கலைஞரையும் ஜெயலலிதாவையும வேறு பரிமாணத்தில் புகைப்படம் எடுத்தேன்...



இலக்கியவாதிகளை ஆவணப்படுத்தினேன்...இதோ இப்பொழுது சினிமாவில் பயணிக்கிறேன்...!

புன்னகைக்கிறார் ஒளிப்பதிவாளர் ‘wide angle’ ரவிசங்கரன்


‘‘பக்கத்து வீட்டில் ஒரு நண்பரிடம் கேமரா இருந்தது. போட்டோகிராஃபி மேல் ஆர்வம் வந்து என்ன செய்றதுன்னு தெரியாமல் அலைஞ்சுக்கிட்டு இருந்த காலத்தில் எனக்குக் கிடைச்ச புதையல் அது. இன்னிக்கு என் தோள் மேல் ஏறி நிக்கிற அத்தனை நுட்பங்களுக்கும் வண்ணங்களுக்கும் முதல் துளி வெளிச்சம் கொடுத்தது அந்த நிக்கான் கேமராதான்.
‘நீ போட்டோகிராஃபராக இருந்தாலும் தொழில் தெரிஞ்சவங்க உன்னைத் தேடணும். ஆத்மாவையும், மனசையும் ஒழுங்கு பண்ணி ஒரு விஷயத்தில் போட்டாதான் முழுமை வரும். அப்படி போட்டோகிராஃபில இறங்கு. எதில் இருந்தாலும் அதில் பெஸ்ட்டாக இருக்கணும்’ என்று சொன்ன அப்பா காமராஜுலு, பத்திரிகையில் நியூஸ் எடிட்டராக இருந்தார்.

‘இந்தியா டுடே’ பத்திரிகையில் ரகுராயின் படங்களை வரிசையாகப் பார்த்தும் நம்ம கிட்டே இத்தனை தெளிவு ஏன் இல்லைன்னு தோணும்.
அப்பறம்தான் ‘wide angle’ ரவிசங்கராக புது வடிவம் எடுத்தேன். அதற்கடுத்து பி.சி.ராமின் சிஷ்யனாக புறப்பட்ட பயணமே ஒளிப்பதிவாளராக அமைந்தது...” தடதடவெனப் பேசுகிறார் ஒளிப்பதிவாளர் வைடு ஆங்கிள் ரவிசங்கரன். பத்திரிகைப் பரப்பில் புகழ் பெற்ற புகைப்படக்காரராக இருந்து புரமோஷன் ஆகி சினிமாவுக்குப் போனவர்.

புகைப்படக்காரராக உங்களின் சிறப்பு உச்சபட்சமானது…
ஒவ்வொரு புகைப்படமும் கட்டுரை அளவுக்கு செய்திகளைச் சொல்லணும்னு நினைப்பேன். அது முடிஞ்சாலே சந்தோஷம்.
எனக்கு ரகுராய் புகைப்படங்களைப் பார்த்து பிரமிப்பு. ஒவ்வொரு படமும் அவ்வளவு செய்தி சொன்னது. அந்த போட்டோ ஏராள அனுபவம் தரும். நிறைய புரிபடும். சமயங்களில் வேற ஒரு இடத்திற்கு நம்மை கிடுகிடுனு தூக்கிட்டுப்போயிடும்.

நல்ல புகைப்படங்கள் நினைவுகளைக் கிளறும். நிறைய எழுத்தாளர்களை ஒரு தொகுப்பாக படம் எடுத்ததும், அதை தமிழ்ச் சமூகம் கொண்டாடியதும் ரொம்ப சந்தோஷம். கலைஞரின் முக்கியமான படங்களை, வேறு வடிவத்தில் நான் எடுத்தேன். அய்யாவுக்கே அந்தப் படங்கள் பிடித்திருந்து என்னைப் பாராட்டியது இன்னும் எனக்கான அழகிய நினைவு. ஜெயலலிதா மேடம் ‘எனக்காக போட்டோகிராஃபராக மாறிவிடுகிறீர்களா’ என நான் எடுத்த அவரின் புகைப்படத்தைப் பார்த்து விட்டுக் கேட்டார். நான் என் பிற விருப்பங்களைச் சொல்லி மறுத்துவிட்டேன்.

இருந்திருந்தால் கொஞ்சம் பணம் சேர்த்திருக்கலாம். ஆனாலும் போட்டோகிராஃபியையும், ஒளிப்பதிவையும் தொடர்ந்திருக்க முடியாதில்லையா! நான் எடுத்த அவரின் புகைப்படம் அதிமுக அலுவலகத்திலும், போயஸ் கார்டனில் வேதா நிலையத்திலும் இருக்கிறது. அதுவும் ஒரு மனநிறைவான இடம்தான். ஒரு ஃப்ரேமில் வாழ்க்கையை சிறப்பாக பதிவு செய்யும் ஒரு புகைப்படம், சிறந்த இலக்கியப் படைப்புக்கு நிகரானது.
அடுத்து ஒளிப்பதிவுக்கு எப்படி தயாரானீங்க..?

எனக்கு இது எல்லாமே ஒண்ணுதான். மனசுக்குப் பிடிச்சிருந்தால் எந்தப் பக்கமும் போய் வேலை பார்க்கலாம்னு தோணும். என் புகைப்பட காலரியைப்  பார்க்க வந்திருந்த பி.சி.ராம்கிட்டேயே நேரிடையாகக் கேட்டேன். முதலில் ஆச்சரியப்பட்டுட்டு அவர் எனக்கு வழிகாட்டினார். நிறைய சலுகைகளோடு எனக்கு தொழில் சொல்லிக் கொடுத்தார். அவர் மாதிரி எனக்கு துணையாக நின்ற ஒருத்தரை இன்னும் சந்திக்கலைங்கிற உணர்வுதான் இப்பவும் இருக்கு.

