தல! sixers story-13



கைது செய்ய வந்த போலீஸ்!

தில்லியில் நடந்த வினு மன்கட் கோப்பை போட்டிக்கான பதினாறு வயதுக்குட்பட்டோர் பிரிவில் பீகார் அணிக்காக தோனி தேர்ந்தெடுக்கப்பட்டு விளையாடினார்.அது அவரது வாழ்வில் பெரும் திருப்புமுனை ஆனது.இரும்பு மற்றும் எஃகு ஆராய்ச்சி அபிவிருத்தி அமைப்பு (RDCIS) மாத ஊதியத்துக்கு தங்கள் அணி வீரராக தோனியை சேர்த்துக் கொண்டது. அவருக்கு மாதா மாதம் ரூ.1100 உதவித்தொகையாக வழங்கப்பட்டது.அப்பா பான்சிங்குக்கு ஆச்சரியம்.

விளையாடினால் கூட சம்பாதிக்க முடிகிறதே?ராஞ்சியில் இருந்த மெகான் நிறுவனத்தின் ஸ்டேடியத்தில் பான்சிங், காலையில் புற்களுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருப்பார்.மாலையில் அதே மைதானத்தில் தோனி சிக்ஸர்களாக விளாசிக் கொண்டிருப்பார்.ஒருமுறை அதே ஸ்டேடியத்தில் பான்சிங்கோடு, தோனி நிற்பதை தேவல் சகாய் என்பவர் பார்த்தார்.
இவர் மத்திய நிலக்கரி நிறுவனத்தில் (சிசிஎல்) வேலை பார்த்து வந்தார்.தங்கள் நிறுவனத்துக்காக தோனி விளையாடுவாரா என்று பான்சிங்கை கேட்டார்.“அதெல்லாம் எனக்குத் தெரியாது சார். அவனையே கேட்டுக்கங்க…” என்று தயக்கத்தோடு சொன்னார் பான்சிங்.

இவ்வளவு பெரிய ஆபீஸர் தன் மகனைப் பற்றி விசாரித்தது பான்சிங்குக்கு பெரிய கவுரவமாக இருந்தது.எடுத்ததுமே தோனி கேட்டார். “எவ்வளவு சார் கொடுப்பீங்க?”தோனிக்கு பணம் முக்கியமல்ல. ஆனால், தான் கிரிக்கெட் விளையாடுவது பொழுதுபோக்குக்கு அல்ல. அதையே தன்னுடைய வருமானத்துக்கான வழியாகவும் செய்துகொள்ள முடியும் என்பதை அப்பாவுக்கு எடுத்துக் காட்டத்தான்.

“மாசம் ரூபாய் 2,200 தரலாம்...” என்றார் சகாய். அப்போது சிசிஎல்-லுக்காக விளையாடிக் கொண்டிருந்த மற்ற வீரர்களைக் காட்டிலும் தோனிக்கு 200 ரூபாய் அதிகம்.பான்சிங்குக்கு சந்தோஷம்.இந்த வயதிலேயே தன் மகன் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டானே?
சிசிஎல் நிறுவனத்தில் தோனிக்கு பேட்டிங் ஆர்டரிலும் பிரமோஷன்.

பள்ளி அணி, கமாண்டோ லெவன் மற்றும் பீகார் அணிக்கெல்லாம் மிடில் ஆர்டர் மற்றும் கடைசியில்தான் ஆடிக் கொண்டிருந்தார். அங்கெல்லாம் அவரை விக்கெட் கீப்பராகத்தான் பார்த்தார்கள்.சகாயோ தோனியை முழுமையான பேட்ஸ்மேனாக அங்கீ கரித்தார். ஒன் டவுன் நிலையில் அவரை விளையாட இறக்கினார்.சிசிஎல்லுக்காக விளையாடிய முதல் ஐந்து போட்டிகளிலுமே தொடர்ந்து செஞ்சுரி அடித்து அசத்தினார் தோனி.
சிசிஎல் வருடத்துக்கு முப்பதி லிருந்து ஐம்பது போட்டிகள் வரை ஆடிக்கொண்டிருந்த அணி.

