எடப்பாடி மிஸ் செய்த பஸ்!
திமுகவின் 2006 - 2011 ஆட்சிக் காலத்தின் இறுதியில் நடந்த அமைச்சரவைக் கூட்டம்.கூட்டத்தில் அப்போதைய முதல்வர் கலைஞர் மதுவிலக்கு குறித்துப் பேசியதாகத் தகவல்கள் வந்தன.“விரைவில் மதுவிலக்கு கொண்டு வரலாமா என்பதைப் பற்றி யோசித்து வருகிறோம்…” என்று கலைஞரே பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார்.2011 - 2016 அதிமுக ஆட்சிக் காலத்தின் இறுதியிலும் அமைச்சரவைக் கூட்டத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை விவாதித்ததாகவும் தகவல்கள்.
கடந்த தேர்தல் பிரசாரத்தில், “தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்தால் சமுதாய மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வழி வகுக்கும் வகையில் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்...” என்று பேசினார் இப்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.“படிப்படியாக மதுபானக்கூடங்கள் மூடப்படும்...” என்று ஜெயலலிதாவும் தேர்தல் வாக்குறுதி தந்தார்.தமிழகத்தில் மது கலாசாரம் ஆட்சியாளர்களாலேயே கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கரைபுரண்டு ஓடியது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
மதுவிலக்கைக் கொண்டுவர மனசு இருந்தும் கலைஞராலும், ஜெயலலிதாவாலும் நடைமுறைப்படுத்த முடியாததற்கு ஏராளமான தடைக்கற்கள் இருந்தன.அவற்றில் பிரதானமானவை-அண்டை மாநிலங்களில் மது ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும்போது, தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கு சாத்தியமில்லை. அங்கிருந்து மது, தமிழகத்துக்கு கடத்தப்படும். இங்கேயே கள்ளச்சாராயம் காய்ச்சப்படும்.
இச்சூழலைத்தான் ‘கொழுந்து விட்டு எரியும் நெருப்பு வளையத்துக்குள் கற்பூரத்தை எப்படி பாதுகாப்பது?’ என்று கலைஞர் கேட்டார். இந்தியா முழுக்கவே மதுவுக்கு தடையென்றால், தமிழகத்துக்கு தனிப்பட்ட முறையில் இழப்பு ஏதும் அமையாது. மது விற்பனையால் மற்ற மாநிலங்களுக்கு வருவாய் கிடைக்கும்போது, தமிழகம் மட்டும் அதை இழப்பது சரிவராது என்பது நிர்வாகரீதியிலான தடைக்கல்.
அடுத்து, மதுவுக்கு பழகிவிட்டவர்களுக்கு திடீரென அதை நிறுத்துவது மருத்துவரீதியிலும், உளவியல்ரீதியிலும் சில பிரச்சினைகளை உருவாக்கும். மது அடிமைகளை மீட்க உளவியல்ரீதியான பெரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.எனினும் -ஏதோ ஒரு நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைத்துத்தானே ஆகவேண்டும்?அத்தகைய நிலையை இயற்கையே கொரோனாவின் உருவில் ஏற்படுத்தித் தந்தது.
கலைஞருக்கும், ஜெயலலிதாவுக்கும் கிடைக்காத வாய்ப்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்குக் கிடைத்தது.கொரோனா ஊரடங்கு சமயத்தில் மதுப்பிரியர்கள், வேறு வழியின்றி தங்கள் மதுப்பாசத்தை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வந்தார்கள்.இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ‘மது இல்லாத தமிழகம்’ என்கிற நிலையை எட்டுவதற்கான முதல் படியை தமிழக அரசு எடுத்து வைத்திருக்க முடியும்.எவருக்கும் கிட்டாத வாய்ப்பை முதல்வர் பழனிச்சாமி பயன்படுத்திக் கொண்டிருக்க முடியும். தன்னுடைய பெயரை வரலாற்றில் அழுத்தமாகப் பதிவு செய்து கொண்டிருக்க முடியும்.
ஆனால் -பொதுப்போக்குவரத்தைக் கூட திறந்துவிட முடியாத நிலையில் இருக்கும் தமிழக அரசோ படிப்படியாக மதுக்கடைகளைத் திறந்து வருகிறது. பல லட்சக்கணக்கானோரை கொரோனாவுக்கு தத்து கொடுத்திருக்கும் தலைநகர் சென்னையிலேயேகூட போர்க்கால முஸ்தீபுகளோடு டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதி கொடுத்திருக்கிறார் முதல்வர்.பொன்னான வாய்ப்பு மண்ணாகிப் போய்விட்டது.பஸ்சை மிஸ் பண்ணிட்டீங்க முதல்வரே!
யுவகிருஷ்ணா
|