லவ் ஸ்டோரி - பட்டுக்கோட்டை பிரபாகர்



காதல்... தொட்டால் தொடரும்... தொடாமலும் தொடரும்!

அப்பாவை என்னால் மறக்க முடியாது. ரொம்பவும் டிசிப்ளின். அப்பா 17 வயதில் கடை ஆரம்பிச்சு, அவரே பெண் தேடி எங்க அம்மா வீட்டுக்கு வர்றாங்க. அம்மாவுக்கு படிக்கிறதில் ரொம்ப ஆசை. கல்யாணமாகி வந்ததும், பட்டுக்கோட்டை நூலகத்தில் உறுப்பினராகச் சேர்ந்ததுதான் முதல் வேலை. அப்பாவின் மேன்மையும் சதா எங்களுக்காக உழைத்துக்கொண்டே இருந்ததும் கூட ஒரு காதல்தான். அப்பாவைப் பார்க்க எனக்கு ‘எம்டன் மகன்’ நாசரின் ஞாபகம் வரும். அந்த சிடுசிடு முகம்தான்.

ஆனால், சமயங்களில் அது கனிந்து போகும்போது வரும் அழகு குறிப்பிடத்தக்கது. பாசத்தை காட்ட வேண்டிய நிமிஷத்தில் காட்டிவிட்டு மாறிவிடுவார். அப்பாவிடமிருந்தே நான் திட்டமிடுதலை தெரிந்து கொண்டிருக்கிறேன். விடுமுறையில் காரைக்குடியில் இருக்கிற தாத்தா வீட்டுக்குப் போனால் சுதந்திரமும், படிக்க நிறைய புத்தகங்களும் கிடைக்கும். தனலட்சுமி அத்தை ஆயிரக்கணக்கான புத்தகங்களை பைண்டிங் செய்து வைத்திருந்தார். வகை வகையான புத்தகங்கள்… சித்திரக்கதைகள், ‘துப்பறியும் சாம்பு’, ‘பொன்னியின் செல்வன்’ என அத்தனையும் அங்கேதான் அறிமுகம் ஆகிறது.

நான் எழுத்தாளன் ஆவதற்கான விதை அங்கே விதைக்கப்பட்டிருக்கும் என எண்ணுகிறேன். பள்ளிக்காலங்களைப் பொறுத்தவரை டீன்ஏஜ் உணரப்பட்டது. எதிரினக் கவர்ச்சி இல்லவே இல்லை என்றால் அது உண்மையில்லை. அதிலிருந்து தப்பித்து வந்தவர்கள் யாராக இருக்கக்கூடும்? கோலம் போட வருகிற பெண்ணின் சரியான நேரத்தை கணித்து, அவளைப் பார்க்க சைக்கிளில் ஒரு ரவுண்ட் போய் வந்ததைத் தவிர அப்போது என்ன செய்தோம்? கல்லூரியில் படிக்கும்போது பக்கத்திலேயே ஹோலிகிராஸ் பெண்கள் கல்லூரி இருந்தது. அவர்களைப் பார்த்துக் களித்தது தவிர எதுவும் அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்ததே இல்லையே!

காதல் என்பது உள் மனசுக்குத் தெரியும். திட்டம் போட்டு ஆரம்பிக்கிற விஷயமாகத் தெரியவில்லை. அது எந்தக் கணத்தில், எப்படி, எவ்விதத்தில் தோன்றி கிளை பரப்பும் என யாருக்கும் தெரியாது. உடல் ரீதியான விளையாட்டே இப்பொழுதெல்லாம் காதல் எனப்படுகிறது. அழுத்தமான காதல் அனுபவத்தில் இதெல்லாம் சேரவே சேராது. இப்பொழுதெல்லாம் காதல் ஜோடிகளுக்கு தனியாக தைரியம் குவிந்திருக்கிறது. வெளியே காணப்பட வேண்டிய நளினம், நாகரீகம், கூச்சம் மறந்து எல்லை மீறுகிறார்கள்.

இந்த காமம், எதிர் பாலின பரிதவிப்பு, எல்லாம் தாண்டி புரிந்துகொள்ளல்தான் முக்கியமாகப்படுகிறது. இப்பொழுது கடலை போடுவது என புது பிரயோகம் சொல்கிறார்கள். அது ஃபேஸ்புக், அலைபேசியெல்லாம் வந்த பிறகு நடப்பது. முன்பெல்லாம். அழகாய் இருக்கிறாய் என்றுகூட கண்ணுக்கு நேராக சொல்லிவிட முடியாது. இப்போது பெண்களே அழகை ரசிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். சுயபடம் எடுத்துப் போட்டு எத்தனை லைக், எத்தனை பேர் ஹார்ட்டின் விடுகிறார்கள் என பார்க்க ஆசைப்படுகிறார்கள்.

ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கான அவகாசமோ, வாய்ப்போ இல்லாமல் போவதால்தான் பலருக்கும் குடும்ப வாழ்க்கை சிக்கலாகி விடுகிறது. காதலின் மிகப் பெரிய ப்ளஸ் பாய்ண்ட்டாக நான் கருதுவது, இந்த ஒருவருக்கொருவர் சரியாக புரிந்து கொள்ள முடிகிற வாய்ப்பைத்தான். இதை எத்தனை பேர் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது விடை தெரியாத கேள்வி தான்.என் மனைவி சாந்தி திருச்சி யைச் சேர்ந்தவர். அவரது தந்தையார், பெரியாரின் அணுக்கத் தொண்டர்.

