ரத்த மகுடம்-112



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘புரியவில்லை..?’’ கொடி ஊஞ்சலில் கொடியிடையுடன் நகைத்தாள். ‘‘எனில் அது இந்த சிவகாமிக்கு கிடைத்த வெற்றிதான்...’’ ஆடியபடியே மரத்தில் சாய்ந்திருந்த கரிகாலனை நெருங்கிய சிவகாமி, தன் இடது காலை உயர்த்தி அவன் மார்பின் மீது வைத்தாள்.அமர்ந்தவண்ணமே அவள் கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட கரிகாலன், அவளது பாத விரல்களுக்கு சொடக்கு போடத் தொடங்கினான்.

ஊஞ்சலை அசைவிக்க சிவகாமி முயற்சிக்கவில்லை. தன் இரு கரங்களாலும் மரத்தில் கட்டப்பட்டிருந்த கொடிகளைப் பிடித்தபடியே கரிகாலனை நோக்கினாள். ‘‘ஆனாலும் உங்களை நம்புவதாக இல்லை...’’ ‘‘ஏனோ..?’’ ‘‘பின்னே... அந்தப் பக்கம் பாண்டிய மன்னர் அரிகேசரி மாறவர்மர் உங்கள் ராஜ தந்திரங்களைக் குறித்து சாளுக்கிய போர் அமைச்சரும் எனது குருநாதருமான...’’சட்டென நிமிர்ந்து சிவகாமியைப் பார்த்தான் கரிகாலன்.

அவன் நயனங்களை இமைக்காமல் பார்த்தபடியே தொடர்ந்தாள். ‘‘ராமபுண்ய வல்லபரிடமும் சாளுக்கிய இளவரசனான விநயாதித்தனிடமும் விளக்கிக் கொண்டிருக்கிறார்... இந்தப் பக்கம் எனக்கு ஊதியமளிக்கும் சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர், மல்லைக் கடற்கரை சுங்கத் தலைவனிடம் விசாரித்துக் கொண்டிருக்கிறார்... இப்படி எல்லாத் திசைகளிலும் எல்லோரையும் உங்களைப் பற்றிப் பேச வைத்துக் கொண்டிருக்கும் நீங்கள்... நான் சொன்னது புரியவில்லை என்று சொன்னால் அதை நம்புவதற்கு நான் ஒன்றும்...’’‘‘... பேதையல்ல... கொங்கை ராணி!’’ கரிகாலனின் பார்வை அவள் கழுத்துக்குக் கீழே இறங்கியது.

சிவகாமியின் அடிவயிற்றில் ஊற்று சுரந்தது. சமாளிக்கும் விதமாக அவன் சொடக்கு எடுத்துக் கொண்டிருந்த தன் காலால் அவன் தாடையை எக்கினாள். பிடிமானமற்று கரிகாலன் அப்படியே மல்லாந்து விழுந்தான்.‘‘உலகை ரட்சிக்கும் அன்னையர்களாக அவர்கள் இருந்தாலும் மதுரை மீனாட்சியும் காஞ்சி காமாட்சியும் வேறு வேறுதான்... பகைவர்களை அழிக்க காஞ்சி காமாட்சி பாரபட்சம் காண்பிக்க மாட்டாள்... இந்த சிவகாமியைப் போல்!’’சொன்னபடியே ஊஞ்சலில் இருந்து மல்லாந்து விழுந்திருந்த கரிகாலன் மேல் தாவினாள். மார்பின் மீது அமர்ந்து தன் கால்களால் அவன் உடலின் இருபுறங்களிலும் அழுத்தினாள்.

‘‘மற்றவர்களை விட... ஏன், சூரிய சந்திரர்களை விட... நீங்கள் யாரென்று நான் அறிவேன் கரிகாலரே...’’ குனிந்து அவன் கன்னத்தைத் கடித்தாள்.வலி தாங்காமல் கரிகாலன் அலறினான்!‘‘காற்று புக கூட அஞ்சும் வனம் இது! நீங்கள் எவ்வளவு அலறினாலும் வெளியில் யாருக்கும் கேட்காது...’’ திமிறிய தன் கொங்கைகளை அவன் முகத்தில் அழுத்தித் தேய்த்தாள்.‘‘ஆனால், எதிர்பார்த்ததைவிட நீங்கள் கெட்டிக்காரர்தான்... இதை ஒப்புக்கொள்வதில் எனக்கு தயக்கமேதும் இல்லை. நரசிம்மவர்ம பல்லவர் ஆட்சியில் அப்போது அரிகேசரி மாறவர்மர் பாண்டிய இளவரசராக இருந்தார்.

பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் அப்படியொரு பகை இருந்தது. இதை மனதில் கொண்டுதான் நடைபெறவிருக்கும் பல்லவ - சாளுக்கிய போரில் பாண்டியர்களை எங்கள் பக்கம் இழுக்க சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் முயன்றார். இதற்கு அன்று இளவரசராகவும் இப்போது மன்னராகவும் இருக்கும் அரிகேசரி மாறவர்மர் சம்மதிப்பார் என்று நினைத்தார். ஆனால்...’’கரிகாலனின் நாசியை தன் கட்டை விரலாலும் ஆள்காட்டி விரலாலும் திருகினாள். ‘‘என்னை வைத்தே பாண்டிய மன்னர் நகராதபடி கட்டிப் போட்டிருக்கிறீர்கள்.