அந்த அணிக்கு ஆட ஒப்புக் கொண்டதால், தன் மகனுக்கு பள்ளிப் படிப்பில் அக்கறை செலுத்த முடியாமல் போய்விடுமோ என்று பான்சிங் கொஞ்சம் சஞ்சலப்பட்டார்.ஆனால் -தோனியோ பள்ளிக்கு ஒழுக்கமான மாணவனாகவும், தான் ஆடும் அணிக்கு அதிரடி பேட்ஸ்மேனாகவும் டபுள் ஆக்‌ஷனில் அமர்க்களப் படுத்தினார்.சிசிஎல் அணி கலந்துகொள்வது மாநில அளவிலான போட்டிகள் என்பதால், அதுவரை உள்ளூரில் மட்டுமே அறியப்பட்ட தோனியின் திறமை வெளியூர் ரசிகர்களுக்கும் பரவியது.கைத்தட்டல், விசில் சப்தமெல்லாம் ஒரு வீரனுக்கு பெரிய போதை.

ரசிகர்களை கொஞ்ச நேரம் கூட அமைதியாக இருக்க விடக்கூடாது என்பதே தோனி, சிசிஎல் அணிக்காக விளையாடியபோது கற்றுக்கொண்ட பாடம்.
ஸ்பின், ஸ்பீடு பாரபட்சமெல்லாம் பார்க்காமல் பந்து எப்படி வீசப்பட்டாலும் அதை எல்லைக்கோட்டுக்கு அந்தப் பக்கமாக துரத்தி
யடிக்கவேண்டும் என்பது மட்டுமே அவர் கடைப்பிடித்த ஒரே தர்மம்.விக்கெட் கீப்பிங்கிலும் கில்லி.அந்தக் காலக்கட்டத்தில் தோனி ஒரு பவுலரும்கூட.அவருக்கு பவுலிங் செய்யத் தெரியும் என்பது அவரது தீவிர ரசிகர்கள் பலருக்குமே கூடத் தெரியாது.சிசிஎல் அணி அப்போது ஒரிஸ்ஸாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிக் கொண்டிருந்தது.

ஒரு பவுன்சரை எதிர்கொள்ளும்போது தோனியின் இடது கையில் படுவேகமாக பந்து பட்டது.வலியில் துள்ளினார்.உடனடியாக பெவிலியனுக்கு அழைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.எலும்பு முறிவாக இருக்கலாம் என்று மருத்துவர் கருதினார். உடனே மருத்துவமனைக்குச் செல்லவும் பரிந்துரைத்தார்.தோனியோ விளையாட்டு முடிந்தவுடன்தான் சிகிச்சையெல்லாம் என்று அடம் பிடித்தார்.அடுத்து இவர்களது அணி பவுலிங் செய்தபோது, அவரால் விக்கெட் கீப்பிங் செய்ய முடியவில்லை.

ஆனால், தோனி, அப்போட்டியில் பவுலராக மிளிர்ந்தார்.“எனக்கு பந்து வீச வாய்ப்பு கொடுங்கள்...” என்று கேப்டனைக் கெஞ்சி ஓவர் வாங்கினார்.
தோனி ஒரு மிதவேகப் பந்துவீச்சாளர் என்பது அப்போதுதான் அணியில் இருந்தவர்களுக்கே தெரிந்தது.அன்று சில விக்கெட்டுகளையும் அள்ளி, அணியின் வெற்றிக்கும் உதவினார்.அதன் பின்னர் அவரை பவுலராகவும் அணியினர் அங்கீகரித்தாலும், தன்னுடைய விக்கெட் கீப்பிங் அந்தஸ்தை விட்டுத்தர தோனி தயாராக இல்லை.ஜாம்ஷெட்பூரில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம்.

