விநாயகர் ஊர்வலமும் சர்ச்சையும்!



இன்று, நேற்றல்ல. கடந்த பல ஆண்டுகளாகவே தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலமும் சர்ச்சையும் ஒன்றுக்கொன்று பின்னப்பட்டே கிடக்கின்றன. இந்தமுறை கொரோனா ெதாற்று காரணமாக விநாயக சதுர்த்தி ஊர்வலத்தை நடத்த தடை விதித்திருக்கிறது தமிழக அரசு.
ஆனால், தடையை மீறி ஊர்வலம் நடத்தப்படும் என்கின்றன இந்து அமைப்புகள். இதற்கென விநாயகர் சிலைகள் ரகசியமாக தயார் செய்யப்பட்டு வருவதாக செய்திகள் வருகின்றன.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொேரானா அதிகரித்து வரும் இந்தச் சமயத்தில் விநாயகர் ஊர்வலம் அவசியம்தானா? இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியத்திடம் கேட்டோம்.  ‘‘கண்டிப்பாகத் தேவை. ஏன்னா, எந்தத் தடைகள் ஏற்பட்டாலும் விநாயகரை வணங்கினால் அந்தத் தடைகள் நீங்கும்னு மக்கள் நம்பறாங்க. ஒரு தொழில் தொடங்கணும்னாலும் ஒரு புதிய கணக்கை ஆரம்பிக்கணும்னாலும் பிள்ளையார்சுழி போடுறது நம்மவர்கள் வழக்கம்.

இன்னைக்கு இந்தக் கொரோனாவால நாடு முழுவதும் மக்கள் மனக்குமு றல்ல இருக்காங்க. அவங்களுக்கு ஒருவடிகாலாக விநாயகர் சதுர்த்தி வழிபாடு இருக்கும். மக்கள் எல்லாம் சேர்ந்து வழிபாடு நடத்தும்போது கொரோனா இந்தத் தேசத்தை விட்டு நிச்சயம் அகலும். அதனாலதான் நாங்க, ‘விநாயகரை வழிபடுவோம்… கொரோனாவை விரட்டுவோம்’னு மக்கள்ட்ட சொல்லிட்டு வர்றோம்.

கொரோனாவால அரசின் 144 தடைஉத்தரவு இருக்குது. அந்தத் தடையினால் அஞ்சு பேர் வரை ஓர் இடத்துல கூடலாம்னு இருக்கு. அதனால, ஒரு இடத்துல அஞ்சு பேர் சேர்ந்து வழிபடுவாங்க. அவங்க ஒரு வண்டியில விநாயகரை எடுத்திட்டு வந்து கடல்ல கரைப்பாங்கனு நாங்களே முடிவெடுத்து தலைமைச் செயலகத்துல கூட்டம் நடந்தப்ப சொன்னோம். அரசு சொல்லுக்கு நாங்க கட்டுப்படுறோம். ஆனா, விநாயகர் சிலை வைக்கவேண்டாம்னு சொல்லாதீங்கனு சொன்னோம்.

ஆனா, மறுநாள் விநாயகர் வழிபாட்டிற்குத் தடைனு சொன்னாங்க. அதனால, தடையை மீறிப் போவோம்னு சொல்றோம். எப்பவும் தமிழ்நாடு முழுவதும் ஒன்றரை லட்சம் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்வாங்க. அதேமாதிரி இந்தமுறையும் நடத்துவோம். இப்ப டாஸ்மாக் கடையில் இல்லாத கூட்டமா சொல்லுங்க? அதுக்கெல்லாம் அரசு அனுமதி கொடுத்திருக்கே… அங்க வராத  கொரோனாவா?

அடுத்து கிறிஸ்துவ, முஸ்லீம் பண்டிகைகளை நடத்த எந்தவித தடையும் அரசு சொல்லல. ஒரிசாவில் பூரி ஜெகந்நாதர் ஆலயத் திரு
விழாவை எப்படி கட்டுப்பாடுடன் நடத்தணும்னு அங்குள்ள அரசு சொன்னது. அதன்படி தேரோட்டமும் திருவிழாவும் நடந்தது.
அதுமாதிரி நீங்க வழிகாட்டுங்கனு கேட்குறோம். ஆனா, வழிபாடே கூடாதுனு சொல்லக் கூடாது’’ என்கிறார் காடேஸ்வரா சுப்பிரமணியம்.

இந்நிலையில், விநாயகர் ஊர்வலகத்திற்கு தடைவிதிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர் ‘கோவை மக்கள் ஒற்றுமை மேடை’ அமைப்பினர். அதன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான வழக்கறிஞர் வெண்மணியிடம் பேசினோம். ‘‘இங்க கடவுளை முன்னிலைப்படுத்துதல் என்பது வெறும் வாக்கு வங்கிக்காக மட்டுமே செய்யப்படுது.

தமிழகத்துல உள்ள எல்லா கட்சிகளுக்கும் ஒரு தனித்தன்மையும் அடையாளமும் இருக்கு. இந்துத்துவம் பேசுகிற அமைப்பிற்கு எந்தவித அடையாளமும் இல்லாததால அவங்க தங்கள் அடையாளமா விநாயகரைக் கொண்டு வர்றாங்க. இந்த லாக்டவுன் மார்ச் 24ல் இருந்து இப்ப வரை இருந்துட்டு இருக்கு. ஊரடங்கு இருக்கக்கூடிய சூழல்ல பல மாவட்டங்கள்ல கொரோனா பரவி வருவதும், சென்னை அபாயக் கட்டத்தைக் கடந்து வந்திருப்பதும் செய்திகள்ல பார்க்கறோம்.