மதுரைக்குள் பதுங்கியிருந்த தென்பாண்டி மறவர்களை... அவர்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்த அதங்கோட்டாசானை பாண்டியர்களுக்கு அடையாளம் காட்டியிருக்கிறீர்கள். இதற்கு என்னை கருவியாகப் பயன்படுத்தி இருக்கிறீர்கள்! இது மன்னிக்க முடியாத குற்றம் கரிகாலரே!’’
சொன்ன சிவகாமி அவன் குரல்வளையை கெட்டியாகப் பிடித்தாள். ‘‘இதற்காக உங்கள் சங்கை அறுத்தாலும் தவறில்லை!’’ தன் நடுவிரல் நகத்தால் அவன் கழுத்தைக் கீறினாள்.

‘‘ இந்த சிவகாமியை குறைத்து எடைபோட்டு விட்டீர்கள் கரிகாலரே... அவ்வளவு சுலபத்தில் என் இலக்கில் இருந்து நான் பின்வாங்க மாட்டேன்... அதனால்தான் உங்கள் சுயரூபத்தை என்னால் இனம் காண முடிந்தது...’’கரிகாலனின் உதடுகள் மீது தன் உதட்டை வைத்து ஒத்தடம் கொடுத்தாள். ‘‘காபாலிகன் குறித்த மர்மத்தின் கீற்றை விக்கிரமாதித்தருக்கு தெரியப்படுத்தி இருக்கிறேன்... இனி அந்தக் கீற்றை பிரகாசமான ஒளியாக அவர் மாற்றிவிடுவார்!

என்னதான் நீங்கள் பதினைந்து போலிகளைத் தயாரித்து குழப்ப நினைத்தாலும் ராமபுண்ய வல்லபரிடமும் விநயாதித்தனிடமும் பாதாளச் சிறையில் நான் கொடுத்த ஓலையின் பொருளை... அதன் சரியான அர்த்தத்தில்... யார் புரிந்து கொள்ள வேண்டுமோ அவர் உணர்ந்து கொண்டிருப்பார்!’’
அப்படியே சரிந்து கீழிறங்கி அவன் மார்பில் தன் முகத்தைப் புதைத்தாள். ‘‘பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மருக்கு தெரியாமல் இருக்கலாம்... பல்லவ இளவரசர் ராஜசிம்மன் அறியாமல் இருக்கலாம்... விக்கிரமாதித்த சாளுக்கிய மன்னரும் அரிகேசரி மாறவர்மரும் ஊகிக்காமல் போகலாம்... ஆனால், சிவகாமியின் புத்தியும் மனமும் அறியும் கரிகாலரே...’’ தன் கொங்கையின் மீதிருந்த அவன் கரங்களைப் பார்த்து நகைத்தாள். ‘‘நரசிம்மவர்ம பல்லவர் காலத்தில் உங்கள் தந்தை விக்கிரமன்தான் சோழ இளவரசராக இருந்தார்...’’கரிகாலனின் கருவிழிகளில் அதிர்ச்சி வழிந்தது.

அப்படியே மேல் நோக்கி நகர்ந்து அவன் வதனத்தை அடைந்தவள், தன் நாவால் அந்த திகைப்பை வழித்து எடுத்தாள். ‘‘உப்புக் கரிக்கிறது!’’ சப்புக்கொட்டினாள். ‘‘இதுவரை உங்கள் தந்தையின் பெயரை ஒருவரும் உச்சரிக்காததால் யாருக்கும் தெரியாது என்று நினைத்தீர்களா! காஞ்சியில்
ராமபுண்ய வல்லபர் சோழ மன்னரின் திருநாமத்தை உச்சரிக்காததன் காரணம் இப்போது... இந்த இடத்தில்... உங்களை இப்படி வைத்து... என் உதடுகளில் இருந்து நான் சொல்ல வேண்டும் என்று தான்! இதுதான் என் குருநாதரின் கட்டளை! இதுவே எனக்கு ஊதியமளிக்கும் மன்னரின் உத்தரவு!’’

சரிந்தபடியே அவன் வயிற்றை அடைந்தவள் அவனது நாபியில் தன் சுவாசத்தைச் செலுத்தினாள். ‘‘உங்கள் பாட்டனாருக்கு ஒரு கனவு இருந்தது. சங்க காலத்தைப் போல் சோழர்கள் இப்போதும் தமிழக நிலம் முழுவதையும் ஆள வேண்டும்... மாபெரும் பேரரசை ஏற்படுத்த வேண்டும்... ஒரே குடையின் கீழ்... புலிக் கொடியின் ஆதிக்கத்தில் ஆட்சி செய்ய வேண்டும் என கனவு கண்டார். இதற்காக உங்கள் மாளிகையின் உட்புறத்தில் யாருக்கும் தெரியாமல் ஏராளமான ஓவியங்களை வரைந்து வைத்திருக்கிறார்... அவை எல்லாமே சோழர்களின் சிறப்பை பறை சாற்றுபவை! அவற்றை எல்லாம்
உங்கள் தந்தை விக்கிரமனுக்கு காண்பித்து அவருக்குள் தன் கனவை விதைத்தார்... தனக்குள் விருட்சமான அந்தக் கனவின் விதைகளை இப்பொழுது உங்களுக்குள் தூவியிருக்கிறார் சோழ மன்னர் விக்கிரமன்!’’