எதிரணியின் ஸ்கோரை விரட்டிக் கொண்டிருந்தது சிசிஎல். தோனி விளாசிக் கொண்டிருந்தார்.அவர் தூக்கியடித்த சிக்ஸர் ஒன்று 200 மீட்டர் தொலைவுக்கு அப்பால் ஒரு ஆஸ்பெஸ்டாஸ் கூரை மீது விழுந்தது. ஓடு உடைந்து பந்து, அந்த வீட்டுக்குள்ளே போய் விட்டது.
துரதிருஷ்டவசமாக அந்த வீடு அந்நகரின் போலீஸ் டெபுடி கமிஷனரின் வீடு.பாதுகாப்புக்கு பணியில் இருந்த போலீஸார், உடனடியாக மைதானத்துக்கு வந்துவிட்டார்கள்.

தங்களது டி.சி.யின் வீட்டு ஓட்டை உடைத்த பேட்ஸ்மேனை கைது செய்தே ஆவோம் என்று கடமையில் கண்ணும் கருத்துமாக நின்றார்கள்.
போட்டி அமைப்பாளர்களுக்கோ தர்மசங்கடம்.வீரர் ஒருவரை மைதானத்துக்குள் புகுந்து போலீஸ் கைது செய்தால், அது எவ்வளவு பெரிய அசிங்கம்?
சம்பந்தப்பட்ட அதிகாரியையே போனில் பிடித்து கெஞ்சி, தோனியை மன்னித்து விட்டு விடும்படி கேட்டார்கள்.

அந்த அதிகாரி சொன்ன பதில்தான் ஹைலைட்.“அவ்வளவு பெரிய சிக்ஸர் அடிச்சான்னா, அவனுக்கு மாலை போட்டு பாராட்டுறதை விட்டுட்டு கைது பண்ண வந்துட்டாங்களா எங்காளுங்க…?” என்று டென்ஷன் ஆனார்.அவருடைய பெருந்தன்மை காரணமாக போட்டி தொடர்ந்தது. அப்போட்டியிலும் தோனி, வின்னிங் ஷாட் அடித்து தன் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.

(அடித்து ஆடுவோம்)

குட்பை லெப்டினன்ட் கர்னல்!

வெற்றியின் சுவை எப்படி இருக்குமென இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு 1983ல் சமைத்துக் காட்டியவர் கபில்தேவ்.அப்படியெனில் -வெற்றியின் கொண்டாட்டமும், கோலாகலமும் எவ்வளவு மகத்தானது என்பதை உலகுக்கே எடுத்துக் காட்டியவர் எம்.எஸ்.தோனி.2004ல் தொடங்கி 2019 வரை தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டி களில் விளையாடிய பதினைந்து ஆண்டு காலமும் நம்முடைய கொண்டாட்டத்துக்கான ஏராளமான தருணங்களை தரிசித்தோம்.

எதிரணி வீரர்களும் ரசித்த ஆட்டம் அவருடையது. அவர் களத்தில் நின்றபோதெல்லாம் ரசிகர்கள் சிலிர்த்துக்கொண்டே இருந்தார்கள். அணி எத்தகைய மோசமான சூழலில் இருந்தாலும் ‘கேம் சேஞ்சர்’ ஆக மாறி விதியை தன்னுடைய வித்தையால் மாற்றிக் காட்டிய மேஜிஷியன் அவர்.


வாழ்நாளின் பெரும்பகுதியை மைதானங்களிலேயே பயிற்சிக்காகவும், போட்டிக்காகவும் செலவழித்தவர். இந்தியாவின் சிறுநகரில் பிறந்து வளர்ந்தாலும், நாட்டின் உச்சபட்ச கவுரவங்களை எந்தஒரு சாமானியனும் எட்ட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் வாழ்கிறவர்.

தேசத்துக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட மாவீரன், சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக தன் ஓய்வை அறிவித்திருக்கிறார்.நாட்டுக்காக விளையாடியது போதும் கர்னல். இனி வீட்டுக்கும் நேரம் செலவழியுங்கள்!உங்கள் அன்பு மனைவி சாக்‌ஷியும், மகள் ஷிவாவும் உங்கள் அருகாமைக்காக காத்திருக்கிறார்கள்!

- யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்