என்னை மாப்பிள்ளை பார்க்க முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் வந்தார். எனது மாமனாரும், அவரும் நீண்ட நாள் நண்பர்கள். வேரோடிய நட்பு. மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கப் போகிறோம் என்றதும் அவ்வளவு வேலைகளுக்கு நடுவிலும் புறப்பட்டு வந்து விட்டார். நாங்களும் திருச்சி போனோம். எனக்கு சாந்தியைப் பிடித்திருந்தது. பேரமைதியும், நிறைந்த புன்னகையும் உடையவள். கனவுலகில் வாழும் ஒரு மனிதனோடு சேர்ந்து வாழ்வதென்பது ஆகப்பெரிய சவால்.

எங்களுக்கு திருமணம் நிச்சயமான அன்றிலிருந்து திருமணத்திற்கு முழுதாக எழுபது நாட்கள் இருந்தது. ஒவ்வொரு நாளும் மறக்க முடியாத நாட்கள். எவ்வளவு பேசியிருக்கிறோம். திருமணத்திற்கு பட்டுச்சேலை எடுக்கப் போகவேண்டும்.் சாந்தி யும் சேலை எடுக்க வந்தால் நன்றாகயிருக்கும் என மெல்ல கருத்தை ஓட விட்டேன். அவர்கள் சேலை பார்த்துக் கொண்டிருக்க நாங்கள் ஐஸ் க்ரீம் பார்லரில் புகுந்துவிட்டோம். அந்த நாட்கள் எல்லாமே மனம் ஒன்றிப்போன பொழுதுகள். மெல்லிய புன்னகைக்கும், யதேச்சையான தொடுகைக்கும், பேசப் பேசப் பேசத் தெவிட்டாத பேச்சு.

ஆயிரம் பெண்களுக்குரிய தாய்மையைத் தன் இதயத்துள் ஏற்றுக்கொள்கிற ஆண்தான், ஒரு பெண்ணின் இதயத்துக்குள் இடம் பெறுகிற அருகதையுள்ளவனாகிறான்.ஒரு நாள் விட்டு ஒரு நாள் பேசுவதற்காகக் காத்திருக்கிற பொழுதுகள் பொருள் நிறைந்தவை. இது என் பெண், வாழ்க்கை முழுமைக்கும் உடன் தோழியாக வரப்போகிற பெண்ணோடு இருக்கிறோம் என்பதே எனக்குப் போதுமானதாக இருந்தது. உரிமை
கொண்டாடுதல் அல்ல அது… உரிமை தருதலே அந்த அன்பு! பேசியதெல்லாம் பேசித் தீர்த்த நாள் உண்டா! நீண்டு போன உரையாடல்கள் ஒரு நாளும் அலுப்பைத் தரவில்லையே ஏன்? எத்தனை கடிதங்கள்… மனதில் நினைத்ததையெல்லாம் எழுத முடிந்ததா!

இன்னமும் நாங்கள் எழுதிக்கொண்ட காதல் கடிதங்களை சேகரித்து வைத்து படித்துக் கொண்டிருக்கிறோம். தேடித்தேடி வாங்கித்தந்த பரிசுகள்... அதன் முக்கியத்துவம்… அவையே இன்று வரைக்கும் ஞாபகங்களையும், அன்பையும் கடத்திக் கொண்டிருக்கிற விந்தைதான் என்ன?
அந்தக் காதலில் கொஞ்சமாக அசட்டுத்தனமும், பெரும்பான்மையாக அன்பும் மிகுந்து கிடந்ததுதானே உண்மை!

பட்டுக்கோட்டையிலிருந்து ‘உங்கள் ஜூனியர்’க்காக சென்னைக்கு குடி பெயர்ந்தபோது சாந்தி குடும்பத்தை சிறு குழந்தைகளோடு ஏற்று எனக்கு எழுத இடம் கொடுத்தது எவ்வளவு ெபரிய நற்செயல். இப்பவும் என் ஏற்ற இறக்கங்களோடு கை கொடுப்பது எவ்வளவு பெரிய பேரன்பு! ஒரு நாளும் முணுமுணுத்ததில்லை. அன்புள்ள மனைவியாக, குழந்தைகளுக்கு பாசம் தரும் தாயாக, இன்னொரு அம்மாவாக எனக்கே தரிசனம் தருவது எவ்வளவு கொடுப்பினை!

சகலத்தையும் தாங்கி, சினம் கொள்ளாமல், தீங்கு செய்யாமல் இருக்கும் மனப்பாங்கும் உள்ள பெண் வாழ்க்கையில் வந்ததும் இலக்கியம்தானே!
எங்களுக்கென்று சில கனவுகள் இருந்தன. மகள்கள் சொர்ண ரம்யாவிற்கும், சொர்ண பிரியாவிற்கும் நல்வாழ்க்கை அமைத்துக் கொடுத்தோம். சுயமாகக் காலூன்றி, அன்பு நிறைந்த வாழ்க்கை மேற்கொண்டிருக்கிறார்கள்.

பேரன், பேத்திகளின் பஞ்சுக்கை உரசலில் சந்தோஷம் கொள்கிறோம். முழுமையான சமர்ப்பணம்… முழு தன்னிறைவு… யாருக்கும் புரிவதுதான் இது. காதல்... தொட்டால் தொடரும். தொடாமலும் தொடரும்!

நா.கதிர்வேலன்