கெளரவ ரேஸ்!



இதுவரை வெளியான சிறந்த ஸ்போர்ட்ஸ் படங்களைப் பட்டியலிட்டால் ‘ஃபோர்டு Vs ஃபெராரி’க்கு டாப்பில் ஓர் இடமிருக்கும். இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற ஆங்கிலப் படம் இது. அமெரிக்காவின் புகழ்பெற்ற கார் டிசைனர் கரோல் ஷெல்பி மற்றும் ரேஸர் கென் மைல்ஸ் ஆகிய இரு ஜாம்பவான்களும் இணைந்து கார் பந்தயத்தில் நிகழ்த்திய வரலாற்றுச் சாதனைதான் இப்படம். உண்மைச் சம்பவம் என்பதால் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமில்லை.

உலகின் முக்கியமான கார் பந்தயங்களில் ஒன்று ‘24 ஹவர்ஸ் ஆஃப் லே மான்ஸ்’. பிரான்ஸில் 1923ம் ஆண்டு முதல் நடந்து வருகிற இந்தப் பந்தயம் ஆட்டோமொபைல் துறையில் மிகவும் கௌரவமான ஒரு போட்டியாகப் பார்க்கப்படுகிறது. காரின் திறன் மற்றும் வேகத்தைப் பரிசோதிப்பதற்காக கார் நிறுவனங்களால் உருவாக்கப்பட்டது இந்தப் பந்தயம்.

தொடர்ந்து பல வருடங்களாக இதில் சாம்பியன் பட்டத்தை பெற்று வருகிறது ‘ஃபெராரி’ நிறுவனம். அதனால் ‘ஃபோர்டு’ கம்பெனியின் கார்களை யாருமே வாங்குவது இல்லை. ஃபெராரியைக் கையகப்படுத்தி 24 ஹவர்ஸ் ஆஃப் லே மான்ஸில் கலந்து, வெற்றி பெற்றால் கார்களின் விற்பனை அதிகரிக்கும் என்று நினைக்கிறது ‘ஃபோர்டு’.

ஆனால், ஃபோர்டு சொன்ன விலையைவிட அதிக விலை கொடுக்க தயாராக இருந்தது ‘ஃபியட்’. அத்துடன் ‘ஃபெராரி’யின் நிறுவனர் என்சோ ஃபெராரி, ஃபோர்டு நிறுவனத் தலைவரான இரண்டாம் ஹென்றி ஃபோர்டை அவமானப்படுத்தி விடுகிறார். கோபத்தின் உச்சிக்குச் சென்ற இரண்டாம் ஹென்றி ஃபோர்டு, உடனே பந்தயக் கார் உற்பத்தியைத் தொடங்கி ஃபெராரியைத் தோற்கடிக்க வேண்டும் என ஊழியர்களுக்கு உத்தரவிடுகிறார்.

ஃபெராரியை மிஞ்சும் காரைத் தயாரிப்பது அவ்வளவு சுலபமல்ல. இருந்தாலும் ‘ஃபோர்டி’ன் கௌரவத்தைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என்பதால் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவருக்கும் இது பெரும் சவாலாக மாறுகிறது.

பந்தயக் காரைத் தயாரிக்க கார் டிசைனர் கரோல் ஷெல்பியை அணுகுகிறது ‘ஃபோர்டு’ நிறுவனம். அவர் சம்மதித்ததுடன் ரேஸர் கென் மைல்ஸையும் உள்ளே கொண்டு வருகிறார். மைல்ஸும் ஷெல்பியும் சேர்ந்து கார் பந்தய வரலாற்றையே மாற்றி எழுதுவதை மின்னல் வேகத்தில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் ஜேம்ஸ் மேன்கோல்டு.

வெறுமனே கார் பந்தயம் மட்டுமல்லாமல் கார்ப்பரேட் அரசியலையும் நுணுக்கமாகப் பதிவு செய்கிறது இந்தப் படம். இதுவரைக்கும் எந்தப் படத்திலும் இப்படியான கார் பந்தயக் காட்சிகள் படமாக்கப்படவில்லை என்று ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள் . கென் மைல்ஸாக அமர்க்களப்படுத்தியிருக்கிறார் கிறிஸ்டியன் பேல். இப்போது ஹாட் ஸ்டாரில் காணக்கிடைக்கிறது.