மேல் நோக்கி நகர்ந்து அவன் மார்பில் தன் கொங்கைகளை அளவுக்கு அதிகமாக அழுத்தியபடி கரிகாலனின் முகத்தை உற்றுப் பார்த்தாள் சிவகாமி. ‘‘உங்கள் பாட்டனார் பெயர் பார்த்திபன்! அந்த ‘பார்த்திபன் கனவு’ ஒருபோதும் நிறைவேறக் கூடாது என இப்பொழுது நான் அழுத்திக் கொண்டிருக்கிறேன்!’’

தன் கையை முதுகுக்கு பின்னால் கொண்டு சென்றாள். ‘‘நான் வேஷக்காரியாக இருக்கலாம்... ஆனால், உங்களைப் போல் கூடவே இருந்து குழிபறிக்கும் துரோகி அல்ல! ‘பார்த்திபன் கனவு’ நிறைவேற நரசிம்மவர்ம பல்லவரின் மகளை உங்கள் தந்தையார் திருமணம் செய்துகொண்டார். தன் மகளை பாண்டிய மன்னருக்கு உங்கள் பாட்டனார் மணமுடித்துக் கொடுத்தார்!

உறவு அடிப்படையில் பல்லவ - பாண்டியர்களுக்கு நெருக்கமாக இருந்தபடியே... அதுவும் பல்லவ இளவரசரின் உயிர் நண்பராக வலம் வந்தபடியே... பல்லவ - பாண்டிய அரசுகளை வீழ்த்த திட்டம் தீட்டுகிறீர்கள் பாருங்கள்... உங்களைப் போன்ற அயோக்கியரை இந்தப் பிரபஞ்சத்தில் எங்குமே பார்க்க முடியாது!’’

பின்னால் சென்ற கரத்தால் தன் கச்சையின் முடிச்சை நெகிழ்த்தினாள். ‘‘கரிகாலரே... நீங்கள் பல்லவ உபசேனாதிபதி அல்ல... ‘பார்த்திபன் கனவு’ மெய்ப்பட சாளுக்கியர்களின் ஒற்றர் படைத் தலைவராக ரகசிய பிரமாணம் எடுத்துக் கொண்டிருப்பவர்! சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தருக்கு ஓலை அனுப்பி அவரை காஞ்சிக்கு வரவைத்ததும் நீங்கள்தான்... பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மரை காஞ்சியை விட்டு வெளியேற வைத்து இன்று நாடற்றவராக அவரை அலைய வைத்ததும் நீங்கள்தான்!

மதுரைக்கு நீங்கள் வந்தது பாண்டிய - சாளுக்கிய கூட்டை தடுக்க அல்ல... பல்லவ - பாண்டிய கூட்டு ஏற்படாமல் இருக்க! இந்த உலகமே நான் இரட்டை வேடம் போடுவதாகக் கருதுகிறது... உண்மையில் பல்லவர்கள் பக்கம் இருக்கும் சாளுக்கிய ஒற்றர் நீங்கள்தான்!’’
அவிழ்ந்த தன் கச்சையை சட்டென உருவியவள், இமைக்கும் நேரத்தில் உருண்டு  கரிகாலனை இழுத்து மேலே கிடத்தி தன் மேனியை மேய்வதற்குள் அவன் கண்களை மேலாடையால் மூடினாள்.  

‘‘பல்லவர்களுக்குள் இருக்கும் ‘இந்த’ சாளுக்கிய வாளை வீழ்த்தத்தான் சாளுக்கியர்களுக்குள் இருக்கும் ‘இந்த’ பல்லவ வாளை தயார் செய்து அனுப்பியிருக்கிறார் பல்லவ ராஜகுருவான புலவர் தண்டி!’’  

(தொடரும்)

ஆயுளை அதிகரிக்கும் ஆயில்!

சுவையும் மணமும் நிறைந்த மிகச் சிறந்த சமையல் எண்ணெய் என்றால் அது அதென்னா ஆலிவ் பொமேஸ் ஆயில்தான்.அனைத்து இந்திய உணவுத் தயாரிப்புகளுக்கும் ஏற்ற இந்த எண்ணெய், Deep Fry எனப்படும் பொரித்தலுக்கு ஏற்றது. உணவின் சுவையை ஒருபோதும் இந்த எண்ணெய் மாற்றாது. சொல்லப்போனால் உணவின் சுவையை கூட்டவே செய்யும்.மற்ற தாவர சமையல் எண்ணெய்களைக் காட்டிலும் அதென்னா ஆலிவ் பொமேஸ் ஆயில் ஆரோக்கியமானது! தரமானது! மலிவானது!

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்