இந்நிலையில விநாயகர் சதுர்த்தியை பொது இடத்துல கொண்டாடுறதால கொரோனா தொற்று ஒரு சமூகப்பரவலாக மாறும் அபாயம் இருக்கு. பொது இடங்களில் ஒரு சிலை வைக்கப்பட்டா அங்க மக்கள் கூடுறதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. இன்னைக்கு அரசு சொல்லும் நிபந்தனைகளைக் கடைப்பிடிப்போம்னு சொல்லும் இதே இந்து முன்னணிதான் கடந்த காலங்கள்ல எதையும் கடைப்பிடிச்சதில்ல என்பதற்கு நிறைய உதாரணம் இருக்கு.

அதனாலதான், 2018ல் அரசு தெளிவான ஒரு வழிகாட்டுதல் அறிக்கையை அரசாணையாக வெளியிட்டாங்க. அதுல ஏறக்குறைய பதினாறு விதிமுறைகளும், நிபந்தனைகளும் சொல்லியிருந்தாங்க. இதுல, விநாயகர் சிலையை பத்தடிக்கு மேல் அமைக்கக்கூடாதுனு எல்லாம் இருக்கு. ஆனா, இவங்க எதையும் கடைப்பிடிக்கமாட்டாங்க.

காவல்துறையின் தடையை எதிர்த்து நீதிமன்றத்துக்குப் போனப்பதான் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வந்தது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் நீர்நிலைகள்ல பச்சை களிமண் கொண்ட விநாயகரைக் கரைக்கலாம்;  சுடு களிமண்ணிலோ, பிளாஸ்டர் ஆஃப் பாரிஸிலோ செய்யப்பட்ட விநாயகரை கரைக்கக்கூடாதுனு தடை விதிச்சது.   

பல நீதிமன்ற தீர்ப்புகளும் நீர்நிலைகள்ல ஆக்கிரமிப்புகளை உருவாக்கக்கூடாதுனு சொல்லியிருக்கு. ஆனா, இவங்க விநாயகர் சிலைகளைக் கரைப்பதன் மூலம் அங்க மாசு ஏற்படுத்துறாங்க. காவல்துறையும் நடவடிக்கை எடுக்கறதில்ல. ேகாவையில நொய்யல் ஆற்றுல கரைப்பாங்க. இப்படி இவங்க ஆயிரம் இடங்கள்ல விநாயகரைக் கரைச்சாங்கனா பல இடங்கள்ல மாசுபடும்.

கடந்தாண்டு இந்து முன்னணியினர் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியில் ரெண்டு தலித் இளைஞர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இறந்துட்டாங்க. அந்த ரெண்டு இளைஞர்களின் உடல்களும் இப்பவரை கிடைக்கல. இந்தமாதிரி நீர்போக்குவரத்து உள்ள இடங்கள்ல கரைக்க இடமளிச்சா உயிரிழப்பும் ஏற்படும். இந்தக் காரணங்களால்தான் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கிட்ட மனு கொடுத்தோம். தமிழக அரசும் தடை விதிச்சிருக்காங்க.

ஆனா, தடை என்பது ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் விதிக்கணும். இவங்க பத்து நாட்களுக்கு முன்னாடி விதிச்சது, ‘நான் விதிக்கிற மாதிரி விதிக்கிேறன்; நீ கோர்ட்டுக்குப் போய் அனுமதி வாங்கிக்கோ’னு சொல்ற மாதிரி இருக்கு.ஏற்கனவே, பூரி ஜெகந்நாதர் கோயில்ல நீதிமன்றம் தலையிட்டுதான் தேர் ஓட உத்தரவு கொடுத்தாங்க. நீதிமன்றத்தின் எந்த நிபந்தனைகளும் பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் கடைப்பிடிக்கப்படலனு சமூக ஊடகங்களப் பார்த்தா தெரியும்.

இப்ப அயோத்தி கோயில் பூஜையில் கலந்து கொண்ட தலைமை பூசாரிக்கு கொரோனானு சொல்றாங்க. ஏற்கனவே தஞ்சாவூர் பெரிய கோயில் அர்ச்சகர், திருப்பதி கோயில் அர்ச்சகர்கள்னு நிறைய பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கு.

மத வழிபாடு நடத்த கொஞ்ச நேரம் அனுமதி அளிச்சாலும் கொரோனா வரக்கூடிய சூழல் இருக்கு. அதனால, விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த அனுமதி கொடுத்தால் கொரோனா பரவல் நிச்சயம் ஏற்படும். அதோடு, சட்டம் ஒழுங்கும் பாதிக்கப்பட்டு சமூகப் பதட்டமும் உருவாகும். அதனால, விநாயகர் சதுர்த்தி வழிபாட்டையும் ஊர்வலத்தையும் அனுமதிக்கக் கூடாது...’’ என்கிறார் வெண்மணி.

பேராச்சி கண்ணன்