இரண்டாவது சுற்று!



அம்மா மீனாட்சிக்கு தலை சுற்றியது. ‘‘நேரம் ஆச்சு! லஞ்ச் பேக் பண்ணியாச்சாம்மா?’’ மூத்த மகள் சுஜாதா கேட்க... ‘‘எனக்கு லஞ்ச், ரெண்டு தனித்தனி பாக்ஸ்ல பேக் பண்ணிடுங்க அத்தை. ஆபீஸ் கலீக்ஸுக்கும் கொடுக்கணும்...’’ மாப்பிள்ளை மோகன் ஆர்டர் போட... ‘‘பாட்டி! தலை பின்னி விட வா...’’ பேத்தி நிஷா குரல் கொடுக்க... ‘‘ஜாமெட்ரி பாக்ஸ் தேடிக் கொடு...’’ பேரன் அர்ஜுன் கூப்பாடு போட...வீடே அல்லோலகல்லோலப்பட்டது. காலை 8 மணி அளவில், அலுவலகம் கிளம்பும் பரபரப்பில் வீடே நிரம்பியிருந்தது.

‘‘அப்பா...’’‘‘என்னம்மா சுஜா?’’
‘‘இன்னிக்கு உங்களுக்கு சில லிஸ்ட் ஆஃப் ஒர்க் இருக்கு. குழந்தைங்களை ஸ்கூல்ல விட்டுட்டு வரும்போது, கரண்ட் பில் கட்டிடுங்க, சிலிண்டர் வாஷர் மாத்த ஆள் கூப்பிட்டிருக்கேன், கொஞ்சம் அத பாருங்க. அப்படியே வாட்டர் டேக்ஸும் கட்டிடுங்கப்பா. நாளைக்குதான் கடைசி நாள்...’’
‘‘ஏம்மா! நாளைக்கு கடைசி நாள்... இப்போ போய் சொல்றி யேம்மா... ஆன்லைன்ல பண்ணக்கூடாதா?’’

‘‘சாரிப்பா! சொல்லவே மறந்துட்டேன். வைஃபை ரிப்பேர், கம்ப்ளைண்ட் பண்ணிருக்கேன். அதுவும் பாருங்க. அப்புறம் இந்த மாசம் ரேஷன் மட்டும் வாங்கிடுங்க. நான் கிளம்பறேன்...’’அப்பாவின் தலை சுழன்றது. இதுதான் இங்கு தினசரி வாடிக்கை.

‘‘என்னங்க! கொஞ்சம் தக்காளி, பச்சை மிளகாயும் வாங்கிக்கோங்க...’’
‘‘மீனாட்சி! மணி 11 ஆச்சு. பசிக்கலையா உனக்கு? எனக்கு ரொம்ப பசியா இருக்கு. ரெண்டு தோசை ஊத்திக்குடேன். சாப்பிட்டுட்டு போறேன்...’’
சமையலறைக்குள் அம்மா நுழைய... தடாலென்று ஒரு சத்தம். அம்மா மயங்கி விழுந்தார்.

‘‘என்ன ஆச்சு மீனாட்சி?’’
‘‘ஒண்ணும் இல்லைங்க. களைப்புதான். ப்ரஷர் ஜாஸ்த்தி ஆயிருக்கும்... சாப்பிட்டு மாத்திரை போட்டா சரியாயிடும்ங்க. இருங்க வரேன்...’’
‘‘இரு மீனாட்சி! நீ ஒண்ணும் பண்ண வேண்டாம். உக்காரு. நானே தோசை சுட்டு கொண்டு வரேன்!’’
மாலை அனைவரும் வேலை முடிந்த பின் வீட்டில் ஒன்று கூடினர்.

‘‘வேலையெல்லாம் முடிச்சிட்டீங்களாப்பா இன்னிக்கு?’’‘‘எல்லாம் முடிச்சாச்சும்மா...’’‘‘அம்மா! இன்னிக்கு நைட் உப்புமாவே பண்ணிடு, பரவாயில்லை...’’
‘‘ஏண்டீ! உனக்கு மனசாட்சியே இல்லையா? காலைலேருந்து இவ்வளவு வேலை பாக்கறேனே, இரவு சாப்பாடாவது நீ பண்ணக்கூடாதா?’’
‘‘அம்மா எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு! உனக்கென்ன... வீட்டு வேலையை முடிச்சிட்டு, எங்களையெல்லாம் அனுப்பியாச்சுனா, நல்லா தூக்கத்தை போட வேண்டியதுதானே, அப்புறம் என்ன உனக்கு டயர்ட்?’’‘‘மீனாட்சி! பேச்சை ஏன் வளர்க்கறே? சுஜா...’’
‘‘சொல்லுங்கப்பா...’’

