இந்தியாவில் 60க்கும் மேல் பெண் ஒளிப்பதிவாளர்கள் இருக்கிறார்கள்!



அழுத்தமாக சொல்கிறார் 15க்கும் மேற்பட்ட படங்களின் ஒளிப்பதிவாளரான ப்ரிதா ஜெயராமன்

‘‘‘நாயகன்’ பாத்திட்டு வர்றோம். ஸ்கூல் படிக்கிற வயசுதான். என்னை அந்தப்படம் அப்படியே தாக்குது. பெருசா காரண காரியங்கள் எல்லாம் அப்ப சொல்லத் தெரியலை. ஒளிப்பதிவைப் பொறுத்தும் அது என்ன மாதிரியான துணிச்சல்னு புரியுது.
ஒரு நல்ல சினிமாவாகக் கொண்டு வருவதற்கு ஒளிப்பதிவாளரின் பொறுப்பு என்ன வென்று தெரியுது. நாமளும் இதுமாதிரி ஏதோ ஒண்ணு வேறு மாதிரி வரணும்னு மனதில் முடிவாகுது.

அப்பாவும், அம்மாவும் எதிர்ப்பு காட்டாமல் உன் இஷ்டம்னு சொல்றாங்க. பி.சி.ஸ்ரீராம் சாருக்கு அக்கான்னா ரொம்பப் பிரியம். அதிக நேரம் எங்க வீட்டில்தான் இருப்பார். அக்கா பெண்ணான நான்தான் அவருக்கு போட்டோ எடுக்கிற மாடல். அந்த கேமரா பார்த்ததும், அதில் நான் அவர் கூடவே இருந்ததும், சுதந்திரமாக இருந்ததும், சின்ன வயதிலேயே அவர் பக்கத்தில் இருந்த அருகாமையும் என்னிடம் ஏதோ ஒன்றை தூண்டியிருக்கலாம்.

ஒரு போக்கில் சினிமா போய்க்கொண்டு இருந்தபோது அவர் அதில் தனக்கான பங்கை இடையறாது செலுத்திக்கொண்டேயிருந்தார்.
அப்புறமாக நானும் திரைப்படக்கல்லூரியில் சேர்ந்து, பி.சி. சாரிடமே தொழில் பயின்று இதுவரை பதினைந்து படங்கள் வரை ஒளிப்பதிவாளராக வந்ததெல்லாம் வேறு. எனக்கு அவரை கவனிக்கப்போய்தான் எனது விருப்பமே சினிமாவானது. ‘நீ வயித்தில் இருக்கும்போது உன் மாமா சினிமாவைப் பத்தியே என்கிட்டே பேசிக்கிட்டு இருப்பான். அதனாலேயே உனக்கு இந்த ஆசை வந்திருக்கும்’ என அம்மா சொல்வார்.

ஓர் அங்குலமென்றாலும் சினிமாவில் வித்தியாசப்படுத்திக்காட்ட முடியுமா என்று பார்க்கிறேன்...” தெளிவாகப் பேசுகிறார் ஒளிப்பதிவாளர் ப்ரிதா ஜெய
ராமன். ‘அபியும் நானு’மில் புகழ் பெற்று ‘வானம் கொட்டட்டும்’ வரை பயணப்பட்டிருக்கிறார்.அதிகம் ஆண்கள் பயணிக்கும் துறை இது. உங்களின் பணி அதில் எப்படியிருக்கிறது..? இப்போது நிறைய மாற்றம் வந்திருக்கிறது. நிறையப் பெண்கள் வந்திறங்கி விட்டார்கள். இந்தியாவில் 60க்கும் மேல் பெண் ஒளிப்பதிவாளர்கள் தீவிரமாக இயங்கிக்கொண்டு இருக்கிறார்கள். அதிகம் ஆண்களேயிருக்க, இங்கே பெண்கள் குறைவுதான்.

தொழில் நேர்த்தி, திறமை, பக்குவம், டைரக்டரின் பார்வையை புரிந்துகொள்கிற விதம்தானே தவிர இதில் ஆண், பெண் என்பதற்கு இடமேயில்லை.
மென்மையான படங்களை மட்டுமே பெண்கள் பண்ண முடியும்னு ஒரு நம்பிக்கை இருக்கு. அப்படியெல்லாம் இல்லைங்கிறதை உரத்துக்கூட சொல்ல வேண்டியதில்லை.

பொதுவாக காலம் நேரம் இல்லாத படப்பிடிப்பு, நீடித்த உழைப்புக்கு பெண்கள் சரியாக இருப்பாங்களான்னு ஒரு எண்ணம் இருக்கலாம்.
பெண்ணோ, ஆணோ உடம்பை நல்லபடியாக வைத்துக் கொள்ளணும் என்பது பொதுவானதுதான். ஒரு போலீஸ் ஆபீஸர், ஒரு விமானிக்கு எப்படி உடல்நிலை அவசியமோ அப்படியே இதுக்கும் இருந்தாகணும்.

மத்தபடி இதில் நிறைய வேலைகள் காத்திருக்குன்னு புரிந்தாலே போதும். டைரக்டர் வழிகாட்டுதலும், அவங்க நினச்சதை செய்யுற வேலையும்தான் எங்களுடையது. அதை இன்னும் பொலிவூட்ட முடியுமான்னு முயற்சி செய்யுறதுதான் கூடுதல் வேலை.உங்கள் பார்வையில் ஒளிப்பதிவு…மிக அதிகமும் இயக்குநரை சார்ந்தேதான் இருக்கணும். அதற்கான ஒத்திசைவு டைரக்டரோட அமைந்துவிட்டால் இன்னும் அடுத்தடுத்து அழகாப்போகும். கதையை சரியாகச் சொல்லணும், அதில் நம்ம தனிப்பட்ட திறமைன்னு பளிச்னு தனியாகச் சொல்லி வைச்ச மாதிரி தெரியக் கூடாது.

