ஆன்லைன் கூலிப்படைகளை உருவாக்கிய ப. ஜா. க.!



Face B(JP)ook-மினி தொடர் 3

கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி ராஜஸ்தானின் கோட்டா நகரில் பாஜக ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்தப் பேரணி சமூக வலைத்தளங்களில் இயங்கும் பாஜகவின் தன்னார்வலர்களுக்கானது என்பதுதான் விசேஷம். அப்போது பாஜகவின் தலைவராக இருந்த அமித்ஷா பேசும்போது, ‘‘நாம் மக்களிடம் எடுத்துச் செல்ல விரும்பும் எந்தத் தகவலையும் நம்மால் எளிதாக எடுத்துச் செல்ல இயலும்.

அது இனிப்போ, புளிப்போ, உண்மையோ பொய்யோ, நம்மால் அதை நாம் விரும்பிய வண்ணம் மக்களிடம் சேர்க்க இயலும்!’’ என்று முழங்கினார்.
அமித்ஷாவின் இந்தப் பேச்சை அதற்கு ஒரு வருடத்துக்கு முந்தைய இந்திய அரசியல் சூழலை வைத்து யோசித்தால் சில விஷயங்கள் பிடிபடும்.
அப்போது இந்தியாவின் மிக முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் கேந்திரமான உத்தரப்பிரதேசத்தின் தேர்தல் காலம்.

2017ம் ஆண்டின் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் தன்னுடைய ஆன்லைன் ஆதரவாளர்கள் மற்றும் ஆன்லைன் கூலிப்படைகள் என மொத்தம் முப்பத்திரண்டு லட்சம் பேரை பாஜக திரட்டியது. பல்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்த இந்தக் கூட்டத்துக்கு தினமும் காலை எட்டு மணிக்கு, ‘உண்மையை அறிவோம்’ என்ற பெயரில் ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் செல்லும்.

பெயர்தான் ‘உண்மையை அறிவோம்’; மற்றபடி அந்தத் தகவலில் மருந்துக்கும் உண்மை இருக்காது. முழுக்க முழுக்க ஜோடிக்கப்பட்ட பொய்கள், தவறான தகவல்கள், அரைகுறை தகவல்கள், மறைத்தும் குறைத்தும் எழுதப்பட்டவைதான் இருக்கும். விஞ்ஞானபூர்வமான ஆய்வு என்ற பாவனையில் சில இருக்கும். சில போட்டோஷாப்களாக இருக்கும். சில மார்ஃபிங், எடிட்டிங் செய்யப்பட்ட படங்களாக இருக்கும். புள்ளிவிவரங்கள் போல் சில ஜோடிக்கப்பட்டிருக்கும்.

இப்படியான வாட்ஸ்அப் மெசேஜ்கள் எப்போதும் பாஜகவின் தலைவர்களை உயர்வாகச் சொல்வது, எதிர்க்கட்சிகளை மோசமாகச் சித்தரிப்பது, அதாவது எந்த எல்லைக்கும் போய் ஆபாசமாக, அசிங்கமாக, அநாகரிகமாகச் சித்தரிப்பது வரை இருக்கும். இப்படி தனக்கு வரும் மெசேஜ்களை அவர்கள் மற்றவர்களுக்குப் பரப்பவேண்டும். குறிப்பாக, தனிநபர்களுக்கு அனுப்புவதைவிட கொத்துக் கொத்தாக இருக்கும் குரூப்களுக்கு அனுப்ப வேண்டும்.

இப்படி, ஒரு ஆன்லைன் கூலிப்படை ஜோடித்த பொய்தான், அப்போதைய உத்தரப்பிரதேச முதல்வரும் சமாஜ்வாடி கட்சித் தலைவர்களில் ஒருவருமான அகிலேஷ் யாதவ், தன் தந்தையான முலாயம் சிங் யாதவை அறைந்துவிட்டார் என்ற வாட்ஸ்அப் வதந்தி.
இந்த வதந்தி, தீ போலவே பரவி அமித்ஷா வரை சென்றது.

எதிர்க்கட்சித் தலைமை பெயர் நாறினால் தங்களுக்கு லாபம்தானே? ஆனால், அமித்ஷா இதைச் செய்ய வேண்டாமெனச் சொன்னார்.
அதிர்ச்சியடைய வேண்டாம். அவர் சொன்ன விதத்தைக் கவனியுங்கள். ‘‘இப்படி வதந்தி பரப்புவது உருப்படியான வேலைதான். ஆனால், இதைச் செய்யாதீர்கள் (கூட்டம் ஆரவாரம்). நான் சொல்வது புரிகிறதா? இதைச் செய்யாதீர்கள்...’’

அவர் தொடர்ந்தார்: ‘‘நம்மிடம் இதைச் செய்ய 32 லட்சம் பேர் இருக்கிறார்கள்...’’ என்றார். கூட்டம் மீண்டும் ஆரவாரம். தலைவர் தங்களுக்கு லாபம் தரும் விஷயத்தைச் செய்யாதே என்று சொன்னால், தொண்டர்கள் அதைச் செய்ய வேண்டும் என்பதைப் புரியாதவர்களா சங்பரிவார கும்பல்?! தலைவரின் ஆசீர்வாதத்தோடு முன்னிலும் வேகமாக, உற்சாகமாக செய்யத் தொடங்கினார்கள்.