‘‘உன் தங்கை சுமித்ரா போன் பண்ணியிருந்தா...’’‘‘என்னவாம்?’’
‘‘சின்ன மாப்பிள்ளை ரவிதான் சேல்ஸ் ஜாப் ஆச்சேம்மா. எப்பயும் போல அவருக்கு டூராம், ஒரு வாரத்துக்கு. குழந்தையோட தனியா இருக்க முடியாதில்லை... எங்களை அவ அங்கே கூப்பிடறாம்மா...’’‘‘என்ன சொல்றீங்க? நீங்க ரெண்டு பேரும் போயிட்டா நாங்க என்ன பண்றது? ரெண்டு குழந்தைகளை வெச்சுட்டு, வேலைக்கும் போயிட்டு எங்களால எப்படி சமாளிக்க முடியும்?’’

‘‘எங்களுக்கு நீ, சுமி ரெண்டு பேருமே சமம்தானேம்மா?’’
‘‘இந்த பேச்சுக்கெல்லாம் ஒண்ணும் கொறச்சலில்லப்பா உங்களுக்கு...’’
‘‘என்னடி இது அப்பாவை மரியாதையில்லாம?’’‘‘சரி... ஒண்ணு பண்ணலாம்பா! அவளுக்கோ ஆம்பள துணை தேவை. அப்போ நீங்க மட்டும் அங்க போங்க. அம்மா இங்க இருக்கட்டும் எங்களுக்கு துணையா. என்ன சொல்றம்மா?’’

‘‘சுஜா... அப்பாவுக்கு நான் இல்லைனா சரி வராதும்மா. அவருக்கோ ஆஸ்த்துமா. எனக்கோ ப்ரஷர் இருக்கு. மாத்திரை எடுத்துக் கொடுக்க, எங்களுக்கு ஒருத்தரொருத்தர் இல்லாம சரியாகாது...’’‘‘நீங்க என்ன புதுசா கல்யாணமான ஜோடியா? பிரிஞ்சு இருக்க மாட்டீங்களோ?’’
‘‘போதும்டி! வார்த்தைகளை நெருப்பா கொட்டாதே. அப்பாங்கற மரியாதை இருக்கட்டும்...’’
‘‘அப்படி என்ன தப்பா பேசிட்டேன்னு நீ ஒரேடியா குதிக்கறே?’’
‘‘மீனாட்சி! உள்ள வா...’’

‘‘அப்பா! ஒரு நிமிஷம். நாளைக்கு உங்களுக்கு மட்டும் டிக்கெட்ட புக் பண்ற வழியப்பாருங்க...’’
‘‘சரிம்மா! மாப்ளையை விட்டு டிக்கெட் ஆன்லைன்ல போடச்சொல்லு...’’
‘‘அப்பா! இதுக்கெல்லாம் கூடவா அவரை தொல்லை பண்ண முடியும்? நீங்களே பண்ணிக்கோங்கப்பா...’’
அம்மா ஆழமாக அப்பாவை ஒரு பார்வை பார்த்தாள்.

இளைய மகள் சுமி வீட்டில், சமையலறையில் பரபரப்பாக வலம் வந்து கொண்டிருந்தார். ஊரு மாறி வந்தாலும் அப்பாவின் செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கி விட்டது.‘‘அப்பா! பேங்க்ல போயி டிராப் பாக்ஸ்ல செக் மட்டும் போட்டுடுப்பா ப்ளீஸ். அப்புறம் மளிகைக் கடையில ஏற்கனவே லிஸ்ட் கொடுத்தாச்சு, அதையும் வாங்கிக்கோப்பா, அப்படியே வண்டிக்கு பெட்ரோலும் போட்டுக்கோ...’’
‘‘சரிம்மா. கார்டா? கேஷா? சீக்கிரம் தந்தா போயிட்டு வந்திடறேன்...’’

‘‘என்னப்பா நீ! உன் கார்ட், உன் கேஷ் எடுத்துக்கோ. எங்கிட்ட ஏன் கேக்கணும்? என்னப்பா பாக்கற? வருஷம் முழுக்க சுஜா வீட்லதான் இருக்கீங்க நீயும் அம்மாவும். எப்பவாவதுதான் இங்கே வர்றீங்க. உன் செல்ல பொண்ணு நான். எங்கிட்டயே கணக்கு பார்ப்பியா?’’
பணத்தை மிச்சப்படுத்துவதற்காக, சுமி வைத்த ஐஸ் கட்டியில், பாவம் அப்பாவுக்கு ஜன்னி வந்துவிடும் போல இருந்தது. அனைத்து வெளி வேலைகளையும் முடித்துவிட்டு களைப்புடன் அப்பா வந்து அமர்ந்தார்.

