அணையா அடுப்பு - 19



அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

பசியைப் போக்குவதே ஜீவகாருண்யம்!

1867ம் ஆண்டு தொடக்கம்.சன்மார்க்க சங்கம் நிறுவி இரண்டு ஆண்டுகள் ஆனது.சத்திய தருமச்சாலை அமைக்க நல்ல இடமாக தேடிக் கொண்டிருந்தார்.
வடலூர் அமைந்தது.இரண்டு நெடுஞ்சாலைகள் கூடும் சிற்றூர் என்பதால் வடலூர் பொருத்தமாக இருக்குமென வள்ளலார் தேர்ந்தெடுத்தார்.
வள்ளலார், வடலூரில் இடம் தேடிக் கொண்டிருந்தார் என்பதை அறிந்த வடலூர்க்காரர்கள் நாற்பது பேர் தங்கள் நிலங்களை இலவசமாகவே தருமச்சாலை அமைக்க தர முன்வந்தார்கள்.

மொத்தம் எண்பது காணி நிலம்.ஆரம்பத்தில் ‘சமரச வேத தருமச்சாலை’ என்றே வள்ளலார் பெயரிட்டார்.பின்னாளில் அதுவே ‘சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை’ என்று பெயர் மாற்றம் பெற்றது.தருமச்சாலை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை, தானே நேரிடையாகச் சென்று செய்தார் வள்ளலார்.எந்தவித முதலீடும் இன்றி வள்ளலார் முன்னெடுத்த தருமப் பணிக்கு பல்வேறு திக்குகளிலிருந்தும் உதவிகள் குவியத் தொடங்கின.
முதலில் தற்காலிக முகாம் போன்று ஒன்று உருவானது.மண் சுவர் கட்டி, அதற்குக் கூரை வேய்ந்தனர்.

எனினும் -நிரந்தரக் கட்டிடத்தில்தான் தருமச்சாலை நடைபெற வேண்டுமென அன்பர்கள் ஆசைப்பட்டனர்.அதற்கான ஏற்பாடுகளிலும் இறங்கினர்.கூரை வேய்ந்த முகாம் தயாராகிக் கொண்டிருக்கும்போதே மக்கள் தாமாகவே முன்வந்து கிணறு வெட்டினர். சூளைக்
காரர்கள் பலரும் செங்கல்லைக் கொண்டுவந்து குவித்தனர்.வள்ளலார் அன்னதானம் தொடங்கப் போகிறார் என்பதை அறிந்ததுமே நாடு முழுக்கவிருந்து அந்த பெருங்காரியத்தில் தாங்களும் பங்கு பெற விரும்புவதாக பலரும் கடிதம் எழுதினார்கள்.

கூடலூரில் வசித்து வந்த துரைசாமி என்பவர், “விழா நாளன்று நடக்கப்போகும் அன்னதானத்துக்காக மூன்று வண்டி நெல்லும், ஒரு வண்டி காய்கனியும் என் பங்கு...” என்று உரிமையாக அச்சேவையை கேட்டு வாங்கிக் கொண்டார்.விழாவின் தொடக்கத்தை விமரிசையாக நடத்த சங்கத்தினர் விரும்பினர்.தொடக்கவிழா அழைப்பிதழ் சங்கம் சார்பாக தயாராகி பல்லாயிரக் கணக்கானோருக்கு அனுப்பப் பட்டது.
சக துறவிகளுக்கு தன் பெயராலேயே ஓர் அழைப்பிதழை தயார் செய்து அனுப்பினார் வள்ளலார்.

23-05-1867, வியாழக்கிழமை அன்று தருமச்சாலை தொடக்க விழா எல்லோரும் விருப்பப்பட்டதைப் போன்று வெகு விமரிசையாக நடந்தது.
அன்னதானம் தொடங்கப்பட்ட போதே தருமச்சாலை விரிவாக்கத்துக்காக கட்டடங்கள் அமைக்க அஸ்திவாரம் அமைக்கப்பட்டது.
சென்னை முதலான பெருநகரங்களிலிருந்து வந்து ஆயிரக்கணக்கில் மக்கள் கூடினர்.

தென்னாற்காடு மாவட்டத்தின் எல்லா சாலையும் வடலூரை நோக்கியே, வள்ளலாரைப் போற்றியே என்று சொல்லுமளவுக்கு சாரை சாரையாக மக்கள் வந்து கொண்டே இருந்தனர்.அவர்களின் வயிற்றுப்பசியைப் போக்க வள்ளலார் அடுப்பில் மூட்டிய தீ, 150 ஆண்டுகள் தாண்டியும் இன்னும் எரிந்து கொண்டே இருக்கிறது.உலகளவில் ஓர் அடுப்பு அணையாமல் இத்தனை ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கிறது என்றால், அது வடலூரில் வள்ளலார் ஏற்றிவைத்த அடுப்பு மட்டுமே.

