கலைஞரின் கடைசி யுத்தம்…
முன்னாள் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி, தன் வாழ்க்கையில் எல்லாவற்றிலும் போராடியே வெற்றியை ஈட்டியவர். அவர் இறந்தபிறகும் கூட அவரின் உடல் அடக்கத்திற்கான இடமும் பெரிய போராட்டத்திற்குப் பிறகே கிடைத்தது. மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி வளாகத்தில் கலைஞருக்கு இடம் ஒதுக்கமுடியாது எனத் தமிழக அரசு சொன்னபோது ஸ்டாலின் உட்பட கழகத்தின் மூத்த தலைவர்கள் அனைவரும் கண்கலங்கிப் போயினர்.
தொண்டர்கள் உணர்ச்சியில் கொந்தளித்தனர். இருந்தும் நிதானமாக அன்றிரவே நீதிமன்றத்தை நாடியது திமுக. அந்தக் கடைசி நேர சட்டப் போராட்டத்தின் திக் திக் நிமிடங்களை ‘கலைஞரின் கடைசி யுத்தம்’ என்ற நூலாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார் சன் நியூஸ் செய்தியாளரான டி.ரமேஷ்குமார்.
‘‘கலைஞரின் ஆளுமை, பன்முகத்தன்மை எல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் செய்தியாளர் என்பதால் அவருடைய தேர்தல் பிரசாரத்துக்கு கூடவே போயிருக்கேன். அவருடைய புத்தகங்கள் நிறைய படிச்சிருக்கேன். உலகத்துல எந்த ஒரு தலைவருக்கும் இந்த மாதிரி உடல் அடக்கம் செய்ற இடத்துக்கு பிரச்னை வந்ததில்லை. தலைவர் கலைஞரின் உடல் ஒரு பக்கம், வழக்கு இன்னொரு பக்கம். இன்னொருபுறம் தொண்டர்கள் அழுதிட்டு இருக்காங்க. அதேநேரம் இடம் கிடைக்குமானு எல்லோரும் டிவியையே பார்த்திட்டு இருந்தாங்க.
இதுமாதிரி வரலாற்றுல எங்கும் நடந்ததில்ல. அதைப் பதிவு பண்ணணும்னு தோணுச்சு. அதான் இந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்தேன். இந்த வழக்குல ஜெயிச்சதும் துக்ககரமான நிகழ்விலும் கூட தொண்டர்கள் ஆர்ப்பரிச்சு கைதட்டினாங்க. கலைஞர் சம்பந்தமா எவ்வளவோ புத்தகங்கள் படிச்சிருப்போம். ஆனா, இப்படி ஒரு புத்தகம் யாரும் எழுதியிருக்கமாட்டாங்கனு நினைக்கிறேன்...’’ என்கிற ரமேஷ்குமார் இருபது வருடங்களாக நீதிமன்ற சிறப்பு செய்தியாளராகப் பணிபுரிந்து வருபவர்.
‘‘வழக்கறிஞர் பி.வில்சன் உள்ளிட்ட பலர்கிட்டயும் தகவல்கள் சேகரிச்சு இந்தப் புத்தகத்தை எழுதினேன். திமுகவின் வழக்கறிஞர் அணி ரொம்ப பலமான கட்டமைப்பு கொண்டது. ெஜயிக்க முடியாத பல விஷயங்களை திமுக கோர்ட்டுக்குப் போய்தான் ஜெயிக்கும். ஆர்ப்பாட்டம், போராட்டம், அரசுக்கு அழுத்தம் கொடுக்குறது, கவர்னர், முதல்வர்களைச் சந்திச்சுப் பேசுறதுனு எல்லாம் தாண்டி கோர்ட்டுக்குப் போய் ஜெயிக்கிறதே அதிகம். ஒவ்வொரு வழக்கிற்கும் ஒரு டீம் வச்சிருப்பாங்க. இந்த வழக்கில் பி.வில்சன் ஆஜரானார்.
இந்தப் புத்தகத்தை கலைஞரின் நினைவுநாளான ஆகஸ்ட் 7ம் தேதியே வெளியிடணும்னு நினைச்சேன். அதுக்காக வேலையை வேகப்படுத்தினேன். தளபதி ஸ்டாலின் ஓர் அணிந்துரை கொடுத்தார். அப்புறம் அவரே புத்தகத்தை கடந்த ஆகஸ்ட் 6ம் தேதியே வெளியிட்டார். இதை என் சொந்தப் பதிப்பகம் மூலம் கொண்டு வந்திருக்கேன். இப்ப ‘நீதியும், செய்தியும்’னு நீதிமன்றத்தைப் பத்தின முழு விவரங்களும் அடங்கிய புத்தகம் ஒன்றை எழுதிட்டு இருக்ேகன்...’’ என்கிறார் ரமேஷ்குமார்.இந்தப் புத்தகத்தின் விலை ரூ.300.
பேராச்சி கண்ணன்
|