வாட்ஸ்அப்பின் சர்வதேசத் தலைவரான கிரிஸ் டேனியல்ஸ் சமீபத்தில் ஓர் நேர்காணலில், வாட்ஸ்அப் ‘end-to-end encrypted’ வசதியை இரண்டு கோடிப் பேர் பயன்படுத்துவதாகத் தெரிவித் தார். வாட்ஸ்அப்பின் 90% மெசேஜ்கள் தனிநபரிடமிருந்து இன்னொரு தனிநபருக்குச் செல்வதுதான். மேலும் பல வாட்ஸ்அப் குரூப்களில் பத்து பேருக்கும் குறைவாகவே இருக்கிறார்கள்.

அப்படியானால், இத்தனை கோடிப் பேரைச் சென்று சேரும் ஒரு மெக்கானிசத்தை எவ்வளவு வெற்றிகரமாகச் செய்திருக்கிறார்கள் என்பதை வியக்காமல் இருக்க இயலவில்லை. உலகிலேயே சமூக வலைத்தளங்களை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தும் கட்சி பாஜகதான் என்பது அதன் அவப்புகழ்களில் ஒன்று.

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது அவப்புகழ் அல்ல. ஆனால், தங்களது ஆபாச - கெட்ட - முறைகேடான பிரசாரத்துக்கு அதை யார் பயன்படுத்தினாலும் அதனால் விளையும் புகழும் அங்கீகாரமும் அவமான கரமானதுதான். இஸ்லாமாபோபியா என்ற சொல்லுக்கு இஸ்லாமியர் மீதான அச்ச உணர்வு என்பது பொருள்.

சங் பரிவார கும்பலின் ஆதார குணம் இந்த போபியாவும் இஸ்லாமியர் மீதான வெறுப்புணர்வும். இதை அரசியல் செயல்திட்டமாகவே அவர்கள் பல பத்தாண்டுகளாக செய்து வருகிறார்கள்.

இன்று அதற்கான அறுவடையும் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. முகநூல், வாட்ஸ்அப் போன்ற வலைத்தளங்களில் இந்த வெற்றிகரமான வெறுப்புப் பிரசாரத்தைத்தான் கிட்டத்தட்ட ஒரு நிகர் ஊடகம் போலவே செய்துகொண்டிருக்கிறது பாஜக.

இன்று ஃபேஸ்புக்கின் கைகளில்தான் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என்ற இரண்டு மிகப் பெரிய சமூக ஊடகங்களும் இருக்கின்றன.

இந்த மூன்றுமே தத்தம் ஊடக வகைமையில் முற்றுரிமை (Monopoly) உள்ளவை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இன்று சர்வதேச அளவில் ஃபேஸ்புக்கின் நடுநிலைத்தன்மை குறித்தும், தகவல்களை அது தவறாகப் பயன்படுத்துவது பற்றியும் தொடர் புகார்கள் எழுந்தவாறு இருக்கின்றன. கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா விவகாரமே இதன் சாட்சி.

இன்னொருபுறம் பாஜகவினர் இப்படி நரேந்திர மோடி மற்றும்  தங்கள் அமைப்பினர் பற்றி பரப்பும் பரப்புரைகளில் கன்டென்ட் மார்க்கெட்டிங், தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்தியாவின் மதிப்புமிக்க ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் போன்ற தொழில்முறை நிபுணர்களையும் பயன்படுத்துகிறார்கள்.

சரி!ஃபேஸ்புக்கில் பாஜ கவுக்கு எதிராக வெளி யிடப் படும்செய்தி களை என்ன செய்கிறார்கள்?

கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி ‘தி கேரவன்’ என்ற ஆங்கிலப் பத்திரிகை தனது ஆன்லைன் பதிப்பில், பாஜக தலைவரை விமர்சித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அமித்ஷா தனது தேர்தல் மனுவில் தனது சொத்து பற்றிய விவரங்களை தவறாகக் கொடுத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு அக்கட்டுரையில் இருந்தது.

‘கேரவன்’ தனது இந்தக் கட்டுரையை ஃபேஸ்புக்கில் அதிக வாசகர்களிடம் பூஸ்ட் செய்ய விரும்பியது. பொதுவாக, வணிக அமைப்புகள் தாங்கள் மக்களிடம் போய் சேர்க்க விரும்பும் பொருட்களை இப்படி முறைப்படி ஃபேஸ்புக்கில் பணம் கட்டி, பூஸ்ட் செய்யலாம். ‘கேரவன்’ என்ற சர்வதேச நிறுவனம் பல வருடங்களாக ஃபேஸ்புக்குடன் வணிக உறவைக் கொண்டுள்ளது. ஆனால், இந்தக் குறிப்பிட்ட கட்டுரையை ஃபேஸ்புக் தனது தளத்தில் வெளியிட அனுமதிக்கவேயில்லை!

நீண்ட நெடிய போராட்டத்துக்கும் பல்வேறு புகார்களுக்கும் தார்மீக நெருக்கடிகளுக்கும் பிறகே ஃபேஸ்புக் பதினொரு நாட்கள் தாமதமாக அக்கட்டுரையை வெளியிட்டது. அக்கட்டுரைக்கு அப்போது அரசியல் சூழலில் முக்கியத்துவமே இல்லாமல் போய்விட்டது. இது ஓர் உதாரணம். இது போல் பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. ஃபேஸ்புக் எப்படி பாஜகவுக்கு எதிரான கருத்துகளை அவை உண்மை என்றாலும் மறைக்கிறது என்பதை அடுத்து பார்ப்போம்.

(தொடர்ந்து தேடுவோம்)

இளங்கோ கிருஷ்ணன்