில்லாவை அணுகுகிறார்.

ஹரீந்திரனின் பரம ரசிகன் குருவில்லா. அவருடைய படத்தை வீட்டில் மாட்டி கடவுள் போல பிரார்த்திருப்பவர் அவர். ஹரீந்திரனுடன் ஒரு செல்ஃபி எடுக்க வேண்டும் என்பதுதான் குருவில்லாவின் கனவு. எனவே, ‘உடனே லைசென்ஸ் ஏற்பாடு பண்ணித் தருகிறேன். ஃபார்மாலிட்டிக்காக ஹரீந்திரன் ஸ்டேஷனுக்கு ரகசியமாக வந்துட்டுப் போனால் போதும்’ என்கிறார் குருவில்லா. அதற்கு ஹரீந்திரனும் சம்மதிக்கிறார்.

ஆனால், அவரின் ரகசிய வருகை யார் மூலமாகவோ மீடியாவுக்குத் தெரிய வர, இவ்வளவு நாளாக லைசென்ஸ் இல்லாமல்தான் ஹரீந்திரன் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறார் என்ற குற்றம் அவர் மேல் சுமத்தப்படுகிறது. கடுப்பாகிறார் ஹரீந்திரன். இதற்கெல்லாம் காரணம் குருவில்லாதான் என்று அவரிடம் கோபமாக நடந்துகொள்கிறார்.

கடவுளைப் போல நினைத்த ஒரு நடிகர் தன்னிடமே இப்படி கேவலமாக நடந்துகொள்கிறாரே என்று வருத்தப்படுகிறார் குருவில்லா. இதற்குப் பிறகு நடக்கும் சம்பவங்கள் இருவரிடையே இன்னும் மோதலை அதிகரிக்கிறது. குருவில்லாவும் கடுப்பாகிறார். நீ எப்படி லைசென்ஸ் வாங்குகிறாய் என்று ஹரீந்திரனிடம் அவர் சவால் விட, பட்டாஸாய் வெடித்துக் கிளம்புகிறது திரைக்கதை.ஹரீந்திரனாக பிருத்விராஜும், குருவில்லாவாக சூரஜும் கலக்கியிருக்கிறார்கள். லால் ஜேஆர் இயக்கிய இப்படத்துக்கு திரைக்கதை எழுதியிருப்பவர் சச்சி.