‘‘அப்பாடி வந்துட்டியா?’’ சுமி கூப்பிடும் தொனியே அடுத்த வேலை ரெடி என்று சொல்லாமல் சொன்னது.
‘‘குழந்தை ஒரே படுத்தல்பா. நைட்டெல்லாம் என்னை தூங்கவே விடலை. அவனை நீ பாத்துக்கோப்பா. நான் கொஞ்ச நேரம் தூங்கிட்டு வர்றேன்.’’
‘சமையல், குழந்தையோட பேபி சிட்டிங், இந்த ரெண்டு வேலைதான் மீனாட்சி எனக்கு தராம என்னைக் காப்பாத்தினா. இவ, அதையும் இப்போ மிச்சம் வெக்கலை...’ வெறுப்புடன் மனதில் நினைத்துக்கொண்டார் அப்பா.

குளிர் ஊராக இருப்பதால், அப்பாவுக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. ‘‘சுமி... சுமி... இங்க பாரும்மா...’’ எழுந்து வந்து அவளது பெட்ரூம் கதவைத் தட்டினார்.‘‘என்னப்பா இது நடுராத்திரில?’’
‘‘ரொம்ப மூச்சுத்திணறுது, கொஞ்சம் சுடுதண்ணி வெச்சுக்குடும்மா...’’
‘‘இப்பத்தான் கஷ்டப்பட்டு இவனை தூக்கம் பண்ணினேன். மாத்திரை ஏதாவது போட்டுக்கிட்டு நீயே போய் சுடுதண்ணி வெச்சுக்கோ. என்ன தூங்க விடுப்பா...’’

அப்பா நொந்து போனார். அடுத்த அடி எடுத்து வைக்க முடியவில்லை. ஆழமான கிணற்றிலிருந்து தண்ணீரை மேலே கொண்டு வருவதைப் போல, ஒவ்வொரு சுவாசத்தையும் எண்ணினார். மாத்திரையை எடுக்கக் கூட முடியவில்லை. ‘அய்யோ, மீனாட்சி! நான் உன்னை விட்டு போயிடுவேனா?’ மரணம் வெகு அருகில் தெரிந்தது. எப்படியோ மாத்திரையை எடுத்து போட்டுக் கொண்டு தள்ளாடி நடந்து தண்ணீர் குடித்தார்.
இரவு நரகமானது. விடியும்போது மூச்சு இயல்பானது. அப்பாவின் அடுத்த முடிவும் தீர்மானிக்கப்பட்டது.

அம்மா சோர்வுடன் இங்கே அமர்ந்திருந்தாள்.‘‘என்னம்மா ஆச்சு? எந்த வேலையும் பண்ணாம இருக்கே. ஆபீசுக்கு டைம் ஆச்சு. லஞ்ச் பேக் பண்ணல? என்ன ஆச்சு உனக்கு? கிச்சன்ல எதுவுமே பண்ணாம மசமசன்னு உட்கார்ந்திருக்கே?’’‘‘போதும் சுஜா! கொஞ்சம் நிறுத்து. நானும் மனுஷிதான். என் உடம்பும் இரும்பால செஞ்சது கிடையாது. எனக்கு முடியல. ராத்திரியெல்லாம் எனக்கு தலை சுத்தல். என்னால எதுவும் பண்ண முடியாது. எனக்கு மனசு வேற ரொம்ப பாரமா இருக்கு. உங்க அப்பாவை எனக்கு உடனே பாக்கணும். நீ இன்னைக்கு லீவ் போடு...’’

‘‘விளையாடுறியா? அப்பா சுமிகிட்டத்தானே இருக்காரு, அப்புறம் என்ன? இவர் ஏற்கனவே வேலைனு ஆபீஸ் கிளம்பிப் போயாச்சு. குழந்தைங்கள வேற  இன்னும் எழுப்பல. எனக்கு ஆபீஸ்ல ஆடிட் க்ளோசிங் டைம். என்னால இன்னைக்கு லீவெல்லாம் போட முடியாது. நீ என்ன ஒரேடியா அடம்பிடிக்கிற?’’காலிங் பெல் அடித்தது.

