பத்திரிகை ஆசிரியர் ,ஆன்லைன் ஃபேஷன் ஸ்டோர் ஓனர், தோட்டக்காரர்,தயாரிப்பாளர் நடிகை சமந்தா



திருமணத்துக்குப் பிறகு டாப் கியரில் சிக்ஸர் அடிக்கிறார் நம்ம பல்லாவரம் பொண்ணு சமந்தா. ஹீரோயின், தயாரிப்பாளர் என சின்ன சர்க்கிளில் சுழன்றவர் இப்போது அடுத்தடுத்த கட்டங்களில் பாய்ச்சல் காட்டுகிறார். லேட்டஸ்ட்டாக ‘சாகி’ என்ற பெயரில் ஆன்லைன் ஃபேஷன் ஸ்டோர் ஆரம்பித்திருக்கிறார். தவிர உபாசனா காமினேனியின் ‘யுவர் லைஃப்’ ஆன்லைன் உடல் ஆரோக்கிய பத்திரிகையின் கெஸ்ட் எடிட்டராகவும் புன்னகைக்கிறார் சமந்தா.

ஹைதராபாத் வீட்ல ரூஃப் கார்டன் அழகா இருக்கே..?

தேங்க்ஸ். இந்த ஊரடங்கு காலத்துல பலரும் ஏதாவது சமையல், டான்ஸ், பாடுறதுனு விதவிதமான விஷயங்கள் பண்ணினாங்க. நான் அப்படி எதுவும் பண்ணல. இந்த பேன்டமிக் பீரியட்ல ஃபேமிலியோட (கணவர் ஃபேமிலிதான்!) நிறைய நாட்கள் இருக்கற சந்தர்ப்பம் கிடைச்சது. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க முடிஞ்சது. ஒரு வகையில இட்ஸ் கிரேட் டைம்.

லாக்டவுன் அப்ப சூப்பர் மார்க்கெட் எல்லாம் மூடியிருந்தாங்க. அடுத்து எப்ப திறப்பாங்கனு யாருக்குமே தெரியாது. ஸோ, மளிகை, காய்கறி பொருட்களுக்கு என்ன பண்றதுனு தெரியல. அடுத்த சப்ளை கிடைக்கும் வரை, வீட்ல இருக்கற மளிகைப் பொருட்களை லிஸ்ட் போட்டேன். ஃபுட் அண்ட் ஹெல்த்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தேன்.

அப்பதான் வீட்டுத் தேவைக்கான காய்கறிகளை நாமே பயிரிடலாம்னு தோணுச்சு. வீட்ல கார்டன் அமைச்சேன். கேரட்ல இருந்து நிறைய காய்கறிகள் விதைச்சேன். எங்க கார்டன் பத்தி இன்ஸ்டால அப்டேட் பண்ணிட்டே இருந்தேன். உண்மையை சொல்லணும்னா வெற்றி, தோல்வியை பொருட்படுத்தாம கடினமா உழைக்கறதுதான் இன்பம்னு இந்த லாக்டவுன்ல தெரிஞ்சுக்கிட்டேன்.

மேரேஜுக்குப் பிறகும் டயட் ஃபாலோ பண்றீங்களா?

எஸ்! டயட், யோகா, தியானம்... இந்த மூணுமே ஒருத்தரோட வாழ்க்கையை, லைஃப் ஸ்டைலை மாத்தி அமைக்கும். என் டயட் ரொம்ப சிம்பிள். சைவம் மட்டும்தான். பால் பொருட்களை சாப்பிடுறதில்ல. நிறைய காய்கறி, பழங்கள் எடுத்துக்கறேன். ரொம்பவே பேஸிவ் ஃபுட்தான் சாப்பிடறேன். பேன்டமிக் டைம்ல மெடிட்டேஷன் கத்துக்கிட்டேன். யோகாவும் தியானமும் இப்போ ஸ்ட்ரெஸ் பஸ்டரா இருக்கு.

உங்க டாட்டூஸ் சீக்ரெட்ஸ்..?

எதுவுமில்ல. மூணு டாட்டூஸ் இருக்கு. இப்ப லேட்டஸ்ட்டா வலது கைல டபுள் ஆரோ வரைஞ்சிருக்கேன். ‘கிரியேட்டிவ் யுவர் ஓன் ரியாலிட்டி’னு அர்த்தம். சைதன்யாவும் அவரோட வலது கையில இதே போல டாட்டூ வச்சிருப்பார். இந்த டாட்டூ எங்களுக்கு ரொம்ப ஸ்பெஷல்.
அப்புறம், வலது விலா பக்கம் chayனு அவர் பெயரை எழுதி வச்சிருக்கேன். மூணாவது டாட்டூ, என் கழுத்துக்கு பின்னாடி இருக்கறது... ‘ஒய்.எம்.சி.’ என்பதை தெலுங்கில பச்சை குத்தினேன்.

‘விண்ணைத்தாண்டி வருவாயா’வின் தெலுங்கு ரீமேக்கான ‘யே மாயா சேஸவ்’ (ஒய்.எம்.சி.) படம்தான் என் வாழ்க்கையையே மாத்தி அமைச்சது. இன்னிக்கு ஹைதராபாத்ல ஒரு அருமையான லைஃப், ஃபேமிலி, சந்தோஷம் எல்லாம் கிடைக்க அந்த ஒய்.எம்.சி.தான் காரணம். அதுக்கு தேங்க்ஸ் சொல்லிக்கற மாதிரி வரைஞ்சு வச்சிருக்கேன்.

எந்த ஜானர் படங்கள் பண்ண விரும்புறீங்க..?

கௌதம்மேனன் படத்துல நடிக்கறதுக்கு முன்னாடி ரொமான்டிக் பண்றது கஷ்டம்னு நினைச்சிருந்தேன். அப்புறம் காமெடி கேரக்டர்கள்ல நடிக்கறதுதான் சிரமம்னு தோணுச்சு. ஆக்‌ஷனையும் அதுபோலதான் நினைச்சேன். ஆனா, இதுவரை பண்ணின படங்களைப் பார்க்கும்போது எல்லாமும் ட்ரை பண்ணியிருக்கேன். இந்த ஜானர்தான் பிடிக்கும்... இதைத்தான் பண்ண விரும்பறேன்னு எதுவும் இல்ல. எல்லாமே எக்ஸ்பரிமென்டலா எடுத்து பண்ணிட்டிருக்கேன். இன்னும் பண்ணுவேன்.

மை.பாரதிராஜா