நேரடியாக எதையும் வகுப்பு எடுக்காமல், எல்லாத்தையும் குறிப்பால் உணர்த்தியவர். அவரிடம் ஒர்க் பண்ணியது போக, அவர் சிஷ்யர்கள்கிட்டேயும் அனுப்பி எனக்காக உதவினார். அவர்கிட்டேயிருந்துதான் அடுத்த கட்டம், அடுத்த டெக்னாலஜியில் எப்படி கவனமாக இருக்கிறதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.

இன்னும் சொல்லப்போனால் சொல்லித் தெரிஞ்சுக்கிறது கூட இல்லை. பார்த்துப் பார்த்து தெரிஞ்சுக்கிறது. மூளைக்கு மட்டுமில்லை, இதயத்திற்கும் போதிக்கிறவர்தான் நல்ல டீச்சர். அப்படி ஒருத்தர் பி.சி. சார். என் தொழிலை மாற்ற உதவியாக எனக்கு பத்து லட்சம் கொடுத்து உதவிய மலேசியாவிலிருந்த மறைந்த மாமா டாக்டர் நந்தகோபாலனை மறக்கவே முடியாது.

ஒளிப்பதிவை உங்க வகையில் எப்படி புரிய வைப்பீங்க..?

ஒரு நல்ல ஸ்கிரிப்ட்தான் கேமராவோட தன்மையைத் தீர்மானிக்கிது. என்னோட முதல் படமான ‘திருட்டுப் பயலே’வை ஆஸ்திரேலியாவில் ஷூட் பண்ணியபோது available lightsதான். சினிமாவுக்கு முக்கியமான வேண்டுதல் டைரக்டருக்கும், கேமராமேனுக்குமான புரிதல். பிரமாதமான அலைவரிசை இருந்தால் அது படத்திலேயே ரொம்ப வெளிப்படையாகத் தெரியும். நல்ல கதையை இயக்குநர்கள் பிடிச்சிட்டாங்கன்னா அது இயல்பாக அவங்ககிட்டேயிருந்து நமக்கும் வந்து அப்படியே வழிநடத்தும்.

மிஷ்கின் சாரோட ‘பிசாசு’ படத்தில் வேலை பார்த்ததெல்லாம் சிறப்பான அனுபவம். அந்த மாதிரி அமைகிற படத்தில் வேலை செய்யும்போது நம்மகிட்டேயிருந்து நல்ல விஷயங்கள், தானாக வெளிவரும். அதே மாதிரி இப்போ இயக்குநர் வஸந்தின் ‘சிவரஞ்சனியும், இன்னும் சில பெண்களும்’ ரொம்பவும் கவனம் செலுத்தி செய்த படம்.

இயக்குநர் கணேஷ்பாபு இயக்குதலில் ‘கட்டில்’னு ஒரு படம் செய்திருக்கிறேன்.
அடுத்தடுத்து இரு படங்கள் செய்கிறேன். லாக்டவுன் முடிச்சு சில நல்ல மாற்றங்களும், என் படங்களும் வருகிற சூழல் இருக்கு. நல்ல டைரக்டர்கள் ரசனையோடு வர்றாங்க.

ஒவ்வொரு நாளும் சினிமாவில் புதுமை கூடிட்டே போகுது. கண்ணுக்கு முன்னாடி சடசடன்னு மாற்றங்கள் வந்துகிட்டே இருக்கு. இனிமேல் VFX ஸ்டூடியோவோடு சேர்ந்து படத்தயாரிப்பு நிறுவனம் இருந்தால்தான் நிலைச்சு நிற்க முடியும். அப்படி இருந்தால் லொகேஷன் போகாமல், எந்த இடத்தையும் அதன் அழகையும், பிரம்மாண்டத்தையும் ஸ்டூடியோவுக்குள்ளேயே கொண்டு வந்திடலாம். அப்படியும் ஒரு காலம் கண்ணுக்கு எதிரே வந்து நிற்கப்போகுது.

வாழ்க்கையைப்பத்தி என்ன தோணும்..?

இந்த கொரோனா காலத்தில் நிறைய புதிர்கள் விடுபட்டிருக்கு. உடம்பு மேலே அக்கறை கூடி, எல்லார்கிட்டேயும் அன்பு கூடத்தொடங்கியிருக்கு.
முன்னாடி மருத்துவமனை, சிறைச்சாலை, சுடுகாடு இதில்தான் வாழ்க்கையைப் பற்றிய பயமும், முதிர்ச்சியும் கிடைக்கும்னு சொல்வாங்க.
ஆனால், லாக்டவுனில் எல்லாத்தையும் கண்ணுக்கு முன்னாடி எல்லாரும் பார்த்திட்டோம். அது கூட நல்லதுக்குன்னு எடுத்துக்கிட்டு தொடர வேண்டியதுதான்.

துணையாய், இன்னும் தோழியாய் மனைவி விசாலாட்சியும், வழிநடத்த அம்மா சுதர்சனாவும், கிட்டத்தட்ட நண்பர்கள் மாதிரி மகன்கள் அஸ்வினும், அவினாஷும் இருக்கிறார்கள். சின்னஞ்சிறிய அன்புலகத்தில் இருந்துகிட்டு இருக்கிறதுதான் எனக்கான பெரிய ஆதாரம்.

நா.கதிர்வேலன்