சுஜா போய் கதவைத் திறக்க, அப்பா நின்றார்‘‘என்னங்க...’’ அம்மா அழத் தொடங்கினாள்.‘‘என்னப்பா... திடீர்னு, சொல்லாம கொள்ளாம வந்து நிக்கறீங்க?’’‘‘ஏம்மா! சொல்லாம வந்தா உள்ள விட மாட்டியா?’’

‘‘ஏம்பா இப்படி குதர்க்கமா பேசறீங்க? அம்மா காலையில எழுந்ததுலேருந்து எந்த வேலையும் செய்யாம சண்டை போட்டிட்டிருக்காங்க. நீங்க என்னடான்னா, வந்ததும் வராததுமா என்ன போட்டு திட்டுறீங்க. என்னதான் பிரச்னை உங்க ரெண்டு பேருக்கும்?’’‘‘அம்மா...’’ சுஜாவின் குழந்தை அழைத்தது.

‘‘நீ உள்ள போய் குழந்தையை பாரு. நான் அம்மா கிட்ட கொஞ்சம் பேசணும்...’’ அப்பாவின் குரலில் கண்டிப்பு.  
‘‘உங்க முகமே சரியில்ல. உங்களுக்கு என்ன ஆச்சு? எனக்கு தெரிஞ்சு உங்களுக்கு ராத்திரியெல்லாம் மூச்சுத் திணறல் இருந்திருக்கும்னு நான் நினைக்கிறேன். மார்க்கூட்டைப் பார்த்தா அப்படித்தான் இருக்கு...’’‘‘அதை ஏன் மீனாட்சி கேக்கற?’’ அப்பா ஒன்றுவிடாமல் அனைத்தையும் சொல்லி முடித்தார். ‘‘நீயும் இங்கே என்னென்ன அவஸ்தைப்பட்டிருப்பனு உன் முகத்தைப் பார்த்தாலே எனக்குத் தெரியுது மீனாட்சி...’’ அவர் குரல் இடறியது.
‘‘என்ன கொடுமை... அவஸ்த்தைனு ஓவரா பேசிட்டு இருக்கீங்க..?’’

‘‘சுஜா... உன்கிட்ட நான் பேசல... வாய மூடு! மீனாட்சி, நான் முடிவு பண்ணிட்டேன். எல்லாத்தையும் பேக் பண்ணிவை. நம்ம பொருட்களை, பென்ஷன் பணத்துல வாங்கின பொருட்களை மட்டும் சொல்றேன். நாம தனியா போறோம்... என்ன மீனாட்சி தயங்குற?’’
‘‘தயங்கலைங்க... தயாரா இருக்கேன்!’’‘‘இந்த வயசான காலத்துல இதெல்லாம் உங்களுக்கு தேவையா அப்பா? அப்படி என்ன நடந்து போச்சு?’’

‘‘எதுவும் நடக்கலை சுஜா! இனிமேதான் நாங்க எங்க வாழ்க்கையை, எங்களுக்காக வாழப் போறோம். ஒரு சிங்கிள் பெட்ரூம் வீடு, அதுக்கு வாடகை கொடுத்து வாழ்க்கையை ஓட்ட என் பென்ஷன் போதும். இதுநாள் வரை நாங்க உங்க தயவுல வாழலை! உங்களுக்கு உதவியா இருக்கட்டு மேனுதான் உங்ககூட அனுசரணையா இருந்தோம். எங்களுக்கு பையன் கிடையாது. பையன் இருந்தா மட்டும், நாங்களும் என்ன பண்ணியிருப்போம்? சராசரி அப்பா அம்மாக்கள் மாதிரி நாங்களும் மருமகளைக் குறை சொல்லிட்டு, பொண்ணத்தானே தாங்கியிருப்போம்? பொண்ண பெத்தவங்களும், பொண்ணுங்க வீட்ல நரகத்தையே சந்திச்சாலும், பொண்ணத்தானே இழுத்து மூடறாங்க? வீடு பார்த்தாச்சு. கிளம்பலாம் மீனாட்சி...’’
‘‘தாத்தா! பாட்டி! எங்கே போறீங்க?’’

‘‘வெளில ஒரு வேலையா போயிட்டு சீக்கிரமே வந்திடறோம்...’’ சுஜா அதிர்ச்சியுடன் நின்றாள்.
அப்பா, அம்மா வாழ்க்கையில், இரண்டாம் சுற்று தொடங்கி விட்டது.

மோகன் ரசிக்கும் ஜூலியா!