ஒரு விஷயம் கதையை மீறி வெளியே போயிடவே கூடாது. பாடல் காட்சிகள், சண்டைக்காட்சிகளில் எங்களுக்கு ஒரு வகையான சுதந்திரம் ஆண்டாண்டு காலமாக வந்துகிட்டேயிருக்கு. இயக்குநர்கள் நினைச்சதை அப்படியே தரம் குறையாமல் எடுத்துத் தருவதுதான் ஒளிப்பதி வாளரோட வேலை.நீங்க அதிகமும் பிரகாஷ்ராஜ் உடன் பணியாற்றியிருக்கிறீர்கள்…

ஐந்து படங்கள் வரைக்கும் அவர் டைரக்‌ஷனிலும், தயாரிப்பிலும் செய்திருக்கிறேன். ரொம்ப ஹானஸ்டாவும், இயல்பாகவும் நம்மோடு பணியில் இருப்பார். பால் வேறுபாடு காட்டாமல், அதன் சுவடே தெரியாமல் பழகுவார். அவர் நல்ல சினிமா குறித்த அக்கறையோடு இருப்பது சந்தோஷமாக இருக்கும். அவரோட கனவெல்லாம் சினிமாவில் போய்த்தான் முடியும். மக்களை நல்ல ரசிகர்களாக்கியதில் அவருக்கும் தீராத பங்கிருக்கு. நல்ல நடிகராக மட்டும் இருந்திருந்தால் இது நடந்திருக்காது. நல்ல தயாரிப்பாளராகவும் ஆனதுதான் விசேஷம்.

ஒரு படம் செய்திட்டு இருக்கும்போதே, ‘அடுத்த படமு–்ம் நீதான் செய்யுறே’னு சொல்லிடுவார். இன்னும் உற்சாகம், அக்கறைன்னு நம்மை கொண்டுபோய் விட்டுவிடுவார். அடக்கமாக இருந்துவிட்டு நடிக்கும் போது திடீரென ஒரு பிரளயத்தை உண்டாக்கி விடுவார். அதெல்லாம் பக்கத்தில் நின்று படம் பிடித்திருக்கிறேன் என்பதுதான் விசேஷம்.பி.சி. ஸ்கூல்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க…

எனக்கு ஆரம்பத்திலிருந்தே அவர் ஒளிப்பதிவாளர்னு தெரியும். அவருக்கு இருக்கிற சினிமா தாகம் இருக்குல்ல, அது ஒரு Power force.
திடீரென்று என்ட்ரி ஆகி வந்து கேமரா பக்கத்தில் நிற்கும்போதே அவர் ஆட்டம் ஆரம்பிச்சிடும். அது சுற்றி நிக்கிறவங்களுக்குத் தெரியும். அவருக்குத் தெரியுமான்னு எனக்குத் தெரியாது. அவரே ஒரு இன்ஸ்டிடியூட் மாதிரிதான்னு சொல்லணும். ஒரு படத்தில் செய்ததை அடுத்த படத்திற்குள்ளே கொண்டுவரவே மாட்டார். அதனால்தான் அவர் பேசப்படுறார்னு நினைக்கிறேன்.

மணி சாரோட சேர்ந்து சில மரபான விஷயங்களை உடைச்சதெல்லாம் சோதனை முயற்சி. Over expose பண்றது எல்லாம் அதற்கு முன்னால் கேள்விப்படாத விஷயம். அவர் செய்திருக்கிறார். அதனால் அவருடைய ஒவ்வொரு படமும் பாடமாகவே இருக்கு.

அவரோட சினிமா பயணத்தில் இது ஆரம்பம், இது முடிவுன்னு கிடையாது. புதுசு புதுசாக அடுத்தடுத்து போயிட்டு இருக்கிறதுதான் அவர் அழகு.
தன்னோட நாலெட்ஜ் தனக்குச் சொந்தம்னு நினைக்க மாட்டார். அடுத்தடுத்து வேறு விஷயத்தை யோசிப்பதால் அவருக்கு பயமே கிடையாது.
அவரைக் கேட்டால், ‘யாருக்கும் நான் சொல்லித் தரலை. பக்கத்தில் உட்கார வைச்சிருக்கேன். ஆனாலும் அவங்க நானே சொல்லிக்கொடுத்ததா நினைக்கிறாங்க’னு சொல்வார். அது அவரோட பெர்சனாலிடி.

இத்தனை நாள் அனுபவம் கற்றுக் கொடுத்ததென்ன?

இந்த வைரஸ் வந்து இன்னும் மனதை பக்குவப்படுத்தி இருக்கு. இந்த வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் ரசிக்கவே மனம் விரும்புகிறது. ஒவ்வொரு ஷெட்யூல் முடிந்து வரும்போதும் எனது சோர்வை மீட்டுத் தருகிறார்கள் என் கணவர் ஸ்ரீகாந்தும், குழந்தை மீராவும். அம்மா, அப்பா, தங்கையின் குடும்பம் என அருகிருக்க ஒரு வாழ்க்கை அமைந்தது சந்தோஷம். என் பெண் மீராவுக்கு 11 வயதாகிறது. அம்மாவின் திரைப்பட வேலைகள் குறித்து அவளுக்கு பெருமை இருக்கிறது. அதுவுமே எனக்கு சந்தோஷம்.

நா.கதிர்வேலன்