பல்லாயிரம் பேர் திரண்ட அவ்விழாவில் தன்னுடைய கொள்கை முழக்கமாக ‘ஜீவகாருண்ய ஒழுக்கம்’ என்கிற நூலின் சில பகுதிகளை வாசித்தார் வள்ளலார்.தான், தொடங்கியிருக்கும் தருமச்சாலையின் நோக்கம் என்னவென்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் ஒரு துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டார்.பின்னாளில் ‘ஜீவகாருண்ய ஒழுக்க விளம்பரம்’ என்று பிரபலமான அந்தப் பிரசுரத்தில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடியவை.

“கடவுளின் அருளை பெறுவதற்கான வழியே ஜீவகாருண்ய வழக்கம்.ஏழைகளுக்கு உண்டாகும் பசி என்கிற உணர்வைப் போக்குவதே இந்த ஒழுக்கத்தின் லட்சியம்.அந்த நோக்கத்துடனேயே இந்த சமரச வேத தருமச்சாலை உருவாகி இருக்கிறது.இந்தப் பெரும் பணிக்கு பலருடைய உதவியும் தேவை.அவரவர் தங்களால் முடிந்த வகையில் பொருள் உள்ளிட்ட உதவிகளைச் செய்து, தருமச்சாலையின் சுமைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
நாட்டை ஆளக்கூடிய அரசன், உலகத்தையே வெல்லக்கூடிய வீரன், எல்லா ஆசைகளையும் துறந்த துறவி ஆகியோரே கூட பசி ஏற்பட்டால் மனமும், உடலும் சோர்வடைகிறார்கள். அப்படியிருக்க ஆதரவற்ற ஏழைகளுக்கு பசி நேரும்போது என்ன பாடு படுவார்கள்?

பசி ஏற்பட்டால் உடலின் அத்தனை பாகங்களும் சோர்வடையும்.பசியில்லாத சமூகமே ஆன்ம விளக்கம் பெறமுடியும்...”
ஜீவகாருண்ய விளம்பரத்தில் வள்ளலார் பசி குறித்து சொன்னவற்றின் சுருக்கமே இது.அக்காலத்திலேயே 1000 பிரதிகள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டதாகத் தெரிகிறது.இந்தியப் பண்பாட்டில் பிச்சை பெறுவதற்குக் கூட தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தன.
வள்ளலாரோ அன்னதானம் பெறுவதற்கு எந்த பேதமுமில்லை என்று ‘ஜீவகாருண்ய ஒழுக்கம்’ என்கிற நூலில் எழுதியிருக்கிறார்.

“பசியினால் வருந்துகிறவர்கள் எந்தத் தேசத்தவராயினும், எந்தச் சமயத்தாராயினும், எந்தச் சாதியாராயினும், எந்தச் செய்கையராயினும், அவர்களுடைய தேச ஒழுக்கம், சமூக ஒழுக்கம், சாதி ஒழுக்கம், செய்கை ஒழுக்கம் முதலானவைகளைப் பேதித்து விசாரியாமல் எல்லாச் சீவர்களிடத்திலும் கடவுள் விளக்கம் பொதுவாய் விளங்குவதை அறிந்து பொதுவாகப் பார்த்து அவரவர் ஒழுக்கத்துக்குத் தக்கபடி அவர்கள் பசியை நிவர்த்திப்பதே ஜீவகாருண்யம்...” என்கிறார்.

உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுமே வடலூர் தருமச்சாலையில் சமம் என்கிற பேருண்மை இதன் மூலம் விளங்குகிறது அல்லவா?
மாமிசம் உண்ணும் பழக்கம் கொண்டவர்களை சன்மார்க்க சங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்கிற வழக்கத்தைக் கொண்டிருந்தார் வள்ளலார்.
ஆனால் -புலால் உண்போரும் கூட பசியென்று நாடி வந்தால் தருமச்சாலையில் உணவளிக்க வேண்டும் என்றார்.

இன்றும் கூட நாள்தோறும் மதியம் மற்றும் இரவில் அங்கே ஏழைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. வள்ளலாரை வழிபட வருவோரும் பசியாறலாம்.தனி மனிதர் ஒருவரின் முயற்சி யால் நூற்றாண்டு காலமாக பல கோடிப் பேர் பசியாறியது என்பது வரலாற்றிலேயே வடலூரில் மட்டுமே சாத்தியமானது.அந்தச் சாதனைக்கு சொந்தக்காரர் வள்ளலார்.

(அடுப்பு எரியும்)

தமிழ்மொழி

ஓவியம்: ஸ்யாம்