ஹாலிவுட் படங்களை விரும்பிப் பார்க்கிறார் மஞ்சிமா மோகன். சமீபத்தில் சாவோய்ஸ் ரோனன், எம்மா வாட்சன் நடித்த ‘லிட்டில் உமன்’, ஜூலியா ராபர்ட்ஸின் ‘நட்டிங் ஹில்’ என இரண்டு கிளாசிக்குகளைப்  பார்த்து ரசித்திருக்கிறார்.  ‘‘‘நட்டிங் ஹில்’ என் இதயத்தைத் தொட்ட ஒரு படம். ஜூலியா ராபர்ட்ஸின் புன்னகை அதுல அவ்ளோ அழகா இருக்கும். மில்லியன் டாலர் ஸ்மைல் அது!’’ என பரவசமாகிறார் மஞ்சிமா.

டாக்டர் ஐஸ்!

விஷாலின் ‘ஆக்‌ஷன்’ ஹீரோயின் ஐஸ்வர்யா லட்சுமி, இப்போது தனுஷின் ‘ஜகமே தந்திர’மில் கலக்கியிருக்கிறார். அடுத்து மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வனி’லும் பூங்குழலி கேரக்டரில் பரபரக்கிறார். ‘‘தாய்லாந்தில் ஒரு ஷெட்யூல் ஷூட் முடிச்சிட்டு வந்தோம். அதற்குள் லாக்டவுன். அடுத்த ஷெட்யூல் ஷூட்டுக்காக ஆவலோடு வெயிட் பண்றேன்...’’ என வழிமேல் விழி வைத்து திருவனந்தபுரத்தில் காத்திருக்கிறார்.
ஐஸைப் பற்றி ஒரு சீக்ரெட். எர்ணாகுளத்தில் இவர் எம்பிபிஎஸ் முடித்தவர்!

அப்பா இல்ல... என் திறமைதான்!

‘‘பிரபலமானவரின் வாரிசு, ரிலேஷன் என்பது சினிமாவில் நுழைவதற்கான ஒரு சாவி மட்டும்தான். உண்மையிலேயே டேலன்ட் இருந்தாதான் ஜெயிக்க முடியும். லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்த ரொம்பவே சிரமப்பட்டேன். அந்த கன்சர்ட் முடிந்த பிறகே என் டேலன்ட் பார்த்து என்னைப் பாராட்டினாங்க. அங்கேதான் டேலன்ட்டின் பவரை உணர்ந்தேன்...’’ இப்படி சமீபத்தில் மனம் திறந்தவர் ஸ்ருதிஹாசன்.

விளையாட்டு நடிகை!

‘ஜெமினிகணேசனும் சுருளிராஜ’னும் ஹீரோயின் அதிதி போஹன்கர், மராத்தியில் அறிமுகமானவர். தமிழில் செல்வராகன் இயக்கத்தில் சந்தானம் நடித்த ‘மன்னவன் வந்தானடி’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஸ்போர்ட்ஸ் குடும்பப் பின்னணியில் இருந்து நடிக்க வந்திருப்பவர்.‘‘யெஸ். எங்க அப்பா, மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர். எங்க அம்மா, முன்னாள் தேசிய ஹாக்கி பிளேயர். எங்க பாட்டிக்கும் ஒரு ஸ்பெஷல் இருக்கு. அவர் கிளாசிக்கல் பாடகி!’’ என்கிறார் கூலாக!

மறக்க முடியாத செல்ஃபி!

‘காலா’விற்குப் பிறகு அஜித்தின் ‘வலிமை’யில் கமிட் ஆகியிருக்கும் ஹூமா குரேஷி, இப்போது இந்தி வெப் சீரீஸ்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
சுஷாந்தின்  தற்கொலைக்குப் பின், ‘தற்கொலையைத் தடுக்கும் விதத்தில்’ வீடியோ ஒன்றை  வெளியிட்ட ஹூமா, ‘‘நியூயார்க்கில் ஐ.ஐ.எஃப்.ஏ.  விருது விழாவில் கலந்துகொண்டுவிட்டு நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு  திரும்பிக் கொண்டிருந்தேன்.

அங்கே நான் நடந்து போன பாதையில் மூன்று  தடைகள் இருந்தன. யோசித்துக்கொண்டே கடக்கையில் ஒரு குரல் என்னை  அழைத்தது. திரும்பிப் பார்த்தேன். சுஷாந்த் நின்றுகொண்டிருந்தார்! அவருடன்  சேர்ந்து ஒரு செல்ஃபி எடுத்தேன். இப்போது அது பொக்கிஷமாக இருக்கிறது!’’ நெகிழ்கிறார் ஹூமா.

ஸ்ருதி பிரகாஷ்